ஒளி வற்றிய சுடரில் எஞ்சும் நிறங்கள்: 02
90 களில் வெளியான நட்சத்திரன் செவ்விந்தியனின் ‘வசந்தம் 91’, பா. அகிலனின் ‘பதுங்குகுழி நாட்கள்’, அஸ்வகோஷின் ‘வனத்தின் அழைப்பு’ ஆகிய கவிதைத் தொகுப்புகள், ஈழத்தமிழ் கவிதை மொழியில் முக்கியமான கவித்துவ அடைவுகளைக் கொண்டவை.
வனத்தின் அழைப்புத் தொகுதியில் போருக்குச் செல்பவர்கள் பற்றிய மதிப்பும் போர் உண்டாக்கியிருக்கும் அவநம்பிக்கையும் ஒருங்கே திரள்கின்றது. கவிதைகளில் தொல்கதைகளின் மீளுருவாக்கம், நெடுங் கவிதைகளில் கதைத்தன்மை கொண்ட தத்துவார்த்த விசாரணைகள் ஆழங் கொண்டன.
போராளிகளின் நினைவுகள் உக்கிரமானவை. இரத்தமும் கண்ணீருமாகத் தமது மக்களின் விடுதலை என்ற கனவுடன் சென்றவர்களின் இழப்பென்பது சக மனிதர்களின் துயருக்கென தன்னுயிரை ஈதலெனும் சமூக அறத்தின் நீட்சி. போராளிகள் மக்களின் அறத்திலிருந்து எழுபவர்கள். அவர்களை வழிநடத்திய வழிமுறைகளின் குற்றங்களை வித்துடல்களில் ஈக்கள் அண்டாதபடி பார்த்துக் கொள்வதைப் போல அணுக வேண்டியவை. அஸ்வகோஷ் எழுதிய இக் கவிதை அத்தகையவர்களுக்கான அஞ்சலி.
மலரினைச் சாத்துமென்!
இரத்தமூறிடும் கால இடுக்கில்
புதைக்கப்பட்ட நண்பரின் மேலொரு மலரினைச் சாத்துமென்
மரண ஊற்றில் கரைந்தவர் முகங்களைத் தேடுதல் அபத்தமேயாயினும்
உயிர்களை இழந்தும்
ஆழப்பாயும் வேர்களின் வீர்யம்
மண் தான் அறியும்
இரைச்சலை மேவி இசைக்கும் நாளில்
எம் நண்பர்கள் இசைத்த கீதங்களாலொரு
மலரினைச் சாத்துமென்!
இன்னொரு கவிதையில், போரிற்குப் போன தன் புதல்வனை இழந்த தந்தையின் துயரை இருள் சூழ்ந்த அந்த மனநிலையை, போராட்டத்தின் மேலான விமர்சனங்கள் அறியாது, அப்பாவித் தனமாக அதனுள் நுழையும் இளம் போராளிகளின் நம்பிக்கையை, அதன் திரும்ப முடியாத தொலைவை எழுதினார். அத்தகைய நினைவுகளுக்கான மொழி சிதழூறுவது.
