ஒளி வற்றிய சுடரில் எஞ்சும் நிறங்கள்: 01

ஒளி வற்றிய சுடரில் எஞ்சும் நிறங்கள்: 01

முதலில் உங்கள் சகோதரனோடு சமாதானமாகுங்கள்; பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்’—மத்தேயு 5:24

பைபிளில் உள்ள கதையொன்றின்படி ஆதாமினதும் ஏவாளினதும் மூத்த மகன் காயீன், இளைய மகன் ஆபேல். இருவரும் தங்கள் விளைச்சல்களிலிருந்து காணிக்கையை கடவுளுக்குச் சமர்ப்பிக்க வருகிறார்கள். கடவுள் ஆபேலின் காணிக்கையில் மகிழ்கிறார். இதனால் கோபமுற்ற காயீன் தனது சொந்தச் சகோதரனாகிய ஆபேலைக் கொல்கிறான். அதன் பின், கடவுள் காயீனிடம் உன் தம்பி எங்கே என்று கேட்கிறார். காயீன், ‘‘என் தம்பிக்கு நான் காவலாளியோ…?’’ என்றான். கடவுள், ‘‘குற்றமற்ற ஆபேல் இப்பூமியில் சிந்திய அந்த இரத்தம் என்னிடம் நியாயம் கேட்கிறது’’ என்றாா். கொலைக் குற்றவாளியாகிய காயீனை அவன் அப்பா, அம்மா தேசத்தை விட்டு கடவுள் சாபத்துடன் துரத்தி விட்டாா்.
காயீன் மிகக் கடுமையான நிலத்தில் விளைவித்தும், சபிக்கப்பட்ட அவனும், அவன் விளை நிலமும் நல்ல விளைச்சலைத் தரவில்லை. காயீனின் சந்ததிகள் தீராத சாபம் பெற்று துன்பத்துக்கு ஆளாயிற்று என்கிறது அக் கதை. தமயந்தியின் கவிதை காயீன்கள் ஆபேல்களைக் கொன்று குவித்தமையை எழுதுகிறது.

காயீன்கள்

கிழக்கை சிவக்க வைத்தோம்
இருளின் ஆழ்கையில்
இரத்தத்தால்.

ஓ… பிதாவே!
பிதாவுக்கும் பிதாவே!
இரட்சணியத்தின் உறைவிடமே
ஐம்பத்து மூன்று மணிகளை உருட்டி
உமது
ஜெபவேளை முடியுமுன்னே
பள்ளியிலிருந்த ஆபேல்களின்
தொழுகைக் குரல்கள்
பரலோகம் நோக்கி
உமது செவிகளை
கூக்குரல்களாய் எட்டிடச் செய்தோம்.

என் பிதாவே!
ஆபேலின் குடும்பத்தினரையும்
முலை சூப்பிய பச்சைக் குழந்தை உட்பட
உமது திருப்பாதங்களில்
பலியிட்டோம்.

குல்லாத் தலைகள் சீவி
மொட்டை பறிந்த வாட்களை
அடுத்த வேட்டையின்
கட்டளை பிறக்குமுன்
தீட்டித் தருக ஆண்டவரே, ஆள்பவரே.

துப்பாக்கி பீரங்கிகளாலும்
கத்தி, வாள், பொல்லு, தீயாலும்
மானுடத்தைச் சாகடித்தல்
சலித்துப் போயிற்று.

மானுடத்தின்
முகத்தைப் பிராண்டி
குரல்வளையின் முடிச்சை
கடித்துத் தின்று
வயிற்றை
பற்களால் கிழித்துக் குடலெடுத்து
ஈரலையும் உண்பதற்கு
பிதாவே உமது
அனுமதி வேண்டுகிறோம்.
அதுவும் இப்பொழுதே.

