விமர்சகன் – கடிதம்

ஒரு பிரச்சனையும் அல்லது அதே போன்ற பல பிரச்சனைகளின் வெளிப்பாடு அல்லது அதற்கான தீர்வுகளை தேடும் ஒரு பொறி என்பதே படைப்புகள். படைப்புகளை உருவாக்கும் போது படைப்பினை பற்றிய அறிவு செறிவு மற்றும் அதன் பயன்பாட்டு நோக்கு மற்றும் அதன் வடிவமைப்பு அதற்கான பயணம் என்பதில் ஒரு படைப்பாளன் அருவுருவாகி நிற்கிறார். அவனில் அதை சென்று அடைய செய்யும் நுட்பங்களும் நுணுக்கங்களும் விளம்பரங்களாகவோ இல்லை இலக்கியங்களாகவோ நயங்களுடனோ எழுதி, வாசித்து, ஆடி, பாடி, கீறி கொள்பவன் கலையை கையாள தெரிந்தவனாகி அதில் இருந்து படைப்பாளன் கலைஞர் இல்லை எழுத்தாளர் என்று உருவாக்கம் அடைவாதாக கொள்ளலாம்.
இப்படி இவை இருக்க விமர்சகன் இங்கு எந்த இடத்தில் இருக்க போகிறான்? இவனால் என்ன பயன் கலைஞனுக்கு வர போகிறது? கலைக்கு வரப்போகிறது? என்று சொல்ல வேண்டும் .விமர்சகனின் பங்களிப்பு கலைக்கும் படைப்புக்கும் எந்தளவு ஆக்கபூர்வமான அச்சாணியாக முனைகிறது என்று பல விதமாக நோக்க வேண்டும். ஒரு விமர்சனம் அல்லது விமர்சகன் படிக்கப்படாத ஒரு விடயத்தை அல்லது அனுபவிக்கப்படாத ஒருவடிவத்தை வழங்க முடியாது. ஆக விமர்சனம் என்பதன் மறுபெயர் அனுபவம் என்று சொல்லாம். பின்னூட்டம் கூட அத்தகைய மாண்பு கொண்டது தான். அதிகம் படிக்கப்பட்ட நூல்கள் அழகாக இருப்பதில்லை என்பது ஒரு வகை விமர்சனம். ஆனால் அது புத்தகத்தின் உள்ளடக்கத்தை பேசுவதாக ஒரு விமர்சனத்தை படிக்கும் ஒருவர் கருதி கொண்டால் அதில் எதை அழகாக இல்லை என்று அவர் பொருள் கெள்ள முடியும். ஆக விமர்சனங்கள் பற்றிய கலையை கூட படைக்கும் ஆற்றல் கொண்டு படைக்க வேண்டும் என்பது நிபந்தனையுடன் கூடிய நிலைப்பாடு.
விமர்சகன் ஒருவன் தான் அனுபவித்த அனுபவத்தை எழுதவதாக இருந்தாலும் அதை யாருக்கு எழுதுகிறான், அதை படைக்கும் படைப்பாளிக்கு எழுதுகிறானா இல்லை அதை பயன்படுத்த போகும் வாசகனுக்கும் ரசிகனுக்கும் எழுதுகிறானா என்ற கேள்வியும் வருகிறது.
இலக்கிய மட்ட விமர்சனம் என்பது படைப்பாளியின் குறையை சொல்லும் போது அதில் வாசகனுக்கு என்ன பயன் உள்ளது?
வாசகன் அதை முதலில் படிக்கும் போதும் கலை விமர்சனத்தின் கண்ணாடியை கடந்து பார்ப்பது எப்படி?
அடுத்த படைப்புக்காக விமர்சனம் பயன்படும் என்று படைப்பாளி கருதினால் அது தனிப்பட்ட கடிதமாக போய் சேர்வது நல்லதாக இருக்குமா?
அல்லது வேறு ஒரு படைப்பாளன் இந்த விமர்சனத்தை பார்கிறான் என்றால் விமர்சனம் வருகின்ற போது அல்லது அது படைக்கப்பட்ட போது குறித்த ஒரு கலையின் கலைஞனின் படைப்பின் அனுபவ அச்சை விட்டு அது விலக்கி அல்லவா போய்விடும்.
