கருத்தியல் தலைமையும் அறமும்
சிறுகுழுக்களாக வாழத் தொடங்கிய மனிதர்கள், சமூகங்களாக உருப்பெற்று ஒரு மொத்தமானுட, பூமிபற்றிய உடன்படிக்கைக்கைக்குமான உரையாடல் வெளிக்குள்
வந்து சேர்ந்திருக்கிறோம் .சமூகம் மற்றும் பூமி போன்றவற்றுக்கு இடையில் மனிதர்கள் உருவாக்கியிருக்கும் உடன்படிக்கையானது, எத்தகையது என்பது காலத்திற்குக்காலம் மாறியும் மேம்பட்டும் வந்திருக்கின்றது. நமது
எதிர்காலத்திற்கான அடிப்படைகளை உருவாக்குவதற்கு ஜனநாயகத்தை
அடிக்கட்டுமானமாக உருவாக்கத் தொடங்கியிருக்கிறோம்.
திக்கற்ற அலைச்சலில் இருந்து திரும்பும் மனித சமூகம் வேர்கொண்டு
வாழத்தொடங்கியதற்குப்பின் திரும்பவும் பொருளுள்ள அலைதலே வாழ்வாகும். இதற்கிடையில் அறிவு மற்றும் அதிகாரப்பரம்பல் பூமியின் சகல மனிதர்களுக்கும்
சென்று சேர வேண்டும். எதன் குறித்தும் வன்முறையோ ஒடுக்குமுறையோ
பணியச்செய்வதோ சர்வாதிகாரமோ வழிமுறையாக அமையாது. மாறாக, உரையாடல், கருத்தை ஏற்க உழைத்தல், மற்றமையை மதித்தல், உடன்பாட்டின் எல்லையை விரிவாக்குதல் என்பன தீர்வுகளை நோக்கி நகரும் பாதைக்கு வழியாகும். தற்போது, மனிதர்களின்
ஆதாரப்பிரச்சினைகள் இன்னுமும் தீர்ந்து விடாத காலத்தில்,
தேவைகளுக்கும் ஆசைகளுக்குமிடையில் நிகழும் தொடரான இயக்கமே வாழ்க்கையை நகத்துகிறது.
இலங்கைத்தீவின் வரலாற்றில் பல்வேறு காலகட்டங்கள் வந்து
போயிருக்கின்றன. ஒவ்வொரு காலகட்டமும் உண்டாக்கிய பண்பாட்டு மற்றும் அரசியல் அடிப்படையிலான மாற்றங்கள் இத்தீவை சிங்களப் பேரினவாத அதிகார
ஒழுங்கைக்கொண்ட ஒன்றாக மாற்றியிருக்கின்றது. காலனித்துவத்திற்கு
முந்தைய காலகட்ட மதிப்பீடுகள், சமூக உறவுகள், வாழ்க்கைக் கோலங்கள்
என்பவற்றின் மீது காலனித்துவம் கடுமையான பாதிப்பைச்
செலுத்தியிருக்கின்றது. காலனித்துவத்திற்கு எதிரான இலங்கைத்தீவின்
போராட்டங்களே நாம் ஜனநாயக வெளிக்குள் நுழையத் தொடங்கிய முதற் திறவு. காலனித்துவத்திற்கு எதிரான பண்பாட்டு எதிர்ப்பின் போது உண்டான அரசியல்
போராட்ட வழிமுறைகள் பெரும்பான்மையினம் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதில் உண்டாக்கிய அசமத்துவமும் ஒடுக்குமுறையும், பாரியளவிலான பண்பாட்டு
மாற்றங்களை எதிர் இயக்கங்களைச் சிறுபான்மையினருக்குள்ளும் இந்தத்
தீவிற்குள்ளும் உண்டாக்கியது. இந்த எதிர் விளைவுகளின் விளைச்சல்களாக
உண்டான ஆயுதவழி போராட்ட முறமைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசினால் அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது. போருக்குப் பிந்திய இந்தக்காலகட்டம்
மீளவும் ஜனநாயகத்தை அதன் பரந்தளவிலான செயற்தளங்களோடு உருவாகத் தொடங்கியிருக்கிறது.
ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட சமூக ஒழுங்கை உருவாக்குவதே
பயனுள்ளதும் சக்கிமிக்கதுமாகும். ஒரு தனிமனிதரின் குரலுக்கும்
கருத்துக்கும் வாய்ப்பும் மதிப்பும் சுதந்திரமும் இருப்பது ஜனநாயகத்தின்
அடிப்படையான பண்புகள். ஒருவர் தனது பிரச்சினையை;
வெளிப்பாட்டைப் பகிர்வதற்கு சமூகம் என்ற அமைப்பு துணை
நிற்கவேண்டும், வாய்ப்பளிக்க வேண்டும், அது மறுக்கப்படும் பொழுது அவர் தன்னுடைய நியாயத்தை ஏற்றுக்கொள்ளும் பிரச்சினையைத் தீர்க்கவல்ல தரப்பினரைத்திரட்டி தன்னுடைய நியாயத்தை ஏற்றுக்கொள்ளச் செய்யும்
அங்கீகரிக்கச் செய்யும் வெளியை ஜனநாயகம் கொண்டிருக்கிறது. தான்
வன்முறைக்குள்ளாகும் போதும், ஒடுக்கப்படும் போதும் சுரண்டப்படும்போதும் அதனை எதிர்ப்பதற்கு அதனை மாற்றுவதற்கு மனிதர்கள் அமைப்பாய்த்
திரள்வதுதான் பலம்மிக்க வழிமுறை.
இந்தப்பின்னணியின் அடிப்படையில் இந்தத்தீவின் மக்கள் ஜனநாயகத்தை
மேலும் உள்வாங்கி மற்றத்தரப்பை மதித்து அதன் நியாயங்களை
ஜனநாயகத்தின் பாற்பட்டு வெளிப்படுத்தும் சமூக நிலையை நோக்கி நகர்வதற்கு அறிவு ரீதியிலான உரையாடல்கள் அவசியமாகின்றன. தமிழ் அறிவுச்சூழலில் இந்த அடிப்படைகளை விளங்கிக்கொள்ள உள்ள மூல நூல்கள் மிகக்குறைவு அண்மைக்காலத்தில் வெளிவந்த தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதியும்,விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான
தொல். திருமாவளவன் எழுதிய “அமைப்பாய்த் திரள்வோம்” என்ற நூல் இந்தக் காலகட்டத்திற்கு மிக முக்கியமானது.
திருமாவளவன் தொண்ணூறுகளில் எழுச்சி பெற்ற ஓர் அரசியல் தலைமை. இந்தியாவெங்கும் ஆதிக்கத்தைச் செலுத்திவரும் சாதிய
அமைப்பிற்கு எதிராகவும் இந்துத்துவ ஒடுக்கு முறைக்கு எதிராகவும் “அடங்க
மறு அத்துமீறு” என்ற முழக்கத்துடன் ஜனநாயக வெளிக்குள் ஓர் அரசியல்
சக்தியாக அவர் மாறத்தொடங்கினார்.
தமிழீழ ஆதரவு நிலைப்பாடு விடுதலைப்புலிகள் குறித்தான அவரது பற்று என்பனவும் அவரை அரசியல் வெளிக்குள் தீவிரமாக இயங்கச்செய்தன. அதனோடு இதுவரை தமிழக அரசில் களத்தில்
தொடர்பற்றிருந்த தலித்துக்களை ஓர் அரசியல் சக்தியாக திரட்டுவதில்
இவருடைய பங்கு மிக முக்கியமானது. அடக்குமுறைக்கு எதிரான
இந்தப்பயணம், இப்போது அதிகாரத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது
என்பது திருமாவின் கருத்து.
சிறிய வயதில் உண்டான அவருடைய வாசிப்புப் பின்னணி அவரை உருமாற்றியது. சமஸின் ஒரு நேர்காணலில், அம்பேத்கரை எந்தவயதில் வாசிக்கத்தொடங்கினார் என்ற ஒரு கேள்வி
முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்,
“எட்டாம் வகுப்பு படிக்கும்போது. என் அப்பாதான் அம்பேத்கரை எனக்கு
அறிமுகப்படுத்தினார். அப்பா எட்டாம் வகுப்பு வரை படித்தவர். வாசிப்பு
அதிகம்.விவசாயக் கூலி.ஒரு வரலாற்று ஆசிரியர் மாதிரி எனக்கு
வரலாற்றைச் சொல்லிக் கொடுத்தவர். நான் நன்றாகப் படிக்க
வேண்டும்என்பதற்காக அப்பா அடிக்கடி அம்பேத்கரைப் பற்றிச் சொல்வார்.