*

1990 இல் வடமாகணத்தில் இருந்து முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் கட்டாய வெளியேற்றம் செய்யப்பட்டனர். விடுதலையின் பெயரில் தொடங்கிய ஆயுத வழிப்போராட்டம், அமைப்பினுள் கொலைகள், சகோதரப் படுகொலைகள், சொந்த மக்களின் மீது காட்டிக்கொடுப்பவர், துரோகி போன்ற அடைமொழிகளுடன் கொலைகள், அதிகாரப் போட்டிகள் என்று தொடங்கி முஸ்லீம்களும் காட்டிக் கொடுப்பவர்கள் என்பது வரை வந்து சேர்ந்தது. அரசுடன் சேர்ந்து ஊர்காவற் படையில் இணைந்து படுகொலைகளையும் வன்புணர்வுகளையும் செய்த முஸ்லிம்களில் ஒரு தரப்பினைக் காரணம் காட்டி அந்த இனச்சுத்திகரிப்பினை நியாயப்படுத்தினர். எத்தகைய காரணங்கள் சொல்லப்பட்டிருப்பினும் ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு, ஒடுக்குமுறை அரசினைப் போல் ஒர் இன மக்களை அவர்களது சொந்த நிலங்களிலிருந்து கட்டாய வெளியேற்றம் செய்தமை ஓர் இனச்சுத்திகரிப்பே. பெரும்பான்மை ஈழத் தமிழ் மன நிலையிலிருக்கும் முஸ்லிம் வெறுப்பு இதற்குப் புறநிலைப் பலத்தை விடுதலைப் புலிகளுக்கு வழங்கியது. தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தின் மாபெரும் வீழ்ச்சியின் குறிகாட்டியானது.

வெளியேற்றம் நடந்த அந்த நேரத்தில் கவிஞர்கள் சிலர் கடுமையாக விமர்சித்துக் கவிதைகளை எழுதினர். இப்போராட்டத்தின் போக்கு, விடுதலைப் புலிகள் எடுத்த எதேச்சாதிகார முடிவுகள் ஆகியன இணைந்து ஆயுதம் ஏந்திப் போராடுங்கள் என்று அறை கூவிய கவிஞர்களைக் குற்றவுணர்வுக்குள்ளாக்கி அவர்களின் சாகசங்களையும் வீரத்தையும் பாடாது ஒழியும் நிலை ஆனது.

பின்னரான காலத்தில் இந்த வெளியேற்றத்திற்காக விடுதலைப் புலிகள் மன்னிப்பைக் கோரியிருந்தனர். தமக்கான அதிகாரங்கள் கிடைத்த பின் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீளக்குடியமர்வைச் செய்வோம் எனக் கூறினர்.

(முஸ்லிம்கள் வெளியேற்றம்)

*
காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலை என்பது ஓகஸ்ட் 3, 1990ல் கிழக்கிலங்கையில் உள்ள காத்தான்குடியில் விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட படுகொலை. இத் தாக்குதல் ஒரே நேரத்தில் இரண்டு முஸ்லீம் பள்ளிவாசல்களில் நடத்தப்பட்டது. ஒன்று கிரவல் தெருவில் உள்ள பள்ளிவாசலும், மற்றொன்று உசைனியா பள்ளிவாசலும் தாக்குதலுக்குள்ளாயின. இதில் முஸ்லிம்கள் இரவுத்தொழுகை நடாத்திக்கொண்டிருக்கும் பொழுது நடத்தப்பட துப்பாக்கிப் பிரயோகத்தில் 25 குழந்தைகள் உட்பட 103 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலைகள் குறித்து வெளியான என். ஆத்மாவின் கவிதை,