இருள்
சிதழூறும் காயங்களிடையே நானிருந்தேன்
சிதைந்து போன மைந்தரின் வேதனை ஒலங்கள் என்னை உறுத்தின
நான் வேதனையுற்றேன்
தொலைதுாரங்களில்
மறைந்து போகும் மைந்தரின் முகங்களை
நான் அறியேன்
அந்த முகங்களில்
அறிவு இருந்ததா அழகு இருந்ததா என்று நான் கேட்கப் போவதில்லை
தியாகங்கள் மட்டுமே தெரிந்த மைந்தரின் நினைவுகளை
பழிக்க என்னால் இயலவில்லை கிளர்ந்த வேகத்தில்
கிடைத்த பஸ்ஸிலேறிய இளந்தளிர்கள்
காற்றின் திசையில் அள்ளப்பட்டவர் மேலொரு கேள்வியை எறிய என்னால் இயலவில்லை
நேற்றுங் கூட இருவர்
மாண்டு போயினர்
நான் விபரமாகக் கேட்கவில்லை
கருணையுள்ளோரே கேட்டீரோ காகங்கள் கரைகின்றன
சேவல் கூவுகின்றது
காற்றில் மரங்கள் அசைகின்றன மரணங்கள் நிகழ்கின்றன
இன்று பிறந்த பூதம்
நாளைய கனவைத்தின்று தீர்த்தது காவிய இருள் கவிந்திருந்தது
காலந் தான் உருண்டது
கனிகளைப் பறிக்க தொலைதுாரம் போனவரைக் காணவில்லை தொலைதுாரம் போவதற்கு கனவழிகள் சொன்னவரைக் காணவில்லை
ஒளியைத் தேடும்
என் உணர்வுகளுக்கும் பதிலில்லை.2.
என்னை ஒறுத்து ஒறுத்து
அழித்துக் கொள்கையில்
என் மகன் போயிருந்தான்
தன்னை அர்த்தப்படுத்தவென்று
என் கனவுகள் வீழவும்
மண்ணின் குரலிற்கு
செவியீந்து போயிருந்தான்
இயலாது
உன் பிரிவைத்தாங்க என்னால் இயலாது
இல்லை
அவன் என்னிடம் இல்லை
மண்ணின் குரலிற்கு
பதிலுடன் போயிருந்தான்
என்னை உறுத்தும்
நினைவுகளைச் சொல்வேன்
நொந்து போன என் நாட்களின் வேதனைச் சுமையினைச் சொல்வேன்
சிதழூறும் காயங்கள் பேசும் மொழியினில்
என்னைப் பேசவிடுங்கள்
இறுதியாக
என்னிடம் வந்திருந்தான்
அவனது தேகம் குளிர்ந்திருந்தது இரத்த முறிஞ்ச நுளம்புகள் வரவில்லை
ஈக்களை அண்ட
நான் விடவில்லை.
*
அரசின் போர் வன்முறைகள் அக்கால இளைஞர்களை, இராணுவத்தை எதிர்த்து அழித்து தம் மக்களுக்கான விடுதலையை அடைய ஒரே வழியென நம்பிக்கை கொள்ள வைத்தது. அவர்கள் மேல் பழி சொல்ல முடியாமல் தயங்கும் கவிஞனின் குரல் அவர்களையிட்டு ஓலம் கொள்கிறது.
அதே நேரம், இவர்களை இப்படி அலையவிட்டு அதற்கான காரணங்களை உருவாக்கியவர்களை விமர்சிக்கிறது. கொலைச் சூத்திரங்களைக் கற்றுத் தேர்ந்த வீரர்கள், மனதை இழந்ததன் காவியத் துக்கத்தை விரித்து எழுதினார் அஸ்வகோஷ்.
வனத்தின் அழைப்பு
பகுதி 1- அலைகள்
கடலின் அழைப்பு
எப்படி இருந்தது நண்ப
உண்டதும் உறங்குவதுமாய் உன்னுலகினை வரைந்தாய்
கடற்கரையில் கையிணைத்திருந்த கடைசி மாலையில் அடைந்த பரவசம் அன்று தத்துவம் தெரிந்திருந்தது அனுபவம் இல்லை
கடல் இரைந்து கொண்டிருந்த பெளர்ணமி தினம்
இன்று வரை
அந்தக் கரையில் நானும் இல்லை உன்னைப் போல் கடலிலும் இல்லை அலைகளில்…
ரசித்த நிலவும் முணுமுணுத்த பழைய பாடலின்
ஓரிரு வரிகளுமாய்
ஓர் அரசனைப் போல்
இரவுகளை வெற்றி கொண்டேன் அடிமையடிமை யென்றார்த்தது பகல்
அந்தக் கோடை
கூட வந்தவர்களைக் கொண்டு போன புயல்
அந்தப் பேரழிவு நான்
அந்த மலையும் தனித்தழும் தீவும் நான்
நான் அந்த வேதனை
ஏறியேறிக் களைத்தோய்ந்த பின்னும் சாம்பல் மேட்டில் கிளம்பும்
புழுதிகள் பற்றி ஏராளம்
கவிதைகள் கேட்ட பின்னும்
ஏனிதை எழுதினேன்
வெளிவரமுடியா வரிகளை எழுதுவது எனக்குச் சிரமமே
எங்கோ குழலொன்று தனித்தொலிக்கின்றது
பச்சைப் பசேல் என்ற அந்தக்காலம் மலர்களைக் காவுகொண்ட இளவேனில்
போர்
மீளவும் மீளவும் போர்
போரின் அனர்த்தம் என்னுள் விளைந்தது
நான் மாறினேன்
துருவத்திலிருந்து
இன்னோர் துருவத்திற்கு இடம் மாறினேன்.