‘நம்மை மாதிரி அவரும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர், நிறையப்
படித்தவர். அவரது படிப்பை எழுதினால் இவ்வளவு நீளத்துக்கு
வரும்’என்று தன் இரண்டு கைகளையும் விரித்துக் காட்டுவார் அப்பா.
பின்னாளில் சென்னைக்கு வந்த பிறகு, ‘நாட்டுக்கு உழைத்த நல்லவர்
அம்பேத்கர்’புத்தகம் கிடைத்தது. சின்ன புத்தகம். அதுதான் அம்பேத்கரைப்
பற்றி நான் படித்த முதல் புத்தகம். அம்பேத்கரைப் பற்றிப் படிக்கப் படிக்க
எனக்குள் ஒரு பெரும் உந்துதல் உருவானது.
வறுமையான சூழலில் பிறந்து படிப்பவர்கள் எல்லோரும் இயல்பாகத் தன் வேலை, தன் வாழ்க்கை என்று நகரத்தான் பார்ப்பார்கள். நீங்கள் எப்படி
அரசியலை நோக்கி நகர்ந்தீர்கள்? சின்ன வயதிலேயே எங்கள் மக்கள்
அனுபவித்த கொடுமைகள் கடுமையான பாதிப்புகளை மனதில்
உருவாக்கிவிட்டன. அரசியலுக்காகத் திட்டமிட்டு என் வாழ்க்கையை
அமைத்துக்கொள்ளவில்லை என்றாலும், காலம் அதை நோக்கித்தான்
என்னைத் தள்ளியது.” 1
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சாதி அடிப்படையிலான கட்சி,
கட்டப்பஞ்சாயத்துச்செய்யும் கட்சி, திருமாவளவன் குறித்த சாதித் தலைவர் என்று வகை தொகையான அவதூறுகளுக்கும்
எதிர்ப்புக்கும் மத்தியில் அதனை ஒரு அனைவருக்குமான கட்சியாக,
அமைப்பாக மாற்றியிருப்பதில் திருமாவளவனின் அறிவுழைப்பு,
செயலாற்றலும் அளப்பரியது. சகமனிதர்களுக்காக, அவர்கள் மேல்
நிகழ்த்தப்படுகின்ற ஒடுக்குமுறைகளுக்காக, தன் தனிப்பட்ட வாழ்க்கையை மொத்த சமூகத்திற்குமாக விரித்தெடுப்பதில்
வெளிப்படும் கருணையும் பேரன்பும் மிக முக்கியமான வாழ்வுமுறை.
நவகாலனித்துவ உலக ஒழுங்கில் தனித்துச்சுருங்கி தனியர்களாக
வாழத்தொடங்கியிருக்கும் மனிதர்களுக்கிடையில், சமூகமென்பது
பல்வேறு உறவுகளின் கூட்டு என்பதை உணர்ந்து விரியும் அகம்
திருமாவளவனுடையைது.
அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப்பற்றி சமஸ் குறித்த நேர்காணலில் ஒரு கேள்வி
கேட்டிருப்பார்.
“1982-ல் நான் பட்டப் படிப்பை முடித்தபோது என் வயது 20. எங்கள் ஊரில் பதினெட்டைத் தாண்டிவிட்டாலே கல்யாணப் பேச்சு வந்துவிடும். என் அம்மா பெண் பார்க்கிறேன் என்று வந்து நின்றார். நான் ‘இந்தப் படிப்புக்கெல்லாம் வேலை கிடைக்காதம்மா; சட்டம் படிக்கப்போறேன். வேலை கிடைக்காட்டிலும் வக்கீல் வேலை பார்த்தாவது பொழைச்சுக்கலாம்’ என்றேன். அப்பா என் பக்கம்
நின்றார். மேலே படிக்கப்போனபோது, விடுதலைப் புலிகள் இயக்கம்சார்
மாணவர்கள் அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது. 1983-க்குப் பிந்தைய காலகட்டம் கொந்தளிப்பானது இல்லையா? ‘விடுதலைப்புலி’என்ற கையெழுத்துப் பத்திரிகை
நடத்தினேன். கண்ணதாசன் பேரவை சார்பில் 1984 மார்ச்சில் ஈழ விடுதலை
மாநாடு நடத்தினேன். இப்படிப் போக ஆரம்பித்துவிட்டது.
