ஒளி வற்றிய சுடரில் எஞ்சும் நிறங்கள்: 03

ஒளி வற்றிய சுடரில் எஞ்சும் நிறங்கள்: 03

ஆயுத வழி விடுதலைப்போரில் ஆர்வங் கொண்டெழுந்தோர் பெருமளவு இளைஞர்களே. ஆயுத வழியின் தொடக்க காலத்திலிருந்தே பாடசாலைக் கல்வியை இடையில் நிறுத்திக்கொண்டு பலர் விடுதலை இயக்கங்களில் இணைந்தனர். மிக இளம் வயதில் அவர்கள் கேட்டவற்றையும் அறிந்தவற்றையும் கொண்டு சிங்கள ராணுவத்தின் அடக்குமுறைகளை வெல்ல யுத்தமே வழியென்று நம்பினர். பேச்சு வார்த்தைகளில், கால இழுத்தடிப்புகளில் எல்லாம் அவர்களுக்கு விசனமிருந்தது. ஓர் அவசரம், துடிப்பு, வேகம்.

1985 இல் வெளிவந்த மரணத்துள் வாழ்வோம் என்ற கூட்டுத் தொகுப்பில் பாப்பாக்களின் பிரகடனம் என்ற பெயரில் குழந்தைகளால் வாசிக்கப்பட்ட கவிதை என்ற குறிப்புடன் வெளியாகிய கவிதை, குழந்தைகள் எப்படி யுத்தத்தை விரும்பத் தொடங்குகிறார்கள், ஆயுதங்களின் விருப்பம் தொற்றிக் கொள்ளும் காலம் ஆகியவை எப்படி ஆக்கியளிக்கப்பருகின்றன என்பதை விளங்கிக் கொள்ளும் தர்க்கங்கள் கொண்டது.

பாப்பாக்களின் பிரகடனம்

எங்களுக்காய்
எங்கள் எதிர்கால வாழ்வுக்காய்
பாதயாத்திரையில்
பங்கு கொண்ட
எங்கள்
பாச அண்ணாக்களே…!
அக்காக்களே…!

“பாதகம் செய்பவரைக் கண்டால் – நீ
பயங் கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா”
என்ற பாரதி பாடலை
பாடி மகிழும்
பாப்பாக்கள் நாங்கள்
20ம் நூற்றாண்டின்
புரட்சி யுகத்தில்
நடப்பதை…!
எம் பிஞ்சு மனதிலே
பதிய வைத்துள்ளோம்.
எத்தனை கொலைகள்…!
எத்தனை கொடுமைகள்…!!

ஓ…!
வெலிக்கடையின்
இருட் சிறைக்குள்ளே
பசித்த வயிற்றுடன்
பட்டினி கிடந்து
எங்களுக்காக
எங்கள் எதிர்கால வாழ்வுக்காக
இறப்பை எதிர்பார்த்து
காத்திருக்கும்
எங்கள்
ஆசை அண்ணாக்களே!

சிறையில்
உங்கள் நகங்கள் பிடுங்கப்படுவதை
வாய்க்குள் பாம்புகள்
திணிக்கப்படுவதை
கட்டி அடிப்பதை
சிறுநீர் பருக்குவதை
பக்கத்து வீட்டு மாமா
சொல்வதைக் கேட்டு
எங்கள் பிஞ்சுமனம்
வெஞ்சினம்
கொள்கிறது.

அன்று
உங்கள் அண்ணாவும்
அக்காவும்
அப்பாவும் அம்மாவும்
போராடியிருந்தால்
இன்று நீங்கள்
சித்திரவதைப்பட்டிருப்பீர்களா?

இன்றும் சில
அண்ணாக்கள், அப்பாக்கள்
அக்காக்கள், அம்மாக்கள்
எங்கள் வீடு
எங்கள் காணி
எங்கள் சொத்து
எங்கள் பிள்ளை
என
இடித்த புளியைப்போல்
இருக்கத்தான் செய்கிறார்கள்!
மற்றவாழ்வின் தியாகத்திலே
நல்வாழ்வு தேடும்
நாய்க் கூட்டங்கள்
சில
பறந்து சென்று
வெளிநாடுகளிலே
பார்வையாளர் வரிசையிலே.
ஓ…!
இவர்கள் எல்லாம்
எளிய சனியன்கள்;
எங்கள் எதிர்காலம் பற்றி
எள்ளளவும் சிந்திக்காத
முழியன்கள்.

ஆனாலும்
எங்களுக்காக
எங்கள்
ஆசை அண்ணாக்கள்
சிறையிலே
சித்திரவதைப்படுகிறார்கள்.
எங்கள்
பாச அண்ணாக்களும்
அக்காக்களும்
பாத யாத்திரையிலே.

ஓ…!!
எட்டு நாட்கள்
தொடர்ந்து நடக்கும்
எங்கள் அண்ணாக்களின்
கால்கள்
வலிக்கும் என்பதை
நாங்கள் அறிவோம்..

நல்லூருக்கு
நடந்து போனபோது
எங்கள் கால்களும்
வலித்ததுதானே…!

பக்கத்து வீட்டு
அம்மாக்களின்
பசபசப்பையும்
குசுகுசுப்பையும்
பொருட்படுத்தாமல்
பாதயாத்திரையிலே
தொடர்ந்து வரும்
எங்கள் அக்காக்களில்
எங்களுக்கு
சரியான ஆசை.

