சிறகை : ஆவேசமான ஒரு பறத்தல்

சிறகை : ஆவேசமான ஒரு பறத்தல்

ஈழத்து இலக்கியத்தில் புனைவுகள் மீதிருக்கும் அடிப்படையான சிக்கல்கள் மூன்று.

முதலாவதான சிக்கல், புனைவுக்கான மொழியின்மை. இதைச் சுட்டிக் காட்டும் பொழுது பலரிடமும் குழப்பமான முகபாவனைகளையே எதிர்கொண்டிருக்கிறேன். என் சின்ன வயது முதல் ஈழத்துப் புனைவுகளைக் கண்டு ஓட்டமும் நடையுமாய் தப்பி ஓடிய நினைவுகள் வருகின்றன. தோராயமாக பத்து, பன்னிரண்டு வருடங்களாக புத்தக வெளியீடுகள், உரையாடல்களில் பங்கு பற்றியிருக்கிறேன். தலைப்பாடாய் அடித்து இதெல்லாம் இலக்கியமே இல்லை என பல உதாரணங்களைக் காட்டி மறுத்திருக்கிறேன், விளக்கியிருக்கிறேன். பெரும்பாலான இடங்களிலும் நேரங்களிலும் “இவன் யாரடா சின்னப் பெடியன்” எனும் கணக்கிலேயே பொருள்கொள்ளப்பட்டேன். அதற்கு முக்கியமான காரணம் இந்த உள்ளூர்ப் பேத்தைகளை மூச்சில் அனல் கக்கும் ட்ராகன்களுடன் போட்டியிடச் சொன்னேன். உலகின் முதன்மையான இலக்கிய ஆளுமைகளுடன் சமதையாக வைத்து விவாதித்தேன். என் மடமை அதுவென இப்பொழுது ஒத்துக் கொள்கிறேன்.

கடுமையானதும் உறுதியானதும் முகத்துக்கோ வேறு எந்த நலன்களுக்குமோ அஞ்சாத எனது கருத்துகளின் இயல்பிற்காக மதிக்கப்படுபவன், உள்ளூரவேனும்.
ஆனால் எனது முக்கியமான சிக்கலென்பது, நான் உதாரணம் காட்டும் இலக்கியங்களை ஈழத்தில் பலரும் (எழுத்தாளர்கள் உட்பட) வாசிக்கவில்லை, வாசிப்பதில்லை என்பதை கொஞ்சம் சிலோவாகவே உணர்ந்து கொண்டேன். இல்லையென்றால் வாசு முருகவேல் எழுதிய ஜெப்னா பேக்கரி என்ற நாவல் வெளியீட்டு நிகழ்வில் காப்பிரியல் கார்சியா மார்க்குவேஸ் எழுதிய Living to tell tale உடன் ஒப்பிட்டு அரசியல் நாவலை எழுதுவதைப் பற்றிப் பேசும் அசட்டுத்தனத்தைப் புரிந்திருப்பேனா! இந்த வருடம் வாசுவின் ஏழாவது நாவல் மணிபல்லவம் வந்திருக்கிறது. இப்பொழுது தான் ஓரளவு இரைச்சல் குறைந்த முதல் இரண்டு பக்கங்களையாவது அவரால் எழுத முடிந்திருக்கிறது.

புனைவுக்கான மொழியென்பது என்ன?