அந்தக் காலகட்டத்தில் நான் ரொம்ப கூச்ச சுபாவி. ஆண் நண்பர்களே குறைவு. பெண்களுடனான உறவு, காதலையெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதவனாகத்தான் இருந்தேன். வெகுவிரைவில் அரசுப் பணி கிடைத்தது. தடய அறிவியல் துறையில் வேலை. மதுரைக்குப் போனேன். அதன் பிறகு என்
வாழ்க்கையே மாறிவிட்டது. மலைச்சாமி அண்ணனின் அறிமுகம் கிடைத்தது.
‘தலித் பேந்தர்ஸ்’ இயக்கம் அறிமுகமானது. சில மாதங்களுக்குள் அந்தப் பகுதியில் நடந்த கொடூரமான சம்பவங்கள் எனக்குள் பெரிய மாற்றங்களை உருவாக்கிவிட்டன. மேலூர் அருகேயுள்ள சென்னகரம்பட்டியில் 1992-ல் நடந்த
இரட்டைப் படுகொலை, 1997-ல் மேலவளவில் நடந்த எழுவர் படுகொலை போன்ற சம்பவங்கள் கடுமையான அதிர்வை உருவாக்கின. அதுவரை ஈழப்
போராட்டம், அது தொடர்பான தோழர்களுடனான தொடர்பு என்றிருந்த நான், தலித் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்பது மிக முக்கியமான பணி என்ற மனநிலைக்கு வந்தேன். அரிவாள் வெட்டுப்பட்டு, ரத்தம் சொட்டச் சொட்ட
நள்ளிரவு 2 மணிக்கு ஓடி வருவார்கள். குடிசையைக் கொளுத்திவிட்டார்கள்
என்று ஓடிவந்து அழுவார்கள். ஓடுவேன். இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றால், அர்ப்பணிப்பு இல்லாவிட்டால் முடியாது என்று புரிந்தது.எப்படியாவது ஒரு இயக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்று தோன்றியது. இரவெல்லாம் கிராமம் கிராமமாகப் போய் கூட்டம் போட்டுப் பேசுவோம்.
பாதிக்கப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு காவல் நிலையம் போவது, மாவட்ட ஆட்சியரைப் போய்ப் பார்ப்பது என்று ஒரே அலைச்சல். ஓய்விருக்காது. எங்காவது ஓரிடத்தில் தலித்துகளுக்கு எதிராகத் தாக்குதல் நடந்தது என்றால், உடனே ஒரு சுவரொட்டியைத் தயார் செய்வோம். அந்தச் சுவரொட்டியில் எங்கள்
அரசியலைப் பேசுவோம். நானே சுவரொட்டி எழுதுவேன். துண்டறிக்கை
தயாரிப்பேன். ரயில் நிலையம், பஸ் நிறுத்தங்கள், கடைவீதி என்று தெருத்
தெருவாக அலைந்து, நானே அவற்றை ஒட்டுவேன். பல நேரங்களில் பசைக்
கையை அலுவலகம் போய்க் கழுவியிருக்கிறேன். இரவு நேரங்களில் சுவர்களில் விளம்பரம் எழுதுவேன். மதுரையில் சுவர்களுக்கு வெள்ளையடித்து பெரிது
பெரிதாக அம்பேத்கர் பெயரை முதலில் எழுதியது நாங்கள்தான். எவ்வளவோ
நாள் அப்படி எழுதிவிட்டு தூக்கக் கலக்கத்தில் அந்தச் சுவரோரங்களிலேயே படுத்துத் தூங்கியிருக்கிறேன். ‘தலித் பேந்தர்ஸ்’ அமைப்பு சித்தாந்தரீதியாக
நிறைய முரண்பாடாகத் தெரிந்தபோது, தமிழ்ச் சூழலுக்கேற்ற ‘விடுதலைச்
சிறுத்தைகள்’அமைப்பைத் தொடங்கினோம்.
அப்போதெல்லாம் அரசியல் வாழ்க்கை ஒருகட்டத்தில் தலைமறைவு
வாழ்க்கையை உருவாக்கிவிடும் என்றே நினைத்திருந்தேன். வெவ்வேறு
அரசியல் தொடர்புகள் காரணமாக உளவுத் துறையினர் என்னைப்
பின்தொடர்ந்துகொண்டே இருப்பார்கள். திருமணம் என்கிற ஒரு விஷயத்தைக் கற்பனையே செய்ய முடியாத காலம்.1999-ல் தேர்தல் அரசியலுக்கு வந்தோம்.அரசு வேலையை விட்டேன். நாளெல்லாம் கூட்டங்கள், நிகழ்ச்சிகள்
என்று ஊர் ஊராகப் பயணப்பட வேலைச் சுமைமேலும் பல
மடங்கானது.பின்னாளில் அதற்கான காலம் கடந்துவிட்டது. அம்மா மட்டும்
சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நான் போக்குக் காட்டிக்கொண்டே
இருக்கிறேன்.”
