பொருள் கொள்ளுதலும் எதிர் கொள்ளுதலும்

பொருள் கொள்ளுதலும் எதிர் கொள்ளுதலும்

இன்று மாலை ‘பிரியத்துக்குரிய பெண்ணுக்கு’ என்ற புனைவுப் பிரதியொன்றை வெளியிட்டிருந்தேன். அதையொட்டிப் பல நண்பர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, என்ன பிரச்சினை உனக்கு?. இது ஒரு மோசமான பிரதி, ஆணாதிக்கத்தை நியாயப்படுத்துகிறது. பெண்களை இவ்வளவு கீழ்த்தரமாக எழுதியிருக்கிறாய் என்று ஏசிக்கொண்டிருக்கிறார்கள். இதில் இரண்டு விடயங்களை அடிப்படையாக உரையாட வேண்டியிருக்கிறது.

ஒன்று, ஒரு புனைவை எழுதுபவரின் சொந்த வாழ்க்கையில் நிகழும் ஒன்றைத் தான் பிரதியில் எழுதுகிறார்கள் என்று நினைப்பவர்கள். இது வாசிப்பு அல்லது கலை தொடர்பில் இருக்கும் சாதரணமானவர்களின் விளக்கம். இலக்கியம் அப்பிரதியில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் அகச் சிக்கல்களை உரையாடும் பாவனையை எடுத்துக் கொள்ளும். நாம் தொடும் நஞ்சு நம்மிலும் ஒரு துளியென என்றோ உறைந்து மறைவது தான். அல்லது அதனை வேறொன்றாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். பிரியத்துக்குரிய பெண் என்ற புனைவு அண்மையில் நிகழ்ந்த சில நண்பர்களின் அனுபவங்களைக் கொண்டு, அதன் வாதை பொறுத்துக் கொள்ளாமல் எழுதியது. பெரும்பான்மையான ஆண் மனதின் உளவியல் ஏராளமான சைக்கோத்தனங்கள் கொண்டது. பாலியல் மற்றும் உறவு சார்ந்த நிலைகளில் ஆண் மனம் கொள்ளக் கூடிய வக்கிர நிலைகளின் தொகுப்பாக ஏராளமான நேரடியான நபர்களின் அனுபவங்கள் உள்ளே குவிந்தபடியிருந்தன. அவை மலையென ஆகித் திக்கற்று அதில் அலைக்கழிய வைத்தது. அதன் விளைவுகள் தான் அவ்வெழுத்து. ஆகவே இதனை எனது தனிப்பட்ட வாழ்வுடன் நேரடியாகப் பொருள் கொண்டு குடும்பத்தில் என்ன பிரச்சினையென்று நண்பர்கள் யாரும் தொலைபேசியிலோ தனி மெசேஜிலோ கேட்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் மகிழ்ச்சியாகவும் தனிப்பட்டு ஏராளமான வேலைகளாகவும் இருக்கிறோம்.

இரண்டு, இலக்கிய வாசிப்பில் ஒரு பிரதியில் நான் என்ற தன்னிலை முன்வைக்கப்படுகையில் அது எதிரில் நிற்கின்ற எழுதுபவர் என்று மட்டும் பொருள் கொள்ளத் தேவையில்லை. அது ‘நான்’ என்ற உங்களுடன் பொருத்திக் கொள்ள வேண்டியது. ஒரு பைபிளை வாசிப்பதைப் போல. அது உங்கள் பாவம். உங்கள் கண்ணீர். உங்கள் குற்றம்.

மேலும் பிரியத்துக்குரிய பெண் என்ற பிரதியை ஓர் எதிர் உரையாடல் மற்றும் அக உரையாடல் சார்ந்தே வெளியிட்டேன். ஆண்களின் பாலியல் சார்ந்த கற்பனைகளினாலும் சித்திரவதைகளினாலும் வாதை கொள்ளும் பெண்களின் அனுபவங்களை அறிந்து வருகிறேன். அதே வேளை, ஆண்களின் மேல் பாலியலை ஒரு தாக்கும் கருவியகப் பயன்படுத்தும் அனுபவங்களையும் அறிந்து வருகிறேன். அது பெண்ணுடன் ஒப்பிட முடியாதளவு சிறிய அளவென்றாலும் அவையும் நிகழ்கின்றன.

ஆண் மனதின் உள்ளுறையும் வக்கிரங்கள் எப்படி நம்மில் வளர்கின்றன. அதற்கான பின்னணிகள் எவை என்பதைத் தீவிரமாக இலக்கியத்திலும் பண்பாட்டிலும் உரையாடப்பட வேண்டும். காமம் எத்தகையதொன்றாக ஆண்களுக்குள் வளர்கிறது. ஏன் அவர்களது கற்பனைகள் அதீதமான வன்முறையை தனக்குள் கொண்டியங்குகிறது. அந்த உளவியலை ஒரு ஆணாக எனக்கும் விளங்கிக் கொள்ளக் கடினமாகவே இருக்கிறது. அதற்கு தீர்வு என்று எதை முன்வைப்பது? அந்தக் கேள்விகளை விரிவாக்க, ஓர் எதிர்நிலைப் பிரதியின் மூலம் உரையாடலை உருவாக்கவே அதை வெளியிட்டேன். அதை எழுதியது எனது தனிப்பட்ட ஆறுதலுக்காக என்றாலும் அதை வெளியிட்டது இதை உரையாடியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தால். இது தொடர்பிலான உங்கள் கருத்துக்களை kirishanth300@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.

TAGS
Share This