திருப்திதரா உண்மையாய் தனிமை இகழப்பட்டதும் வெறுக்கப்பட்டதும் உண்மையாய் ஆனது
எதிர்பார்த்தது போலவே
இரத்தக் கொதிப்பு அடங்கி இதயத்தில் தங்கி விட்டது
பின் இறப்பு
எல்லோருக்கும் வருவது போல்
வரும் வரை காத்திருப்பு
அள்ளப்படுவதற்கு முன்
எளிமையான ஒரு பாதை
பிரியமான வழித்துணை
முடியுமா
எங்கிருந்து தொடங்குவது நண்ப?
பகுதி 2 – தவம்
அ.
புல் பூண்டுகள் பூச்சி புழுக்கள்
உடலில் படர்ந்திருக்க சாம்பல் மேட்டில் கரம் கூப்பி
காலுயர்த்தி
அகோர தவத்தில் உறைந்து போனான்
வில்லோய்ந்து கிடந்தது
நெஞ்சுக் குழிக்குள் பொங்கிய அலைகள்
போர் ஆரம்பமானது
இதயத்தின் ஒவ்வொரு முடுக்கிலும்
சுடலைப் பொடி பூசி வனங்களில் அலையும் கோர முனிகள்
வில்லும் அம்புமாய் புறப்பட்ட நினைவு வருவது போர் என்பது போல் அவனின் நினைவு
நதியைப் போல் வந்தது
புயலாய்ப் போனது
எதை எடுத்துச் சென்றது
எதைத்தான் விட்டுச் சென்றது
வானில் எப்போதாவது
பறந்து போமோர் வெண்ணிறக் கூட்டம்
திடீரெனத் தாக்கும் கொடூரக் குளிர்
அன்பிற்கும் குரலில்லை அவலத்திற்கும் அவள் செவி தரவில்லை
வானம் பூமி இரண்டாய் பிளந்த இரவில்
அவன் சிதறிக் கிடந்தான்.
ஆ.
எழுந்து போய்
விண்மீன்கள் விடிவெள்ளி
என்றவாறு தென்றலில் சுகித்திரு மரணதூதனின்
கதையினை எழுதுவேன்
அந்த வாசலில் அவன் நின்றான் மரணத்தின் சிரிப்பு
உயிர்ப்பற்ற செய்தியை ஈய்ந்தவன் சிரித்தான்
எப்படிச் சிரிக்காதிருக்க முடியும் முடிவற்ற மரணம் அவனை உறைக்கவில்லை
அதிலவனிற்குத் திருப்தியில்லை அழுவானென்றும் நம்பமுடியவில்லை இனியும் ஏதேனும்
பகிடி விட்டுச் சிரித்திடமுடியும்
என்ற நம்பிக்கையும் பொய்த்து விட்டது
அவன் அறிவான்
கண்முன் நடந்ததை விட
காணாமல் போனது
எதைவிட்டுச் செல்லும் என்பதை.
இ.