அறிவுத்தரப்புக்கும் சமூகத்தளத்திற்கும் இடையில் இருக்கும் உறவென்பது, பெரும்விலகலுள்ளது. அறிவையும் சமூக வாழ்வையும் இணைத்த ஓர் அரசியல் களத்தைத் திறந்ததுதான் திருமாவின் முதன்மையான பங்களிப்பு. அவரது கருத்துகளில் நிலைப்பாடுகளில் நாம் எவ்வளவும் முரண்பட முடியும், எதிர் நிலையை எடுக்க முடியும். அதனை ஒருமாற்றுத்தரப்பாகவே கருதும் அறிவு ஒழுக்கமும் அதனைச்சொல்ல அந்தத்தரப்புக்கு உரிமை இருக்கிறது என்ற சமூக அறத்தையும் அவரது இயக்கம் கொண்டிருக்கிறது. அவரை நம்பும் மக்களுக்கு குலசாமி என்ற அடையாளத்திலிருந்து புதிய தலைமுறையின் சமத்துவத்தை நோக்கிய பார்வையை, அதற்குண்டான உள்ளீடுகளை உருவாக்கியதில் திருமாவின் வகிபாகம் வேறெந்தத் தலைமையையும் விட மதிப்பு வாய்ந்தது.
போராட்டக்களங்களை அமைப்புக்களை நோக்கி ஆட்களை மந்தைகளைப்போல் சாய்த்துச்செல்லும் நுண்ணுணர்வற்ற தரப்பல்ல அவர். “போராட்டம் என்பது மக்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு யுக்தி. அதுவே தீர்வு காணும் வழியல்ல. மக்களை ஓர் அரசியல் சக்தியாக்குவதற்காக அணி
திரட்டுகிறோம். எந்த அடிப்படையில் அவர்களிடம் நாளை உனக்கு விடுதலை
கிடைக்கும் என்று சொல்வது? எது விடுதலை, எப்படி விடுதலை என்று
புரியவைப்பது? தலித்துகள் இரட்டைப் போராட்டத்தை இயல்பாகவே
எதிர்கொள்கிறார்கள். ஒன்று.. உணவு, உடை, உறைவிடம் தேடி.. வறுமையை
எதிர்கொள்ளும் போராட்டம். மற்றொன்று.. சாதிய அடக்குமுறையை
எதிர்கொள்ளும் போராட்டம். ஒரு ஆர்ப்பாட்டத்திலோ, பேரணியிலோ,
பொதுக்கூட்டத்திலோ ஒரு எளியவன் பங்கேற்கிறான் என்றால், அவனுக்கு ஒரு செய்தி கிடைக்கிறது. ‘நீ தனியாள் அல்ல; இவ்வளவு பெரிய சக்தி; உன்னால் ஒடுக்குமுறையை எதிர்க்க முடியும்’ என்பதே அந்தச் செய்தி. ஏதோ ஒரு கிராமத்தில் தனியாளாக ஒடுக்குமுறைக்கு அஞ்சி அஞ்சி வாழ்பவன் லட்சம்பேர்
திரளக்கூடிய இடத்தில் நாமெல்லாம் ஒரே அமைப்பு, ஒரேகட்சி என்று
நினைக்கும்போது அவனுக்குள் ஏற்படும் தன்னம்பிக்கையே அரசியல்ரீதியான தலைநிமிர்வைக் கொடுக்கும். அமைப்பையும் அரசியலையும் பயன்படுத்தி
பிரச்சினையை எதிர்கொள்ளலாம் என்ற துணிவைக் கொடுக்கும்.
