வாசகர்கள் எனும் பண்பாட்டுச் செயற்பாட்டாளர்கள்

வாசகர்கள் எனும் பண்பாட்டுச் செயற்பாட்டாளர்கள்

எந்தவொரு பண்பாட்டிலும் ஒவ்வொரு அறிவுத் துறையையும் ஆழப்படுத்தவும் விரிவான சமூக அறிதலையும் ஏற்படுத்துவது அத் துறைசார் வாசகர்களே. அவர்களே கேள்விகளின் மூலம் சந்தேகங்களையும் விடுபடல்களையும் நீக்குபவர்கள். அப்பங்களிப்பின் வழி அவர்கள் சமூகத்தின் அன்றாட சராசரித்தனத்திலிருந்து விலகி தனித்து ஒலிக்கிறார்கள். அவர்களே பெருந்திரளுக்கும் அறிவியக்கத்துக்குமிடையிலான நீள் பாலங்கள்.

பொதுவான உரையாடல்களைக் கவனிக்கும் போது உடனே புலப்படுவது ஒன்று தான், எந்த ஒரு துறை சார்ந்து விமர்சிக்கின்றோமோ அது தொடர்பில் குறைந்த பட்ச வாசிப்போ எளிய அறிமுகங்களோ அற்ற கேளிக்கைக்கு கருத்து உதிர்ப்பவர்களே பொது வெளியில் அதிகம். இத்தகையவர்களுடன் உரையாடி எந்தவொரு அறிவுத்துறையும் வளர்ந்து விரிவடைவதில்லை. இலக்கியம், சமூகம், சூழலியல், அரசியல், விஞ்ஞானம் என்று எந்தத் துறைக்கும் இன்று இது தான் நிகழ்கிறது.

ஈழத்துச் சூழலில் எழுத்தாளர்களே பெரும்பாலும் வாசகர்களின் பாத்திரத்தையும் ஏற்பவர்கள். எங்களுடைய சூழலில் வாசகர்கள் இல்லையா? ஏன் எந்தவொரு எழுத்தாளருக்கும் எழுத்தின் வழி உரையாடும் வாசகர்கள் மிகவும் அரிதாக இருக்கிறார்கள்? இது நாங்கள் சமூகமாக, ஒரு பண்பாடாக எதிர்கொள்ள வேண்டிய முதன்மையான கேள்வி.

எனது அறிதலுக்குட்பட்டு ஈழத்து எழுத்தாளர்களில் ஷோபா சக்தி, ஆழியாள், தர்மு பிரசாத், அனோஜன் பாலகிருஷ்ணன், யதார்த்தன், அனார், இளங்கோ டிசே, தேவகாந்தன், அகரமுதல்வன், ஜேகே, அருண்மொழிவர்மன், நிலாந்தன், சிவசேகரன்…எனப் பலரிடமும் இணையத் தளங்களுண்டு. அவற்றில் எத்தனை வாசகர் கடிதங்கள் வெளியாகின்றன? எத்தனை உரையாடல்கள் நிகழ்கின்றன?. எனது அவதானிப்பில் அரிதிலும் அரிதாக ஏதாவது அனுப்பப்படுகிறது. முகநூலில் கெமென்ருகளாக அளிக்கப்படும் வாழ்த்துக்களும் வசைகளும் தாண்டி, மிகச் சிலரே உரையாடலின் பகுதி அது என்ற தன்னறிதலுடன் எழுதுகிறார்கள். அவையும் காலப்போக்கில் சென்று மறைந்து விடும்.

(குமாரதேவன்)

இணையத்தளச் சேகரமென்பது காலத்திற்குக் காலம் உள் நுழையும் புதிய தலைமுறை வாசகர்களைத் தொடர்ந்து உரையாடும் பண்பை அளிக்கக் கூடியவை. அதே வேளை தொகுப்புத் தன்மையும் கொண்டவை. புதிய வாசகர்களிடமுள்ள மேலதிக கேள்விகளைத் தயக்கமின்றி முன் வைக்க ஊக்குவிப்பவை.