முகில் வரைந்த சிகரங்களில் விழுந்தடித்தேற மனிதர்கள் இல்லை மண்ணின் தழும்பில்
கால் பதித்து மனிதர் போயினர்
வனத்தின் நெடும்பரப்பில் உதித்தெழுந்த சிறுகுடில்கள்
உக்கிப் போயின
வானம் பார்த்த பூமி
குனிந்து நிற்க
பெருநகர் வீதியில்
தரிசு நிலங்கள் விதைக்கப்பட்டன
எல்லைக்கப்பால் வெகு தொலைவிலும்
எச்சலனமும் இல்லை ஓடிப்போனவரின் ஒரு முகமும் இல்லை
அறைகூவல் கோஷங்கள்
நிறைந்த பழங்காலக் கூட்டங்கள் போல்
அவர்களின் நினைவு
விரக்தியில் தோயும் சொற்களுடன் ஒப்புவமை மிக்க நியாயங்கள்
சுருதி சேர ஏலாது
பேராறுகள் பெரும் கடல்கள் தாண்டிப்போன நண்பர்களே பேசுங்கள்
ஒரு முறையாவது கடலுடன் பேசுங்கள்.
ஈ.
முன்னர்
‘தக்கோன் தக்கோன்’
எனவுரைத்த வானம் மீண்டும் கூடிற்று கொலைசூத்திரம் நடந்தேறிய களம் தசைநார்களின் அதிர்விலெழும் போர்
பிதாமகர் தேர்த்தட்டின் கீழே
பூமியில் புரண்டார்
பாட்டன் சாய்ந்த சேதியில் களம் திரண்டது
அம்பணையில் முது பெரு
வீரர் கிடந்தார்
உடலில் குத்திய அலியின் அம்புகளை வெறுப்புடன் இழுத்தெறிந்தார் இரத்தம் ஓடியது
தப்பிக்க முடியா மாயாலோகத்தின் வசனங்கள் அவரிற்குக் கேட்டன
வீரன் தலை குனிந்து நின்றான் ‘பிதாமகரே
நான் வெறும் கருவி கடமையைச் செய்தேன் என்னை மன்னியும்’
‘மரணத்திற்குக் காத்திருக்கும்
எந்தன் சொற்கள் உண்மையே வனத்தின் அழைப்பைத் தாண்டி எந்தன் மரணம் எட்டுமா கொலைச்சூத்திரங்களை மட்டும் உனக்குக் கற்பித்தவர்களிடம் சொல் விண்டுரைக்க முடியா
மரணத்தின் விலையை இனியும் தீர்மானிக்க வேண்டாம்
வனங்களின் கோரக்குரலுன் தசைநார்களில் அதிர்கிறது
மகனே ஆயுதத்துடன் நீ
நன்றாகவே பேசினாய்
மனதையேன் இழந்து போனாய்
மீளமுடியா தளைகளை மீறி உயிர்நிறுத்தி குரல் தந்தவன் முன் சொல்லிழந்தவன் தலை குனிந்தான் ‘மகனே! தாகமாய் உள்ளது’
வில் கோர்த்து புது ஊற்று நீர் ஈய்ந்தான்
முப்பாட்டன்
ஆவி குளிர்ந்தது
வரலாறு
அம்பணையில் துஞ்சியது
வீரம் வழிநடந்தது
உ.
