மூதன்னை தொட்ட மலர்

நேற்று மாலை ‘குக்கூ’ சிவராஜ் அண்ணாவிடமிருந்து ஒரு செய்தி வந்திருந்தது. ஓர் ஒளிப்படமும் குரற்பதிவும் இருந்தன. காந்தியவாதத்தின் பழுத்துக் கனிந்த தமிழ் முகமான மூதன்னை கிருஷ்ணாம்மாள் ஜெகந்நாதன் கொடிறோஸ் வாசித்துக் கொண்டிருந்தார். கண்கள் விம்ம அக்காட்சியை திரும்பத் திரும்பப் பார்த்தேன்.
எத்தனை களங்களைக் கண்ட கண்கள், எத்தனை பேராளுமைகளைக் கண்ட கண்கள், எத்தனை மானுட முகங்களின் துயர் கேட்டுக் கசிந்த கண்கள், எத்தனை அனலுடன் மானுடத்திற்கெனச் சினம் கொண்ட கண்கள், எத்தனை உணர்ச்சிகரங்களுக்கு முன்னும் ஓர் ஆலயக் கருவறை போலத் திறந்த கண்கள். அந்த மகத்தான விழிகளால் ஒரு எளிய புத்தகத்தையும் அவர் பார்க்கிறார் என நினைத்துக் கொள்கிறேன். அவருக்கு இந்த வருடம் நூறு வயது நிறைகிறது. போன வருடம் ஜூனிலிருந்து அவரது நூற்றாண்டுக்கான நிகழ்வுகளை இணையிருப்போர் துவங்கியிருக்கிறார்கள்.
மூதன்னை என அழைக்கப்படும் தகுதி கொண்டவர். அதனாலேயே ஒரு பேரரசி போன்ற தோற்றமும் தூவெண் விழிகளும் கொண்டவர். காந்தியுடன் அமர்ந்து போராடியிருக்கிறார். மார்ட்டின் லூதர் கிங்கை சந்தித்திருக்கிறார். மாபெரும் மனிதர்கள் அவரைச் சந்தித்திருக்கின்றனர். என்னுடைய இலக்கிய ஆசிரியர் ஜெயமோகன் அவரை வணக்கத்துடன் இன்றைய தலைமுறைக்கு முன் வைப்பார். அவரது வாழ்க்கை வரலாறு சுதந்திரத்தின் நிறம் என வெளியாகியிருக்கிறது. அவரது வாழ்க்கை பல்வேறு வழிகளில் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டும் உரையாடவும் படுகிறது. பத்ம பூஷன், பத்மஸ்ரீ போன்ற பல முக்கிய விருதுகளை பெற்றவர். சர்வதேச அளவில் மதிக்கப்படும் பெண்மணிகளில் ஒருவர்.

