எரியும் நெருப்பும் காற்றில்: 01

எரியும் நெருப்பும் காற்றில்: 01

‘ஓ என் தேசமே
உன் மணல் வெளிகளில்
நான் நடக்கின்றேன்
உன் நிர்மலமான வானத்தில்
நட்சத்திரங்களை
நீ என் பார்வைக்கு பரிசளித்துள்ளாய்
உனது சிரிப்பினால் என்
சகோதரர்கள்
வாழ்கின்றனர்
நீ போர்த்துள்ள சோலையினுள்
ஒளித்து வைத்துள்ள
வெண் முத்துக்களை என் தங்கைகள்
அணிந்துள்ளனர்
வாழ்வுகளின் வாழ்வாய் நீ என்னை
அணிந்துள்ளாய் – உனக்கு
நான் கொடுப்பது
உயிர் மட்டுமே’.

1985 இல் எழுதப்பட்ட சிவரமணியின் கவிதை இது. விடுதலைக்கான கனவு இளைஞர்களின் மனதில் சூல் கொண்ட காலத்தில் பெருங்கனவுகளில் வாழ்ந்த ஒரு கவிஞை சிவரமணி. வாழ்வுகளின் வாழ்வாய் நீ என்னை அணித்துள்ளாய் என்று தேசத்தை அழைத்தவர். 17 வயதில் அவர் எழுதிய இக் கவிதையில் அந்தக் காலப் புதிய தலைமுறையின் ஒளிரும் நம்பிக்கை படர்ந்திருக்கிறது.

ஆயுத வழியிலான விடுதலைப் போராட்டங்கள், விடுதலைக்கெனப் போராடும் அமைப்புகளினால் சிதைக்கப்பட்டு, எதேச்சாதிகாரமாக ஆகும் தோறும் அவை மாபெரும் கொலைக்களத்துக்கு மக்களை மந்தைகளைப் போல் சாய்த்துச் சென்றிருக்கின்றன. அது ஆயுத வழியின் விசச்சுழல். நமது போராட்டத்தில் இம் மாற்றம் தொடக்க காலத்தில், அமைப்புக்குள் கொலைகள், சகோதர அமைப்புகளின் மீது கொலைகள், அறிவுஜீவிகள், கவிஞர்கள் கொலைகள் என்று வளர்ந்து விரிந்து சென்றது.


*

அன்னா அக்மதோவா ரஷ்யாவின் மகத்தான கவி. இடதுசாரித்தனத்தின் பெயரில் நிகழ்ந்த கொடுங்கோலாட்சியினதும் உலக யுத்தங்களினதும் பின்னிருந்து எழுந்த மகத்தான அறக்குரல். அவருடைய கவிதைகள் சில அ. யேசுராசாவால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. பனிமழை தொகுப்பில் அக்கவிதைகள் உள்ளன. அக்மதோவாவின் இரங்கற் பா என்ற நீள் கவிதை மானுட குலத்தின் உயர்வான கலையாக்கங்களில் ஒன்று.
அக்கரைப் பூக்கள் என்ற பெயரில் மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பினை வ. கீதா – எஸ். வி. ராஜதுரை ஆகியோர் எழுதியிருக்கின்றனர். இதில் உள்ள அக்மதோவா பற்றிய குறிப்பிலிருந்து சில பகுதிகள் இவை, “அக்மதோவா 1889 – 1966 வரை வாழ்ந்தவர். புரட்சிக்கு முன்பே தலை சிறந்த கவிஞராக இருந்த அக்மதோவா, புரட்சியிலும் அதன் பின்னரும் பல ஆண்டுகள் அங்கு நிலவி வந்த போக்குகளில் ஒன்றான ஆக்கிமியிஸ்ட் குழுவைச் சேர்ந்தவர்.
எத்தகைய நிர்ப்பந்தத்திற்கும் வளைந்து கொடுக்காதவரும் தனது உணர்ச்சிகளை இறுக்கமான கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கக் கூடியவருமான அக்மதோவா, போல்ஷ்விக் புரட்சியின் மீதோ கம்யூனிசத்தின் மீதோ உற்சாகம் காட்டவில்லை. அதே நேரம் சோவியத் அரசை எதிர்க்கவுமில்லை. மிக ஆழமான நாட்டுப்பற்றுக் கொண்டிருந்த அவர், புரட்சியையோ கம்யூனிசத்தையோ ஏற்காத அல்லது எதிர்த்த பல எழுத்தாளர்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் குடியேறிய போது தன் தாயகத்தை விட்டுச் செல்ல மறுத்தார்.

