கல்விரல் – குறிப்பு 2

கல்விரல் – குறிப்பு 2

எழுத்தாளனின் படைப்புகளைப் புரிதலில் வெளியீட்டாளரின் அரசியல் நிலைபாடு ஒரு மறைமுகச் சூழலாக செயல்படும். வெளியீட்டாளர் எந்த வகை நூல்களை முன்னிலைப்படுத்துகிறார்கள். எவற்றைத் தவிர்க்கிறார்கள் என்பதன் வழியே அந்தப் படைப்புகளின் அரசியல் ரேகைகள் எவ்வாறு வடிகட்டப்படுகின்றன என்பதை கவனிக்கலாம். படைப்பு தனித்த உருட்டில் நின்றாலும், எழுத்தாளர் ஒரு சமூகப்பிராணி என்பதால் அரசியல் படைப்பின் அடுக்குகளில் இயல்பாகவே ஒலித்துத் தோன்றுகிறது. அது வெளிப்படையான கருத்துரையாய் அல்ல, கதாபாத்திரத் தேர்வுகள், குரல் மற்றும் மௌனப் பகிர்வுகள், உலகமைப்பு, அனுபவங்களின் முன்னுரிமை போன்ற நுணுக்கங்களில் மென்மையான அதிர்வாக வெளிப்படும். இதனால் படைப்பை வாசிக்கும் போது எழுத்தாளனின் அரசியலை நேரடி மதிப்பீடாக அல்லாமல், படைப்பைச் சூழ்ந்துள்ள பரிமாணத்தைப் புரியச்செய்யும் ஓர் அடிநிலைச் சுட்டிக்காட்டாகவே அணுக வேண்டும்; இவ்வாறு அணுகும்போது படைப்பும் எழுத்தாளனும் தனித்தனியாகவும், ஒன்றோடொன்று தொடர்புடையவையாகவும் நியாயமான முறையில் புரிந்துகொள்ளப்படுகின்றன.

நாவல் :- கல்விரல்
வெளியீடு :- கருப்பு பிரதிகள்
எழுத்தாளர் :- கிரிசாந்

கல்லும் விரலும்இரண்டு சொற்கள்.
ஒன்றின் இயல் கடினம்; மற்றொன்றின் உயிர் மென்மை. ஆனால் கல் விரல் என்ற தலைப்பு இந்த இரண்டையும் ஒன்றாகப் பிணைத்துவிடுகிறது. இதனால் உருவாகும் பொருள் எந்த அகராதியிலும் இல்லாதது. ஆனால் மனதின் அடிப்படைக் காட்சிகளில் மிகவும் தெளிவானது.
ஒரு பக்கம் காலத்தை வெட்டி நிற்கும் பாறை போன்ற வரலாறு. மற்றொரு பக்கம் உயிரின் நெருடல், தடம், தொடுதல். போரின் காயங்கள், தாய்களின் கல்லான பொறுமை, குழந்தைகளின் விரல் நுனி அச்சங்கள் இந்த இரு சொற்களிலேயே அடக்கப்பட்டுள்ளன.

கல்விரல் நாவலின் அமைப்பு புனைவிலக்கியத்தின் வடிவுருவாக்கத்தைப் பிரதிபலிப்பது கல்லெடுத்தான் குளம் என்ற புவிசார், அரசியல், போர்க்கொண்ட அனுபவங்களை ஏந்திய ஊரை மையமாக வைத்து, கிரிசாந் தனது நாவலை எழுதும் விதம் குறிப்பிடத்தக்கது. இந்தத் தனி இடம், புனைவுலகின் உள்ளுறை வடிவமாக செயல்படுகிறது. போர் மற்றும் போருக்குப் பிந்தைய வாழ்வு என்பவை வெறும் பின்னணி அல்ல; அவை கதைநடை, கதாபாத்திர உருவாக்கம், நினைவு, அரசியல், வர்ணனை ஆகிய அனைத்தையும் வடிவமைக்கும் வடிவுருவாக்க சக்தி.

