தன்னறம் விருது 2025 : ஆவணப்படம்

தன்னறம் விருது 2025 : ஆவணப்படம்

கடந்த வருடத்திற்கான தன்னறம் இலக்கிய விருது எழுத்தாளரும் கோட்பாட்டாளருமான சீனிவாச ராமாநுஜம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. விருது வழங்கப்படுபவர்களைத் தன்னறம் குழுவினர் எடுக்கும் ஆவணப்படங்கள் ஒவ்வொன்றும் அற்புதமானவை. ஒவ்வொரு ஆளுமையினதும் துல்லியமான இயல்புகளையும் உடலசைவுகளையும் கைப்பள்ளத்தில் அள்ளிச் சேர்க்க முனைபவை. ஷோபா சக்தியின் ஆவணப்படம் என் மனதுக்கு மிக நெருக்கமானது. இன்றளவும் ஈழத்தில் அவரது புனைவுலகம் குறித்த முழுமையான மதிப்பீட்டை நான் உட்பட எவரும் இன்னும் எழுதவில்லை. ஒரு இரகசிய இயக்கத்தின் செயல்பாடுகளைப் போல அடங்கிக் கிடக்கும் ஈழத்து இலக்கியச் சூழலில் தன் இத்தனை வருட இலக்கியத்தின் உச்சமான முனை நிகழ்ந்திருப்பது ஷோபாவில் என்பதை ஏற்றுக்கொள்ள இச்சூழல் மறுக்கிறது. தன்னறம் அளிக்கும் விருதுகளின் அழகென்பது அது வாசக ஏற்பினால் நிகழ்வது. எழுத்தாளர்களின் பண்பாட்டுப் பங்களிப்பினை முழுமையாகத் தொகுத்துக் கொள்ள எத்தனிப்பது. ஆகவே இன்று இலக்கியத்திற்கென வழங்கப்படும் விருதுகளில் மிகுந்த தனித்துவம் மிக்கது.

ராமாநுஜத்தின் மொழிபெயர்ப்பில் நான் சதாத் ஹசன் மாண்டோவை பத்து வருடங்களுக்கு முன்னர் வாசித்திருக்கிறேன். மொழிபெயர்ப்பெனும் எண்ணந் தோன்றச் செய்யாதது அந்த நூல். அதைத் தவிர அந்த மொழிபெயர்ப்பாளரை நான் அறிய முனையவில்லை. இந்த ஆவணப்படத்தில் உரையாடல் வழியாகவும் அகன்ற சிரிப்பினாலும் அவர் விளக்கிச் செல்லும் சிந்தனையோட்டம் அவரைப் பிரியத்துக்கும் கவனிப்புக்கும் உரியவராக்குகிறது.

அவரது அடிப்படை வேட்கையுடன் என்னால் பல இடங்களில் உடன்பட முடிகிறது. ஆனால் புனைவு பற்றிய அவரது பார்வையுடன் மாறுபடும் இடங்களும் உள்ளன எனத் தெரிகிறது. மாண்டோ பிறரைச் சித்தரிக்கிறார், அவர்களின் அகத்திற்குள் நுழையும் உரிமையை எடுப்பதில்லை. அதுவோர் முக்கியமான அம்சம் எனக் குறிப்பிடுகிறார். அது ஒரு வகைமை மட்டுமே என்பது என் தரப்பு. ஒரு எழுத்தாளர் பிறர் – தன் என விலக்குகள் இல்லாதவர், பிறரது அக ஓட்டங்களை தனது கூர்மையான அவதானிப்புகளாலும் நுண்ணுணர்வாலும் தொட்டெடுக்கக் கூடியவர். அவரால் பிறரையும் அறிய முடியும். காற்று தேகத்தில் பட்டு உலர்த்தவும் முடியும் உள்ளே நுழைந்து பிராணன் ஆகவும் முடியும் என நம்புகின்றேன்.

இவை என்றுமுள்ள இலக்கிய விவாதங்களின் ஒரு அடிப்படை தான். ஆனால் அனைத்துக்கும் அப்பால் அவரது சிந்தனையும் பண்பாடும் கலக்கும் இடங்களும் அவர் காந்தியிலிருந்து சிந்தனையை தொகுத்துக் கொள்வதும் முக்கியமானது. லட்சியவாதம் முனைப்பாக எழாத வரலாற்றுச் சூழலில் சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் அடையும் தொந்தரவை அவர் விளக்குவது அழகு. இரண்டு இடங்களில் அவரை மேலும் நெருக்கமாக உணர்ந்தேன், ஒன்று அவர் எஸ் என் நாகராஜனுடன் உரையாடும் இடம். கிண்டலாகவே அவருடன் பேசியதாகச் சொன்ன ஓர் அவதானம். அதாவது நீங்கள் இந்தியாவின் கிராமங்களுக்கு மாவோவின் பாதையில் செல்கிறீர்கள். காந்தி போட்ட பாதையில் சென்றால் தான் அம்பேத்காரை சந்திக்க முடியும் எனச் சொல்லிய இடம் கவித்துவமானது.

மற்றையது அவரது உடல்மொழியும் சிரிப்பும் முக்கியமானது. ஒரு முறை ஜெயமோகன் நண்பர்களுடன் அமர்ந்து தத்துவ விவாதமொன்றை தீவிரமாக நிகழ்த்திக் கொண்டிருந்த போது அவரது குரு நித்யா வந்திருக்கிறார். என்ன விவாதிக்கிறீர்கள் எனக் கேட்டார், தத்துவம் என்றிருக்கிறார்கள். சிரிப்பில்லாமல் என்ன தத்துவ விவாதம் எனச் சொல்லி விட்டு அங்கிருந்து அவர் சென்றிருக்கிறார். அன்றாடமாகாத தத்துவம் சினத்திலிருந்தோ அல்லது சினத்தை நோக்கியோ கொண்டு செல்லும் என இப்போது உணர்கிறேன். ராமாநுஜன் தன் சிந்தனைகளையும் தத்துவார்த்தமாக தனது நடைவழியையும் சொல்லிக் கொண்டிருந்த போது வெடித்துச் சிரிக்கிறார். தோல்விகளிலும் மலர்கிறார். இந்த அழகே சிந்தனையும் இலக்கியமும் ஒருவருக்குக் கொடுக்கும் கொடை. அவரது பிற ஆக்கங்களையும் வாசிக்க வேண்டும். இவ்விருதின் மூலம் தமிழின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரைத் தவறவிட்ட என் போன்றவர்களிற்கு அவரை மீண்டும் அடையாளம் காட்டிய தன்னறத்திற்கு எப்பொழுதும் போல நன்றிகள்.

ஆவணப்படத்திற்கான இணைப்பு

TAGS
Share This