புரட்சிக்குப் பின்னர் புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட முதல் மூன்று ஆண்டுகள் வரை தொடர்ந்து எழுதி வந்தார். அக் கொள்கைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, நாட்டை மிக விரைவாகத் தொழில்மயமாக்கவும் கூட்டுப்பண்ணைமயமாக்கவும் ஐந்தாண்டுத் திட்டத்தை ஸ்டாலின் ‘ மேலிருந்து நடத்திய புரட்சியின்’ கீழ் துவக்கி வைத்து உற்பத்திகளில் இலக்கியப் படைப்புகளையும் உள்ளடக்கி, எல்லா வகையான பரிசோதனை முயற்சிகளையும் தடை செய்து, வெளியீட்டுச் சுதந்திரத்தை குறுக்கி, ஆட்சிக்கும் கட்சிக்கும் எதிராகத் தெரிவிக்கப்பட்ட மிக மென்மையான விமர்சனக் குரல்களையும் கூட ஈவிரக்கமின்றி நசுக்கி ‘ சோசலிச எதார்த்தவாதம்’ என்ற பெயரால் அதிகார வர்க்க எதார்த்தவாதத்தை அங்கீகரிக்கப்பட்ட ஒரே இலக்கியப் பாதையாக சுட்டிக் காட்ட தொடங்கிய பின் அக்மதோவாவால் தன் எழுத்துகளை பிரசுரிக்க முடியவில்லை.

அன்னா அக்மதோவா

ஆனால் இரண்டாம் உலகப் போர் காலத்தில் ரஷ்ய தேசிய உணர்வும் நாட்டுப்பற்றும் முதன்மை வழங்கப்பட்டு நாடு முழுவதும் பாசிசத்திற்கு எதிராக அணிதிரட்டிருந்த சமயத்தில் (அதுவரை மெளனமாக்கப்பட்டு வந்திருந்த) போரிஸ் பாஸ்ட்டர்நாக் போன்றவர்களுடன் சேர்ந்து அக்மதோவாவும் மீண்டும் எழுதத் தொடங்கினார். நாட்டுப்பற்றும் தேசிய உணர்வும் மிகுந்த ரஷ்ய மக்கள் அன்று சோசலிசத்தின் பெயரால் ஸ்டாலின் இழைத்திருந்த கொடுமைகளை மறுத்தனர். கட்சி சிந்தாந்த வேறுபாடுகள் இன்றி மாபெரும் தேசப் பாதுகாப்புப் போரில் பங்கேற்றனர். அனைத்துத் தியாகங்களையும் செய்ய முன்வந்தனர். அத்தகைய மாபெரும் நாட்டுப்பற்றின் இலக்கிய வெளிப்பாடுகளாகவே பாஸ்டர்நாக், அக்மதோவா போன்றோரின் அக்காலகட்ட இலக்கியப் பணிகள் அமைந்தன. போர்க்காலகட்டத்தில் ஸ்டாலினிய இலக்கியத் தணிக்கை முறைகள் தளர்த்தப்பட்டிருந்தன. பாசிச எதிர்ப்புப் போரில் உலகமெங்குமிருந்த ஜனநாயக, முற்போக்கு சக்திகளுடன் சோவியத் மக்களுக்கு ஏற்பட்டிருந்த பிணைப்பு இலக்கியத்துறையிலும் பிரதிபலித்தது. மற்றொரு பண்பாட்டு மறுமலர்ச்சிக்கான அறிகுறிகள் தோன்றலாயின.