அந்த விமர்சனத்தை ஆதாரமாக கொண்டு திருத்தப்படும் ஒரு படைப்பு அல்லது மாற்றம் அமைப்பு குறிப்பிட்ட விமர்சகனை மட்டும் திருப்தி படுத்துமா இல்லை ஒட்டு மொத்த கலையையும் மாற்றுமா?
Rtr Kirishanth
*
வணக்கம்,
இலக்கியத்தில் விமர்சனத்தின் பணியென்பது இலக்கியத்தை வாசிக்கும் நுட்பத்தையும் பொருள் கொள்ளுதலையும் அதிகப்படுத்துவது. கூர்மையான விமர்சனங்கள் கலையின் அடுத்த கட்டங்களை உறுதியாக மாற்றும்.
நாம் வாசிக்கும் பொழுது தனியான ஒரு நபர் அல்ல. சமூகத்தின் உறுப்பினர். ஒரு மொழிச்சூழலின் பிரதிநிதி. நாம் முதன் முறையாக வாசிக்கும் பொழுதே ஏற்கெனவே நமக்கென்று வாழ்க்கைப் பார்வைகள், இலக்கியப் பயிற்சி என்பன உண்டு. நாம் நமது சூழலிலிருந்தும் கல்வியின் மூலமும் அல்லது தனித்த தேடலின் மூலமும் இலக்கியப் பயிற்சியை அடைகிறோம். எது நல்லது? எது தீவிரமானது? எது உயர்ந்தது? என வகைப்படுத்தத் தொடங்கிவிடுவோம். பெருங்கலைஞர்களே ஆனாலும் எவர் மேல் எவர் அடுத்த நிலை என்பதை வகை பிரித்துக் கொள்கிறோம்.
கம்பருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் துல்லியமான வேறுபாடு உண்டு. இதை எப்படி வகுத்துக் கொள்கிறோம்?
இலக்கிய விமர்சனம் என்பது நம் மரபில் சபைகளாக இருந்தன. அரங்கேற்றங்கள் நிகழ்ந்தன. கசடு நீக்கியவை அன்றி பிறிதை புழக்கத்தில் விடுவதில்லை. ஆனால் அவை அந்த சபையின் விதிகளுக்கும் இலக்கிய ரசனைக்கும் உட்பட்டவை. நவீன இலக்கியம் அதை விமர்சர்களின் பணியாக மாற்றியது. கோட்பாட்டு அடிப்படையிலான விமர்சனத்தை கைலாசபதியும் சிவத்தம்பியும் தமிழில் தீவிரமாக முன்வைத்தனர். அழகியல் சார்ந்த ரசனை மரபும் அவர்களை விடத் தீவிரமாக தமிழில் இயங்கியது. மு. தளையசிங்கத்தின் “ஏழாண்டுகால இலக்கிய வளர்ச்சி” எனும் நூல் அதன் உச்சமாக இன்றும் கருதப்படுவது. ஈவிரக்கமற்ற கொலைஞனின் கரத்துடன் இலக்கியச் சூழலை அவர் வகுத்தார்.
மற்றைய தரப்பு வாசக அனுபவங்கள். அவை இலக்கிய விமர்சனம் அல்ல. இலக்கிய விமர்சனம் என்பது ஒரு அறிவுத்துறை.
ஒரு வாசகர் தனியே தான் எதையும் வாசிக்காமல் இலக்கியம் வாசிக்கப் போகிறேன் என முடிவு செய்யலாம். உதாரணத்திற்கு பொருளே இன்றி திருக்குறளை வெறும் வரிகளாக எனக்கு ஏற்கெனவே இருக்கும் அறிவுடன் வாசிக்கிறேன் எனச் சொல்லலாம். அப்போது அவர் தவறவிடுவது எதை? மு. வரதராசனாருக்கும் கருணாநிதிக்கும் இடையிலேயே பொருள்கோடலில் எவ்வளவு வித்தியாசங்கள் இருக்கிறது! அதை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா?