செங்கோல் = சிவப்பு + கோல்

அரசன் எழுந்தான்
அப்பாவிகளின் தொடை, கணைக்காலென்புகளால்
செய்யப்பட்டு
குழந்தைகளின் கன்னத் தசைகளால் போர்த்தப்பட்ட
ஆசனத்திலிருந்து.
வலது கையில்
எழுவன் குளத்துச் சிங்கள மக்களின்
புத்தம் புதிய குருதி நிரம்பிய கிண்ணம்
ஒரு மிடறு குருதியருந்தியபடி
திறந்து கிடந்த அடுத்த அறையை எட்டிப் பார்த்தான்.
அறைச் சுவரில்
ஆணியடித்துக் கொழுவப்பட்ட 103 தொப்பிகள்
காத்தான்குடிப் பள்ளிவாசலில்
சுட்டுக் குதறப்பட்டவர்களின் தலைகளிலிருந்து
கழற்றி எடுத்து வரப்பட்ட மாவீரச் சின்னங்களவை.
பக்கத்தில்
இரு கூறிடப்பட்டு வீசியெறியப்பட்ட சிறு பிள்ளையொன்றின்
குருதி பீய்ச்சியடிக்கப்பட்டுக் காய்ந்த சீமெந்துப் பேப்பர்.
பெருமிதத்தில் தனக்குள் சிரித்துக் கொண்ட அரசன்
திடுமென அதிர்ந்தான்.
மிக அருகில் எங்கோ பாங்கொலிக்கக் கேட்டான்.
அம்பிளாந்துறைச் சந்தியில் மரண ஓலமெழுப்பிய
அதே 157 ஹாஜிமாரினதும் குரல் அசப்பில்.
மடுவுக்குள் பாதி புதைந்தும்
பட்டை வாய் வெடித்த காட்டு மரங்களில் தொங்கியும்
இரத்தம் தோய்ந்த வெண்ணிற ‘ஜுப்பா’க்கள்
அரண்மனைக்கு வெளியே
காற்றிலசைவதும் கண்டான்.
காதை இறுகப் பொத்தியபடி
கதவை இழுத்து அடைத்துச் சாத்தி
அறைக்குள் மீளவும் வந்தமர்ந்தான்
அருகில்
தப்பித் தவறியும் எதனையும்
சிந்தித்து விடக் கூடாதென்பதற்காய்
கழற்றிய மூளை ஒரு கையிலும்
சயனைட் குப்பி ஒரு கையிலுமாய்
யாரிலோ அல்லது எதிலோ
விழுந்து வெடித்துச் சிதறிட
தன் அரசனின் ஆணையைக் கோரி நிற்கும்
இயந்திரத் தனப்பட்டு இளைஞனாய்ப் போன
பன்னிரு வயதுத் தமிழ்ப் பாலகன்
மெல்லக் குனிந்து தன் அரசனைக் கேட்டான்
“முஸ்லிம்களைக் கொன்று கன நாளாயிற்றே
கொல்வதில்லையா இனி?”
அரண்மனை அதிரப் பேயிடியாய்ச்
சிரித்த அரசன் திருவாய் மலர்ந்தான்
“கொல்வதில்லை யென்றெதுவுமில்லை;
இப்போதில்லை!”

(என். ஆத்மா)

1990 களின் இத்தகைய பின்னணி விடுதலை பற்றிய பெருங்கனவை ஆயுதப் போராட்டமாகச் சுருக்கியது. எழுந்து வந்த புதிய தலைமுறைக் கவிஞர்கள் போரின் தேவையைப் பாடமலானார்கள். போர் நாயகர்களைப் பாடமலொழிந்தார்கள். போர் நிகழ்த்திய மாற்றங்களை, மக்களின் வாழ்க்கையை மூடியிருக்கும் கந்தகப் புகையுடனும் அச்சத்தின் மேகங்களுடனும் சந்தேகத்தின் மின்னல்களுடனும் எழுதினார்கள். சன்னதங் கொண்டெழும்பிய காலம், ஆயுத வழியால் குருதி பீறிட்டது. அதன் அலைச்சல்களின் உளவமைப்பைக் கவிஞர்கள் பாடினர்.

நட்சத்திரன் செவ்விந்தியன் இக் காலகட்டத்தின் கூருணர்வு மிக்க குரல். யுத்தத்திற்குள் நுழைய முடியாமலும் வெளியேற வழியுமின்றி இந்த நிலத்தின் வாழ்விற்குள் அலைச்சலுறும் இளைஞனின் குரல். தன் நினைவுகளின் பனையில் கள்ளென ஊறும் நிலத்தை அதன் அன்றாட வடிவின் துல்லியத்துடன் நிலக்காட்சிகளாகவும் ஒலிகளாகவும் மனநிலைகளாகவும் கதாப்பாத்திரங்களாகவும் தேக்கினார்.