ஆனால் போர் முடிந்த பிறகோ எழுத்தாளர்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. 1943 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்ட கட்சித் தீர்மானத்தின் படி அனைத்து எழுத்தாளர்களினதும் சுதந்திரம் பறிக்கப்பட்டது. அதனையடுத்து ஜோஸ்செங்கோ, அக்மதோவா போன்ற எழுத்தாளர்கள் சோவியத் எழுத்தாளர் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டதுடன் அன்றைய ஸ்டாலினிச இலக்கிய சர்வாதிகாரியான ஸ்தானோவின் கொடூரமான தாக்குதலுக்கும் உள்ளாயினர். அக்மதோவாவை ‘ பாதி கன்னிகாஸ்திரி, பாதி பரத்தை’ என்று பண்புக்கேடான வகையில் இழிவுபடுத்தினார் ஸ்தானோவ். சேவியத் இலக்கியத்திற்கு அந்நியமான தனிமையுணர்வு, விரக்தி, சோகம், நிராதரவு நிலை போன்றவையே அக்மதோவாவின் படைப்புகளில் விரவியுள்ளதாக ஸ்தானோவ் குற்றம் சாட்டினார். அத்தகைய இழிசொற்களோ சோதனைகளோ அக்மதோவாவைக் கலக்கமுறச் செய்யவில்லை.
லெனின் காலத்திலேயே தனக்குப் பேரிடியாய் வாய்த்த ஒரு துயர நிகழ்ச்சிக்குப் பிறகும் (அதாவது அவரது கணவரும் புகழ்பெற்ற கவிஞருமான நிகோலாய் குமிலியோவ் 1921 இல் எதிர்ப்புரட்சி சதி வேலையில் என்ற தவறான குற்றச் சாட்டின் பேரில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்) சமநிலை குன்றாது வாழ்ந்து வந்தவர் அவர்…”
” அக்மதோவா தனது காலத்தில் நடந்த கொடுஞ்செயல்களுக்கான மெளன சாட்சியாக இருக்குமாறு வரலாற்றுச் சூழ்நிலைமைகளால் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த போதிலும், அவற்றை மீறித் தனது கவிதைகளை உரத்த குரலெழுப்பும் சாட்சிகளாக உருவாக்கிவிட்டே மறைந்தார்.

அவரது கவிதையாற்றல் கொடுமுடியைத் தொட்டது, ‘இரங்கற் பா’ என்ற தலைப்பில் அவர் எழுதிய தொடர் கவிதையில் தான். 1935-1940 ஆண்டுகளில் ஸ்டாலினின் ‘களையெடுப்புகள்’ நடந்த காலகட்டத்தில், பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்ட்டுகளும் லட்சக்கணக்கான பொதுமக்களும் கொடிய அடக்குமுறைகளுக்கும், சித்திரவதைகளுக்கும் மரண தண்டனைகளுக்கும் ஆளான காலகட்டத்தில் எழுதப்பட்டது அது. கட்சி சாராத அறிவுஜீவிகள் மீதான தாக்குதலின் பகுதியாக அக்மதோவாவின் மகன் லெவ் குமிலியோவும்( இவர் நிக்கோலாய் குமிலியோவின் மகன் என்பதற்காகவே குறிப்பாகக் கைது செய்யப்பட்டார்) அக்மதோவாவுடன் ஒன்பதாண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிக்கோலாய் பூனினும் கைது செய்யப்பட்டனர். அதனால் ஏற்பட்ட வேதனையும் பதற்றமும் தோற்றுவித்த படைப்பு அது.

இரங்கற் பா
(1935 – 1940)

இல்லை, மற்றொரு வானத்தின் கீழ் அல்ல
அந்நியச் சிறகுகளின் அணைப்பில் அல்ல
அன்று நான் என் நாட்டு மக்களோடு இருந்தேன்
என் நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இடத்தில்.

முகவுரைக்குப் பதிலாக

யெஸோவின் பயங்கரம் தலைவிரித்தாடிய அந்தக் கொடூரமான ஆண்டுகளில் லெனின்கிராடில் உள்ள சிறைக்கு வெளியே பதினேழு மாதங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தேன். ஒரு நாள், கூட்டத்தில் ஒருவர் என்னை அடையாளம் கண்டு கொண்டார். எனக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தது ஒரு பெண். குளிரால் அவரது உதடுகள் நீலம் பாரித்திருந்தன. பெயர் சொல்லி நான் அழைக்கப்பட்டதை அதற்குமுன் அவர் கேட்டதேயில்லை. இப்போது அவர், எங்கள் எல்லோருக்கும் பொதுவானதாக இருந்த மரத்துப்போன நிலையிலிருந்து தொடங்கி என்னிடம் தாழ்ந்த குரலில் பேசினார். (அங்கு எல்லோருமே தாழ்ந்த குரலில் தான் பேசினர்):

‘இதை உங்களால் சித்தரிக்க முடியுமா?’


நான் கூறினேன்: ‘என்னால் முடியும்’


பிறகு புன்னகை போன்ற ஏதோவொன்று முன்பு அவரது முகம் இருந்த இடத்தில் தோன்றி மறைந்தது.

