மூப்பதின் இனிமை
ஆயிரமாண்டுகாலம் பீப்பாயில் ஊற்றப்பட்டு, மா கடலின் கரை மணலில் தாழ்க்கப்பட்ட திராட்சையின் ஊறிய புளிப்பு, உதட்டிற் பரவ, நிறங்கள் கொட்டியவிழும் விளக்குகளின் தொடுகைகளை உணரும் தெருக்களில் அலையும் ஒரு கவிஞையின் மூப்பெய்திய மனம் கொள்ளும் உவகைகள் அந்த வைனின் ஆயிரமாண்டுகாலத் திரட்சியின் இனிப்பான கசப்பு. அது மானுட குலம் வாழ்வறிந்த இத்தனை காலமும் அலைந்து கொண்டும் மோதிக் கொண்டும் கொன்று கொண்டும் ஒன்றையொன்று அழித்தும் வாழ்வித்தும் உருமாறிய வாழ்வுகளின் அடியில் பீப்பாயில் ஊற்றப்பட்டு, இவ்வெளி இல்லாத உலகில் வாழும் தனிக் குவளை இதயமெனத் தன்னை உணருவது. அதில் மிதக்கும் சொற்கள் கரைந்து, கரைந்து மொழியில், மனம் மூக்கும் இனிமையை வார்ப்பவை.
தர்மினி கடந்த சில ஆண்டுகளில் எழுதப்பட்ட கவிதைகளில் இந்த மூப்பதின் மது கிண்ணங்கள் தளும்பத் தளும்ப நிரம்பியிருக்கிறது. போரும் அகதி வாழ்க்கையும் வேறு வேறு ஒடுக்குமுறைகளுமான வாழ்வின் பல நெருக்கடிகளை தர்மினி எழுதியிருந்தாலும், அவர் தன்னிதயத்திலிருந்து ஊற்றும் அந்த வைன் சொற்களே என்னில் நிரம்புபவை. அவை எதிர்பாராத திசையில் ஒரு ஆடை நுனியின் லேசான தொடுகையின் மின்னதிர்ச்சியை உண்டாக்குபவை. அதே போலத் திராட்சை ரசத்தின் போதை உச்சியில் முகம் அவிழ்ந்து மலரப் புன்னகைத்துப் பாடலிசைக்க வைப்பவை.
ஆணுக்கும் பெண்ணுக்குமான அன்பை, குழந்தைகளுடனான உறவை, தனிமையை, போதையை இன்னும் இன்னும் நுட்பமான விரிவு கொண்ட அறிதல்களை, யாரென்றே தெரியாத குழந்தைகள் ரெயினிலோ பஸ்ஸிலோ போகும் போது வெளியில் நின்று முழு வாழ்க்கைக்கும் எங்களை அறிந்தவர்கள் போல் கொண்டாட்டத்துடன் கையசைத்துப் புன்னகைத்து வாழ்த்துவதைப் போல் எழுதிச் செல்கிறார்.
லேசான தன்மை எளிதானதில்லை என்பதைக் கவிதை வாசகர்கள் நன்கறிவர். அது ஒரு மயக்கும் புதிர். அது போல் எழுதப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான வரிகளிலிருந்து எதானாலென்றறிய முடியாத ஒன்றால் அது கவிதையாகியிருக்கும். நான் அதை அறிய விரும்புவதுமில்லை. ஊற்றப்பட்ட அந்த வைன் கிண்ணத்துடன் மகிழ்வான முதிர் முத்தங்களுடன் கொண்டாட்டமாய் ஒரு வாழ்க்கைக்கான கனவை அளிப்பவையாக இக்கவிதைகள் என்னை அடைகின்றன.
இது இளமையின் புதுக்களிப்பல்ல. அதனால் உண்டாகும் அடர் வெளியல்ல. மூப்பின் கனிவு. விரிந்து வானுயர்த்திக் கண்பார்த்தால் பாலைவனத்திலும் பனி மலையிலும் கடல் நடுவிலும் நிற்கும் ஒவ்வொருவரும் ஒன்று போலவே பார்க்கும் ஆகாய நட்சத்திரங்கள்.