புனைவுகளிற்கான மொழி எழுத்தாளரின் அகத்தின் நுண்ணிய வெளிப்பாடு. அவரின் ஊடாக பண்பாட்டின் ஆழ்நனவு தான் அதுவரை அடைந்த மொழிச்செருக்கை வெளிப்படுகிறது. அதற்கு இரண்டு பயிற்சிகள் அடிப்படையானவை என இலக்கிய விவாதங்களில் முக்கியமான எழுத்தாளர்களினால் சுட்டப்படுகிறது. ஒன்று, புனைவு வாசிப்பு. தமிழின் மகத்தான சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்களை ஒரு எழுத்தாளர் வாசித்தே ஆக வேண்டும், தான் எழுதும் மொழியின் செழிப்பின் தொடர்ச்சியே தானும் என்பதை அவர் உணர வேண்டும். எந்த மொழியிலும் முக்கியமான ஆக்கங்கள் அனைத்திலும் அந்த மொழியின் மிகச் சிறந்த அழகு வெளிப்பட்டிருக்கும். இலக்கியம் முதன்மையாக ஒரு பண்பாட்டின் அழகியல் தேவையை ஒட்டியே எழுகிறது. அழகியலாக முன்வைக்கப்படாதது எத்தனை பெரிய துக்கத்தைச் சுமந்திருந்தாலும் இலக்கியத்தில் மதிப்பற்றது.

இரண்டாவது கவிதைகளை பயில்வது. தமிழில் எழுதும் ஒருவருக்கு மாபெரும் சொற்சுரங்கத்தை நம் முன்னோர்கள் ஆக்கி அளித்திருக்கிறார்கள். பொன்னும் இரத்தினமும் முத்தும் வைரமும் வைடூரியமும் என அருஞ்செல்வங்களால் ஆனது. பழந்தமிழ் இலக்கியம் முதல் நவீன கவிதைகள் வரை நீளும் பேராறு அது. அதை ஒரு எழுத்தாளர் அன்றாடமும் கால் நனைக்கும் ஒரு ஆற்றங்கரையாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஆசாரவாதியான ஒரு பிராமணர் விடாப்பிடியாகத் தினமும் சென்று நீர்குளிப்பது போல. அது நிகழாமல் மொழியின் ஆற்றொழுக்கு பிடிபடாது. எழுத்தாளரின் அகம் தேனில் இடப்பட்ட இறைச்சித் துண்டைப் போல கவிதையில் வைக்கப்பட வேண்டியது.

இந்த இரண்டும் போக மூன்றாவதாக ஒரு அம்சத்தை நம் காலத்தில் சுட்டிப்பாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. அது, சமூக வலைத்தளம் எனும் குப்பை மொழிக் கிடங்கிலிருந்து எழுத்தாளர் வெளியேற வேண்டும் என்பது. சமூக வலைத்தளம் உண்டாக்கியிருப்பதை வேசி மொழியெனச் சொல்லலாம். பிறரை நோக்கி அது புன்முறுவலுடன் வருவது பிழைப்புக்காக. எண்ணற்ற தான் தோன்றி எண்ணங்களின் மொழிப் பொருக்கு அது. அரிதாகச் சிலர் அதில் எழுதுபவர்கள் இருந்தாலும் அவர்களின் சிந்தனையையுமே அது மிகையாகப் பாதிப்பது.

சமூக வலைத்தள திராபை மொழி எப்படி ஒருவரின் எழுத்தை சீரளிக்கும் என்பதற்கு முக்கியமான உதாரணம் சயந்தனின் திசை ஒன்பது. நாற்பது பக்கங்கள் வரை ஓடும் உயிரைக் கண்ணால் பார்த்தபடி வாசித்தேன். ஆதிரையின் மொழியில் சில நல்ல அம்சங்களை முன்னரான காலங்களில் சுட்டியிருக்கிறேன். அவரிடம் குறைந்தபட்ச நடையொன்று இருந்தது. ஆனால் திசை ஒன்பதில் பேஸ் புக் துணுக்குகளின் மலிவு பதிப்பு போல ஒரு புனைவு மொழி வருகிறதென்றால் அது மிகப்பெரிய வீழ்ச்சி. எனது எழுத்து அனுபவத்தில் அறிந்த உண்மை என்னவென்றால் ஒருவர் ஒவ்வொரு ஆக்கத்திலும் ஒவ்வொரு அடுக்காக மொழியைக் கையாளும் திறனில் முன்னேறுவார் என்பதே. அப்படிப் பார்த்தால் திசை ஒன்பது உள்ளபடியே மிக வருத்தமான நிகழ்வு. இப்படி ஒரு மொழியை கண்டு நொந்து போயிருந்தேன். சயந்தனின் எழுத்துகளை நான் விரும்பிக் கவனிப்பதுண்டு. அவரிடம் இருந்து ஒரு சீண்டலை எடுத்துக் கொள்ள நினைப்பேன். ஆனால் திசை ஒன்பதின் மொழியை இவ்வளவு கடுமையாகச் சொல்வதற்கான தேவை உள்ளதெனக் கருதுகிறேன். அதை என்னைப் போலவே சுட்டிக்காட்டும் நன்னோக்கு வெகுசிலருக்கே இருக்கிறது.