Nostalgia

ஒரு மாரிப்பனிக்கால
விடியலில் நான் எழும்புகிறேன்
அப்படியொரு, யாழ்ப்பாணத்தில் படுத்த நினைவு
முருங்கைமர இலைகளும் பூக்களும்
கிளைகளுக்குத் தாவுகிற அணில்களும்
புல் நுனிகளில் பனித்துளி
நான் இரைச்சல் சத்தம்வர புல்லில் சலம் அடித்தேன்

ச்சா ச்சா ச்தோ
அது என்ன காலமப்பா
வீடுமுழுக்க பூவரசமரம் நிற்கிறது
எங்கள் வீட்டுப் பின்பக்கத்துக் குளம்
இப்போது அது ஒரு நதி
செத்துப்போன அப்பா. வெளிநாடுகளில் இருக்கிற மாமாக்கள்
எல்லாம் நதியில் ஒருக்கா படகோட்டிவிட்டு
வந்து இறங்குகிறார்கள்
நதியோரம் நமது வீடு
படகுகூட ஒரு பூவரசில் கட்டி வருகிறார்கள்
வெய்யில் ஏறுகிறது; அவர்கள்
தங்களுக்குள்
கனக்கக் கதைத்து கள்ளுக் குடித்தார்கள்

பறந்துவிட்ட வசந்த காலங்கள்
நிலாமுன்றில் கால்கழுவி
ஒழுங்கையால் போன சைக்கிளையும் மனிதனையும் பார்த்து
பனங்காய் விழுகிற சத்தம் கேட்டு
துயிலுக்குப் போனோம்

(1993)

இழந்து கொண்டிருக்கும் நகரினதும் கிராமத்தினதும் வாழ்க்கை அழிக்கப்பட முடியாத சொற்களில் திரள்கிறது. அழிவின் கையறு நிலை சொற்களில் பதனிடப்பட்டிருக்கிறது.

(நட்சத்திரன் செவ்விந்தியன்)

*

பா. அகிலன் தொண்ணூறுகளின் முதன்மையான கவிஞர்களில் ஒருவர். அவரது கவிதைகள் சொல்லடுக்குகளாக எழுந்து நின்று ஓர் ஓவியப் பரப்பை உருவாக்கக் கூடியவை. கற்சிற்பங்களெனத் திரளும் அடர்த்தி கொண்டவை. ஒரு கொடுங் கனவிலிருந்து விழித்துக் கொள்ளும் கணத்தில் நெஞ்சு உறைந்து, வியர்வை உடல் வழிய, திடுக்கிட்டு விழிக்கும் தாங்கிக் கொள்ள முடியாத அந்தக் கொல் கணத்தை எழுத்தில் கொணர்பவர். மேலும் நிலவுருக்கள் அவரின் சொற்களில் மேலெழுந்து உறைகின்றன.

உன்னுடைய மற்றும் என்னுடைய கிராமங்களின் மீதொரு பாடல்

1

எனக்குத் தெரியாது.
ஒரு ஆர்ப்பரிக்கும் கடலோரமோ
அல்லது
வனத்தின் புறமொன்றிலோ
உன் கிராமம் இருந்திருக்கும்
பெரிய கூழாமரங்கள் நிற்கின்ற
செம்மண் தெருக்களை,
வஸந்தத்தில் வந்தமர்ந்து பாடும்
உன் கிராமத்துக் குருவிகளை
எனக்குத் தெரியாது.
மாரிகளில்
தெருவோரம் கண்மலரும் சின்னஞ்சிறிய பூக்களை
நீள இரவுகளில்
உடுக்கொலித்து நீ பாடிய கதைகளை
நிலவு கண்ணயரும்
உன் வாவிகளை
நானறியேன்.

2

காற்றும் துயரப்படுத்தும்
இவ்விரவில்
நானும், நீயும் ஒன்றறிவோம்;
ஒரு சிறிய
அல்லது பெரிய
சுடுகாட்டு மேடு போலாயின
எமது கிராமங்கள்.
அலைபாடும் எங்கள் கடலெல்லாம்
மனிதக் குருதி படர்ந்து மூடியது
விண்தொடவென மரமெழுந்த வனமெல்லாம்
மனிதக் குரல்கள் சிதறி அலைய,
சதைகள் தொங்கும் நிலையாயிற்று…
முற்றுகையிடப்பட்ட இரவுகளில்
தனித்து விடப்பட்ட நாய்கள்
ஊளையிட
முந்தையர் ஆயிரம் காலடி பரவிய
தெருவெல்லாம் புல்லெழுந்து மூடியது,
நானும் நீயும் இவையறிவோம்.
இறந்து போன பூக்களை,
கைவிடப்பட்டுப்போன பாடலடிகளை…
நினைவு கூரப்படாத கணங்களை
அறிவோம்.

