‘குக்கூ’ சிவராஜ் – ஒரு விருது

‘குக்கூ’ சிவராஜ் – ஒரு விருது

சிவராஜ் அண்ணனை ஒரு முறையாவது நேரில் கண்டு தேம்பத் தேம்பச் சிரித்து கட்டியணைத்து நெஞ்சுடைய தழுவிக்கொள்ள வேண்டும் என நினைப்பவன் நான். அவர் நம் காலத்தின் பேரறத்தின் ஆன்மா கொள்ளும் தீரா அலைச்சலும் மாபெரும் உத்வேகமும் கொண்டவர். அவரைப் போல முற்றிலும் நேர்மறையான ஆளுமையை என் வாழ்நாளில் உணர்ந்ததில்லை. ஒருமுறை கூட நேரில் பார்க்காத, எங்கோ இவ்வளவு தொலைவில் இன்னொரு தீவில் இருக்கும் எளிய எழுத்தாளனுக்கும் சுரக்கும் பரிவு அவர். அவரது ஆன்மாவின் தாக்கம் என்னுள் உண்டு. இத்தகைய மனிதர்கள் மண் நிகழ்வது மானுடம் என இலக்கியம் சொல்லும் மகத்தான பெருக்கின் மீது நம்பிக்கையுடனும் பற்றுடனும் எழுதச் செய்யும் விசையை அளிக்கிறது. விருதுக்குறிப்பில் அவரது தாக்கங்கள் நிகழும் சமூகத் தளங்களில் இலக்கியம் என தனியே சுட்டப்பட்டிருக்கவில்லை. பதிப்பக பணிகளைச் சுட்டியிருக்கிறார்கள். இலக்கியத்திலும் அவரது இருப்பின் மூலம் தாக்கம் செலுத்துகிறார் என்பதற்கு நானொரு சாட்சி. விருதுகளுக்கு அவர் அப்பாற்பட்டவர், அவர் அவற்றை அடுத்த தலைமுறைக்கு சோதியை அளிப்பதற்கென கையேந்தி வருவார்.

இந்த நாள், தித்திப்பை நாவில் உணர்ந்த குழந்தையின் மகிழ்ச்சி போலிருக்கிறது.

*

விருதுக் குறிப்பு

”நீ சென்று தலித் மக்களுக்காகப் பணிசெய்” என காந்தி சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காகத் தனது ஆயுள்முழுக்கத் தலித் மக்களுக்கான கல்வி நிறுவனங்களைத் தொடங்குதல், வேலைவாய்ப்பு மையங்களை நிறுவுதல், அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக உதவுதல், அரசாங்க உதவிகளைப் பெற்றுத்தருதல் என தன்னுடைய மொத்த சொத்துக்களையும் வாழ்வின் கடைசிக் கணம் வரை இழந்து நின்ற தூய ஆத்மா தான் லட்சுமண ஐயர். ஈரோடு, கோபிசெட்டிபாளையத்தில் தனக்கிருந்த அத்தனை சொத்துகளையும் ஏழை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அவர்களுடைய நலவாழ்வுக்காகவும் இழந்தவர்.

650 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தானம் வழங்கியவராக, காந்தியத்தைக் கடைசிவரை கடைப்பிடித்த சத்தியாகிரகியாக லட்சுமண ஐயர் அவர்களின் பன்முகச் சமூகப் பங்களிப்பு என்பது எக்காலத்தும் தமிழ்ச்சமூகம் நெஞ்சில் வைத்துத் தொழத்தக்கது.

லட்சுமண ஐயரின் தியாகவாழ்வை சமகால இளையவர்களுக்கு அறிமுகப்படுத்தவும், இறுதிவரை அவர் விடாமல்காத்த சமூகச் செயல்களுக்கான அகவிசையை உள்ளேந்திக்கொள்ளவும், விளிம்புநிலை மக்களுக்காகப் பல்வேறு தளங்களில் இயங்கிவரும் சமூகமனிதர்களுக்கு ஒத்துழைக்கவும் ‘தேசிய அளவிலான கல்விக் கூட்டமைப்பு’ Lakshmana Iyer Liberation Through Learning Collective துவங்கப்படுகிறது.

