வரிக்கு வரி உண்மை

போரில்லாத காலத்தில் மன்னன் வேட்டைக்குப் போனது போல

புனைவு மொழியெனும் கல்லுளியும் புனைவில் திரளும் நிலமும்
சமகால ஈழ நாவல்களை வாசிக்குந்தோறும் அவற்றில் பல அடிப்படைப் போதாமைகளை உணர முடிகிறது. நாவல்கள் என்று நாம் உத்தேசிக்கும் போது அவை மிக விசாலமான பெரும் பரப்பு. அதனுள் பல வர்ண பேதங்களும், அழகியற் தரப்புகளும், வடிவ பேதங்களும் கூட உண்டு. ஆனாலும் அவற்றை எல்லாம் மேவி நாவல் எனும் கலை வடிவம் கோரும் சில அடிப்படைகள் உண்டு. இவை முன் நிபந்தனைகள் இல்லை. ஆனால் அடிப்படைகள். நல்ல நாவல்கள் இந்த அடிப்படைகளின் மீது காலூன்றி நின்றே தங்கள் வடிவ, மொழி மீறல்களைத் தாவிச் செல்லலை நிகழ்த்துகின்றன. நாவல்கள் உள் விரிவால், மொழிச் செறிவால், காட்சிபூர்வமான சித்திரிப்பால், நிகர் வாழ்வனுபவமாக உணர்த்தும் திறனால் வாசகருடன் ஊடாடும் அல்லது தொடர்பு கொள்ளும் புனைவு வடிவம். ஒன்றை நாம் நாவல் எனும் போது அது பண்பாட்டில், கலாசாரத்தில், தான் எழும் நிலத்தின் மீது அழுத்தமாகக் கால் பாவி நின்றிருக்க வேண்டியிருக்கிறது. தொகுப்புத் தன்மையுடன் வாழ்க்கையின் ஒட்டுமொத்த பார்வையைத் திரட்டிக் கொடுக்க வேண்டியதாகிறது. அடங்கியேனும் கூரிய சமூக, பண்பாட்டு விமர்சனமாக, புதிய பார்வைக் கோணமாக தன்னை மொக்கவிழ்க்க வேண்டியிருக்கிறது. மொழி ரீதியாகச் செறிவாகவும் சித்திரிப்பில் புனைவனுபவமாகவும் மாறும் ரசவாதமும் அதில் நிகழ வேண்டியிருக்கிறது. இதில் எழுத்தாளரின் தனித்த அகம், மொழி வெளிப்பாடுகள் மத்தாகத் திரள வேண்டியிருக்கிறது. தமிழின், உலகின் இதுவரையான நாவல்களை, நாவல் முயற்சிகளை ஓரளவுக்கேனும் கணக்கில் எடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் ஈழ நாவல்களுக்கு இந்த முன் நிபந்தனைகள் வேண்டியதில்லை. ஈழ என்ற முன்னொட்டே இவற்றையெல்லாம் ரத்துச் செய்து விட்டு புனைவேணியில் மேலேறிச் சென்று கருணையும், கழிவிரக்கமும் கைதூக்கிவிடக் காத்திருக்க முடியும். கர்ணன் கவச குண்டலங்களுடன் பிறந்தது போல நம் நாவல்கள் பிறப்பிலேயே இரத்தலின் பிச்சைப் பாத்திரமும் அதனுள் நிரம்பக் கண்ணீருடனும் இரத்தத்துடனும் கழிவிரக்கத்துடனும் பிறந்துவிடுகின்றன”
தர்மு பிரசாத்
முழுமையான கட்டுரையை வாசிக்க இணைப்பு : புனைவு மொழியெனும் கல்லுளியும் புனைவில் திரளும் நிலமும்

