இனப்படுகொலைக்கெதிரான ஓர் மக்கள் இயக்கம்: கடிதம்
அழகாக வடிவமைக்கப்பட்ட கட்டுரை. ஆழமாக ஊடுருவிய இந்த இரவின் சரியாக 00.54 இல் இதை முடித்தேன். தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக வந்த சீறீதரன் தன்னை நிலைநாட்ட, மாணவர்களையும் அழைத்துச் செய்யப்பட்ட ஒரு உப்பு சப்பற்ற போராட்டத்தில் இழுத்து செல்லப்பட்ட பல்கலைகழக மாணவரும், அவரை இழுத்து சீருடை அணியாத காவலரும் என்று மனதில் கட்டுரை பல கோணங்களில் விமர்சனமாக படர்கிறது. ஒரு கட்டத்தில் இந்த மாணவர் ஒன்றியம் எமதுபள்ளிகால மாணவர் ஒன்றியத்தினில் இருந்து எவ்வளவு தூரம் தரம் தாழ்ந்து போய் உள்ளதை உணர்த்துகிறது. மாணவர் ஒன்றியத்தை விட உயர்தர மாணவர் ஒன்றியம் அப்போது கர்தால் என்று அழைக்கும் போது ஆரம்பப்பாடசாலை, அதிபர்களையும் அசைத்துபார்க்கும் அரசியல் ஒரு வட்ட அரசியாலாக இருந்தாலும், ஏதோ ஒரு அரசியலை என்றாலும் அவர்கள் வைத்திருந்தார்கள்.
இப்போது அது கட்சிகளின் கூட்டமாக போவதைப் பார்க்கக் கவலைதான். குறிப்பாக இனப்படுகொலைக்கு எதிரான விவாதங்களைப்போல தான், இன விடுதலைக்குமான மக்கள் இயக்கமே தேவை. அது மொழிவாரி மற்றும் புரிதல் சார் சிங்களத் தலமைகளையும் இணைத்து, ஒரு உலகப்பரப்பில் இருக்கிற பிரச்சனை என கூறுவதைபோல, உலக அரங்குகளை தொடவேண்டும்.
இது போல இசை நாடகம் கலை என அங்கும் வெளிப்படுத்தல்கள் முன்பைவிட விரிவாக்கப்படவேண்டும் அதற்குமேலாக சிதறிய எங்களை உக்கும் புள்ளியாக தமிழினப்படுகொலை, ஈழத்தமிழினப் படுகொலை என்ற எல்லையை கடந்து பயணப்படவேண்டும். மொழி என்ற அடையாளத்துடன் அனைவரையும் இணைத்து நகர வேண்டிய பல தேவைகளை இந்தக் கட்டுரை நினைவுப்படுத்துகிறது.
பல்கலைக்கழகம் ஒரு free market of ideas ஆக மாறி ஒரு liberal society ஆக எல்லா தளங்களையும் ஆராயவேண்டும். ஆனால் அதில் கட்சி பயணங்கள் தான் இப்போது. மக்களை தலைமை ஏற்றல் குறைந்தது கட்சிகளின் வெளிப்படையான காட்சி. அங்கே இருக்கவேண்டும் திமுக, அதிமுக அரசியல் பிரிவின் மாணவர்படை போல, வெளிப்படையாக அமையலாம். இது மறைமுகமாக இருப்பதும்..அது கைவிட்ட சிந்திக்க தவறிய உதாரணப்படுத்த தவறிய தளங்களை அந்த இடத்தில் இருப்பவர்கள் தேடி வாசிக்க வேண்டிய நிலையை வலிமையாக ஏற்படுத்தி கொடுக்க இந்த கட்டுரையை மையாமாக வைக்கலாம்.
-Rtr Kirishanth –
வணக்கம் கிரி,
தொடர்ந்து நீங்கள் கட்டுரைகளையும் கவிதைகளையும் வாசித்து உங்கள் பார்வைகளை அனுப்பி வைப்பது எனக்கு தொடர்ந்து எழுதும் உரையாடும் உற்சாகத்தை அளிக்கிறது. மிக்க நன்றியும் அன்பும்.