காந்தியர் பி.வி.ராஜகோபால் (ஏக்தா பரிஷத்), கெளதம் பஜாஜ் (வினோபா ஆசிரமம்), அறிவியலாளர் அனில் குப்தா (ஹனிபீ நெட்வொர்க்), பேராசிரியர் பழனிதுரை (காந்திகிராம் பல்கலைக்கழகம்), மருத்துவர் சத்யா (ஊழியரகம்), அய்யா தங்கவேலு (அக்னி ஸ்டீல்ஸ்) , சினேகலதா ராஜசேகர் (மொழிபெயர்ப்பாளர்) ஆகியோர் இவ்வமைப்பின் பிரதான உறுப்பினர்களாக இருந்து வழிநடத்துவார்கள்.

மேலும், இவ்வமைப்பின் மூலம் இனி ஆண்டுதோறும் இரு மனிதர்களுக்கு ‘லட்சுமண ஐயர்’ பெயரில் விருது வழங்கப்படும். விருதளிப்புத் தொகையாக தலா ரூபாய் இரண்டு லட்சம் முடிவு செய்யப்பட்டுள்ளது. சமூகம் சார்ந்த செயல்பாடுகளை மதிக்கும் பொருட்டும், சமகாலத் தலைமுறையினருக்கு அம்மனிதர்களை அறிமுகப்படுத்தும் பொருட்டும் இவ்விருது அளிக்கப்படவுள்ளது. இதன்படி, 2026ம் ஆண்டுக்கான ‘லட்சுமண ஐயர்’ விருது இருவருக்கு அளிக்கப்படுகிறது. முதல் மனிதர் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த பெஜவாடா வில்சன், இரண்டாவது மனிதர் தமிழகத்தைச் சார்ந்த குக்கூ சிவராஜ்.

பெஜவாடா வில்சன்

இவர் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த சமூகப் போராளி மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர். மனிதக் கழிவை மனிதனே அகற்றும் (Manual Scavenging) வேலையை மரபு வழக்கப்படி செய்யநேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். கல்வி கற்று, அரசியலறிவியலில் பட்டம் பெற்ற வில்சன், Safai Karmachari Andolan என்ற இயக்கத்தை நிறுவினார். மரபு வழக்கத்தின் காரணமாக மனிதக் கழிவை அகற்றும் பணியில் மனிதர்களை அமர்த்துவதை சட்டப்படி தடைசெய்ய வேண்டும் என்றும், அதில் ஈடுபட்டு வரும் குடும்பங்களுக்கு மாற்று வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் இந்திய அரசை வலியுறுத்திப் போராடினார்.

மனிதக் கழிவை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள குடும்பங்களின் குழந்தைகளை கல்வி கற்க வைத்தார். இவருடைய களப்போராட்டங்கள் மற்றும் வழக்குத்தொடுப்புகள் காரணமாக, 1993ம் ஆண்டில் மனிதக் கழிவை மனிதனே அகற்றுவதை தடுக்கும் சட்டத்தை இந்திய அரசு இயற்றியது. ஆனால், அதன் பிறகும்கூட மனிதக் கழிவை மனிதர்கள் அகற்றுவது நீடித்துவந்தது. இவர் அதைப் புகைப்படங்கள் எடுத்து மாநில, மத்திய அரசுகளுக்கு அனுப்பியும், ஊடகங்களிலும் வெளிப்படுத்தி தீவிரமாகப் போராடினார். மனிதக் கழிவை மனிதனே அகற்றும் நிலையை ஒழிக்கும் தொடர் பரப்புரையிலும் ஈடுபட்டார்.

2003ல் பெஜவாடா வில்சன், மனிதக் கழிவை மனிதன் அகற்றுவதைத் தடுக்க, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து 2010ல் மனிதக் கழிவை மனிதனே அகற்றும் சட்டம் நடைமுறைக்கு வந்தது. 2010ம் ஆண்டில் ‘மனிதக் கழிவை மனிதனே அகற்றுவது தேசிய அவமானம்’ என அறிவிக்குமாறு இந்திய அரசை வற்புறுத்தினார். இவரது தொடர் போராட்டத்தின் விளைவாக இன்று இந்தியாவில் மனிதக் கழிவை மனிதன் அள்ளும் முறை சட்டப்படி ஒழிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மனிதக் கழிவை மனிதனே அகற்றும் பழக்கத்தை ஒழிக்கும் பெருஞ்செயலுக்கான முதற்போராளியாகத் தன்னை செலுத்திக் கொண்டவர் பெஜவாடா வில்சன்.

