குத்திக் கிளறலும் அரிதாரத்தை அசிட் ஊற்றிக் கழுவுதலும்

குத்திக் கிளறலும் அரிதாரத்தை அசிட் ஊற்றிக் கழுவுதலும்

கருத்துச் சுதந்திரம் என்பது செயற் சுதந்திரமல்ல என்ற அடிப்படையிலிருந்தே எனது பார்வை உருவாகியிருக்கிறது. கருத்துகள் முன்னேற்றமடைவதற்கு, முரணியக்கங்கள் தமக்குள் தொடர்ந்து உரையாடி, ஒரு சமரசத்தை எட்டி, மேலும் தொடர்ந்து விவாதித்து, விரிவாகிக் கொண்டு செல்லக்கூடிய மாபெரும் உரையாடற் பரப்பாக ஆக வேண்டும், அதில் ஒரு சிறு துளியே நாம் ஒவ்வொருவரும் ஆற்றும் கருத்தியல் பங்களிப்பு. ஒவ்வொரு தரப்பிற்கும் அவற்றுக்கான வரலாற்றுப் பின்னணிகள், அதன் வழி உருவான பார்வைகள், நலன்கள் எல்லாமே இருக்கும். ஒரு சமூகப் பிரச்சினையின் தீர்வை அடையக் கையாளும் வழிமுறை தொடர்பிலேயே அதனை அடைவதற்கான சாத்தியங்கள் உருவாகி வரும். விளைவுகள் நமக்கு சாதகமாக இருந்தாலும், அவை வழிமுறைகளை நியாயப்படுத்தி விடாது. ஏனெனில் மானுடம் என்பது கோடிக்கணக்கான மக்களின் வாழ்வுகளின் பெருக்கு. அதில் ஒவ்வொருவருக்கும் வாழ்வுரிமை இருப்பதைப் போலவே, கருத்துரிமையும் உண்டு. அதனை முழுவதும் ஏற்றுக் கொள்ளாமல், அதனை நடைமுறைப்படுத்த முழுமுற்றான உள்ளார்ந்த விருப்பின்றி, நாம் முன்செல்ல முடியாது. மாபெரும் மானுடத்தேர் அசையாமல் நிற்க வைக்கும் அடிக்கட்டை போன்றது கருத்துத் தடைகள். அழிப்புகள்.

வசைகளின் மூலமும் ஏளனத்தின் வழியிலும் சமூக வலைத்தளங்களில் நிகழும் கருத்துப் பரிமாற்றங்கள் என்பது வேறு, அறிவார்ந்த தரப்பினர் சமூகச் சீர்கேடுகளை அல்லது பிற்போக்குத்தனங்களை உரையாட வேண்டிய வழிமுறை வேறு. அதில் பெரும்பான்மை மனநிலையில் உணர்ச்சிகரத்திடம் அறிவை ஒப்படைக்கக் கூடாது. சில அடிப்படையான விதிகளை எங்களுடைய பொது உரையாடல்களின் வெளிகளுக்குள் கொண்டு வர வேண்டியது ஒவ்வொரு அறிவியக்கத்தினரதும் பொதுக் கடமை. அதில் முதன்மையானது கருத்துச் சுதந்திரம். அடுத்தது, அதனை எதிர்கொள்ளும் போது கொள்ள வேண்டிய வரலாற்றுப் புரிதலுக்கான அடிப்படை வாசிப்பு. அல்லது அச் சிக்கலுக்குப் பின்னராவது அவை தொடர்பில் முறையான கற்றலுக்குச் செல்தல். மூன்றாவது, எந் நிலையிலும் வன்முறையை வழிமுறையாகவோ வார்த்தை விளையாட்டாகவோ நியாயப்படுத்தாத தன்மை. அது உள்ளார்ந்து வெறுப்பரசியலை தன் கருவில் கொண்டிருப்பது. நாங்கள் அனைத்து மக்களையும் கணக்கொலெடுத்துக் கொண்டு கதைக்க வேண்டிய விடயங்களை, எங்களுக்குள் நாங்கள் ஒத்த கருத்துகள் கொண்ட சிறுகுழுக்களாகி, ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு, எதிர்த்தரப்பை சீண்டி விட்டு எரிச்சற்படுத்தக் கூடாது. இறுதியாக, நமது சொந்த விருப்பு வெறுப்புகளில் இருந்தோ அல்லது குறித்த சிக்கல்கள் தொடர்பிலான அடிப்படைத் தகவல்களிலிருந்தோ முழுவிடயங்களையும் அறிந்து விட்டது போல் கற்பனையில், கருத்தியல் எதிர்த்தரப்பை எதிர் கொள்ளக் கூடாது.