3

ஆனால்,
கருகிப்போன புற்களிற்கு
இன்னும் வேர்கள் இருப்பதை.
கைவிடப்பட்ட பாடல்
சொற்களின் மூலத்துள் அமர்ந்திருப்பதை
நீ அறிவாயா?
குருதி படர்ந்து மூடிய
கடலின் ஆழத்துள்
இன்னும்
எங்களின் தொன்மைச் சுடர்கள் மோனத்திருப்பதை
நீயும் அறியாது விடின்
இன்றறிக,
‘ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்த பின்’
ஓர் நாள் சூரியன் எழுந்து
புலர்ந்ததாம்.

(1993)

இந்தக் காலகட்டத்தில் போரின் விளைவான மனவடுக்களும் குழப்பமும் அச்சமும் கவிஞர்களின் சொற்களைத் தீப்பிடித்தெரிய வைத்தன. அரச ஒடுக்குமுறைகளும் படுகொலைகளும் வன்புணர்வுகளும் மக்களைத் துரத்திக் கொண்டு அவர்களை யுத்தத்துக்குத் தள்ளியது. அந்த நண்பர்களின் மனநிலையை, அந்த நெருக்கடியில் அவர்களது விடுதலைக் கனவை, போரிடச் சென்ற தியாகத்தை, அவர்கள் தோற்க முடியாத ஒரு சதுரங்கத்தின் காய்களெனச் சாவதை, பலரும் எழுதியுள்ளனர். இக் காலக் கவிதைகள் சாகசங்களை விடுத்து, நேர்மைத் திறனுள்ள போராளிகளின் வாழ்வு சிதைந்தழிவதை வெளிப்படுத்துகிறது. பா. அகிலனின் கவிதையொன்று,

புனைவுகளின் பெயரால்

நானொரு ஆசியன்,
கடவுளர்களின் கண்டத்தைச் சேர்ந்தவன்
சமுத்திரங்களின் சொர்க்கத் தீவில்
வடகுடாவின் வெப்பத் தெருக்களில்
காட்டுப்பறவை.

நீங்கள் அறியீர்கள் என்னை
கட்டப்பட்ட புனைகதைச் சுவடிக்குள்
சிறையிடப்பட்டது எனது வரலாறு,

உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நான்
உங்கள் தாழ்வாரங்களை நிரப்பும்
வேண்டப்படாத அசுத்த விருந்தினன்,
தேசங்களின் எல்லைகளைத் திருட்டுத்தனமாகக் கடக்கும்
கள்ளக் குடியேறி,
சமரசமின்றி இறப்பை ஏந்திச் செல்லும்
முரட்டுப் போராளி…
அறியீர்கள் நீங்கள்
வரலாற்றின் மூத்தவேர்களில்
எனக்கொரு வீடு இருந்ததை
கவர்ந்து,
எனது தெருக்கள் தூக்கிலிடப்பட்டதை
புனைவுகளின் பெயரால்
முடிவற்று சீவியெடுக்கப்படும் குருதியின் வலியை…
இல்லை,
அறிந்துள்ளீர்கள் அனைத்தையும் நீங்கள்,
எனினும்
அற்பமான உங்கள் நன்மைகளுக்கு
அவசியமானது
தோற்க சதுரங்கப் பலகையில் மறுக்கும்
முடிவற்ற எங்களின் குருதி.

(பங்குனி 1997)

(பா. அகிலன்)

விடுதலைப் போராட்டங்களுக்குச் செல்லும் போராளிகளின் நினைவுகள், இளவயதுச் சோகங்கள், மூடிக் கிடக்கும் இருளை அகற்றும் ஒளியெனத் தன்னை ஆக்கிக் கொள்பவர்களை, நம்பிக்கையற்றுப் போரிற்குள் அனுப்பும் மனநிலை மக்களில் திரண்டிருந்தது. போரில் வெல்வோமா? வென்றால் விடுதலையா?
இயக்கத்துக்கு போகும் நண்பர்களைப் பற்றிய நட்சத்திரனின் வரிகள், நிச்சயமின்மைகளுடன் நடக்கும் இப்போரின் நாட்களைக் காட்டுகிறது.

பிரிந்து போனவர்கள்

1
நமக்கான காலம்
போய்விட்டதைப்போலுள்ளது
யுத்தம் வந்து
ஊர்களுக்குள் நதிகளையும் சிற்றாறுகளையும் புகவிட்டு
வாரியடித்துக்கொண்டு போயிருக்கிறது.