அரசிடம் சாதாரணமாக ‘எங்களுக்குப் பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுங்கள், வேலைவாய்ப்பு கொடுங்கள், கடனுதவி கொடுங்கள்’ என்று கோரிக்கை வைப்பதையே எடுத்துக்கொள்ளுங்கள். பலருக்குப் பஞ்சமி நிலம் என்றாலே
என்னவென்று தெரியாது. ஒரு போராட்டத்தில் அவனை ஈடுபடுத்தும்போது, எதற்காக இங்கே வந்துள்ளோம் என்ற கேள்வி எழும். பஞ்சமி நிலம் என்றால்
என்னவென்று தெரியவரும். நிலவரலாறு, அரசியல் அமைப்பு, அரசு இயங்கும் முறை, அரசை யாரெல்லாம் நடத்துவது எல்லாம் தெரியவரும். மக்களை அரசியல்படுத்துவது, போராட்ட வழிதான். போராட்டம் என்பது விடுதலைக்கான தீர்வு அல்ல.. தீர்வை நோக்கிய வழி.”
மேற்சொன்ன புரிதலே திருமாவின் வழி, அவர் உண்டாக்கியிருப்பது கட்சியின் தலைமையோ அல்லது அமைப்பின் தலைமையோ அல்ல. அது நாம் வாழும் சமூகம் கொண்டியங்க வேண்டிய கருத்தியல் தலைமை. இதனை தம்மைப் பின்பற்றுகின்ற தம்மைத்தொடருகின்ற மக்களுக்கு என்றைக்கும் வலியுறுத்திக் கொண்டிருப்பவர் திருமா. அதனை ஓர் அறிவுச் சேகரமாக மாற்றுமொரு முயற்சியே அமைப்பாய் திரள்வோம் என்ற நூல்.
அமைப்பாய்திரள்வோம் என்ற நூல் அது வெளிவந்திருக்கும் காலச்சூழலில்
தமிழகத்திற்கும் இந்தியச்சூழலுக்கும் எவ்வளவு தேவையோ அதேயளவிற்கு
இலங்கைத்தீவிற்கும் பொருத்தமானது. தலித் மக்களின் அரசியல் அதிகாரம்
நோக்கிய பயணத்தில் அவர் கண்டைந்திருக்கும் அனுபவங்களும்
விளக்கங்களும் அந்தக் கண்டடைதலில் இருந்து பொதுச்சமூகங்களிற்காக
அவர் உருவாக்கிக்கொண்டிருக்கும் கருத்தியல் தளமும் இந்த நூலின் மைய
விசையாக இயங்குகின்றது. அமைப்பென்பது என்ன? ஏன் அமைப்பாய்த் திரளவேண்டும்? அமைப்பாய் திரள்வதில் உள்ள முரண்பாடுகள். அதனைத்
தீர்ப்பது எப்படி. அதற்கான நடைமுறைவழிகள், பொது நீரோட்டத்தில் இயங்குவது ஏன்? மக்களை அரசியற்படுத்துதல், ஜனநாயகப்படுத்துதல்
என்றால் என்ன? அதிகாரம் என்றால் என்ன? ஒழுங்கு என்றால் என்ன? இது
எல்லாவற்றின் ஊடாகவும் பயணப்படக்கூடிய அரசியல் வழி வரைபடம் எது? போன்றதான பல்வேறு கேள்விகளைச் சமகால மற்றும் பொதுவான அமைப்புகள் தமக்குள்ள உரையாட இந்த நூல் சட்டகங்களை வழங்குகின்றது.
இலங்கைத்தீவில் இன்று உண்டாகியிருக்கும் ஜனநாயகப்போராட்டங்கள்
பல்வேறு வகையில் உருப்பெற்று, நடை பெறுகின்றன. சில இடங்களில்
மக்கள் தன்னெழுச்சியாக உணர்வு பூர்வமாக ஒருங்கிணைகிறார்கள். சில
போராட்டங்களில் தொண்டு நிறுவனங்கள் மக்களை ஒன்றிணைக்கின்றன.
சில பொழுதுகளில் கட்சிகள் மக்களை பயன்படுத்தின்றன. புதிதாக
உருவாகியிருக்கும் இளம்தலைமுறை அடையாளமற்ற, நிலையற்ற சமூக
வலைத்தள ஒருங்கிணைவு மற்றும் ஒரு சில பொது நோக்கங்களிற்காக
ஒன்று கூடுதல் என்ற சிறு அளவிலான போராட்ட வழிமுறைகளைக்
கையாள்கின்றது.