காந்தியிலிருந்து வழிமுறை குறித்த உரையாடல் விரிய வேண்டும் என்று வலுவாக நம்புகிறேன். அஹிம்சையின் அடிப்படைகள் பற்றிய ஜெயமோகனின் கட்டுரையொன்றிலிருந்து நான்கு அம்சங்களை இங்கே தருகிறேன்.

“பன்மை :

உண்மைக்குப் பல முகங்கள் உண்டு என்பதை தன் முதல்பெரும் அறிதலாக முன்வைக்கிறார் காந்தி. எந்த ஒரு விஷயத்துக்கும் ஒரே தீர்வும் ஒரே பதிலும் இருக்க முடியாது. ஒற்றை உண்மையை வலியுறுத்தக்கூடிய எதுவும் காந்தியத்துக்கு எதிரானதே. உண்மைகள் ஒன்றுடன் ஒன்று உரையாடி சமரசமடைந்து கண்டடையும் பொதுப்புள்ளியிலேயே சரியான தீர்வுகள் இருக்க முடியும். ஆகவே காந்தியம் எப்போதும் உரை யாடலை வலியுறுத்துகிறது. மாற்றுத்தரப்பை மனம்திறந்து கவனிக்கவும் சாத்தியமான சமரசத்தை நோக்கிச் செல்லவும் அது முயல்கிறது. ஒன்றே உண்மை என்பதல்ல பன்மையிலேயே உண்மை உள்ளது என்பதே காந்தியம்.

மையமின்மை:

ஒற்றை உண்மையை நிராகரிப்பதனாலேயே உறுதியான மையங்களை காந்தியம் நிராகரிக்கிறது. மையப்படுத்தப்பட்ட கருத்துகள், மையப்படுத்தப்பட்ட செல்வம், மையநிர்வாகம் ஆகியவற்றுக்கு எதிரானது காந்தியம். காந்தி முன்வைத்த கிராம சுயராஜ்யம் என்பது மைய அரசோ அதிகாரமோ இல்லாத ஒரு கிராமக் கூட்டமைப்புதான். ஒரு பண்பாட்டின், தேசத்தின் ஒவ்வொரு அம்சமும் தன்னுடைய சுயத்தைப் பேணி வளர்த்து முழுமையை நோக்கி நகர வேண்டும் என்றும், அதன் ஒட்டுமொத்தமாகவே அந்தப் பண்பாடும் தேசமும் முழுமையை அடைய முடியும் என்றும் காந்தியம் வலியுறுத்தும். குறிப்பாக, செல்வம் மையப்படுத்தப்படுவது என்பது அடக்குமுறையை உருவாக்கும் என்பது காந்தியத்தின் எண்ணம்.

வன்முறை தவிர்த்தல்:

மாற்றுத்தரப்பின் இருத்தலை, அதன் வரலாற்று நியாயத்தை உணர்ந்துகொள்ளும்போது அந்தத் தரப்பை அழித்தொழிப்பதைப் பற்றிச் சிந்திக்கவே முடியாது. ஆகவே, முழுமையான வன்முறை தவிர்ப்புதான் காந்திய அரசியலின் வழிமுறை. வன்முறையை எதிர்க்க வன்முறை ஒருபோதும் வழியாகாது என்றார் காந்தி. அதன்மூலம் எந்த வன்முறையை எதிர்க்கிறோமோ அதற்குச் சமானமான வன்முறையாளர்களாக நாம் உருவாகிறோம். அவர்கள் செய்ததையே நாம் செய்ய ஆரம்பிக்கிறோம். அது இரண்டுமடங்கு வன்முறையை மட்டுமே உருவாக்கும்.

