இலை பெய்யும் காலம்
இலை பெய்யும் காலம் எனும் தலைப்பிலான கவிஞர் நேதாமோகன் அவர்களின் கவிதைத் தொகுப்பு வெளியீடு நெடுந்தீவில் 04. 01. 2024, காலை 10 மணிக்கு நிகழ இருக்கிறது.
தாயதி பதிப்பகத்தின் 27 ஆவது வெளியீடாக இக் கவிதைத் தொகுப்பு நேதா மோகனின் துணிச்சல்காரன் தொகுப்பிலிருந்து வளர்ச்சியையும் அகலிப்பையும் கொண்டிருக்கிறது.
ஒரு சிறு தீவின் முருகைக் கற்பாறைகளும் பஞ்சுருட்டான் குருவிகளும் பனங்காடையும் இக் கவிதைகளில் உருக்கொள்கின்றன. குமுதினியென்ற ஒரு படகிற்கு யுத்ததின் தொடக்கம் முதல் இன்று வரை எத்தனை கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. நிலமும் அரசியலும் வாழ்வுமென இக் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டிற்கு அப்படகேறி அக்கரை சென்று அத் தீவின் நினைவையும் கவிதைகளையும் பேச இருப்பது நிறைவயளிக்கிறது. நேதாவின் வளர்ச்சியும் கவிதையின் மீதுள்ள குன்றாத ஆர்வமும் அவர் தொடர்ந்து முன்செல்வார் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
குமுதினி -36
என் தாய்கடலின் வெண்நுரைகள்
சிவந்து பரந்த நாட்கள்
எங்கள் சனங்களின் சாவாக்குருதி
இதே கடலில் இன்றும் இருக்கிறது
இந்த நாட்களில் தீவு துயரடைந்து விடுகிறது
பிதிர் கடன்களை கழிக்க
தீர்த்தக்கரை* உறவுகளுக்காய் காத்தருக்கிறது.
பச்சிளம் குழந்தையின் இறவா
குரலொன்று
மலையடி* எனும் ஆழியின் நீண்ட வெளியில்
அந்தரித்து பறக்கும் பட்டாம்பூச்சியில் அமர்ந்து
கரைகாணாது அலைகிறது
இராணுவ வூட்ஸ்களின் கீழ் இருக்கும்
எங்கள் கல்லறை சுவர்களின் மேல்
ஓரே ஒரு சுடர் ஏற்றி
செம்பரத்தம் மலர்களும்
கண்ணீர் துளிகளுமாக
அஞ்சலிக்க வேண்டும் நாம்
நீலக்குமுதினி நீ எம்மை
கரை சேர்த்துப் போன பின்
எம் நெஞ்சோடே வருகிறாய்
பெருநீச்சலோடு.
-நேதாமோகன்-
தீர்த்தக்கரை* இறந்தவர்களின் ஆத்ம சாந்தி கிரியைகள் செய்யும் கிழக்கு கடற்கரை
மலையடி* நெடுந்தீவின் நீண்ட கடற்பரப்பில் ஆழமான பகுதி