மீளச் சொல்லுதல் : 01
நாம் நிகழும் காலத்தில் வெளிவரும் புதிய கவிதையென்பது ஒரு நீண்ட வரலாற்றின் முனை. அது மானுடக் கனவில் வேர்கொண்டு இன்றைக்கும் எதிர்காலத்திற்குமென விரிந்து கொண்டிருக்கிறது. கடந்த காலம் மிக விரிவான பரப்பு. அதில் ஒரு துண்டை வெட்டி எடுத்து அறிவதென்பது அச் சூழலின் முன்னையும் இன்றையும் இணைப்பது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்போராட்டத்தின் தொடக்க காலத்தில் அதன் கவிதைக் குரல்களாகவும் தனித்த மனத்தினை நோக்கியும் பேசி வந்த கவிஞர்களில் சிலரை இம் மீளச் சொல்லுதலில் கவனம் கொள்கிறோம்.
தனிமனித அகத்தின் மீதுதான் கவிதை முதலில் நேர் மோதுகிறது. சமூகமாக அக் கவிதை கொள்ளும் இடம் என்பது பல்வேறு தனிமனிதர்களின் மனங்களில் அவை உண்டாக்கிய விளைவுகளின் திரட்சியே.
ஈழத்துக் கவிதைப் பரப்பில் கவிதைகளின் மேலான வாசக அனுபவ எழுத்துகள் மிகக் குறைவானது. பெரும்பாலானவை ஆய்வு நோக்கிலானவை, அல்லது அறிமுக அடிப்படையிலமைந்தவை. ஒரு கவிதை தனியொருவரின் மனதை எங்கு தொட்டு அதன் ஒலியெழாத தொடுகையிலிருந்து மனதை உருக்கி இன்னொன்றாக மாற்றி ஒளிவிடச் செய்கிறது என்பது இலக்கிய வாசகர்கள் எதிர் கொள்ள வேண்டிய முதன்மையான கேள்விகளில் ஒன்று.
இத் தொடர் அகவயமான வாசிப்பின் கேள்விகளையும் அதற்கான உரையாடல்களையும் வளர்த்துப் பயிற்சி செய்யும் நோக்கிலானது.
முதலாவதாக சண்முகம் சிவலிங்கம் அவர்களின் கவிதைத் தொகுப்புகளான ‘நீர் வளையங்கள்’, ‘சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும்’ போன்றவற்றின் மீது நிகழ இருக்கிறது. அவர் ஒரு அரசியல் கவிஞராகவே தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறார். காலத்தேவை காரணமாக அவரது கவிதைகள் அவ்விதம் கவனப்படுத்தப்பட்டு வந்தாலும், தனிமனித உணர்வுகள் சார்ந்த ஆழமான கவிதைகளையும் அவர் எழுதியுள்ளார். ஒரு கவிஞரின் மனம் எதனால் எல்லாம் ஆக்கப்பட்டிருகிறது என்பதை அறிவதே அவரின் அரசியலை அறியும் வழி.
இவ் உரையாடல் அவரது அரசியல் மற்றும் தன்னுணர்வுக் கவிதைகளை வாசிப்பதற்கானதும் அதனை ஒவ்வொரு தனிமனமும் எவ்விதம் பொருள்கொள்கிறது என்பதையும் விவாதிப்பதற்கான வெளி. இந் நிகழ்விற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
குமாரதேவன் வாசகர் வட்டம்