அரசாங்கங்கள் வன்முறையின் வலிமையில் நிலைநிற்பவை அல்ல. அவை அந்த அரசுகளை ஆதரிக்கும் மக்களால் நிலைநிறுத்தப்படுபவை. அந்த மக்களின் கருத்தியல் நம்பிக்கைகளே அவ்வரசுக்கான ஆதரவாக ஆகின்றன. அந்த மக்களின் மனசாட்சியுடன் பேசுவதும் அந்தக் கருத்தியலை முழுமையாக மாற்றுவதும் மட்டுமே அரசாங்கங்களை தோற்கடிக்கும் வழிகள் என்று காந்தியம் சொல்கிறது. ஆகவே, காந்தியப் போராட்டம் என்பது எப்போதும் மக்களின் கருத்தியலை மாற்றுவதற்கான தொடர்ச்சியான பிரச்சார நடவடிக்கைதான். ஒன்றுகூடுவதும், தங்கள் தரப்பைத் தங்களிடமும் பிறரிடமும் வலியுறுத்துவதும் மட்டுமே காந்தியப் போராட்டம்.

படிப்படியான மாற்றம்:

காந்தியின் காலகட்டத்தில் புரட்சி என்ற நம்பிக்கை பரவியிருந்தது. மக்களின் கருத்தியல் மாறிய பின்னரும் ஆட்சியில் நீடிக்கும் அரசுகளுக்கு எதிராக மக்கள் கொள்ளும் கிளர்ச்சியும் அதன் விளைவான மாற்றமும்தான் புரட்சி. அது ஐரோப்பாவில் ஒரு சில நாடுகளில் நிகழ்ந்தது. அதை வைத்து உலகமெங்கும் ஆட்சிமாற்றம் அப்படித்தான் நிகழ முடியுமென சிலர் கணித்தனர். அது பிழையான நம்பிக்கை என உலக வரலாறு நிரூபித்துவிட்டது. புரட்சி என்று சொல்லப்படும் ஒட்டு மொத்த மாற்றம் எப்போதும் அழிவையே கொண்டுவருகிறது. தேவையற்றதும் தேவையானதும் சேர்ந்து அழிகின்றன. காந்தியம் தேவையானவை வளர்ச்சியடைந்து தேவையற்றவை மெல்லமெல்ல அழியக்கூடிய ஒரு படிப்படியான வளர்ச்சியையே சரியான சமூக மாற்றம் என்கிறது.”

*

சமூக மாற்றத்திற்கென ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு நோக்குடனும் வரலாற்றுப் புரிதலுடன் முன்நகர்கிறார்கள். அதில், வன்முறை பேசச் சாகசமாக இருக்கும், சாதாரண தமிழ்ப்படங்கள் போல் எதிரியை அடித்து வீழ்த்திவிட்டுப் பேசும் பஞ்ச் டயலொக் போல், சமூக விடுதலை பற்றிய உரையாடலில் வன்முறைக் கருத்துக்களை நியாயப்படுத்தி விட முடியாது. அது ஒரு எளிமையான புரிதல்.

அண்மையில் ஆறுதிருமுருகன் என்ற பேச்சாளர் பேசிய மூன்று உரைகளிலிருந்து அவர் பெண்களைப் பற்றிய கருத்துகளைத் தொகுத்துத் தெல்லிப்பழை பிரதேச செயலக முகநூல் பக்கம் வெளியிட்டிருந்தது. அதையொட்டி எழுந்த எதிர்வினைகளால் அக்கருத்துகள் அவர்களது முகநூலிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறது. இது சரியல்ல. அவர்களது கருத்துப் பற்றி நாம் உரையாடலாமே தவிர அதை அகற்றுவது பொருத்தமல்ல என்று கருத்தைப் பதிவிட்டேன். இவை, சீப்பை ஒழித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா என்ற கொமெடியை ஒத்தவையே, கருத்தை அதிகாரபூர்வ பக்கங்களில் இருந்து அகற்றுவதை ஒரு உரையாடல் வெற்றியாகக் கருதுவது. அதை நீக்கிய சில மணி நேரங்களிலேயே, ஆறுதிருமுருகன் அவர்கள் ஆசியுரை வழங்கப்போகும் அடுத்த நிகழ்வுக்கான அறிவித்தலை பிரதேச செயலகம் தனது முகநூலில் வெளியிட்டிருக்கிறது. இங்கு உள்ளார்ந்த மாற்றம் ஏதும் ஏற்றபட வாய்ப்பிருக்கிறதா?