அவரது ஆதிரை நாவல் மிகையாகக் கொண்டாடப்படும் நாவல் எனும் எண்ணம் எனக்கு உண்டு. எவராவது ஒருவர் ஈழ இலக்கியத்தின் செவ்வியல் படைப்பு ஆதிரை என சுட்டப்படும் பல்வேறு குறிப்புகளை வாசித்து நாவலை வாசிப்பார் என்றால் ஈழத்தின் இலக்கியத் தரம் பற்றி என்ன நினைப்பார் என்பதே அது. ஷோபாவின் புனைவுகள் முன்வைக்கப்படும் பொழுது பெரும்பாலும் அவரது இடத்தை துல்லியமாகவே முன் வைக்கிறார்கள். கூரிய அங்கதமும் சீற்றமும் வெளிப்படுபவை என்பது சரியான அவதானிப்பே. ஆனால் ஆதிரையை காவியம் என்றால் அழுவதா சிரிப்பதா? எனக்கென்றால் வெட்கமாயிருக்கும். இவ்வளவு தானா நம் எல்லை, நாம் தொட்டிருக்கும் உச்சம் எனக் கூச்சமே எழும்.

எந்த வரலாற்றுப் புரிதலும் தத்துவார்த்தமான அடித்தளமும் இல்லாத இது போன்ற எழுத்துகளை சுட்டிக்காட்டும் தேவை இருக்கிறது. அதே நேரம் தமிழில் எழுதப்படும் சமகாலப் புனைவுகள் பலவற்றுக்கும் புன்னகையுடன் ஏற்பும் கைதட்டலுமே கிடைக்கிறது. ஒருவகையில் வாசகர்கள் சலித்தபடி இவ்வளவு தானாக்கும் இலக்கியம் என எண்ணிக்கொள்கிறார்கள். முக்கியமான காரணம் விமர்சனமின்மை. அது தராசில்லாமல் பொருள் வாங்குவதைப் போல.

இரண்டாவது பிரதானமான சிக்கல், புனைவுக்கான வேட்கையின்மை. நாவலொன்றுக்கு அடிப்படையான தேவை அந்த நாவலின் மையக்கருவோ தொந்தரவோ நம்மை பிடித்தாட்டும் எல்லைக்கான சிந்தனை நமக்கு இருக்க வேண்டும். வாழ்க்கையுடன் சென்று தலை மோதி உடைக்க வேண்டும். ஆனால் நாம் செய்வது எளிய கிலுக்கிண்டல்கள்.

புனைவுகள் எப்படி எழுதப்படுகின்றன, அதற்கான வாழ்வை எப்படி அமைத்துக் கொள்வது, நமது ஆசிரியர் நிரையை வகுத்துச் சொல்வது, நமது சிந்தனைப் பள்ளியை தேர்ந்து கொள்வது, மகத்தான எழுத்தாளர்கள் எப்படி வாழ்ந்தார்கள், என்ன செய்தார்கள் என அறிவது, எழுதுவது, முன்வைப்பது என அதுவொரு நீண்ட ஆழமுள்ள வாழ்க்கை முறை. ஒருவர் தன்னை எழுத்தாளராக ஆக்கிக் கொள்கிறார், அதுவே தன் தன்னிலை என முன்வைக்கிறார் எனில் அவர் தனது தண்டத்தை முன் வைக்க வேண்டும்.