2
போன ஆண்டிலும் முன்பனிக்காலத்தில்
யுத்தம் வந்து போனது
கடந்த காலத்திற்காக
பத்தாம் வகுப்பு பள்ளிக்கூடத்திற்காக
அறுவடைசெய்த
வயல்வெளிகளுக்காக
அது ஏங்கவைக்கவில்லை.

3
நான்
இனி நெடுகலும் தனித்துத்தான் போனேன்
வயல்காட்டு எல்லைப் பூவரச மரங்களுக்கு
தெரியும்
நிலம் இருண்ட பிறகு
கருங்கல் துருத்தும் தார் றோட்டில்
உழவு முடிந்த கடா மாடுகளைச்
சாய்த்துக் கொண்டு போனான் ஒருதன்
தனித்த பட்டமரத்தில்
அது மேலும் வாழ விரும்பி
இறப்புக்காக முதிய அனுபவங்களுடன் நின்ற
பட்ட மரத்தில்
கொட்டுக்காகம் உச்சிக் கிளையில் வந்திருந்தது
ஒன்றாய்ச் சேர்ந்த துயரங்களுடன்
இயக்கத்துக்குப் போனவர்களில்
ஆனையிறவிலும் மணலாற்றிலும் செத்துப்போக
நான் மட்டும்
ஒரு வலிய சாவுக்காகக் காத்திருக்கிறேன்.

(1991)

*

உயிர்த்தெழுதல்

இங்கே மீண்டும் புத்துயிர்த்தேன்

இயேசு பிரானைப்போல
சிலுவையில்
கைவிரல்கள் தாங்க ஆணியறைந்து
ரத்தம் கசிந்து கிழிந்து
இந்தக் காலத்தில் இறந்திருக்கத் தேவையில்லை.

நான் இறந்திருந்த நாட்களில்
மப்புக்கொட்டி துக்கும் சொரிந்தது எனக்காக
மழை தகரத்தில் அடித்துக்கொண்டு பெய்து
என் அறையில் சில புத்தகங்களையும் நனைத்து
நிலம் முழுவதும் தண்ணி கசிந்தும் ஓடியது.

சோவியத் ருஷ்ய
நாவல்களைப் படித்துக் கொண்டிருப்பேன்
மரணத்துக்குப் போகும்வழியில்
நித்திரை கொள்ள வைக்கும்
நேரகாலம்
சும்மா போனது துளிர்த்து வருத்தும்
இரவுகளில் வாய்திறந்து ஒரு வார்த்தையேனும் கூடபேச
சோம்பலுற்றுக் கிடந்தேன்
எல்லாம் ஆகிவிட்டது இனி என்ன
என்வாய் முணுமுணுக்கிறது.

எழுதிக்கொண்டிருக்கிற நாவல்
இந்நாட்களில் தொடர்ந்து போகாது
நாவலில்
19ம் நூற்றாண்டு வீதியிலிருந்து
ட்ராம் வண்டிகள் ஓடின சத்தம்
பனிக்கட்டிகள் நொருங்குபடும் ஆறுகள்
இந்த மாதிரியான நதி
வற்றி வரண்டுவிட்டது.

ஒற்றைகளைப் புரட்டுவேன்
இரண்டுவரி எழுதுவேன்
போர்க்காலத்தில் பனிக்காலமும் வந்துவிட்டது
முனைப்பும்
உயிர்கொண்ட குதிரைச் சவாரியும்
எங்கே போயின

இன்று மீண்டும் புத்துயிர்த்தேன்
கொஞ்ச நேரம்
பின்னேரம் 2 ஆட்டம் Chess விளையாடினேன்
தார்றோட்டும் தெரியாமல்
இருண்ட பிறகு
இயக்கத்துக்குப் போன நண்பர்களைத் தெரிந்து கொண்டு
திரும்பினேன்.

(1991)

*

இந்த வசந்தம்

அன்றைக்கு மாலை
நானும் ரூபனும் கடலுக்குச் சென்றோம்
அவன் வீடுக்குப் போகும்
குறுக்கு வழியில் அவனைச் சந்தித்தேன்
யுத்தம் நடந்துகொண்டிருக்கிற காலம்

வீதியை விட்டு மணலுக்குள் புகுந்து
எருக்கலையருகில்
கடலைப்பார்த்திருந்தோம்
கனத்த உப்பங்காற்று வீசுகிறது
என் முகமெல்லாம்
நெஞ்சுரப்பான மசமசப்பூட்டுகிறது.