இன்னொரு சாரர், உரையாடலில் இணைவதில் ஆணவம் தடுக்கும் வகைமையினர். அவர்களிடம் உள்ள தன்னுணர்வு இவர்களுக்கு என்ன எழுதுவது, மாற்றுக்கருத்தே இருந்தாலும் எழுதுவதன் மூலம் அக் கருத்துக்களை விரிவாக்க இவர்களின் அகக் கேடு அதனைத் தடுக்கிறது. இவர்கள் ஒரு வகையில் சமூக வலைத்தளங்கள் உருவாக்கியுள்ள இமேஜ் அடையாளங்களுக்குள் சிக்கியிருப்பவர்கள்.

நானும் வாசகர் கடிதங்களை இது வரை அனுப்பியவனில்லை. இனி அனுப்புவேன். அத்தகைய எழுத்தாள – வாசக உரையாடலை ஈழத்துச் சூழலில் வளர்க்க வேண்டிய தேவை இருப்பதை வலுவாக உணர்கிறேன். கருத்தியல் மாற்றங்களை உருவாக்க விரும்புபவர்கள் இதனை ஒரு பண்பாட்டுச் செயல்பாடு என்னும் அடிப்படையில் இணைய வேண்டும் என்பது எனதும் அழைப்பு.

இதுவரையிலான எனது வாசகப் பங்களிப்பை மூன்று வகையாக வகுத்துக் கொள்கிறேன். ஒன்று, நான் இலக்கியம், பண்பாடு, அரசியல் சார்ந்து எனது வாசிப்புகளை மேற்கொள்கிறேன். அவையே எனக்கு ஆர்வமுள்ள துறைகள். ஆகவே முடிந்தவரை இவை தொடர்பில் தொடர்ந்து இடையறாது பலரையும் வாசிப்பது அடிப்படை, பின்னர் இத்தகைய அறிவுத் துறை சார்ந்த நிகழ்வுகள், கூட்டங்களில் நேரடியாகப் பங்கு கொள்வது.

(இதுவும் இலக்கியப் பங்களிப்புத் தான்😉)

இரண்டாவது, ஏராளமான கூட்டங்களில் அவை தொடர்பில் உரையாற்றியிருக்கிறேன். உரையாற்றாத கூட்டங்களில் கருத்துக்கள் தெரிவிக்கும் பொழுது அதில் முழுமுற்றான அறியும் ஆர்வத்துடன் உரையாடல்களை நிகழ்த்தியிருக்கிறேன். இலக்கியத்திற்கென ஊர் ஊராக அலைந்து கூட்டங்களுக்குச் செல்வது, ஆளுமைகளைச் சந்திப்பது. அதன் வழி, ஒரு வாசக இருப்பை, அவர்களுக்கு உணர்த்துவது. அது ஓர் இன்றியமையாத பணி. அவர்கள் தொடர்பிலும் அவர்களின் ஆக்கங்கள் தொடர்பிலும் நண்பர்களுடனும் குடும்பத்திலும் தொடர்ந்து அறிமுகங்களையும் உரையாடல்களையும் நிகழ்த்தி வருகிறேன்.

மூன்றாவது, கட்டுரைகள் வழியாக அறிமுகங்களையும் கருத்துகளையும் எழுதுதல், அதன் வழியான கருத்தியல் மற்றும் அறிமுகப் பங்களிப்பு.

இவற்றுக்கு அடுத்தது தான் உரையாடலை வாசகர் எனும் பாத்திரத்துடன் முன் கொண்டு செல்லும் கடிதங்களை எழுத இருக்கிறேன். இதனை வாசிக்கும் நூறு பேரில் ஒருவராவது யாருக்கேனும் தனக்குப் பிடித்த ஒரு எழுத்தாளருக்கு தன்னுடைய பார்வைகளை எழுத்தில் மின்னஞ்சல் / தனி அஞ்சல் வழி அளிப்பார் என்ற நம்பிக்கை உண்டு. அவரை நோக்கியே இக் கட்டுரை.