இடதுசாரிகள், இளைஞர்குழுக்கள் அரசியல் உரிமைக்கான
அமைப்புகள் போன்றவை அமைப்பு ரீதியான தன்மையையும் அதற்கான
உள்ளீடுகளை அறிவு ரீதியாக வளர்த்தெடுப்பதிலும் செயலாற்றலாக
மாற்றுவதற்கும் தொடர்ந்தும் முயன்றுவருகின்றன. எந்தவொரு
அமைப்புக்களாலும் மையநீரோட்ட ஏற்பை அடைய முடியவில்லை. அவர்கள் கொண்டியங்கும் கருத்தியல் தலைமைகளும் நடைமுறைச் செயல்களும் எவ்வாறு
முரணபடுகின்றன என்பதை தொடர்ந்து அவதானித்து வருகிறோம். இது அமைப்பாய்த் திரட்டுவதில் அமைப்புகளுக்கு உள்ள குறைபாடு.
இளம் தலைமுறையோ மறுதலையாக அமைப்பை வெறுப்பதாகவும்
கூட்டமாகவும் முரண்பாடுகளுடனும் பன்மைத்துவத்துடனும் தொடர்ந்து இயங்க முடியாமல் கலைந்துமறைவதுமாக இருக்கின்றன. அறிவுழைப்பற்ற செயலே
பெரும்பாலானவர்களின் முதன்மையான விருப்பமாக இருக்கிறது. தாம் எதற்காகப் போராடுகிறோம், அந்த மக்களின் பிரச்சினைகள் என்ன? அதன்
வரலாறு என்ன? அவ்வரலாற்றில் இருந்து அவர்கள் உருவாக்கிக்கொண்ட
பார்வைகள் எவை. அதிலிருந்து இந்தப்பிரச்சினைகளை அவர்கள் எவ்வாறு விளங்கிக்கொள்கிறார்கள். அந்த விளக்கத்தில் இருந்து எந்த வகையான அரசியல் போராட்டங்களை, அமைப்புக்களை அவர்கள் உருவாக்குகிறார்கள்?
என்பதை அவர்கள் தங்களுக்குத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். இந்த நூல் அப்படிக் கேட்டுக் கொள்வதற்கான தேவை ஏன் இருக்கிறது? அதனை
எப்படிச்செய்யவேண்டு என்பதற்கான உரையாடல்களைத் தொடங்குவதற்கு
உதவியாக இருக்கும்.
இந்த நூலில் உள்ள பிரதான குறைபாடு அது எழுதப்பட்டு இருக்கும்
ஆண்மைய மொழி. ஒரு பெருந்தரப்புக்கு முன்னால் தொடர்ந்து
உரையாடிக்கொண்டிருக்கும், தொடர்ந்து தன் கருத்துக்களை ஜனநாயக வெளியில் மக்களுக்கு பரப்ப வேண்டும் என்ற கருத்தைக்கொண்டிருக்கும்
தலைமை உணர்ச்சிக் கொந்தளிப்பூட்டக்கூடிய மொழியில் பேசலாம். ஆனால் அவரே அறியும் நிதானம் அந்த மொழியில் இருக்க வேண்டும். வேறெந்தத் தலைமையையும் விட ஆணாதிக்க ஒழுங்கை எதிர்ப்பதிலும் அதெற்கெதிரான சமத்துவமான பயணத்தைப்பற்றியும் திருமாவளவன் தொடர்ந்து
பேசிவருகிறார். ’மனிதர்’ என்றோ ’அவர்’ என்றோ இன்னும் பல்வேறு பொதுச் சமூகத்தைச் சுட்டிக்காட்ட வேண்டிய இடங்களில் ஆண் விகுதியைப் பயன்படுத்திக்கொண்டே செல்கிறார். அது குறித்த பிரக்ஞை அவரிடம் இல்லை. ஏனென்றால் அவருடைய பேச்சுக்களிலும் ஆண் விகுதியையே தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருகிறார். இது அவரைப்பின்பற்றும்
பலரிடமும் பிரக்ஞையற்று பயன்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும் இதை அவர் பிரக்ஞை பூர்வமாக மாற்றியமைத்தால் மொழியையும் சமத்துவமாகப் பயன்படுத்தத் தொடங்கினால் அவரைப்பின்பற்றும்
பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு மொழிப்பிரக்ஞையை வழங்கும். மொழியே எல்லாவிதமான மன அமைப்பையும் உண்டாக்குவதில்
செல்வாக்குச் செலுத்துகின்ற முக்கியமான கருவி. இந்த ஆணாதிக்க ஒழுங்கை மாற்ற உரையாடலை
மாற்ற, கருத்துக்களை மாற்றச்சொல்வது போல்தான் சொற்களையும் மாற்றச்சொல்ல வேண்டியிருக்கிறது.