சூழலியல் அடிப்படை, பெண்ணிய அடிப்படை, தமிழ்த்தேசிய ஆதரவா? எதிர்ப்பா? இடதுசாரியா? வலதுசாரியா? இலக்கியம் என்பது சதிச்செயலா? என எழுதப்படும் குப்பைகளை நாம் இலக்கிய விமர்சனம் எனப் பொருள்கொள்ளத் தேவையில்லை. இலக்கிய விமர்சனத்தை ஏன் ஒரு வாசகர் வாசிக்க வேண்டும்?
கூர்மையான இலக்கிய விமர்சனம் என்றால் எதுவென்று முதலில் நாம் வாசித்துப் பார்க்க வேண்டும். அதில் பயனுண்டா இல்லையா என்பதை அவர்களே பின்னர் முடிவு செய்து கொள்ளலாம். ஜெயமோகனின் விமர்சனங்கள் இன்றை வரையான தமிழின் ஆகச்சிறந்த விமர்சனங்கள். அவற்றை நீங்கள் அவரது இணையத்தளத்திலும் நூல்களிலும் வாசிக்கலாம்.
ஒரு நாவலை நாம் ஏன் வாசிக்கிறோம்?
வாழ்க்கைக்கு இணையான இன்னொரு நிகர்வாழ்க்கையை நாம் வாழ்ந்து அதன் ஆழங்களில் வீழ்ந்து கண்ணீர் மல்கி உச்சங்களில் எழுந்து கிளர்ந்து இன்னொரு அனுபவத்தை பெறவே. அதை இலக்கியம் பலவகைகளில் நிகழ்த்துகிறது. ஒருவர் யதார்த்தவாத படைப்பை எழுதலாம். அவரே இன்னொரு கற்பனாவாத படைப்பை எழுதலாம். அது புரிகிறது, இது ஏன் இப்படி இருக்கிறது என்ற பேதம் புரிவதற்கு, வாசிக்கப் பயிற்சியை அடைவதற்கும் இலக்கிய விமர்சனம் மற்றும் விவாதங்களில் கலந்து கொள்வது அவசியம், அடிப்படை கூட.
அப்பொழுது தான் நாம் மேலும் நுணுக்கமாக அந்த அனுபவத்தை பெற முடியும். ஒரு மொழிபெயர்ப்பு நாவலில் எதனால் நாம் நம் மொழியில் நிகழும் கதையைப் போலவே அனுபவத்தை அடைகிறோம்? ஏனெனில் இலக்கியம் தொடர்புறுத்துவது மொழிக்கு அப்பாலான ஒன்றை. எல்லா மானுடருக்குள்ளும் நிறைந்து நகரும் ஒரு ஆழத்தை. அதை நாம் உலகின் எந்த மகத்தான இலக்கிய ஆக்கத்திலும் அறிய முடியும். ஒரு வாசகருக்கு எது சாதாரணமான ஒரு நாவல், எது சிறந்த நாவல், எது காவியம், எது பெருங்காவியம்? எதற்கு நாவல் தேவை? பெருங்காவியம் எதற்கு இயற்றப்படுகிறது என நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு பதில் தெரிய வேண்டும். அப்பொழுது அவர அடிப்படை வாசகரிலிருந்து நுண்ணுணர்வும் கூருணர்வும் கொண்ட வாசகர் ஆகிறார். அவருக்குப் பாலும் கள்ளும் பிடிபடும். சமூகத்தின் நுண்ணுணர்வு மிக்க மனிதராகிறார். அது இலக்கியம் வாசிப்பதன் கொடை. அதைத் தவிர மிகச் சிலவழிகளே வாழ்க்கையை அறிய இருக்கின்றன. ஆன்மீகம் அப்படியொரு பாதை.
இலக்கியத்தில் போலிகள் அதிகம். சராசரிகள் மிகை. ஆகவே தான் சிறந்த ஆக்கங்கள் நிகழ்வதை ஒரு சீரிய வாசகர் கண்டடைந்து பகிர வேண்டும். விமர்சகர் அதன் உச்சங்களையும் பலவீனங்களையும் சொல்லியாக வேண்டும். நான் என வெளிப்படும் படைப்பாளியும் வாசகரைப் போலவே தன் மொழியின் உறுப்பினரே. அதன் மிகச்சிறந்த நுண்ணுணர்வொன்று அவரில் திறந்து கொள்கிறது. வாசகர்கள் அதைக் கொண்டு தங்கள் வாழ்க்கை அனுபவத்தை விரித்துக் கொள்கிறார்கள். மேலும் நுண்மையாகவும் தொகுத்தும் வாழ்க்கையைப் பார்க்கிறார்கள், உணர்கிறார்கள்.