மரபான முறைகளில் இந்தச் சொல் உண்டு. நம் கருத்தியலை முன்வைத்து விவாதித்து நிறுவி ஏற்கச் செய்து தண்டத்தை வைக்க வேண்டும். பழங்காலத்தில் அது முக்கியமான மரபு. அதுவே அனைத்தையும் அளக்கும் கருவியாக உருவாகும். பின்னர் அது மறுபடியும் வேறொரு தரப்பால் வெல்லப்பட்டு அதன் தண்டம் ஊன்றப்படும். மிகக் கடுமையாக கருத்துகள் மோதிக் கொள்ளும் வெளி அது.

நவீன இலக்கியத்தில் நாம் வாசிப்பது அதன் பின்னாலுள்ள ஆசிரியரையே. அவரது நுண்ணகத்தையே நாம் புனைவில் தொடர்கிறோம். அவரது சிந்தனையை வாழ்க்கைப் பார்வையை நாமும் நிகர்வாழ்வனுபவமாக அடைகிறோம். அங்கிருந்து நமக்கிருக்கும் பார்வைகளை வேறொரு புள்ளியில் தொகுத்துக் கொள்கிறோம். நாவலென்பது தொகுத்தலின் கலை.

இவற்றுக்கு விரிவான வாசிப்பு அவசியம், ஆழமான சிந்தனைத் தொடர்ச்சி அவசியம். மேலும் அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் ஊக்கம் அவசியம். அதுவே வேட்கையை அளிக்கும், வேட்கையிருப்பவரே பெருஞ்சவாலை ஏற்றுக் கொள்வார். இதுவரை தமிழில் எழுதப்பட்ட எந்த நாவலுக்கும் குன்றாத வளமுள்ள இன்னொன்றை ஆக்கும் சவாலை அவர் ஏற்றுக் கொள்வார்.

மூன்றாவது சிக்கல், செம்மையாக்கம், புனைவுகளின் கட்டமைப்பு ரீதியான பயில்வின்மை. புனைவுகள் தொடர்பில் ஈழத்தில் இருக்கும் முதன்மையான குறைபாடு இது. இதற்கு மூன்று புறக்காரணிகள் உண்டு. ஒன்று, நம்மிடம் கூருணர்வுள்ள வாசகர்கள் மிக மிக அரிது.

கூருணர்வுள்ள வாசகர்கள் ஒரு பண்பாட்டின் பொக்கிஷங்கள். எவ்வளவு அதிகமோ அவ்வளவு சூழலை மேம்படுத்தக் கூடியவர்கள். நம்மிடம் இருப்பது அடிப்படை வாசகர்கள் எனும் புற்றீசல்கள். அவர்களுக்கு இலக்கியம் வாழ்க்கையை அறியும் ஒரு ஆதாரமான வழி எனும் நம்பிக்கை இல்லை. அவர்கள் இலக்கியத்தை கதை கேட்பதற்காக பயன்படுத்துகிறார்கள். ஒரு பயனுள்ள பொழுது போக்கு எனும் அளவில் நம்புகிறார்கள். அந்த மடக் கும்பலுக்கு இலக்கியமெனும் தெய்வம் அருளுவதே இல்லை. நுண்ணுணர்வு கொண்ட வாசகருக்கு எழுத்தாளர் அளவுக்கே தன் இலக்கிய வரலாறு, அதன் சாதனைகள் தெரிந்திருக்கும். அவர் தன் சொந்த அகத்தின் தாகத்தை தவிர வேறு எதற்கும் வளைந்து கொடுக்காத நுண்மையான உணர் கொம்புகளைக் கொண்டிருப்பார். அதன் முனையால் புனைவுகளை அவர் வாசிக்க வேண்டும்.