சமர்ப்பணம்

இத்தகைய துயரம் மலைகளுக்குக் கூனல் விழச் செய்துவிடும்
ஆறுகளின் போக்கைத் திருப்பி விடும் .
ஆனால் மனித வேதனை மண்டிக் கிடக்கும்
இந்தச் சிறைக்கூண்டுகளை நாம் எட்டவிடாமல் தடுக்கும்
இந்தக் கனமான தாழ்ப்பாள்களை
அதனால் உடைக்க முடியாது.
சிலருக்குத் தென்றல் இதமாய் வீசும்,
சிலருக்கோ கதிரொளி சுலபமாய் மங்கிமறையும்
ஆனால் பீதியால் பிணைக்கப்பட்டுள்ள நம் காதில் விழுவதோ
பூட்டுகளைத் திறக்கும் சாவியின் நாராசம்
காவலர்களின் கனத்த காலணியோசை எழுப்பும் மிதியோசை.
அதிகாலைப் பூசைக்குச் செல்பவர்போல் நாங்கள் எழுந்து
ஒவ்வொருநாளும் இப்பாழ் வெளியில் நடந்தோம்
மெளனத் தெருக்களிலும் சதுக்கங்களிலும் களைப்புடன் நடந்து
நடைப்பிணங்களாய் ஒன்று கூடினோம்.
சாய்ந்தது சூரியன், மங்கலாயிற்று நேவா நதி,
எப்போதும் தொலைவிலிருந்தே கீதமிசைத்தது நம்பிக்கை
இங்கு யாருக்கு இன்று தண்டனை?….அந்த ஓலம்,
திடீரென்று பெருக்கெடுத்த அந்தப் பெண்ணின் கண்ணீர்
அவளைப் பிறரிடமிருந்து பிரித்துக் காட்டியது
அவர்கள் அவளை அடித்துத் தரையில் தள்ளி
அவளது மார்பிலிருந்து இதயத்தைப் பிய்த்தெடுத்து
பிறகு தள்ளாடிய அவளைத் தன்னந்தனியாக
அனுப்பியது போல்.
நரகத்தில் நான் கழித்த அந்த இரண்டாண்டுகளில்
எனக்குக் கிடைத்த அந்தப் பெயரில்லா நண்பர்கள் எங்கே?
சைபீரியப் பனிக்காற்றின் சீற்றத்தினிடையே
அல்லது நிலாவின் நலிந்த வட்டத்திற்குள்ளோ
அவர்களைக் கேலி செய்யும் நினைவுகள் யாவை?
அவர்களிடம் உரத்துச் சொல்கிறேன்: வாழ்க, போய் வருக!

(மார்ச் 1940)

தொடக்கவுரை

இறந்தவர் மட்டுமே அன்று புன்னகைத்தனர்
அமைதியடைந்ததில் ஆனந்தம்.
சிறைச்சாலைகளுக்கிடையே சிக்கி
ஊஞ்சலாடுகிறது வீணான லெனின்கிராட்.
அன்று சித்திரவதைகளால் உணர்விழந்த
தண்டிக்கப்பட்டோர் கூட்டம் அணிவகுத்துச் சென்றது.
பிரிவு கீதத்தை சுருக்கமாய்ப்
பாடின
எஞ்சின்களின் ஊதல்கள்.
மரணநட்சத்திரங்கள் எமக்கு மேலே;
கறுப்பு மரியாவின் சக்கரங்களுக்கடியில்
ரத்தம் தோய்ந்த காலணிகளின் கீழ்
களங்கமற்ற ரஷ்யா துடித்தது.

1

பொழுது விடிந்ததும் உன்னை அவர்கள் அழைத்துச் சென்றனர்:
பாடையைத் தொடர்வதுபோல் நான் நடந்தேன்;
இருண்ட அறையில் அழுதன குழந்தைகள்,
கன்னி மரியாள் முன் உருகி வழிந்தது மெழுகுவர்த்தி.
உனது இதழ்களில் தெய்வச் சிலையின் ஈரமற்ற ஸ்பரிசம்,
உனது நெற்றியில் மரணத்தின் வியர்வை…. மறந்துவிடாதே!-
கொலைசெய்யப்பட்ட ஸ்ட்ரெல்ஸிக் காவலரின்
மனைவியர் போல்
க்ரெம்ளின் கோபுரங்களுக்கருகே
அழுது புலம்புவேன் நான்.