அவர் தொட்டெடுத்துக் கொடுத்தாலே அந்த நூலை ஒரு கொடையைப் போல பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பவன் நான். அத்தகைய மூதன்னை குறுநாவலை வாசிக்கிறார் என்பது என் வாழ்வின் பேறுகளில் ஒன்று. சிவராஜ் அண்ணனின் குரற்பதிவை திறந்து பார்த்தேன். அவரும் எனது ஆழகத்தின் குரலையே சொன்னார். மூதன்னையின் வீட்டு வாசலிலேயே அமர்ந்திருக்கும் பேறு பெற்றவர் அவர். அன்னையை வந்து சந்திக்கும் மனிதர்களை அண்ணன் பார்த்துக் கொண்டேயிருப்பவர். அத்தகைய ஒரு உயிர் உங்கள் சொற்களை வாசித்தாலே போதும் எனத் தான் எண்ணியதாகச் சொன்னார். அருளன்றி வேறென்ன சொல்ல!
சென்னை புத்தகக் கண்காட்சி ஆரம்பித்த போது பாரதி புத்தகாலயம் சிராஜூதீன் தோழருடன் கதைத்துக் கொண்டிருந்தேன். பேச்சினிடையில் “தோழர், கொடிறோஸ் முடிஞ்சுது தோழர். இன்னும் கொஞ்சம் காப்பிங்க போட்டிரலாம் தோழர்” என்றார். நானோ தர்முவோ கூட அதை நினைத்துப் பார்த்திருக்கவில்லை. கல்விரல் வெளியாகும் வேலைகளில் ஈடுபட்டிருந்தோம். தோழரின் அழைப்பில் இருந்த நேசத்தையும் அதட்டும் உரிமையையும் மறுக்கவா முடியும். சிராஜூதீன் தோழர் ஒரு அசல் இடதுசாரி என எப்போதும் நினைப்பதுண்டு. அவருடன் பழகியது சில பொழுதுகள் தான். ஆனால் என்றைக்குமுள்ள தோழன் என உணர வைப்பவர். ஒரு இடதுசாரி ஓய்வற்ற மானுடத் தோழர். புத்தகங்களையும் கனவுகளையும் தூக்கிச் சுமப்பவர். சிராஜூதீன் தோழர் தானே புத்தகங்களை அச்சிட்டு, கடைகளிலும் கொண்டு சென்று கொடுத்திருக்கிறார். அவர் உழைப்பது பண்பாட்டுக்கென நினைத்துக் கொள்கிறேன். அவருடைய தோழமை உணர்வு ஈழத்தவர்கள் பலரும் அறிந்தது தான். அவர் ஏற்காத கருத்தியல்கள் கொண்ட தரப்புகளுடன் எல்லாம் நான் உரையாடுபவன், பணியாற்றுபவன். ஆனால் அதெல்லாம் அவருக்குப் பொருட்டேயில்லை. அவர் காண்பது முன்னாலிருக்கும் மனிதனை. அவனது கனவுகளை. தோழன் என்ற மானுடக் கருத்துருவை.

காந்தியமும் இடதுசாரியமும் இணைந்து தொட்ட அருங்கணத்தை கொடிறோஸ் கொடுத்திருக்கிறது. அவை இரண்டுமே ஒன்றுக்கொன்று உரையாடிக் கொண்டே இருக்க வேண்டிய தரப்புகள். அவை இரண்டும் மானுடப் பண்பாட்டை முன்னகர்த்தும் அடிப்படை விசை கொண்டவை. அதன் பேரியக்கத்தில் ஒரு சிறிய மலராக கொடிறோஸின் இரண்டாம் பதிப்பு ஆக்காட்டி பதிப்பகத்தினால் வெளியிடப்படுகிறது. அட்டையை மாற்றியிருக்கிறோம். முதற் பதிப்பாக 200 பிரதிகள் அச்சிட்டோம். இலங்கையில் மிச்சமாக ஒரு 10 புத்தகங்கள் கடைகளில் இருக்கலாம். மீண்டும் அடுத்த வருடமே இரண்டாம் பதிப்பு என்பது மகிழ்ச்சியானது.

கொடிறோஸ் என்று மட்டுமல்ல, அடுத்து நான் எழுதிய இரண்டு நாவல்களுமே கூட அன்னையரை சென்று வணங்குதல் மட்டுமே என சொல்லி விடலாம். வரலாற்றின் வேறு வேறு காலகட்டங்களில் நான் அவர்களுக்குப் பிறந்து வளர்கிறேன். அந்தந்தக் காலகட்டங்களில் அவர்களை நான் வணங்கும் இடம்வரை புனைவில் சென்று கொண்டிருக்கிறேன். வணங்கியதும் முடித்துக் கொள்கிறேன். என் அம்மாவிலிருந்து இன்று மூதன்னை கிருஷ்ணாம்மாள் வரை இந்த மாபெரும் அன்னையர் திரள் காலம் தோறும் உணர்த்தும் அறத்தை எழுத்தில் அடைதல் மட்டுமே என் பயணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
கிரிசாந்
14. 01. 2026
கிருஷ்ணாம்மாள் ஜெகந்நாதன் பற்றிய தமிழ் விக்கி பதிவின் இணைப்பு : கிருஷ்ணாம்மாள் ஜெகந்நாதன்