இரண்டாவது, இலக்கியச் சுற்றமென்பது ஈழத்தில் அறவே இல்லை. இருப்பது எல்லாம் கொசிப் குழுக்களும் இலக்கியமென்றால் என்னவென்றே தெரியாத பால்குடிக் குரூப்களும். இலக்கியச் சுற்றம் ஒருவருக்கு செம்மையாக்கம் மற்றும் கட்டமைப்பு ரீதியிலான உரையாடல்களுக்கு மிக உதவியானது. நம்மாட்கள் பெருமளவுக்கு தனித்தனித் தீவுகள்.

இலக்கியம் என்பது ஆணவங்கள் மோதிக் கொள்ளும் நிகர் போர். என் சமகாலத்தில் எழுதும் எல்லோருடனும் நான் முதன்மையாக ஆணவப் பூசலே கொள்வேன். என்னை விட இன்னொருவர் திறமையாக எழுதினால் உள்ளபடியே அரைக்கணமேனும் அவரை ஏசுவேன். என்ன அற்புதமாக எழுதிவிட்டார் என ஏங்குவேன். இது நானல்லவா எழுத வேண்டிய வரி என உரிமை கொண்டாட விழைவேன். அதைச் செய்பவர் மட்டுமே எனக்கு எழுத்தாளர். ஆனால் ஒருவர் எழுதித் தன்னை ஐயத்துக்கிடமின்றி நிரூபித்து விட்டால் சின்னஞ்சிறு அங்குசத்திற்கு அடங்கும் பெரிய யானையைப் போல என் ஆணவம் அடங்கும். அதுவே நான் பணியும் இடம்.

இத்தகைய சூழலில் தர்மு பிரசாத்தும் யதார்த்தனும் இலக்கியச் சுற்றமாக வாய்த்தது என் பெரும்பேறு. ஈவிரக்கமற்ற விமர்சனங்களை மட்டுமே நாங்கள் எங்களது புனைவுகள் குறித்து வைத்துக் கொள்வது. மாக்கி போன்ற உண்மையான தீவிரம் கொண்ட வாசகர் கிடைப்பதும் அரிது. நெற்றிப் பொட்டில் உண்மையைச் சொல்லும் ஒருவராவது நமக்கு இலக்கியச் சுற்றமாக அமையா விட்டால் இலக்கியத்தை எழுத நெடுங்காலமாகும்.

மூன்றாவது, இலக்கிய விமர்சனத்தை எதிர்நிலையில் விளங்கிக் கொள்வது. எழுத்தாளரின் ஆணவமென்பது சராசரி ஒருவரை விடப் பல்லாயிரம் மடங்கு பெரியது. ஆகவே அவர் எதிர்நிலை விமர்சனங்களால் அதிகமாகப் புண்படக் கூடும். அது ஆறாவடுவாகப் பதியவும் கூடும். ஆனால் ஒரு வீரன் தன் களப்புண்களால் மதிப்பிடப்படுவதைப் போன்றது அது. குறைந்தபட்ச அம்சங்கள் கூட இல்லாத ஒருவரை எவரும் பொருட்படுத்தி விமர்சனம் செய்வதில்லை. இலக்கியத்தில் உள்ள மெய் வாசகர்களை பேய்க்காட்ட முடியாது. ஒரு மொண்ணைப் பிரதியை என்ன செய்தும் வரலாற்றில் ஊன்ற முடியாது. அதுவே இது வரையான நம் இலக்கிய வரலாறு. ஆகவே ஒருவர் தன் புனைவின் மூலமே இங்கு தன் ஆணவத்தை நிறுவ முடியும்.