அரும்பி/துளசி/மொட்டு என்னும் ஒரே பெண்ணின் பல அடையாளங்கள், புனைவிலக்கியம் தனி ஆன்மா பல பரிமாணங்களாகக் கிழிந்து வாழும் அரசியல் உண்மையை வடிவாக்கும் விதமாக செயல்படுகிறது. பெயர்களின் பன்மை — “அரும்பி”, “மொட்டு”, “துளசி”, “தங்கம்”, இவை ஒவ்வொன்றும் புனைவின் வடிவுருவாக்கத்தில் பாத்திரத்தை ஒரு சின்னமாக மாற்றுகிறது. போராளியாக இருந்து போரால் உடைந்த பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உடல், அரசியல், நினைவு இவை எல்லாம் இந்தப் பெயர்களின் வழியே பிரிந்து, மீண்டும் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு செல்கின்றன.

கிரிசாந் பயன்படுத்தும் உவமைகள் “கற்றாளையின் சதையைத் தடவுவது போல உடம்பு நொளநொளக்கும்” அல்லது “நிழல்கள் மென்மையானவை மனிதர்களைவிட” இவை புனைவு மொழியை அனுபவத்தின் உணர்வு வடிவமாக மாற்றுகின்றன. வர்ணனைகள் இங்கே அலங்காரம் அல்ல; அவை காயம், நினைவு, போரின் உள்மனசுப் பாதிப்புகள் ஆகியவற்றின் உடலமைப்பாக செயல்படுகின்றன.

பப்பரக்கொப்பான்கள் போருக்குப் பிந்தைய உள் நினைவுகளின் அரசியல் குறியீடுகளாக வருகிறது. மனிதன் மறக்க விரும்பும் விடயங்களே பப்பரக்கொப்பான்களாக மாறுகின்றன என்பது, புனைவின் பொருள் வடிவமைப்பு நினைவின் ஒலி வடிவமாக எப்படி செயல்படுகிறது என்பதை காட்டுகிறது. இங்கே இயற்கை கூட ரீதியாக அரசியலின் உருவவியல்.

சின்னவன், கல்வி, களவு, விடுதி அனுப்பப்படல் இவை போருக்குப் பிந்தைய சமூக மீளுருவாக்கத்தை புனைவு மூலம் காட்டுவது. கல்விக் கட்டமைப்பின் குழப்பம், ஆசிரியர்களின் நினைவில் நிற்காத உருவாக்கம், பொற்புதிர் மீது விழும் சிந்தனைச் சுமைகள் இவை புனைவிலக்கியத்தில் அமைப்பு என்பது ஒரு மறைபாத்திரம் என்பதை வெளிப்படுத்துகிறது.

பொற்புதிர் ஒரு கம்யூனிஸ்ட் போராளியின் மகள் என்பது மட்டுமே அரசியல் அல்ல. அவளுக்கு காதலே வராத தருணத்தில் கண்ணீர் வருவது, ஆனால் சிந்தனை தெளிவாக இருப்பது இது கிரிசாந் புனைவின் அரசியலை உள்ளார்ந்த மனிதத்தன்மை + சித்தாந்தம் என்ற வடிவில் காட்டுகிறார். புனைவு எப்போதும் மனிதனின் முரண்பாடுகளால் உருவெடுக்கும் என்பதை இது உணர்த்துகிறது.

கிரிசாந் போரைச் “சலிப்பான விடயம்” என்றும் சுட்டிக்காட்டுவது புனைவு அரசியல் வடிவுருவாக்கத்தின் புதுமை. பெரும்பாலான இலக்கியங்களில் போருக்குப் பிந்தைய சலிப்பு எழுதப்படும்; ஆனால் இங்கு போரின் நடுவே நிகழும் சலிப்புகள் புனைவு நெறியை முறியடிக்கின்றன. இது கதையல்ல, ஈழத் தமிழ் சமூகத்தின் போரின் மனவியல் அமைப்பின் வடிவுருவாக்கம்.

சின்னமுத்து ஆச்சியின் இறப்பு, பள்ளிக் கல்வி, தாய்மை ஒரு கணத்தில் மனிதனை சாதாரணமாக்குவது சமூகத்தின் ஆழம் எவ்வாறு தனி மனித காயத்தில் வடிவெடுக்கிறது என்பதை காட்டுகிறது. புனைவிலக்கியத்தின் வடிவுருவாக்கம் இங்கே தனிப்பட்டது = அரசியல் என்பதை உறுதி செய்கிறது.