சோதினை நடக்கவில்லை
ஒரு பருவகாலம் முழுவதுமே Mood குழம்பிக்கொண்டிருக்கிறது
கன நண்பர்கள் இயக்கத்துக்குப் போய்விட்டார்கள்
அவர்களின் போகுதலின் முன்
இந்தக் கடற்கரையில் இப்போ நாங்கள் முகருகின்ற சோகத்தை
முகர்ந்துகொண்டுதான் போனார்கள்
பரந்த கடலில் நமது சோகம் ஒரு அலையேனும் ஆகாவிட்டாலும்
இப்படிச் சொல்லச் சிரமமாயிருந்தாலும்
‘யுத்தத்தில் நாங்கள் வெல்லத்தானே வேணும்’

மனச்சாட்சி உறுத்துகிறது
அலைமுறியும் கடற்காற்றில்
பருத்த மணல்கள் கால்களில் விழுகிறது.

(1991)

*

நிலத்திலிருந்து எஞ்சிய நினைவுகளை செரிக்க முடியாமல், உள் நிகழ்ந்த படுகொலைகளினதும் சொந்தச் சகோதரர்களின் அச்சுறுத்தலிலும் அகதிகளென உலகின் திசைகளெல்லாம் கொட்டி எறியப்பட்ட மனிதர்களின் அவலங்கள் பெருகி வழிந்து காலத்தின் குரல் எரிந்து மூசியது, ஒளவை நிலம் விட்டு நீங்கும் காட்சி,

எல்லை கடத்தல்

சூரியன் மறைந்த பிறகு
காலமெல்லாம்
எனது வீட்டு முன்றலினை
பச்சையாய்க் குடை விரித்துக்
குளிர்வித்த புளிய மரம்
கரும் பூதமாகி நெஞ்சினுள் பாயும்

கண்ணீரில் கரைகையிலே
காலால் உதைத்து
வேடிக்கை பார்க்கும்
விழி நிமிர்த்தி
அண்ணாந்து பார்க்கையிலே
நிலாவாலே தோள் தடவி
மனம் ஆற்றும் நீள் வானம்
இருண்டு கிடக்கும்.
தன் கோரப் பற்களால்
கழுத்தை நெரிக்கும்.
வீழ்ந்து
புரண்டு அழுத போதெல்லாம்
தன் மடியில் இருத்தி
எனை அணைத்த மண் கூட
வழி தேடும் எனக்கு
புதை குழியைக் காட்டும்

சிறையுண்ட ஆத்மாவை
சுமந்திருக்கும் உடலோடு
ஆதரவு தேடி
ஒற்றைப் பறவையாய்
என் பயணம் தொடங்கிற்று
என் வாசல் தாண்டுகையில்
நா வரண்டு…
பேச்சிழந்து…
வழி நெடுக விழி நீள
என்தாய் வழி அனுப்பத்
தலை குனிந்தேன்.

காற்றுக்கும் காதிருக்கும்
கதறி அழ முடியாது
சோகம் தான்
விடுதலைப் பாதையில்
நடக்க முனைந்ததால்
முடமாக்கப்பட்டு
கள்வரைப் போல
அடிமேல் அடியெடுத்து
மெல்ல நடந்தேன்
எனது கிராமத்து வயல் வெளியும்
வயல் வெளிக்குத் துணையாக
உடன் துயிலும் இருளுக்குள்
நீண்டிருந்த பனைகளும்
கடும் கோபம் கொண்டு
எனை வெறித்துப் பார்த்தபடி

வெற்றுத் தாளாய்
காற்றோடு பறந்தது இதயம்
இருளோடு பறந்தது முகம்
இன்னும் என் கால் மட்டும்
என்னோடு கூட

மணற்காட்டு வெளியும்
புதுக்காட்டுச் சந்தியும்
தாண்டிக்குளமும் தாண்டி
நீள நடந்தேன்
குனிந்த தலை நிமிரவில்லை
எனது மண்ணில்
நிச்சயமற்றுப் போய் விட்ட
எனது இருப்பை
உறுதிப்படுத்த
பிறந்த மண்ணின் எல்லையைக் கடந்தேன்
இறுதியாக
பாதங்களில் ஒட்டியிருந்த செம்மண்ணையும்
தட்டியாயிற்று
செம் மண்ணும் போயிற்று
எம் மண்ணும் போயிற்று
போ.