இனப்படுகொலை என்பது ஓர் மானுட அவலம். உலகின் எந்தக் குடிமக்கள் சமூகமும் ஏற்றுக் கொள்ளாத ஒரு கொடுஞ்செயல். இலங்கையின் கட்சி அரசியல்கள் அதற்கான நீதியைப் பெற்றுத் தருமளவு வலிமையாவை அல்ல என்பது எனது எண்ணம். அதற்குப் பிரதான காரணம் நமது கட்சிகளுக்கு பண்பாடு பற்றி இருக்கும் பிற்போக்கான பார்வைகள். அதன் மூலம் உருவாகி வந்த பழைய குதிரையில் சவாரி செய்யும் போக்கு. அவர்களுக்கு ஒன்று தமிழ்த்தேசியம் அல்லது அபிவிருத்தி அரசியல். இரண்டும் இணையும் சாத்தியம்மிக்க தலைமைகளோ மக்களேற்போ இல்லை.
ஒரு தமிழ் அரசியல் தலைமையென்பது தனது சமூகம் வரலாறு, இலக்கியம், சூழலியல், சாதியம், ஆண் – பெண் அசமத்துவங்கள் தொடங்கி குயர் உரிமைகள் வரை வரலாற்றில் தொடங்கி இன்று வரையுள்ள சமூகச் சிக்கல்கள் தொடர்பில் அடிப்படை வாசிப்பும் அறிவார்ந்த தன்மையும் வேண்டும். சுமந்திரன் அத்தகைய அறிவார்ந்த தன்மையின் சில பகுதிகளைத் தன்னும் வெளிப்படுத்திய ஒரு தலைமை. அவர் கடந்த காலத்தினை விமர்சனபூர்வமாக அணுகி மக்களை நோக்கிப் பேச ஆரம்பித்தமை சிறீதரன் அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது. அவர் சுமந்திரனுக்கு எதிர் நிலையில் தமிழ்த் தேசியம் என்ற வெகுசனக் கருத்தியலின் மீது எந்தக் குறையும் நிகழாமல் அதனை அப்படியே பேண எண்ணினார். அல்லது அவரது மனமும் அதையே ஏற்றுக் கொள்கிறது, மாவீரர் தினங்களில் விளக்கேற்றுதல், அரச ஒடுக்குமுறைகளின் போது பாராளுமன்றங்களில் உரையாற்றுதல் போன்றனவே அவர் முதன்மையாகச் செய்து வந்தவை. இவை ஒரு தலைமைக்குப் போதுமா? என்னளவில் அதற்கான அறிவார்ந்த மனவிரிவு அவருக்கு இருப்பதாக அவர் தனது செயற்பாடுகளின் மூலம் இதுவரை வெளிப்படுத்தவில்லை. அதே நேரம் சுமந்திரன் தனது கருத்துக்களை பேசுவதற்கான கள யதார்த்ததை உணர்ந்து, அவற்றை முதலில் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களுடன் உரையாடி அவர்களது எண்ணங்களை விளங்கிக் கொண்டிருக்க வேண்டும். அல்லது அவர்களின் அறிவு மட்டத்தைக் கணித்து, அவர்களை வளர்க்கப் பயிற்சிகளை வழங்கியிருக்க வேண்டும். ஒரு கட்சியின் தலைமை தனிக்குரல் அல்ல. அது மண்ணிலிருந்து எழுந்தே தனது அறிவின் மூலம் தனது மக்களை அறிவூட்ட வேண்டும். அவர் அதைத் தலைகீழாகச் செய்தார். இது அமைப்புக் குறித்த அவரது புரிதல்களின் குறைபாடு.