நாங்கள் நம்புகின்ற உண்மைகள் நியாயமானவை, ஆகவே அதற்காக எதிர்த்தரப்பை வீழ்த்த நாம் எந்த எல்லை வரையும் செல்லலாம், என்பது உணர்ச்சிகரமான பாவனை மட்டுமே. ஆழத்தில் உள்ள தனிப்பட்ட கசப்பும் வன்முறை விருப்புமே நியாயங்களிற்கான பாவனையாக வெளிப்படுகிறது. இத்தகைய புரட்சிகரப் பாவனைகள் நினைக்க ஆவேசமான கதாநாயக / நாயகித் தோற்றத்தை வழங்கிவிடும். ஆனால் ஆழத்தில் வரலாறோ இலக்கிய வாசிப்போ அற்ற கும்பல் மனநிலையின் அதே அசல் மனநிலை இது.

இடதுசாரி அமைப்பொன்றில் பங்காற்றும் தோழர் ஒருவர், கருத்துச் சுதந்திரம் என்னும் பெயரில் ஒடுக்குமுறையாளர்களைக் காக்கும் உத்தியே கருத்து சுதந்திரம் பேசும் ஜனநாயகவாதிகளின் போக்கு என்ற சாரப்பட ஒரு கருத்தை எழுதியிருந்தார். இன்னும் ஒரு படி மேலே போய், மாவோவின் வழி தான் இத்தகையவர்களுக்குச் சரி, மாவோ அரிதாரத்தை அசிட் ஊற்றிக் கழுவி விட்டிருப்பார் என்று சொல்லியிருக்கிறார்.

மாவோவின் கலாசாரப் புரட்சியில் தேவையற்றவை அழிந்ததைப் போலவே சீனப் பண்பாட்டின் தேவையானவையும் அழிந்தன. ஓநாய் குலச்சின்னம் என்ற மகத்தான நாவல் அப்படி அழிக்கப்பட்டவற்றின் இலக்கிய சாட்சி. அந்த நாவல் குறித்து நான் எழுதிய கட்டுரையின் பகுதி இது, “நாம் எப்பொழுதும் உட் சுருங்கியவர்களாகச் சிந்திக்கிறோம், இயற்கை முடிவில்லாமல் விரிந்துகொண்டே செல்கிறது. நாம், நமது தரப்பை மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறோம், இந்த பூமி எல்லாவற்றிற்கும் மற்றொன்றின் இருப்பின் மீதான தொடர்பை நமக்கு முன் நிகழ்த்திக்
காட்டியபடியிருக்கிறது. இந்த வினோதமான உறவைப் புரிந்துகொள்வது தான் அரசியல் செயல்பாடு. நாம் நமது நியாயங்களிலிருந்து மட்டும் அறம் என்ற ஒன்றை உருவாக்கமுடியாது. இங்கு எல்லா அறங்களுமே கூட்டுவாழ்வின் நிமித்தம் உருவாக்கிக்கொண்ட கற்பிதங்கள் தான். ஆனால் அவையும் நமக்குத் தேவை. அதனைக் காலத்துக்கு காலம் மனித அறிவு மாற்றியபடியிருக்கிறது. அந்த அறங்களின் இயல்பு தான் அரசியல் பார்வைகளை உருவாக்கிக்
கொண்டிருக்கிறது”.