இலக்கியத்தின் மூலம் வாசிப்பவர் அடைவது எதை?
வெறும் வாசிப்பு இன்பம் என்று அதைச் சுருக்கி விட முடியுமா? இல்லை, அதுவொரு மொழியனுபவம் மட்டுமல்ல, ஆழ்ந்த அடுக்கில் ஒரு மனிதரை இலக்கியம் பண்படுத்துகிறது. இலக்கியத்தின் ஆதாரம் என்ன என்று முக்கியமான எழுத்தாளர்களிடம் கேட்கப்படுவதுண்டு. என் இலக்கிய ஆசிரியர் ஜெயமோகன் சிவராம காரந்திடம் இந்தக் கேள்வியைக் கேட்ட போது “தர்மம் தான்” என்றாராம். பஷீர் அதற்கு “நீதியுணர்வு” என்றாராம்.
மனிதர் எவரது அறிவுரையையும் கேட்டு தன்னை மாற்றிக் கொள்வதில்லை. அனுபவமே மனிதர்களை மாற்றுகிறது. அந்த மெய்நிகர் அனுபவத்தை ஒரு வாழ்க்கைக்குள் நாம் சொற்பமாகவே அடைய முடியும். இலக்கியம் அதை அதிகப்படுத்துகிறது. விமர்சனம் அதை ஆழப்படுத்துகிறது.
ஈழத்துச் சூழலில் கிட்டத்தட்ட அழகியல் விமர்சனம் என்ற பேச்சுக்கே இப்போது இடமில்லை. நான் மதிக்கும் படி எழுதுவது தர்மு பிரசாத், யதார்த்தன் தான். மற்றையது நான்.
இங்கு எங்கும் ஒலிப்பது கொள்கை சார்ந்த முழக்கங்களே. தமிழ்த்தேசிய ஆதரவா எதிர்ப்பா என்பதைக் கொண்டு இலக்கியம் பேசுவது ஓய்ந்தபாடாயில்லை. இலக்கியம் எந்தக் கொள்கையையும் காப்பாற்ற எழுதப்படுவதில்லை. இடதுசாரியோ வலதுசாரியோ தமிழ்த்தேசியவாதியோ எந்தக் கொள்கைக்காக எழுதுகிறேன் என எவர் தன்னை நினைத்துக் கொண்டாலும் அவர் இலக்கியத்துக்கு வெளியே தான். வாழ்க்கை மட்டும் தான் இலக்கியத்தில் தீவிரமான பிரச்சினை. அதை ஒரு இலக்கிய விமர்சகனாக எழுத்தாளனாக நான் உறுதியாகக் கூறுவேன்.
இலக்கியத்தின் அடிப்படை கூடத் தெரியாமல் இருபது, இருபந்தைந்து வருடங்களாக பலரும் எழுதிக் கொண்டிருக்கும் ஈழத்து இலக்கியச் சூழலில் விமர்சனம் சாட்டையுடன் எழ வேண்டிய காலமிது. அது நிகழும். அப்படி நிகழ்ந்தாலே ஆழமான படைப்புகள் நம் மொழியில் நிகழும்.
சுருக்கமாகச் சொன்னால், விமர்சனமென்பது வாளைத் தீட்டிக் கொள்ளும் கல். அதில் பென்சிலைத் தேய்ப்பதை நாம் சுட்டிக் காட்டுவதை விமர்சனத்தின் அடிப்படையெனச் சொல்லலாம். அதை ஒரு வாசகர் அறிய வேண்டும். அவரும் அந்தக் கருங்கற்களில் ஒன்றாய் வளரலாம். தீவிரமான இலக்கிய விமர்சகரைப் போலவே தீவிரமான இலக்கிய வாசகரும் தன் ஆழத்து நுண்ணுணர்வால் அடுத்த கட்ட இலக்கிய ஆக்கங்களை உந்தும் விசையை அளிக்கிறார்.
கிரிசாந்