சிவராஜ்

இவர் நெசவுத் தொழிலைப் பின்புலமாகக் கொண்ட அறச்சலூர் எனும் சமணக் கிராமத்தில் பிறந்தவர். பள்ளிக்கல்வியில் பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வியுற்றார். அதன்பின், தன்னுடைய இயற்பியல் ஆசிரியரின் துணையிருப்பால் வாழ்வுப்பாதையின் அடுத்தகட்டங்களைக் கண்டுகொண்டு சமூகச் செயல்பாடுகளைக் கையிலெடுத்தார். எதிர்மறையான வெறுப்புமனநிலை எல்லாச்சூழலிலும் பரவிநிற்கும் சமகாலச்சூழலில், நேர்மறையான செயல்களை முன்வைப்பது இவருடைய முதன்மைநோக்கம். இன்றைய தமிழ்ச்சூழலில் நிகழ்ந்துவரும் வெவ்வேறு மாற்றுச் செயல்பாடுகளில் இவருடைய பங்களிப்பும் திட்டமிடுதலும் பின்புலமாக அமைந்திருக்கிறது.

குறிப்பாக ஜவ்வாதுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள குக்கூ காட்டுப்பள்ளி, தும்பி சிறார் இதழ், தரும வைத்தியசாலை, தன்னறம் பதிப்பகம், ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம், நியதி இளையோர் கூடுகை, அகர்மா கட்டிடக்கலை இயக்கம், யாதும் தற்சார்பு வெளி, நூற்பு கைத்தறிக்கூடம், தாய்வழி கருப்பட்டி கடலைமிட்டாய், துவம் தையல்பள்ளி, திண்ணைப்பள்ளி, தயை பனையோலை பயிற்றகம், விலங்குகள் சிகிச்சையகம், சிற்றகல் சிறப்புக் குழந்தைகள் மையம், சிறைச்சாலைகளில் நூலகங்கள் என பல்வேறு முன்னெடுப்புகளுக்கான ஆதாரக் காரணமாகச் செயல்படுகிறார். மலைக்கிராமம் முதல் சமவெளி வரை நிறைய பகுதிகளில் ஓவியங்களுடன் கூடிய குழந்தை நூலகங்கள் அமைத்திருக்கிறார். இவற்றின் தாக்கம் கல்வி, மருத்துவம், பதிப்பகம், வேளாண்மை, கட்டிடவியல், சூழலியல், வாழ்வியல் என பல்வேறு தளங்களில் பரவியுள்ளது.

தன் விருப்பத் துறைகளில் செயல்படத் தவிக்கும் பலநூறு இளைஞர்களை உரிய தடத்தில் பயணிப்பதற்கான அத்தனை சாதகச்சூழலையும் இவர் உருவாக்கி அளித்துவருகிறார். சமூகத்தின் மீது வெறுப்புணர்ச்சி இன்றி அனைத்துத் தளங்களுடனும் ஆக்கப்பூர்வமாக ஒன்றுபட்டு செயலாற்றி, மாறுதல்களை உருவாக்க முயலும் காந்தியத்தின் சாராம்சத்தை தனது ஒவ்வொரு முன்னெடுப்பிலும் பின்பற்றிவருகிறார். தற்பொழுது, பழங்குடி மக்களுக்கான கல்வித்திட்ட வடிவமைப்பில் நண்பர்களை இணைத்து நைதாலிம் சார்ந்த செயற்பணிகளில் முழுமூச்சாக இயங்குகிறார்.

காந்தியர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், அய்யா நம்மாழ்வார், கல்வியாளர் அரவிந்த் குப்தா என பல ஆளுமைகளிடம் உடனிருந்து அவர்களிடம் பெற்ற அனுபவ ஞானத்தை அடுத்த தலைமுறைக்கு பகிர்ந்துவருகிறார். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் இவருடைய தீவிரத்தால் இந்தியச்சூழலில் செயலாற்றுவதின் மீது நம்பிக்கை கொண்ட இளையோர் திரளை உருவாகியுள்ளார்.

சர்வதேச அமைதி மற்றும் காந்திய கல்வி அமைப்பு நிறுவனர் Dr.ஜில் கார் ஹெரிஸ், Lakshman Iyer Grassroots Transformation Award 2026 விருதுகளை வழங்க உள்ளார்.

விருதுவழங்கும் நாள்: 22-02-2026, இடம்: தியாகி லட்சுமண ஐயர் விடுதி, கோபிசெட்டிபாளையம்.

TAGS
Share This