முதற் கனவின் வெம்மை : பிறழ்

முதற் கனவின் வெம்மை : பிறழ்

முதல் ஆக்கத்தை ஒரு வடிவத்தில் முழுமை செய்து அதை வெளியிடும் தருணம் அரிதானது, முதலாவது என்பதாலேயே. எனது கொடிறோஸ் எனும் குறுநாவலை முடித்த பொழுது உலகின் சிறந்த நூல்கள் இருக்கும் வரிசையில் வைக்கப்பட தகுதி வாய்ந்தது ஒன்றை எழுதி விட்டேன் என உளப்பூர்வமாக நம்பினேன்.

முதல் நாவலோ குறுநாவலோ கருவளவில் நம்மிடம் உருவாக்கும் தொந்தரவு அபாரமானது. ஒரு எழுத்தாளர் தன் முதற் புனைவில் தான் எதிர்கொள்வதில் மகத்தானது எனும் தொந்தரவை எழுதும் பொழுது அதில் மூழ்கி திளைத்து உணர்ச்சிகரங்களை மீட்டெடுத்துப் பார்த்துக் கொள்ள முடியும். அது அவரையும் அவரது அனுபவங்களின் சாரத்தை பிழிந்து எடுப்பது போன்றது. நாம் நமது தொந்தரவுகளை பிரித்தறியாமல் இலக்கியம் எழுத முடியாது. சமூகம் ஒரு புற அழுத்தத்தை வழங்கும், புதிய களங்களைச் சந்தை உருவாக்கும். ஆனால் ஒரு எழுத்தாளர் எப்பொழுதும் கேட்க வேண்டியது அவரது அகத்தின் சொந்தக் குரலையே. அதற்கு எது முக்கியமோ அது மட்டுமே காலத்திற்கும் முக்கியமானது. தனது சொந்த ஆழத்தின் கொந்தளிப்பை தொட முடியாதவர் புனைவில் புதிதாக ஒன்றையும் நிகழ்த்தி விட முடியாது. பிற எதையும் விட சொந்த அகம் புதுமையானது.

எழுத்தாளர் நிஜந்தனின் முதல் நாவலான ‘பிறழ்’ எதிர்வெளியீடு பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கிறது. நாவலின் வடிவம் தொடர்பில் எனக்கு மாறான கருத்து உண்டு. அது வடிவம் தொடர்பான சிக்கல் மட்டுமே. பிறழ் ஒரு குறுநாவலுக்கான அடிப்படைகள் கொண்டது. அதற்கான அனைத்து அம்சங்களும் திரண்டு வரும் புனைவு வெளியும் இணைப்புகளும் கொண்டது. ஆகவே நாவலெனும் வடிவம் பற்றிய பிரக்ஞை பூர்வமான விவாதங்களுக்கு உரியது.

குறுநாவலென நான் என் வாசிப்பைச் செய்தேன். சித்தரிப்பு, நுண்விவரணைகள் ஊடாக அகக் கொந்தளிப்பான ஒருவனின் மையம் தொட்டெடுத்து எழுதப்பட்டிருக்கிறது. கடலில் எழும் பெருஞ்சுழியின் மையம் போல அது குறுநாவலில் துலங்கி வருகிறது. புனைவுக்கான நடையும் பார்வைகளும் உருவாகியிருக்கின்றன.

நம் சொந்த அனுபவத்தை புனைவில் எழுதும் பொழுது இருக்கும் சிக்கல்களில் முதன்மையானது நாம் அதில் கற்பனை செய்து அறிந்து கொள்ள இருப்பவை குறைவானவை என்பதே. ஏற்கெனவே அதன் பிரமாண்டம் நம் அகத்தில் திரண்டிருக்கும். ஒரு கூர்மையான வைரக்கல் போல. அந்த அனுபவத்தை வரலாற்றிலோ தத்துவத்திலோ வைத்து அணுகினால் நம் கையை விட்டு விலகி வேறொரு தோற்றம் கொண்டு விடும்.