சில வருடங்களுக்கு முன்பு, யாப்புச் சீர்திருத்தம் இடம்பெற்ற வேளை, மக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. துரிதகதியில் இது நிகழ்ந்தது. அப்போது நிகழ்ந்த கலந்துரையாடல் ஒன்றில் அப்போதைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம், இது மேலிருந்து கீழ் நோக்கி வரும் ஒரு சீர்திருத்தம், மக்கள் அடிப்படையில் யாப்புச் சீர்திருத்தம் பற்றியோ அவற்றிற்கான பரிந்துரைகளை வழங்குவது பற்றியோ அரசியலறிவு ஊட்டப்பட்டவர்கள் அல்ல. இப்படிச் செய்வது பற்றிய அவரது பார்வையைக் கேட்டேன், அதற்கு அவர் இது சட்டம் சார்ந்த கேள்வி சுமந்திரனே இதற்குப் பதிலளிப்பார் என்று சொன்னார், சுமந்திரன், இது ஒரு சந்தர்ப்பம், மக்களை அறிவூட்டிச் செய்வது தேவையானது தான். ஆனால் அரசு மாற்றத்திற்கு முன் இப்போதுள்ள சாதக அரச நிலையில் இதனைச் செய்து முடிக்க வேண்டும் என்ற சாரப்பட பதிலளித்தார். பின்னர் அந்த சீர்திருத்தம் வழக்கப் போலக் கைவிடப்பட்டது. இன்றும் எனது நிலைப்பாடு அது தான். கீழிருந்து மக்களை அரசியல்மயப்படுத்தி அறிவூட்டி, அவர்களின் வாழ்வை, அறிவை மேலுயர்த்தாமல் அதிகாரம் எங்களுக்குக் கிடைக்கப்போவதில்லை. உணர்சிகர அரசியலை நம்புவர்கள் இன்னும் ஆயிரம் வருடங்கள் கூட சொன்னதையே திரும்பச் சொல்லி, இலகுவாக வென்று செல்லலாம். ஆனால் அடிப்படை மாற்றங்கள் நிகழாமல் மக்களிடம் உள்ளார்ந்த அரசியல் உணர்வு பிறக்காது. P2P போன்றதொரு போராட்டம், அரசியல் உணர்வெழுச்சிகளின் இணைவு, அது அவரது ஆளுமையின் எழுச்சியல்ல. அவர் தன்னுடைய கருத்துகளிலிருந்து வளர்ந்து முன் செல்லும் இளைய தலைமுறையை அரசியல்படுத்த வேண்டும். அது ஓர் பக்தியாக அல்லாமல், மெய்யான அரசியலூக்கமாக அமைய வேண்டும்.
இன்று தமிழில் அமைப்புக் குறித்தும் மக்களை அரசியல்மயப்படுத்துதல் குறித்தும் வாசித்து உரையாட உள்ள முக்கியமான புத்தகம், அமைப்பாய்த் திரள்வோம் என்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் புத்தகம். அது அமைப்பாக்கம் குறித்து மிக விரிவான அறிதல்களை அளிக்கக் கூடியது. சிறீதரனோ சுமந்திரனோ அல்லது வேறு எந்தத் தலைமையோ தன்னை அறிவார்ந்து முன்னகர்த்திச் செல்லாமல் இனப்படுகொலைக்கான நீதியையோ தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளையோ வென்றெடுப்பது சாத்தியமேயில்லை.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களோ அல்லது கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களோ தம்மை அரசியல்படுத்தக்கூடிய கருத்து விரிவு கொண்டவர்களாக இல்லை. இனிமேலாவது அது நிகழ வேண்டும். ஒரே வகையான கருத்துகளுக்கு மட்டுமே அவர்கள் காதுகளைத் திறக்கிறார்கள். இன்னொரு கருத்தை கேட்குமளவிற்குக் கூட அவர்களுக்குப் பொறுமை இல்லை. உதாரணத்திற்கு சட்டத்தரணியும் சமூக செயற்பாட்டாளருமாகிய ஸ்வஸ்திகா அருளிங்கம் அவர்கள் விடுதலைப் புலிகளை பாசிஸ்ட் அமைப்பு என்று கூறி விட்டார் என்று அவரைத் தமது பல்கலைக்கழகத்திற்குள் பேசவே அனுமதிக்கக் கூடாது என்று தடுத்தார்கள். குறைந்த பட்சம் அவரது பார்வை என்ன, அவர் ஏன் அவ்விதம் கூறுகிறார் என்பதை அறியும் மனவிரிவு கூட அவர்களுக்கு இருக்கவில்லை. அவரைப் பேச அனுமதித்து அவ்வுரையில் அவர்கள் தமது சந்தேகங்களைக் கேட்டிருக்கலாம். ஆனால் அவ்விதம் செய்ய அவர்களைத் தடுப்பது எது? இதுவே தான் சுமந்திரனின் நிலையும், அவர் விடுதலைப் புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டனர் என அனைவரும் அறிந்த எளிய உண்மையைச் சொன்னார். இன்னும் முன்னேற வேண்டிய இடங்களைச் சுட்டிக் காட்டினார்.
ஒரு அறிவியக்கவாதிக்கும் அரசியல் தலைமைக்கும் உள்ள வித்தியாசங்களையையும் அவை இணைய வேண்டிய புள்ளிகளையும் சுமந்திரன் சரியாகக் கையாளவில்லை. அதே வேளை சிறீதரன் அறிவார்ந்து பேசும் ஒரு தலைமையல்ல. அவர் இங்குள்ள உணர்ச்சிப் பெருக்கைச் சரியாகக் கணித்து அதன் அலைகளில் சவாரி செய்யும் மாலுமி.