இலக்கிய விமர்சனங்கள் போதவில்லை என்று சொல்லும் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கறாராக விமர்சித்த இலக்கியங்கள் எவையென்று கேட்டால் அனேகமாக ஒன்றும் இருக்காது. இலக்கிய விமர்சனத்தை நேர்மையாகச் செய்பவர்களை பெரும்பாலானவர்கள் தீண்டாமைச் சாதியாகவே பார்க்கிறார்கள். இதற்கு நம் காலத்தின் முக்கிய உதாரணம் தர்மு பிரசாத். இளங்கோவின் மெக்சிக்கோ போன்ற அதரமொண்ணை எழுத்துகள் தொடக்கம் தீபச்செல்வனின் கர்ண கொடூர எழுத்துகள் வரை அவர் வாசித்து தன் கருத்துகளை தர்க்க ரீதியாகத் தொகுத்து எழுதியிருக்கிறார். இலக்கியச் சூழலில் எந்த ஒரு பிரகிருதியும் அக்கருத்துகளுக்கு எதிர்வினையாற்றி நான் பார்க்கவில்லை. பெரும் மெளனமும் தீண்டாமையும் தான் உருவாகியிருக்கிறது. அவர் புனைவுகளின் மையச் சிக்கல் குறித்து மிக விரிவாகவே தர்க்க ரீதியாக முன்வைத்திருக்கிறார். நான் மதிப்பிடுவது வரை, அவரது எழுத்துகளுக்கு எதிர்வினையாற்றும் இலக்கிய வாசிப்பும் அறிவும் கொண்ட எவரும் களத்தில் இல்லை என்பதே. வெல்லப்பட முடியாத அவரது தண்டம் மெளனமாக நம் மொழிச்சூழலில் ஊன்றப்பட்டிருக்கிறது.

*

தர்மு பிரசாத்தின் சிறகை எனும் குறுநாவல் இந்த வருடம் வெளியாகியிருக்கிறது. அதன் செம்மையாக்கத்தில் நானும் பங்களித்திருந்தேன். ஒரு சில சுட்டிக்காட்டுதல்களுக்கு அப்பால் பாரிய மாற்றங்களையோ குறைகளையோ நான் குறிப்பிடவில்லை. ஒரு இனிய புன்னகையுடன் நல்லா வந்திருக்கு பாஸ் எனச் சொல்லியிருந்தேன்.

அண்மையில் வந்த நாவல்களை வாசித்து நொடிந்து போயிருந்த நான், சிறகையை எழுந்தமானமாகக் கொஞ்சம் வாசிப்போம் என மீண்டும் இறுதி வடிவை அனுப்பச் சொன்னேன். இறுதி வடிவை நான் முன்னர் வாசிக்கவில்லை. இப்பொழுது குறுநாவலை வாசிக்கும் பொழுது மிக வசீகரமான ஒரு எழுத்தை வாசித்தேன்.

எந்தத் தயக்கமும் இல்லாமல் தமிழில் வந்த மிகச் சிறந்த குறுநாவல்களில் ஒன்றாக சிறகையை முன்வைக்கிறேன். மேலே நான் குறையெனச் சொன்ன அனைத்தும் களைந்து என் ஆணவம் பணியும் வரிகளை அவர் எழுதி விட்டார். குறுநாவலின் முக்கியமான அம்சங்களை சுட்ட வேண்டியது அவசியம். முதன்மையாக அதன் மொழி கனவுடனும் பித்துடனும் நிகழ்ந்திருக்கிறது. அற்புதமான ஓட்டங் கொண்ட நடை. இப்பொழுது பிறந்த குழந்தையின் அடிப்பாதம் போன்ற நுண்மையான மொழி. சித்தரிப்புகளில் கத்தி வீச்சின் கூர்மை.

மூன்று அம்சங்கள் இந்தக் குறுநாவலின் சிறகுகளாகின்றன. ஒன்று, கதையில் வரும் அம்மாவின் கனவில் இருக்கும் காட்சியின் பித்துநிலை ஒரு புராணிகக் கதைக்கான தன்மையை அளிக்கிறது.

இரண்டு, உருவம் எனும் கதாப்பாத்திரம் அளிக்கும் மாயத் தன்மை யதார்த்தவாதத் தளத்திலிருந்து கதையை புதிய கோணத்தில் நிகழ்த்துகிறது.