மண்ணும் உக்கி
மாசுற்றுப் போன காற்றில்
எழும் அவலக் குரல்கள்
எனினும்
நினைவுகள் அழிவதில்லை
தன் கனவுகளை விரித்தவன் கதையினைக் காற்றும் அறியும்
வீரம் செறிந்த எத்தனை கதைகள் நம்மிடை எழுந்தன
நாட்களில் நம்பிக்கை கொண்டிருந்தோம்
மகிழ்ந்திருந்தோம் ரம்மி விளையாடினோம்
செவ்வானம் மேற்கே
சொற்ப நேரத்தில் மறைந்ததில் திருப்தியில்லை
அமைதியாய் சிந்தித்தோம் பொழுதுகள் ஒன்றாய்க் கழிந்த சொற்பகாலம்
மக்கள் ஊரைவிட்டுப்
போய்க் கொண்டிருந்தனர்
மரணதூதனின் ஊர்தி
காற்றில் மிதந்து வந்ததும்
மரண அழைப்பினை
நீ அமைதியாய் ஏற்றதும்
பின்னர் கேள்விப்பட்டோம்
பிற தேசங்களில் நிகழ்ந்தது போலவே
அவ்விரவிலும் அடுத்த இரவிலும் நடந்ததொன்றும் புதிதில்லை
அலையெறியும் கடலின் கரையில் மூவராய்த் தனித்திருந்த மாலையில் உன் உதடுகள் வெடித்து
மரணநிழல் கவிந்திருந்ததை நினைவு கூர்ந்தேன்
பின்கதவுகள் திறந்திருக்க
பாவம் நிறைந்த கனவுகளுடன் பேதை போல் தப்பிப் போயிருக்கலாம் விதியின் தத்துவங்களை
உரக்கப் படித்தபடி ஒடிப் போயிருக்கலாம்
இங்கேன்
உதிர்ந்து போனாய்?
ஊ.
தவத்தில் அமைந்தவன் உள்ளுணர்வுந்தக் கண்விழித்தான் ஏவப்பட்ட அம்பாய்ப் பாய்ந்த பன்றியின் உடலில் வீரனின் வில் பேசிற்று
இரைக்காய் இன்னோர் அம்பும் தைத்தது
இரைதேடி வேடனும் வந்தான்
போர் ஆரம்பமானது
தாயாதிகள் உறவுகள் விட்டுப் போயின
நீண்ட காலம் போல் தாயின் நினைவு வெறித்தோடிய நதியில் ஓய்ந்த கரங்கள்
எனினும் போர்
வெற்றுக்குரல்கள் ஓங்கி ஒலித்த பால்ய நாட்கள்
வேட்டை விதிகளை உரக்க
சொல்லி அலைந்த காடுகள் வெறித்துப் போன உறவுகள் திடத்தினைச் சிதைக்கும் நினைவுகள் எனினும் போர்
எத்தனை வீடுகள் சோகங்களாய் எஞ்சின
மறுக்கப்பட்ட நிலத்தில்
காதலுடன்
கால் புதைய நடக்கவெண்ணும் கனவு
கடந்த பாதையில் இருபுறமும் நம்பிக்கை தரும் எச்செய்தியும் இல்லை
போர் வெறியில் பெயரிழந்த சுவடுகள்
கனக்கும் இதயம் சுவரொட்டியாய் சிரிக்கும் மரணதூதர்
சலித்துச் சகித்த ஒளியிழந்த முகங்கள்
சபிக்கப்பட்டது போல்
அனைத்தையும் மறந்த மக்கள் ‘சலித்துப் போன தேசமே… ‘
கேவலாய் அவன் குரல்
எதை எதிர்ப்பது எதனுடன் இணங்குவது
அவனால் முடியவில்லை
தோற்றுப் போனான்
வேடனின் கால்கள்
மார்பில் அழுந்திக் கிடந்தன.
பகுதி 3: விடைபெறல்
அவனே இயற்றிக் கொண்ட
தத்வ தளங்களை உதறி
கீழே இறங்கியபோது
வரவேற்க எவரும் இல்லை ஜனத்திரளில் கலந்தான்
நேசித்த மனிதர்களை
சந்திக்க அவனிற்கு விருப்பம்
அவன் நினைவுகளை பத்திரப்படுத்தினான்
நன்னாரி வேர்களின் மயிர்க்கணுக்களில்
அவை பதிந்து போயின
மூலிகை தேடி மனிதர் வருமோர் காலத்தில் உயிர்ப்பதற்காய்
என்றுங் கூடவே இருக்கும் பரிசுத்தமான பாதி
மங்காமல் இருக்கிறது
ஓசையற்றுப் போன இரவின் கணங்கள்
குலுங்கும்
மீண்டும் மீண்டும் அதிர்ந்ததிர்ந்து குலுங்கும்
மழை சோவெனப் பொழிந்து பூமிபூத்திருக்கும் நாளை
நச்சுக் கால்களால் பூமி
கன்றிப் போவதற்கு முன்
அவன் புறப்படுவான்.