2

சாந்தமான் டான் நதி அமைதியாகப் பாய்கிறது:
எனது வீட்டினுள் நழுவி விழுகிறது மஞ்சள் நிலா,
தொப்பி கழன்ற மஞ்சள் நிலா அந்த அறையில்
ஒரு நிழலைக் கண்டது
அது தன்னந்தனியாக உள்ள பெண்
நோயாளிப் பெண், தனித்திருக்கும் பெண்
மகனோ சிறையில், கணவனோ மரணத்தில்
எனக்காக நீங்கள் பிரார்த்திப்பீரகளாக.

3

இல்லை, இது நான் அல்ல – துன்புறுவது வேறு யாரோ
என்னால் இதைத் தாங்க முடியாது ; கறுப்பு சீலைகள்
நடந்து முடிந்ததை மறைக்கட்டும்.
தெருவிளக்குகளை அவர்கள் எடுத்துச் செல்லட்டும்…
காரிருள்.

4

கேலி செய்பவளே, நண்பர்களுக்குக் களிப்பூட்டுபவளே
இதயங்களைத் திருடுபவளே
பூஷ்க்கின் பிறந்த நகரத்துப் பெரும் குறும்புக்காரியே
அன்று அவர்கள் காட்டியிருக்க வேண்டும்
விதிவசமான உன் நாட்களின் இச் சித்திரத்தை –
சிலுவைகளின் கீழ் பஞ்சடைந்த தோற்றத்துடன்
வரிசையில் முந்நூறாவது ஆளாக
கையிலொரு சிறு மூட்டையுடன்
நீ நின்றிருந்த இக்கோலத்தை;
புத்தாண்டுப் பனியினை உன் கண்ணீர் சுட்டெரித்ததை
அதோ பார், சிறைச்சாலையின் நெட்டிலிங்க மரம் வளைவதை!
நிசப்தம், நிசப்தம் ஆயினும் எத்தனை குற்றமற்ற உயிர்கள் மடிகின்றன.

5

பதினேழு மாதங்கள் நான் கூவியழுதேன்
உன்னை வீட்டுக்கு அழைத்துத்
தூக்கிலிடுபவன் காலில் விழுந்து மன்றாடினேன்
எனது பீதியே,எனது மகனே.
எல்லாமே நிரந்தரமாய்க் குழம்பிவிட்டன.
மனிதன் யார் மிருகம் யார் என
என்னால் பிரித்துப் பார்க்க முடிவதில்லை
நான் சாவுக்குக் காத்திருக்க வேண்டுமா- தெரியவில்லை.
இங்குள்ளவை
புழுதி படிந்த மலர்களும்
தூபக் கலசத்தின் சாம்பல் தடயமும்
தெரியாத இடங்களிலிருந்து
எங்குமே இட்டுச் செல்லாப் பாதைகளுமே.
என் கண்ணை நேருக்கு நேர் உற்றுப் பார்க்கிறது
ஒரு பெரும் நட்சத்திரம்
அதன் பார்வையிலோ
திடீர் மரணம் எனும் அச்சுறுத்தல்.

6

மெல்லெனப் பறக்கின்றன வாரங்கள்
என்ன நடந்தது? எனக்குப் புரியவில்லை
என் குழந்தாய்
அன்று நீ சிறைச்சாலையில் இருந்தபோது
வெள்ளை இரவுகள் உன்னை எட்டிப் பார்த்துச் சென்றன.
இப்போது அவை மீண்டும்
கழுகைப் போல ஒளிரும் கண்களுடன்
உன்னை எட்டிப் பார்க்கின்றன-
உனது பெரும் சிலுவையைப் பற்றி,
மரணத்தைப் பற்றிப் பேசியவாறே.

7

தண்டனை

அந்தச் செய்தி
விம்முகின்ற என் நெஞ்சில்
கல்லாய் விழுந்தது
ஒப்புக் கொள்: நான் தயாராக உள்ளேன்
சோதனைக்கு எவ்வாறோ தயாராக உள்ளேன்
இன்றைக்குச் செய்ய வேண்டியவை இவை:
நினைவைக் கொன்று, வேதனையைக் கொன்று
இதயத்தைக் கல்லாக்கி
மீண்டும் உயிர் வாழத் தயாராவது.
இல்லாவிடில்… கடுங்கோடை
விழாக்காலக் களியாட்ட வதந்திகளைக் கொண்டு வந்துவிடும்
இந்தப் பளிச்சென்ற நாள், இந்த வெறிச்சென்ற வீடு
என் தீர்க்கதரிசனம்.