மூன்று, கடற்கரையில் அடிவயிறு பிரட்டிக் கிடக்கும் படகுகளில் தாளமிட்டு ஆடும் முன்னோர்களின் கதை வரலாற்றை மிகச் சிறு சட்டகங்களால் தொகுத்துச் சொல்லி கதைக்குள் தன் மொழியால் செவ்வியல் நாவல்களின் காட்சித்தன்மையை அடைகிறது.

மேலும் இந்தக் குறுநாவலில் வெளிப்பட்டிருக்கும் அபூர்வமான கவித்துவம். பல வரிகளில் அசாதாரணமான அழகு எழுந்து வந்திருக்கிறது. “கரிய கால்களில் சேற்று இதழ்கள் பூத்திருக்கின்றன”, ” அம்மா மிக அபாரமான சமநிலையுடன் இலாவகமாக பேரலைகளின் மேல் நீந்துவது போல சேற்றில் நடக்கிறார்”, “ஊசி முனையளவு தேன் துளிகள் போன்ற பழுப்பு நிறக் கண்கள்”, “பொற்கசிவு எழும் வான் மடிப்பு நோக்கி அலறும் குரல்களுடன் விரைந்து செல்கின்றன” போன்ற பல வரிகள் பட்டில் இழைக்கப்பட்ட பொற்சரிகையென கைகளில் படர்கின்றன. ஓர் அசலான கவிஞன் எழுந்தால் மட்டுமே எந்தவொரு கலையிலும் காலாதீதத்தை தொடும் உயரங்கள் நிகழும்.

தர்மு பிரசாத்தின் சித்தரிப்புகளில் அசாத்தியமான தெளிவும் நுண்மையான அவதானிப்புகளும் இருக்கும். இந்தக் குறுநாவல் அதற்கு மிகச் சிறந்த உதாரணம். நான் சற்றே காலைக் கையை நீட்டியே எழுதுவேன். அது எனக்குப் பிடித்த முறை, நீட்டி முழக்காமல், விரிவாகச் சொல்லாமல் எனக்குப் பத்தியப்படாது. பிசிறுகளின் அழகை விரும்புபவன். தர்முவின் புனைவில் இருப்பது கூர்மையான ஈட்டி முனைகளின் ஒளிமிக்க முனைத்தன்மை. ஒரு கட்டுக்கடங்காத அதேநேரம் நன்கு பயின்ற ஒரு வீரனின் வீச்சைப் போல. சித்தரிப்புகளில் தர்முவின் அகம் சிறுகதைகளின் கூர்மை கொண்டிருப்பது இந்தக் குறுநாவலுக்கு பலம் சேர்த்திருக்கிறது. நாவலுக்கு அது இன்னொரு சவால். சிறிய, அபாரமான சித்தரிப்புகள் நாவலில் செய்ய முடியாது. அந்தச் சவாலை அவர் நாவலில் எதிர்கொள்வார். இந்தக் குறுநாவலுக்கு அது பொருந்தி ஒருமையை அளித்திருக்கிறது.

தர்மு பிரசாத் தொடர்ச்சியாக கவிதைகளை வாசித்து உரையாடுபவர். அற்புதமான சொல்லிணைவுகளை அவர் வாசித்திருந்தால் தான் கண்ட மகத்தான ஒன்றைச் சொல்ல முடியாமல் திகைக்கும் குழந்தையின் குரல்வளையுடன் அவர் உரையாடுவார். அண்மையில் திருக்குறளிலிருந்து ஒரு ஒப்புமையைச் சுட்டி அப்படி சிலாகித்தார். “கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது” என்ற குறளது. “யானை பிழைத்த வேல்” என்ற சொல்லாட்சி எத்தனை ஆழமுள்ளது என வியந்தார். சிறிய முயலுக்கு எய்யும் அம்பை விட யானையைக் குறிவைத்து எறியும் ஈட்டியே வீரருக்கு அழகென்பது பொருள். வீழ்ச்சியென்றாலும் மகத்தானதாக இருக்க வேண்டுமென இன்னொரு பொருளை நாம் அளித்துக் கொண்டால் அந்தச் சொல்லாட்சி பேரழகுடன் எழுந்து வரும்.