இன்னொரு நண்பர், “அதிகாரத்தில் உள்ளவர்கள் செல்வாக்குள்ளவர்கள் தங்கள் அந்தஸ்தை உபயோகித்து எல்லோருக்கும் உள்ள பேச்சு உரிமைக்கும் அப்பால் செயல்பட்டால் அவர்கள் மீது கண்டனமும் விமர்சனமும் தேவை பட்டால் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேணும் (ஆறுதிருமுருகன்).
உதாரணத்திற்கு நான் எந்த‌ மொழியையோ, எந்த‌ மதத்தையோ பெண்ணீயம் பற்றியோ பொது வெளியில் விமர்சிக்கவோ போற்றி புகழவோ முடியும். அதையே என் அதிகாரி, அரசியல் தலைவர் தங்கள் உத்தியோக ஆசனத்தில் அமர்ந்து செய்ய முடியாது. அது ஜனநாயக விரோதம். அந்த சந்தர்பத்தில் அவர்களுக்கு படியளக்கும் பொது மக்கள் அவர்களை குத்தி கிளறினாலும் தப்பில்லை.” என்று தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

எவ்வளவு நியாயமான தோற்றமாயிருந்தாலும் வன்முறை அழிவையே மீண்டும் மீண்டும் உருவாக்கும். மக்கள் என்ற பல்வேறு பண்பாட்டு வித்தியாசங்களைக் கொண்ட பெருந்திரளை விளங்கிக் கொள்ளாத பார்வைகளே இவை. உதாரணத்திற்கு ஆறுதிருமுருகனின் கருத்தை ஏற்றுக்கொள்ளும் மக்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றனர். அவருடைய கருத்துகளுக்கு எதிராகப் பேசிய யாரையேனும், தாங்கள் நம்பும் நன்மைக்கென அசிட் ஊற்றினாலோ குத்திக் கிளறினாலோ யார் பொறுப்பு? மாவோவின் வழியில்.

நாங்கள் நம்புவது தான் நீதியானது, நான் நிற்பது தான் சரியான பக்கம் என்று நினைத்து விட்டால், நாங்கள் மெல்ல மெல்ல பாசிசத்தின் கூறுகளால் உள்ளிழுக்கப்படுவோம். அவை உணர்ச்சிகரமான பாவனையில் இவை பெரும் அநீதியென எளிமைப் படுத்திக் கொள்ளும். வரலாறு அப்படியானதல்ல. இதையே இலக்கியங்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. வன்முறை எண்ணம் கொண்ட அல்லது அதைத் தூண்டிவிடுபவர்களுக்கும் நிதானமானதும் பொறுப்புணர்வுள்ளதுமான குரலாகவே நாங்கள் ஒலிக்க வேண்டும். வன்முறை கற்பூரத்தில் பற்றி எரியும் தீ போன்றது. அஹிம்சை தொடர்ப்பிலும், பண்பாட்டு உரையாடல்கள் தொடர்பிலும் இன்னும் விரிவான வாசிப்பும் உரையாடலும் தேவையான காலத்தில் வாழ்கிறோம்.

திருமாவளவனின் அமைப்பாய்த் திரள்வோம் என்ற புத்தகம் அடிப்படை ஜனநாயகம் பற்றிய முக்கியமான பார்வைகளைக் கொண்டது. அந்த நூலும் இது தொடர்பில் வாசிக்கக் கூடியது.

கிராம்ஷியின் மேலாண்மை (Hegemony) என்ற கருத்தாக்கத்தை விளங்கிக் கொள்வதும் இதற்கான பின்னணி அறிதலை வழங்கும். கிராம்ஷி மக்களின் கருத்துகளில் மாற்றமேற்படுவதின் வழியாகவே அரசியல் மாற்றங்கள் எப்படிப் படிப்படியாக நிகழ்கிறது என்பதை தத்துவார்த்தமாக நிறுவிய சிந்தனையாளர்.

எல்லா வகையான பண்பாட்டுச் செயல்பாடுகளும் அரசியல் செயல்பாடுகளும் மானுடத்தின் மேலுள்ள தீராத அன்பிலிருந்து வெளிப்பட வேண்டியவை. ஒரு துளி வெறுப்போ சிறு துண்டுக் கசப்போ, நாங்கள் அறியாத சுழல்வழிகளில் எங்களைக் கீழிறக்கி விடக்கூடியவை, எங்களோடு சேர்த்து நாங்கள் முன்வைக்கும் தரப்பையும் பின்னிழுத்து விடக்கூடியவை. நிதானமான, பொறுப்புணர்வுள்ள சொற்களே, வரலாற்றை முன்கொண்டு செல்லும் நாவுகளிலிருந்து எழ வேண்டியவை.

TAGS
Share This