8

மரணத்திற்கு

எப்படியும் நீ வருவாய்- இப்போது ஏன் வரக்கூடாது?
உனக்காகக் காத்திருப்பது
எனக்கு மிகவும் கடினமாக உள்ளது.
விளக்கை அணைத்து விட்டு
எளிமையான, அற்புதமான உனக்காகக்
கதவைத் திறந்து வைத்திருக்கிறேன்.
எந்த வடிவத்தை வேண்டுமானாலும் நீ மேற்கொள்ளலாம்;
விஷவாயுக் குண்டுபோல வெடித்து நீ உள்ளே வரலாம்,
கனத்த ஆயுதமேந்திய திருடன் போல் பதுங்கி வரலாம்,
அல்லது விஷக் காய்ச்சலால் எனக்கு நஞ்சூட்டலாம்.
அல்லது அனைவரும் கேட்டுச் சலித்த,
உன்னால் புனையப்பட்ட ஒரு கண்டனக் கூற்றுடனும் வரலாம்.
அப்போது என் கண்களுக்குப் புலப்படும்-
அந்த நீலத் தொப்பிகளுக்கப்பால்
பயத்தால் வெளிறிய காவல்காரனின் முகம்
இப்போது எனக்குக் கவலை இல்லை.
யெனிஸி நதி ஓடிக் கொண்டிருக்கிறது.
துருவ நட்சத்திரம் ஒளிர்கிறது
அன்பு சுரக்கும் கண்களின் நீலச் சுடர்
அந்த இறுதி பயங்கரத்தை மூடி மறைக்கிறது.

(19 ஆகஸ்ட் 1939, ஃபோண்டான்காவிலுள்ள இல்லம்)

9

பித்தத்தின் இறகுகள்
ஏற்கெனவே எனது ஆன்மாவைப்
பாதி மூடியுள்ளன
வெறியூட்டும் மதுவை எனக்குக் குடிக்கத் தந்து
இருண்ட பள்ளத்தாக்கிற்கு என்னை மயக்கி இட்டுச் செல்கின்றன.
வேறு யாரோ ஒருவர் பிதற்றுவதைக் கேட்பது போல
எனது தொடர்பற்ற பேச்சுகளை நான் கேட்டுக் கொண்டே
அவனது வெற்றியை ஒப்புக்கொள்ள வேண்டுமென்பதை
நான் புரிந்து கொண்டேன்.
( எவ்வளவு தான் நான் அவனைக் கெஞ்சினாலும்
எவ்வளவு தான் நான் பிரார்த்தனைகளால் வேண்டினாலும்)
அவன் அனுமதிக்க மாட்டான்
என்னுடன் எதையும் எடுத்துச் செல்ல:
எனது மகனின் கண்களிலிருந்து
வெறித்துப் பார்க்கும் உறைந்து போன வேதனையை,
புயலைக் கொண்டுவந்த அந்த நாளை
சிறைச்சாலைச் சந்திப்பு நடந்த அந்தப் பொழுதை,
கரங்களின் மென்மையான இதமான ஸ்பரிசத்தை
எலுமிச்சை மரங்களின் அசையும் நிழல்களை,
மென்மையான தூரத்து முணுமுணுப்பை –
கடைசி ஆறுதல் வார்த்தைகளை.

(4, மே, 1940)

10

சிலுவையிலறைதல்

‘எனக்காக அழாதே அம்மா, நான் கல்லறைக்குள் இருக்கும் போது’

I

தேவதூதர் தம் கானத்தால் போற்றினர்
அந்தப் பொழுதை.
வானம் உருகிற்று நெருப்பாக
” என் தேவனே! என்னை ஏன் கைவிட்டீர்?”
தன் தாயிடம் அவர் கூறினார்,”அழாதே…”

II

மக்தலேனா அழுதாள், புலம்பினாள்.
நேசத்துக்குரிய சீடனோ கல்லாய் நின்றான்
தாய் மெளனமாய், தனியாக நின்ற இடத்தில்
ஒரு பார்வையை வீச யாருக்கும் துணிவிருக்கவில்லை.