(1990)

*

யுத்ததத்தின் புதிர் வட்டத்தை விட்டு ஏராளமானவர்கள் தப்பிச் சென்று கொண்டிருந்த காலம். காடுகளின் பாதைகளுக்குள் திசைகள் கெட்டு, வழிகள் மறைந்து, வெளியேறும் வழி தேடினர். அகதிகளாகி வெளிநாடுகளின் விமான நிலையங்களுக்கும் கரையோரங்களுக்கும் உயிரைப் பிடித்தபடி ஓடினர். அகதி முகாம்களிலும் அந்நிய தேசங்களிலும் தங்கள் வேர்களைப் பதியம் வைத்தனர். துரோகிகள் என்று பட்டம் சூட்டப்பட்டனர். வாழ்வின் நிலம் சூடு பிடித்து கால்கள் நிலைகொள்ளாமல் வேறு நிலம் தேடி ஓடினர், நட்சத்திரனின் வெளியேற்றக் காட்சி,

கடக்கப்படாத எல்லை

நம்பிக்கை குலைகிறது
ஒரு காலத்தில் அப்படியொரு காட்டுப்பாதை
இருந்தது எனச் சொல்கிறார்கள்
ஒரு மாதத்திற்கு முன்னால் கடந்தவர்களும் இருக்கிறார்கள்

செக்கரில். தோல்வியில்
வீட்டு நினைவுகள் துழாவுகின்றன
எல்லாவற்றையும் எழுத முடிகிறதா என்ன

இன்றைய காலை விழிப்பில்
அதிகமாய் அமுங்கிப் போனேன்
இருபது நாட்களாக இங்கு தங்கியிருந்தேன்
ஒரு ஒற்றையடிப் பாதையைத் தானும்
கண்டடையவில்லை
ஊருக்குத் திரும்பி என்னத்தைச் சொல்வேன்
அங்கே எனக்கு
கல்லறை கட்டி எழுதியும் விட்டிருப்பார்கள்
இந்நாளில் அதில் பட்டி மரங்களும் மண்டி
பாசி பிடித்தும்
எழுத்துக்கள் அழிந்து சிதிலமடைந்தும்…

“காட்டு வழியாய் எல்லையைக் கடந்தவன்;
இந்நேரம் தூரதேசத்தில்
படித்துக் கொண்டிருப்பான்;
கெட்டிக்காரன்; இனி தேசத்துரோகி”

இன்னமும்
ஆபத்தான எல்லையைப் பற்றியே
இரவில் கவலைப்படுகிறேன்
மிதிவெடிகளுக்கும்
ஆட்காட்டிக் குருவிகளின் சிடுசிடுப்புக்களுக்காகவும்
தேசத்துரோகிகளுக்கு விழும் அடிகளுக்காகவும்
என் ஜீவனே இரவில் பயப்படுகிறது

பகலில்,
ஒரு பீடி இழுக்கிறதைப் போல
எல்லாம் செய்யலாம் போலுள்ளது

எல்லையோரக் காடுகளில்
கரிகொண்டு,
பல் துலக்கி நாள் கழிகிறது
சாவும் போரும் நகர்கிறது.

( 1991)

விடுதலைப் போராட்டம் போரென்று ஆகியது. சகோதரப் படுகொலைகள், முஸ்லிம்கள் வெளியேற்றம், படுகொலைகள், நிலத்தில் சந்தேகத்தின் பெயரில் விசாரணைகள், சித்திரவதைகள், தண்டனைகள், தப்பிச் செல்பவர்கள் என்று நிலத்தின் காட்சிகள் நம்பக் கடினமான வாழ்க்கையை, வாழ ஒண்ணாத நாட்களை மக்களுக்கு ஆக்கி அளித்தது. சொற்கள் மூடுண்டு இருள் சொட்டியது. விடுதலையின் சுவாசத்தை உள்ளிழுக்க இரத்தமும் நிணமும் மணத்து நீண்டன.

TAGS
Share This