1
விளிம்பில்
ஒற்றைக்காலில் பலன்ஸ் செய்தபடி
மெல்லிய நடுக்கத்தோடு
உடலைச் சமநிலையில் வைக்கிறேன்
பாவாடை சுழல நடனமாடிய சிறுமியாக
நினைவுபடுத்தும் பாட்டுகளைக் கேட்கிறேன்
கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்களில் அறிந்தவர்களைத் தேடுகிறேன்
சும்மா இருந்து
சத்தமிடும் தொலைக்காட்சியைப் பார்க்கிறேன்
ஆடையகம் சென்று வண்ணங்களை என் மேல் உடுத்திப் பார்க்கிறேன்
இல்லாத ஒருவருக்கு வாய் விட்டுப் பதில் சொல்கிறேன்
ஹா…ஹா…எனச் சிரித்த பின்
பெரும்பசியில் கத்தும் வயிற்றுக்குள் அள்ளி அடைகிறேன்
திருப்தியாக
முழு நீளக்கண்ணாடி முன் நின்று
ஏய் யார் நீ எனக்கேட்கிறேன்
2
கதைகளைச் சொல்ல
நான் குழந்தையாக மாற வேண்டும்
தவழவும் விழவும்
எச்சில் ஒழுகச் சிரிக்கவும் பழக வேண்டும்
அக்கண்களால் கண்டு
அம்மொழியால் கதைத்து
குழந்தை விரிக்கும் வானம்வரை
கழுத்தை உயர்த்திப் பார்க்க வேண்டும்
கற்பனை செய்ய
ஒரு மனமும் குணமும் அமையவேண்டுமல்லவா!
அது தித்திப்பை எவ்வளவு நேரத்திற்குச் சுவைக்கிறது?
அச்சின்ன இதயம் கனத்து விம்மும்
துயரத்தின் கால அளவை
நான் மறந்து விட்டால்
கதையொன்றை நெய்ய முடியாது.
இலக்கிய மனமும் குணமுமாக
அழகாகக் கதை சொன்னபடியிருக்கிறேன்.
குழந்தை இமைகளைச் சிமிட்டாமல்
ஆடாமல் அசையாமலிருந்து கேட்பது போலிருக்கிறது
அம்மா-அப்பாவின் கல்யாணப்படம்
கொழுவிய சுவரில்
பற்கள் ஒளிரும் சிரிப்பின் தெறிப்பு.
திடீரென்று கேள்வி கேட்கிறாள் குழந்தை
‘ஒளிப்படங்களில் சிரிக்கும் மனிதர்கள்உரையாடும் போது ஏன் சிரிக்கிறார்களில்லை?’
எவ்வளவு வேகமாக வளர்ந்து விடுகிறார்கள் குழந்தைகள்!
*
புதிதாக ஒரு நாட்காட்டி!
ஆணியறைந்துவிட்டு
நான் பிறந்த ஆண்டைக் கழித்துப்பார்க்கிறேன்.
சிறுவயதில் வளர்ந்துவிட ஆசைப்பட்டதாக நினைவுண்டு.
அப்போதெல்லாம் இரண்டாயிரமே எவ்வளவு பெரிய தொகை!!
உடலின் முதிர்ச்சியை ஒவ்வாத மனதோடு
பெரியவளாகப் பாவனை செய்தேயாக வேண்டும்.
‘எத்தனை வயது அறிவில்லையா?’
ஒருவர் இடைக்கிடை கேட்பார்.
‘அறிவில்லைத்தான்’
‘டக்’கென்று பதிலளிக்குமளவு
கொஞ்சம் வளர்ந்தது போல தான் தெரிகிறது.
*
சும்மாவோ சோளகமோ
வீசுகிறது வேகமாக
வெம்மையைத் தணிக்க இடி இடித்து
முழக்கமிடுகிறது வானக்காதல்
ஈரஞ் சுமந்த முகில்கள்
கருகருவென ஊர்ந்து வருகின்றன
அம்முதுபெண்ணின்
தளர்ந்த மார்பகங்களில்
மழைத்துளிகள் குதித்தோடுகின்றன
ஏந்திய கைகளிரண்டில் வழுகிவிழுகிறது
வெள்ளி மீன்.
*
மென்பச்சைக்காலம்
நானும் மகனும் அடித்துத் துரத்தி விளையாடிய
அன்றொரு நாள்
திடுக்கிட்டு நின்றேன்
காலம் மென்பச்சையில் தெரிந்தது.
கோபமா நேசமா?
சிறுவயதில் நேசத்தின் விரல்கள் அடிக்கடி நீளும்
கொஞ்சம் வெட்கத்தோடு தான்
சினேகித விரல்களைப் பற்றுவோம்.
ஆலயத்தில் இடமும் வலமும்
திரும்பித்திரும்பிச் சமாதானம்…சமாதானம்
அது பழக்கப்பட்டது
சும்மா ஒரு வழக்கம்.
பிறகு
நேசம் போடுவது
சமாதானத்திற்குப் பேச்சு வார்த்தை
பாவத்திற்குப் பயந்த பராயம்
வேகவேகமாகக் கடந்து போகிற பயணம்
உண்மையாகவே பெரியவர்களாகத்தான் ஆனோமா?