கிரிசாந் கதைமொழியின் நுணுக்க விவரணைகளால் “வாசகன் பாத்திரத்துக்குள் நுழையச் செய்கிறார்”இது புனைவு வடிவாகும் போது, வாசிப்பனுபவம் நம் உடலின் உணர்வாக மாறுகிறது. புனைவிலக்கியம் அப்போது உடல், நினைவு, அரசியல், சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட உண்மையின் கலை வடிவம் ஆகிறது.

அதனால், கல்விரல் நாவல் புனைவிலக்கியத்தின் வடிவுருவாக்கத்தில் வெளிப்படுத்தும் முக்கிய இயக்கம் போர், நினைவு, காயம், பெண்,உடல், கல்வி, மற்றும் அரசியல் ஆகியவை ஒவ்வொரு பாத்திரத்திலும், ஒவ்வொரு உவமையிலும், ஒவ்வொரு புவிசார் விவரணையிலும் தனி வடிவத்தைப் பெற்று கதை அமைப்பையே ஒரு அரசியல் உடலாக மாற்றுகின்றது இங்கு வாசகன் தன்சமூகம்சார்ந்த அரசியல் தேவை நிலைப்பாட்டிலிருந்தேசிந்தித்து தன்னை பொருத்திபார்ப்பான் ஆனாலும் எழுத்தினை நிராகரிக்காது எழுத்தின்மீதான அகப்புற நிலைகளை அறிவாய்ந்து விவாதிப்பதே ஒரு படைப்பின்மீதான சனநாயகத்தை மதிக்கும் செயலாகும்.

புனைவிலக்கியத்தின் வடிவுருவாக்கம்
கதை வடிவெடுப்பதல்ல; வாசிப்பவன் அனுபவம் வடிவெடிப்பதே. அதே நேரம் புனைவிலக்கியத்தின் “உண்மையை” முழுமையாகக் கண்டுபிடிக்க முடியாது; அது சரிபார்க்கக்கூடிய நிகழ்வுகளின் உண்மை அல்ல. ஆனால் மனித அனுபவம், உணர்ச்சி, முரண்பாடு, சமூக வலிமைகள் போன்றவற்றின் உள்ளார்ந்த உண்மையை நாம் அணுக முடியும். எழுத்தாளனின் பார்வையும் வாசிப்பவரின் அனுபவமும் கலந்து உருவாகும் இந்த உண்மை ஒரே வடிவில் நிலைக்காது அது உணரப்படுவதும் புரியப்படுவதும் மட்டுமே.

கல்விரல் நாவல் அரும்பி “நாயகி”யிலிருந்து சாதாரண அம்மாவாக மாறுவது, போருக்குப் பிந்தைய சமூக உளவியல் மாற்றத்தின் பிரதிபலிப்பாகும். போர் முடிந்ததும் வீரர்களின் அடையாளம் கரைந்து, சமூகம் அவர்களை மீண்டும் என்ன செய்கின்றது “சாதாரண வாழ்க்கை” பங்கை ஏற்க அழுத்துகிறது; இழப்புகள், குற்றஉணர்வு, போன்ற உளவியல் புண்கள் அமைதியான வாழ்வைத் தேடச் செய்கின்றன. பெண்களுக்கு சமூகமிடும் தாய்மை,குடும்பப் பொறுப்பு என்ற மரபுவழி எதிர்பார்ப்பு மேலும் அவர்களின் வீரச்சின்னத்தை மறைத்து விடுகிறது. இதனால் அரும்பியின் மாற்றம் தனிப்பட்ட வீழ்ச்சி அல்ல; போருக்குப் பிந்தைய மனிதன் அடையும் அடையாள பரிமாற்றத்தின் இயல்பான விளைவாக இருந்தாலும் சமூகம் அவர்களை நோக்கும் விதம் கேள்விக்குட்படுத்த வேண்டும்.


ப.பார்தீ

11-02-2026

TAGS
Share This