(1940- 1943)

முடிவுரை

நான் கண்டு கொண்டேன்-
முகங்கள் எவ்வாறு வாடுகின்றன என்று
கண்ணிமைகளின் கீழிருந்து பீதி எவ்வாறு எட்டிப் பார்க்கிறது என்று
கன்னங்களில் துன்பம் எவ்வாறு தன் கோடுகளைச் செதுக்குகிறது என்று
சாம்பல் நிற, கறுப்பு நிறச் சுருள்முடி
ஒரே நாளில் எவ்வாறு நரைத்துப் போகிறது என்று
பணிந்து போகும் இதழ்களில் புன்னகை எவ்வாறு மங்கி மறைகிறது என்று
வெற்றுச் சிரிப்பொன்றில் பயம் எவ்வாறு நடுங்குகின்றது என்று.
நான் எனக்காக மட்டும் பிரார்த்திக்கவில்லை-
ஆனால் இரக்கமற்ற சிவப்பு மதில்களினருகே
கொடூரமான குளிரிலும் ஜூலை மாத வெப்பத்திலும்
என்னோடு நின்றிருந்த அனைவருக்கும்தான்.

02

நினைவு கொள்ள வேண்டிய நேரம் மீண்டும் நெருங்கி விட்டது
நான் உங்களைக் காண்கிறேன், கேட்கிறேன், தொடுகிறேன்-
ஜன்னலுக்கு இழுத்து வரப்பட்ட,
இம்மண்ணை இனி ஒருபோதும் மிதிக்க முடியாத ஒருவரை
தன் அழகிய தலையசைத்து
‘இங்கு வருவது வீட்டுக்கு வருவது போல’ எனக் கூறிய பெண்ணை.
அவர்களைப் பெயர் சொல்லி அழைக்க விரும்புகிறேன்
ஆனால் பட்டியலோ பறிக்கப்பட்டு விட்டது
அது என் நினைவிலும் இல்லை.
அவர்கள் மீது போர்த்துவதற்கு
நானொரு பெரிய போர்வையை நெய்துள்ளேன்
அவர்களிடமிருந்து நான் கேட்ட எளிய வார்த்தைகளைக் கொண்டு.
அவர்களை எப்போதும் எங்கும் நினைவில் கொள்வேன்
எது நேரிடினும் அவர்களை ஒருபோதும் மறவேன்.
கோடானுகோடி அழுகை ஒலிக்கும் என் வாயை
வதைக்கப்பட்ட என் வாயை அவர்கள் அடைப்பார்களேயானால்
என்னையும் அவர்கள் நினைவு கொள்ளட்டும்
என் நினைவு நான் நெருங்கும் போது,
இந்த நாட்டில் எனக்கொரு நினைவாலயம் எழும்ப
யாரேனும் முடிவு செய்தால்
மனசாரத் தருகிறேன் சம்மதம்
ஆனால் ஒரு நிபந்தனை:
நான் பிறந்த கடலுக்கருகே அதைக் கட்ட வேண்டாம்
கடலுடனான என் கடைசிப் பிணைப்பு முறிந்து விட்டது.
ஜார் பூங்காவில் தேற்ற முடியாத ஒரு நிழல்
என்னைத் தேடிக் கொண்டிருக்கும் அந்தக்
குழிவான குத்துக் கட்டையருகிலும் வேண்டாம்
ஆனால் இங்கு-
முந்நூறு மணி நேரம் நின்றிருந்த இடத்தில்
எனக்காகக் கதவை ஒருபோதும் திறந்து விடாத இந்த இடத்தில்
ஏனெனில் மீளாத்துயிலிலும் கூட நான் பீதியடைகிறேன்
கறுப்பு மரியாக்களின் உறுமலை
அந்த வெறுக்கத்தக்க கதவு இழுத்து மூடப்படுவதை
அந்த வயதான மாது அடிபட்ட மிருகம் போல் ஓலமிட்டதை
மறந்து விடுவேனோ என்று.

எனது நிச்சலனமான வெண்கல இமைகளிலிருந்து
வழியும் கண்ணீர் போல்
உருகும் பனி பெருக்கெடுத்தோடட்டும்
சிறைச்சாலைப் புறாக்கள் தூரத்தில் கூவட்டும்
நேவா நதியில் படகுகள் அமைதியாகச் செல்லட்டும்.

(மார்ச், 1940)

மொழிபெயர்ப்பு: வ.கீதா – எஸ்.வி.ராஜதுரை

அன்னா அக்மதோவா
TAGS
Share This