வாசகர் கடிதங்களின் மூலம் ஒரு பண்பாடு தனக்குள் உள்ள சந்தேகங்களையும் தயக்கங்களையும் உதறி, பண்பட்ட சமூகமாக மேலெழத் தேவையான அடிப்படைப் பண்புகளைப் பயில முடியும். எத்தகைய சிறு அபிப்பிராயமாகவும் இருக்கலாம், கேள்வியாகவும், மாற்றுக் கருத்தாகவும், ஆனால் உரையாடப்படும் அந்த மனம், எழுதுபவரின் மனத்துடன் உண்டாக்கும் தொடர்பு, பண்பாட்டினை இழையிழையாக நெசவு செய்யும் செயல்.

(படிப்பகத்தில் புத்தகங்கள் கொள்வனவில்)

விடுதலையில் கவிதை எனும் பெயரில் ஈழ விடுதலைப் போராட்டத்தில் நிகழ்ந்தவை பற்றியும் அதனுள் நிகழ்ந்த அறம், அற மீறல்கள் குறித்தும் ஒரு நூலை எழுதி முடித்திருக்கிறேன். இறுதிப் பகுதிகளின் செம்மையாக்கத்தில் தற்போது உள்ளேன். இனப்படுகொலையை நினைவு கூர்தலென்பது, முள்ளிவாய்க்கால் அவலத்தை மட்டும் நினைவு கூர்வதல்ல. அது ஓர் மாபெரும் பண்பாட்டுச் செயற்பாடு. அந் நாட்களென்பவை, நாம் கடந்த காலத்தில் எங்களுக்கு நிகழ்ந்ததைப் பற்றியும் எங்களால் நிகழ்ந்தவை பற்றியும் எதிர்காலம் பற்றியும் சிந்திக்கும் காலம். நாங்கள் ஒரு அதிதூய போராட்டத்தை நிகழ்த்தியவர்கள் என்ற பெரும்பான்மை மனநிலை, எங்களை அறிவுபூர்வமாக நீதியை நோக்கிச் சிந்திக்க விடாது. நாங்கள் மறைக்கும் எங்கள் நோய்க்கூறுகளே எங்களை விழுங்கிச் செரிக்கும். எங்களது நியாயங்களுடன் எங்களுடைய குற்றங்களையும் நாங்கள் சீர்தூக்கிப் பார்க்க விட்டால், மீண்டும் அது உண்டாக்கும் தூய்மைவாதம் நம்மைப் பின்னிழுத்துக் கொண்டு செல்லும். எங்களது அடுத்த தலைமுறைப் பிள்ளைகளை வரலாற்றுணர்வற்றவர்களாக ஆக்கும்.

அத் தொடர் தொடர்பிலான உங்களது கருத்துக்களும் பார்வைகளும் எனது தொகுப்பாக்கம் குறித்த எனது பார்வையையும் விசாலிக்கக் கூடும். உங்களது கேள்வி எளிமையாக இருந்தாலும், விமர்சனம் கடுமையாக இருந்தாலும், எதுவாகினும் எனது மின்னஞ்சலுக்குத் தெரிவியுங்கள். அனைத்துக் கேள்விகளுக்கும் எனது தரப்பை முன்வைத்து உரையாடலை வளர்க்க விரும்புகிறேன் ஏனைய ஆக்கங்கள் குறித்தும் எழுதுவது, நான் தொடர்ந்து எழுதுவதற்கான உற்சாகத்தை வழங்கும். மேலும், எனது கருத்துகள் எழுத்துகள் உங்களுக்கு உவப்பில்லையென்றாலும் பரவாயில்லை, உங்கள் மனதுக்கு நெருக்கமான எழுத்தாளர்களுக்கு எழுதுங்கள், அது ஓர் பண்பாட்டுச் செயற்பாடு என்ற தன்னுணர்வுடன்.

எனது மின்னஞ்சல்: kirishanth300@gmail.com

TAGS
Share This