1993 இல் எழுதப்பட்ட இக் கவிதை இக் காயத்திற்கு மூலிகை தேடி வரும் தலைமுறைக்காக் காத்திருக்கிறது. இன்றைக்கு, முப்பத் வருடங்களுக்கு முன்னிருந்து, அதற்கும் முன்னிருந்து நீளும் மனநிலை இது. விடுதலையை அடைவதற்கான வழியை, ஒடுக்குமுறையை எதிர்கொள்வதற்கான பாதையை சிந்திக்கும் புதிய தலைமுறைகளை அகன்று பரந்து நோக்கச் செய்யும் கோரலிது. இந்த நோய்க்கு குணமாக்கல் தேவை.
*
போரில் மரிக்கும் உயிர்களின் வாழ்வும் அவர்களின் நம்பிக்கையும் நித்தியமாய் ஒளிரும் கண்களென வானில் நிலைத்திருக்க வீரச்சாவடைந்த ஒரு பெண் போராளியைப் பற்றிய இக் கவிதை, எதிரும் புதிருமான சிக்கலான இழைகளால் பின்னப்பட்ட வரலாற்றின் முள்ளில் செருகப்பட்ட சிறு மொட்டுகளுக்கான துயர்.
காலத்துயர்
போகிற போக்கில்
விளம்பர வரிகளுடன் இனங்கண்டு விட்டு
சம்பந்தமில்லாதது போல்
போகப் போகிற மனிதரை எண்ணி சஞ்சலப்படுகிறேன்
முகமூடிகளின் நகரத் தெருக்களில் அவளைப் பற்றி
பளிச்சிடும் வரியை
இனியும் எழுதாமலிருக்க முடியாது
சும்மா கொட்டிவிட்டுப் போகிற வார்த்தையைப் போலவா… ஆன்மாவைத் துளைத்தெடுக்கிற சேதிகளை விதைத்துப் போனவள் நம்ப முடியா சாகஸங்களை
நிகழ்த்திக் காட்டியவள்
செவ்வான விளிம்பெங்கும்
பொங்கும் கடலில்
கடலடியில் திரிந்தவள்
கடலில் படைக்கப்பட்டதும்
கரையில் மீட்கப்பட்டதும்
காதோடு காதாய் காற்று வழி போனது
மீளவும் ஆசீர்வதிக்கப்பட்ட மரணத்தைத் தேடிப் போனாள் பேராறாய் கடலில் காவியமானாள்
வரலாற்று முள்ளில்
செருகப்பட்ட சிறு மொட்டே நீயெண்ணாக் காலத்திற்கும்
உன் ஆன்மா துடிக்கப் போகின்றது
பிதிர்களைக் கூவியழைத்து சாம்பலை கடலில் கரைத்த
பிதாவே கூறும்
சகோதரரே நீர் கூறும்
அவள் தான் எடுத்த மண்ணை
கடலில் ஏன் கரைத்தாள்?
1996 இல் எழுதப்பட்ட இக் கவிதை போரின் சாகசங்களை முன்வைக்கவில்லை. அதன் பின்னாலுள்ள நியாயங்களை முன் வைத்து அப்போராளியைப் போரின் திரைச்சீலையிலிருந்து அவர்களைப் பிடுங்கி விடுவிக்கிறது. வரலாற்றின் முள்ளில் செருகப்பட்ட சிறு மொட்டே என்று அப்போராளியை அவர் எண்ணாக் காலத்திற்கும் உன் ஆன்மாவைத் துடிக்க வைப்பேன் என்று சொல்லுள் பத்திரப்படுத்துகிறது.