அவரது இப்படியான கவிதை வாசிப்பு அவரது நடையில் பெரிய தாக்கத்தை நிகழ்த்தியிருக்கிறது. அவரது செவ்வாத்தை, நீராழம் ஆகிய சிறுகதைகளிலேயே இந்த அம்சம் துலக்கமாகத் தெரியத் தொடங்கியிருந்தது. சிறகையில் அது மேம்பட்டிருக்கிறது.

குறுநாவலின் இறுதிக் காட்சியில் ஆவேசமாக எனும் சொல் வந்த இடத்தை முதல் வாசிப்பின் போதே கண்டு திகைத்தேன். மிகச் சரியாக ஒரு கவிதையின் உச்சியில் வைக்கப்பட்ட சொல் போல அது ஒளிர்ந்தது. இரண்டாவது வாசிப்பில் இருள் வானில் நட்சத்திரங்கள் மெல்ல மெல்லத் துலங்கி வருவதைப் போல அந்தச் சொல் கதை முழுவதும் எப்படி பயன்பட்டு உருவேறி ஒரு மந்திரம் போல தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது என்பதை வாசித்தேன். மிக நுண்மையான ஒரு இழைப்பு. ஆனால் அது அவரை மீறியே நிகழ முடியும். ஒருவர் எண்ணிக் கருதி அப்படிச் செய்ய முடியாது. இப்பொழுது நானும் புனைவுகள் எழுதுவதால் அதை நன்கு நெருக்கமாக உணர முடிகிறது. கதையில் சில சொற்கள், சில கதாபாத்திரங்கள், சில காட்சிகள், சில இணைப்புகள் எழுதுபவரின் கை மீறி நிகழும். அது மகத்தான அனுபவம். அதுவே கதையின் சத்தான பகுதிகளாக அமைவதையும் பார்த்திருக்கிறேன். முன்னர் நான் குறிப்பிட்ட மூன்று அம்சங்களும் குறுநாவலின் சத்தான பகுதியாக மாறியிருப்பது அதனாற் தான்.

தர்மு பிரசாத் தன் சமகாலப் புனைவுகளை தயவு தாட்சண்யமின்றி விமர்சித்திருக்கிறார். அதன் போது தன் அழகியல் பார்வைகளை முன்வைத்திருக்கிறார். அவர் தன் புனைவுகளை எழுதும் பொழுதும் அதே அளவுகோல்கள் பொருந்தும். அவற்றை மீற வேண்டிய மன அமைப்பை அவர் இயல்பாகவே பெறுவது அங்கனம் தான். நாம் நமது சிந்தனைகளைத் தொகுத்து எழுத்தில் முன்வைப்பதன் தேவை அது தான். நம் அகம் நம் சிந்தனைகளை அளவுகோல்களை சொற்களில் திரட்டி தர்க்கபூர்வமாக முன்வைக்கும் பொழுதே தெளிவாகும். நம்மை அறியாமல் நம் அகம் அதைச் செரித்து விடும். எழுதும் பொழுது தன்னியல்பாகவே அது அக்குறைகளைக் கடந்து விடும்.

சிறகையின் வாசிப்பனுவத்தை தொகுத்துச் சொன்னால் அது அளிக்கும் அசாத்தியமான புனைவனுபவம், மெய் நிகரான வாழ்வனுபவம் முதன்மையானது. மேலும் அது அளிக்கும் ஈவிரக்கமில்லாத சமநிலை கொண்ட வாழ்க்கைப் பார்வை, மூன்றாவதாக அது அடைந்திருக்கும் கவித்துவ உச்சங்கள், இறுதியாக ஈழத்து இலக்கியம் எனும் வெறும் பாலையிலிருந்து வேட்கையுடன் சிறகடித்து ஆவேசமாக எழும் பறத்தலின் தீவிரம்.

TAGS
Share This