திடுக்கிட்டுப்போனேன்
ஒரு காலம் மென்பச்சையில் தெரிந்தது
நண்பனுக்கு நாற்பத்தைந்து வயது
எனக்கொன்று அதிகம்.
ஒன்றரை மாதமாகச் சண்டையென்று பேச்சு வார்த்தையில்லை.
நான்கு நாட்களின் முன்புதான்
‘சமாதானம்’ என்றொரு சொல் வந்தது
எனக்கென்றால் குழந்தைப்பிள்ளைகள்போல
நேசம் போட்ட வெட்கச் சிரிப்பு.
*
இதுவே தன் கடைசிக் காதலென்றான்.
எனக்கென்றால் அவ்வளவு பெருமிதம்.
“ஆமாம் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது
எனக்கும் கூட இதுதான் கடைசிக்காதல்” என்றேன்.
பேரெழிலோடு மனதும் உடலும்
வயதும் முதிர்ந்தவர்களாயிருந்தோம்.
அந்த ‘கடைசி’ எனும் சொல்லிலுள்ள காதல்
மெல்லிய வெய்யிலின் இதம்.
வெண்சுருட்டுகளைப் புகைத்துப்புகைத்துக் கதைத்துக் கொண்டிருந்தான்.
அவ்வறையில் கடைசியும் காதலும்
முகில்களிடையில் மிதந்தன.
நாம் ஏந்திய மதுக்கிண்ணங்களில்
வாஞ்சை நுரைத்தெழுந்தது.
இதற்கு முன்பு அத்தனை கசப்புகளையா அருந்தினோம்?
மெல்லிய கேவல்கள்.
நெஞ்சோடு அணைத்துக்கொண்டோம்.
பாசாங்கற்ற பரிசுத்த நேசத்தின் கண்ணாடியில்
சம்மனசுகளின் முகங்களவை.
அவனது விழிகளை ஊடுருவிப்பார்த்தேன்
ப்ரவுண் நிறத்தில்
நீரில் மினுங்கிக்கொண்டிருந்தன.
*
இருபுறக் காடுகள் ஊடாக
என்னைக் கொண்டோடுகிறது ரயில்
அந்நிய நாட்டின் வெறுமையை
இன்னும் இன்னும் உணரும் சலிப்பாக
இப்பயணம்
என் நீண்ட தனிமையில்
இடையிட்டு
சற்றுத் தள்ளி ஒருவன்
கதவருகில் நின்று
கடந்தோடும் மரங்களை பார்க்கிறான்.
இருக்கையின் சலிப்பில்
கதவருகே நானும் சென்றேன்
மரங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன
நீங்க தமிழா? நான் கேட்க
இங்லீஷில் பேசினான்
கொல்கத்தா நகரிலிருந்து
கொம்பியூட்டர் வேலைக்கு வந்தானாம்
சில நிமிடங்களில்
பிராங்போர்ட் சென்றடைய
“இதோ இறங்குமிடம்
உன்னை முத்தமிட்டுப் பிரியலாமா?”
கேட்டான்
மறுப்பதற்கு
அவனோடு எனக்கென்ன கோபம்?
அவனது ஆடைகளின் நிறங் கூட ஞாபகத்திலில்லை
முகம் மறந்து விட்டது
பெயர் கேட்டறியவில்லை
இரு முத்தங்கள் மட்டும்
அத்தருணத்தின் நினைவாக
என்னோடு பயணிக்கின்றன.
*
வாழ்வின் கசப்புகளை வடித்துக் குடிக்கவேண்டுமென்றால்
ஒரு குவளையில் திராவகத்தை ஊற்றி வைத்தபடி
அழுது கொண்டிருப்பதா?
அவலச்சுவையை அருந்தித் தீர்க்க
போத்தலொன்று தேவையென்றால்
செம்மதுவை ருசிக்கலாம்.
அது புளிப்பாயிருப்பின்
சலித்த அறிவுரைகளின் நினைவைத் தரும்.
வற்றாத குடத்தில் தாகம் தீர்க்கும்
உவமை சொன்ன அற்புதங்களின் ஆதியல்லவா!
நாம் இனிப்பான திராட்சைகளைப் பறித்து
நொதிக்க வைக்கலாம்.
பிறகு கண்ணாடிக் குவளைகளை ஏந்துவோம்
உள்ளங்கையும் விரல்களும் பட்ட சூட்டில்
கதகதப்பான
அந்த இரசத்தை
மெதுவாகப் பருகினால்
அதுவே அற்புதத்தருணம்.
தர்மினி
(குறிப்பு: இதிலுள்ள அனைத்து ஒளிப்படங்களும் தர்மினியினுடையவை)