கனவுச் சொல் : முதற் கடிதம்

கனவுச் சொல் : முதற் கடிதம்

இந்தக் கவிதை இன்றுதான் வாசித்தேன்.. ஒரு தனிமையில் இருந்த மனிதன் அனுப்பிவைத்த இசைத் தொகுப்பு.. காமம் சொல்லி .. தோல்வி கண்டது… அப்ப காதலியை நினைச்சு சுயமைதூனம் செய்து எழுதுறான் என்று கூட யோசிச்சன்.. அது ஒரு தோல்வியை அல்லது அடையப்பாடாத இலக்கு நோக்கிய வேதனையா என்று பாத்தன் அதுவும் இல்லை கடைசியில் இடப்பட்ட முத்தங்கள் காதலின் எச்சங்கள் தான்…

இது காதலிக்கு அனுப்படால் seductive art என்றும் பாக்க கூடியதா உள்ளது. அதாவது அவளைக் கட்டிலில் சந்திக்க தூண்டுவதாக அமைகிறது.. ஆரம்பத்தில் தனிமையைச் சொல்லி உன்காதலினால் உருளும் உலகத்தை சொல்லி வானமும் இசையும் என சுய இன்பம்தான் எனச் சொல்லி வேட்டையாடப் போகும் முன் நகத்தை கூராக்கும் புலி போல உள்ளது. ஆனாலும் இடையில் **ஒயா மாலங்க நத்தே கபே மங் தணியங் இன்னே **என்ற சிங்களக் காதலர்கள் சொல்லி தான் கட்டிலுக்கு அழைப்பார்கள் அந்த அனுபவமும் வருகிறது.. மொத்தத்தில் இந்தக் கவிதை தனிமைக்கானதா இல்லை தூண்டலுக்கானதா என்பது எனது / வாசகனின் தீர்மானம் தான். ஆனாலும் கவிதைகளை இப்போது தான் படிக்கும் வாசகனாக எனக்கு காமத்தைக் கடந்து பார்க்கும் வல்லமை இல்லை. காரணம் நான் அதை விரும்பவில்லை அந்த இன்பம் நன்றாக உள்ளது.. கவிதை என்னை சிந்திக்கத்தான் தூண்டுகிறது.. நன்றி.

Rtr kirishanth

கிரிசாந்

வணக்கம் கிரி, 

கவிதையை வாசிப்பது அவரவர் பார்வையில் தான். எழுதப்பட்ட நோக்கத்தை விளங்கிக் கொள்வதோ அதன் பின்னணியோ முக்கியமில்லை. கவிதையொன்றைப் புதிதாக வாசிக்கும் போது இரண்டு விடயங்கள் முக்கியமானவை.

ஒன்று, அதை அப்பாவித்தனமாக வாசிக்க வேண்டும். முன் தீர்மானங்கள் இன்றி, புதிரை அவிழ்ப்பது என்று இன்றி, அறியும் தீராத ஆர்வமுள்ள குழந்தையின் கண்களும் மனதும் கொள்ள வேண்டும். தீயும் மலரும் குழந்தைக்கு ஒன்றே, தொட்டு, முகர்ந்து, பார்த்து அறியும் ஆர்வம் கொண்டது. அப்படிக் கவிதை அழைத்துச் செல்லும் வழிகளில் பயணிக்க வேண்டும். அது ஒரு நல்ல வழி. 

இரண்டு, சொற்ளைக் கற்பனை செய்வது எளிதல்ல. எமக்கு அளிக்கப்படும் பள்ளிக்கூடக் கல்வி கற்பனையை அழிக்கும் நோக்கம் கொண்டது. புதிதாகச் சிந்திப்பது அல்லது கற்பனை செய்வது கிளார்க்குகளை உற்பத்தி செய்யும் கல்வி முறைக்கு எதிரானது. ஆகவே தான், வானம் என்றால் நீல நிறம், சூரியன் என்றால் செம்மஞ்சள் நிறம் என்று ஒரு குழந்தை ஓவியங்களை நிறம் மாற்றி கற்பனையில் வரையும் போது கூட அதைத் தடுக்கிறது இக் கல்வி. இவ்வளவு தான் நீ கற்பனை செய்ய வேண்டும். உனக்கெதுக்கு சிவப்புச் சூரியன் என்று கேட்கும். ஆனால் கவிதையோ இலக்கியங்களோ இதற்கு நேரெதிரானது. அது இன்னும் கற்பனை செய்யத் தூண்டுவதை அடிப்படை வழிமுறையாகக் கொள்வது. எழுதியவரை விட ஒரு கூர்மையான வாசகர், அந்தச் சொற்களின் படிக்கட்டுகளின் வழி முடிவில்லாக் கற்பனைகளுக்குள் வாழலாம். அதன் மூலம் தனது வாழ்வை மேலும் வடிவாக்கிக் கொள்ளலாம். 

ஆகவே உங்களது வாசிப்பு உங்களுடைய சொந்தக் கனவு, அது சொல்லில் நிகழ்ந்திருக்கிறது. 

( இக் கடிதத்தை எழுதியிருப்பவரின் பெயரும் கிரிசாந், என்னுடைய சிறுவயது நண்பர். இருவரும் ஒரே வருடம், ஒரே திகதியில் பிறந்திருக்கிறோம். ஒரே பெயரும். எனக்கான முதல் வாசகர் கடிதத்தை எனது இன்னொரு நான் அனுப்பியது போலிருக்கிறது)

கனவுச் சொல்: https://kirishanth.com/?p=14

TAGS
Share This