அப்பாவும் கோவர்த்தன கிரியும்

அப்பாவும் கோவர்த்தன கிரியும்

உனது அன்பு
ஒரு பரிசுத்த மழைக்காடு

உன் நேசம் பற்றிய விரல்களில்
என் குழந்தைக் கால வாசனை

முதல் பரா லைட் பார்த்த போதும்
முதல் சைக்கிளை விடும் போதும்
முதல் துப்பாக்கி வாங்கித் தந்த போதும்
எவ்வளவு நெருக்கமாய் இருந்த நீ.

முதல் சிகரட்டின் பின்னும்
முதல் காதலின் வாசனையின் பின்னும்
எவ்வளவு அந்நியமாகிவிட்டாய்

உனது தோல்வியுற்ற தற்கொலை முயற்சியின் பின்னர்
அந்த வீட்டுக்கு நஞ்சு தேய்ந்த கழுத்து
அழுத அம்மாவின் உடலோடு ஒட்டியிருந்தேன்,
எவ்வளவு விசமூறிய பாம்பின் சுவாசம் அது.

பின் அவள்
ஒரு முற்றுப் பெறாத பாசுரத்தைப் போல
முடிக்கவே முடியாமல் தொண்டைக்குள்
சிக்கிக் கொண்டாள்,

அப்பா –
காலம், பிம்பங்கள் பெருகும் வெளி

எவ்வளவு எளிமையானவை நாட்கள்
இந்த நாட்களில் ஒரு தாயை
உனக்குள் வளர்த்திருந்தாய்.

உனது அன்போ –
இச் சிறு மழைக்காய்
நீ என் மேல் தூக்கிப் பிடித்திருக்கும்
மலைக் குடை.

(2013)

TAGS
Share This