சொற்சேர்க்கைகளில் புணர்ச்சிவிதிகளைக் கவனிக்கவேண்டும். குறைந்தபட்சம் அதிகம் பயன்படுத்தப்படும், முக்கியமான சொற்களையேனும் மாற்றுதல் அவசியம். உதாரணமாக ‘அரசியல்படுத்தல்’ என்பது ‘அரசியற்படுத்தல்’ என்று வருவதே பொருத்தமானது, மனப்பதிவிற்கும் தேவையானது.
‘கணவன் – மனைவி’ என்ற உறவுமுறைதான் இயற்கையான இணைவு என்ற நம்பிக்கை தொடர்ப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கவனத்தில் எடுக்கவேண்டும். தற்பாலீர்ப்பாளர்கள், பாற்புதுமையினர் போன்றோரின் நிலைப்பாடுகளையும் வாழும் உரிமையையும் இணைத்தே குடும்பத்தை விளங்கிக்கொள்வது பொருத்தமானது.
கருத்தியல் ரீதியிலான கலைச்சொற்களைப் பயன்படுத்தும் பொழுது அது என்ன தன்மையடிப்படையில் இணைக்கப்பட்டிருக்கிறது என்ற விளக்கம் இன்னும் விரிவாக இருப்பதுநல்லது. உதாரணமாக பாசிசம் என்னும் கருத்தாக்கம் நூலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இடங்களின் பொருத்தத்தன்மையைவிட இன்னும் விரிவான அர்த்தங்களைக் கொண்டது. நூலில் பயன்படுத்தப்பட்டிருப்பதோ பாசிசத்தின் சில தன்மைகளை அல்லது பாசிசம் இயங்கக்கூடிய வழிகளை வாசிக்கும் பொதுவாசகர் கருத்தியல் ரீதியிலான இந்தவிடயங்கள் தொடர்பில் விளங்கிக்கொள்வதில் சிரமமிருக்கலாம்.
இந்த நூலின் பிற உள்ளடக்கங்கள் அவற்றின் நோக்கத்தினால் மீளமீளச்
சொல்லப்பட்டும் விரிவானதாகவும் இருக்கின்றது. பொதுமக்களை அமைப்பு ரீதியில் அறிவூட்டுவதற்கு சுருக்கப்பட்ட மக்கள் பதிப்பிற்குரிய
எல்லைகளுக்குள்ளாலான இன்னொரு வடிவம் தேவை. அதுவே பல
லட்சக்கணக்கானோரிடம் இக்கருத்துக்களை கொண்டு சேர்ப்பதற்கும் உரையாடல்களை உண்டாக்குவதற்கும் உதவும். அவருடைய நேரமின்மை,
பொறுப்பு, செலுத்தக்கூடிய உழைப்பின் எல்லை என்பவை மிகவும்
சிக்கலானவை. ஆனால் அமைப்பு ரீதியாக சித்தாந்த ரீதியாக
இக்கருத்துக்களைச் சுருக்கி இன்னொரு வடிவத்தை வழங்கக்கூடிய
தோழர்களின் ஊடாக அதனைச்செய்து அதை அவர் சரிபார்த்தபின் மக்கள்
பதிப்பாகக் குறைந்த விலையில் வெளிக்கொண்டுவருவது அவசியமான பணி.
புத்தகங்களை வாசிப்பது அவற்றை உரையாடுவது என்பது ஒரு சமூகத்தின்
எதிர்காலத்தை உருவாக்குவதில் கணிசமான பங்களிப்பைச் செலுத்துவது. நடைமுறை அனுபவங்களை கருத்தியல் ரீதியாக விரித்தெடுத்து பொதுப்பிரச்சினையுடன் இணைத்து ஜனநாயக சக்திகளை அணி திரட்டி
ஒழுங்கு என்பது அச்சத்தில் இருந்து பிறக்கின்ற ஒன்றாக இல்லாமல்
அறத்திலிருந்து உருவாகும் ஒன்றாக இருக்கும் சமூகங்களை நோக்கிய
பயணத்திற்கு இந்த நூல் பயன்மதிப்பு வாய்ந்த உள்ளீடு.
(2019)
(புதிய சொல்)