எதிரொலிப்பு : சமகாலக் கலைக் காட்சி

1980 கள் தொடக்கம் சமகாலம் வரை ஈழத்துக் காண்பியக் கலைஞர்களின் பல படைப்புகளின் கண்காட்சி ஒன்று நாளை துவங்க இருக்கிறது. ஈழத்தின் காண்பிய மரபு பற்றிய பொதுச் சமூகத்தின் கவனம் உள்ளூரளவில் மந்தமானது. சர்வதேச அளவில் ஈழத்து காண்பியக் கலைஞர்கள் அடைந்திருக்கும் இடத்தை பற்றிய மதிப்பீடுகள் நம் மத்தியில் கிடையாது. எந்தத் துறையாயினும் அதன் வரலாற்றையும் முக்கிய ஆளுமைகளையும் சமூகம் அறியாது விடின் அதனால் வளர முடியாது.
நிகழும் ஒவ்வொரு கலையும் பண்பாட்டின் ஆழ்கனவு வெளிப்படும் வடிவங்கள் தான். ஈழத்துக் காண்பியக் கலை இதுவரையான தன் காலத்தின் உச்சகட்ட விசையில் சமகாலத்தில் இருக்கிறது. நீண்ட நெடிய மரபின் அறுபடாத இழைகள் மேலும் அதிகரிக்கின்றன. காண்பியம் சார்ந்த உரையாடல்கள், சிந்தனைகள் நமது பார்வையை மேலும் அகலிக்க உதவக் கூடியவை. ஆயிரம் ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் எம்மிடம் இல்லை. உலகின் மேதைகள் பிறந்து வளர்ந்த சமூகப் பின்னணியும் வளமும் இருக்கவில்லை. ஆனால் கடந்த முப்பது அல்லது நாற்பது வருடங்களில் நிகழ்ந்திருக்கும் காண்பிய படைப்புகள் பலவும் தங்கள் கற்பனைகளை அதன் சாத்திய எல்லைகளுக்கு மேலே நகர்த்தியிருக்கின்றன. இன்று ஒரு நிரை போல இளந்தலைமுறையை அடையாளம் காட்டி நிற்க வைக்க முடியும். இது முன்னர் இல்லாத பெரிய சூழல் மாற்றம். ஏராளமான காண்பிய காட்சிகள் கடந்த பதினைந்து வருடங்களில் நிகழ்ந்திருக்கின்றன. ஏராளமானவற்றைப் பார்த்து, ரசித்து, விவாதித்திருக்கிறேன்.

ஒட்டு மொத்த வரலாற்றில் வைத்தே ஒருவருடைய பண்பாட்டுப் பங்களிப்பினை வரையறுக்க முடியும். ஈழத்து காண்பியக் கலையை அங்கனம் வரலாற்றில் வைத்து மதிப்பிட அதன் அடிப்படைகளை அறிய, வாசிக்க வேண்டும். அவர்கள் முக்கியமான பல அறிவுப் பங்களிப்புகளை பல்வேறு காலகட்டங்களில் ஆற்றியிருக்கிறார்கள். அதன் மையமான வெளிப்பாடே அவர்களின் கலைகள். இந்தக் கலைக்காட்சி ஒருவகையில் அந்த நட்சத்திரங்களுக்கு இடையில் காலமெனும் உருவத்தை கற்பனை செய்ய உதவும்.