கொடிறோஸ் எழுதிய கொஞ்சக் காலத்தின் பின்னர் எனக்கு நாவலின் சவால்களை உணர முடிந்தது. கொடிறோஸ் ஒரு இனிமையான நினைவு கொண்ட சிறிய கூழாங்கல் போல ஆகிவிட்டது. ஆனால் அதில் இன்றைக்குமுள்ள சில அம்சங்களால் அதனைக் குறிப்பிடத் தகுந்த ஆக்கமெனவே மதிப்பிடுகிறேன். முதன்மையாக, குறுநாவலின் நடை புதியது, ஒரு குடும்பத்தின் கதையாக இருந்தாலும் அது தன் காலகட்டத்தின் வரலாற்றின் விசைகளில் எப்படி நகர்கிறது என சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அது புனைவனுபவத்தை கூட்டுகிறது. அதன் மூலம் ஒரு மெய்நிகரான வாழ்வனுபவம் ஒருவருக்கு கிடைக்கும். எவ்வளவு தான் இருந்தாலும் எனக்கு அது இன்று அதேயளவு அகக்கொந்தளிப்பான கதை அல்ல. சொல்லப்பட்டதும் அனைத்தும் சுருங்கி விடுகிறது.

பிறழை நான் கொடிறோசுடன் ஒப்பிட்டு எண்ணிக் கொண்டேன். சிறுவனிலிருந்து வளர்ந்து கொண்டிருப்பவனின் தத்தளிப்புகள் பிறழில் வெளிப்பட்டிருக்கிறது. கதைக்குள் காலமோ கதையோ இன்றி நினைவுகளும் சித்தரிப்புகளும் அதற்கூடான இணைப்புகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இது முக்கியமான அம்சம். புனைவை வாசித்து முடிக்கும் வரை இந்தச் சித்தரிப்பும் இணைப்புகளும் வாசக அனுபவத்தை நீட்டிக்கின்றன.

இன்று தமிழில் எழுதுபவர்களில் தனித்த நடையையோ அல்லது புனைவுகளிற்குள் நிகழும் வாழ்க்கைக்குத் தேவையான சித்தரிப்புகளையோ உருவாக்குவதில் பல குழறுபடிகள் உண்டு. நிஜந்தனின் முதல் வெற்றியென நான் கருதுவது அதை நிவர்த்தி செய்யும் புனைவனுபவத்தை கொடுக்கிறார் என்பதே.

முதல் புனைவெனும் அடிப்படையில் நாம் அடைந்து கொள்வது நம் கொந்தளிப்புகளின் எல்லையையும் அதுவே நம் ஆதார விசை எனும் தெளிவையும். நான் இதைக் கொடிறோசில் உணர்ந்தேன். நம் காலத்தில் தன் முதல் படைப்புடன் வரும் நிஜந்தனின் புனைவுலகம் கவனிக்கப்பட வேண்டியது. அதன் வெற்றிகளும் தோல்விகளும் விவாதிக்கப்பட வேண்டியது. அக்குரலின் வாழ்க்கை பற்றிய நோக்குகள் அடுத்து வரும் புனைவுகளில் விரிவடையவும் ஆழப்படவும் அவையே உதவும்.

முதற் படைப்பென்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமானது. அதன் ஆழங்கள் அவருக்கே உரியவை. ஒருவர் தொடர்ந்து தீவிரமாக எழுந்து வருவதன் மூலம் அவரது முதல் படைப்பின் ஆழங்கள் மேலும் கூடிவரும். தொடர்ந்து களம் காண வாழ்த்துகள் நிஜந்தன். 2026 இல் நான் வாசித்த முதல் படைப்பு நிஜந்தனின் ‘பிறழ்’. நம் சக எழுத்தாளனின் முதற் படைப்பை கொண்டாட்டத்துடன் முன்வைக்கிறேன். எதிர்வெளியீடாக இம்முறை நிகழ்ந்து கொண்டிருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் பிறழ் கிடைக்கிறது.

TAGS
Share This