எங்கள் அன்பான
அக்காக்களே!
உங்கள்
கால்கள் வலிக்கிறதா?
அப்படியானால் சொல்லுங்கள்
எங்களுக்காக
நடந்து வீங்கிய
உங்கள் கால்களை
எங்கள்
பிஞ்சுக் கரங்களால்
தடவி விடுகிறோம்.

உங்கள்
களைப்பை எல்லாம்
போக்க
கட்டி அணைத்து
முத்தமழை
பொழிகின்றோம்.

ஓ…!!
எங்கள்
அன்புக்குரிய அண்ணாக்களே!
உங்களுக் கொன்று
தெரியுமா?
நாங்கள் எல்லாம்
இப்போ
அம்மா அப்பா விளையாட்டு
விளையாடுவதில்லை
ஆமியும் பொடியளும்
என்ற
புதிய விளையாட்டை
கண்டு பிடித்துள்ளோம்

எம்மை அடக்கும்
காடையருக்கு
எங்கள் அண்ணாக்கள்
தெருவினிலே
கண்ணிவெடி வைப்பதுபோல்
மணலுக்குள்
ஊமல் கொட்டையை
நாங்களும் தாட்டு வைத்து
எங்கள் நண்பர்களை
ஆமிக்காரர்போல்
ஓடவைத்து
ஊமல் கொட்டையை
வெடிக்கச் செய்வதுபோல்
பாசாங்கு செய்து
அந்த வெடியினிலே
ஆமிக்கு வரும்
எங்கள் நண்பர்கள்
சிக்கிச் சாவதுபோல்
விளையாடுவதைப் பார்த்து
மகிழ்ச்சி பொங்க
நாங்கள்
ஆர்ப்பரிக்கின்றோம்

பள்ளிக்கூடம்
விட்டதும்
நாங்கள்
பறந்தோடிவந்து
எங்கள் வீட்டு
கோடிக்குள்…!
வேப்ப மரத்திற்கும்
வெலிக்குமிடையிலே
கட்டப்பட்ட
கயிற்றிலே
பாய்ந்து! விழுந்து…!
தவழ்ந்து…! எழுந்து…!
‘பிஸிக்கல் ட்ரெயினிங்’
எடுக்கிறோம்.

ஓ…!
இந்த முறை
நல்லூரிலே பொம்மைகள்
எங்கள் கவனத்தை
திருப்பவில்லை;
முஸ்லிம் கடையிலே
தூங்கிய
துப்பாக்கிகளும்
போர் விமானங்களும்
காற்றாடிக் கப்பல்களுமே
எங்கள்
கவனத்தைக் கவர்ந்தன.

எங்கள்
சின்னத் தம்பிக்கும்
அப்பா
ஒரு துப்பாக்கி
வாங்கிக் கொடுத்திருக்கிறார்;
எங்கள் படலையிலே
எந்தநாள் பின்னேரமும்
அவன்…!
அந்த…!
துப்பாக்கியுடன்
‘சென்றி’க்கு நிற்கிறான்.

இப்போதெல்லாம்
விளையாட்டில்
அவனுக்கு
ஆர்வமில்லை;
தன் பிஞ்சுக் கரங்களிலே
துப்பாக்கி ஏந்தி
‘சென்றி’க்கு நிற்பதே
இன்று
அவனது விளையாட்டு.

இன்று
எங்கள் அண்ணாக்கள்
நடாத்தும் போர்
எங்களுக்கு
நல்வாழ்வு தேடித்
தரவில்லை யெனில்
உங்கள்
குரல்வளையை நெரித்த
அந்தக் கொடியவர்களுக்கு
எதிராக
நாளை
எங்கள் கரங்கள் உயரும்!
இதை நம்புங்கள்!!

(சிறீலங்கா வதைமுகாம்களில் சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்களை “விசாரணை செய் அல்லது விடுதலை செய்” என கோரி யாழ். பல்கலைக் கழகத்தில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்ட வேளை, 1985 செப். 26 முதல் ஒக்.3ம் திகதி வரை எட்டு நாட்கள் பாதயாத்திரையும் நிகழ்ந்தது. ஏழாம் நாளான ஒக்.2ம் திகதி பாதயாத்திரைக் குழு இருபாலைக்கு வந்த சமயம் கோப்பாய் விழிப்பு மன்றத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட வரவேற்பின்போது பல குழந்தைகள் குழுமி நிற்க ஒரு குழந்தையினால் வாசிக்கப்பட்ட கவிதை இது. இத் தொகுதிக்காக, தலைப்பு மரணத்தில் வாழ்வோம் தொகுப்பாசிரியர்களால் இடப்பட்டது)

குழந்தைகளின் கைகளில் கொடுக்கப்பட்டு அவர்களின் கனவுகளில் வளர்க்கப்படும் ஆயுதம் பற்றி ரொமாண்டிசைஸ் செய்யப்பட்ட கவிதை இது. சிறுவர்கள் கொஞ்சம் வளர்ந்து, அவர்களது ஆயுதங்கள் எதிரிகளை மட்டுமின்றி நண்பர்களையும் நோக்கித் திரும்பியது தான் வரலாறு. அதை ஒரு அடிப்படையான தேவை. சிறுவர்கள் மேல் ராணுவம் வன்முறையைச் செலுத்தும் போது அவர்கள் அதை எதிர் கொள்ளும் வழியது என்று ஒருசாரரின் வாதம் வைக்கப்பட்டு வந்த காலமது. ஆரம்ப கால இயக்கங்களிலிருந்து இந்தப் போக்கு இருந்து வந்தது.

*

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம், நீங்கள் சிறுவர்களை ஆட்சேர்ப்புச் செய்வதாக மனித உரிமைகள் சார் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றனவே. இது பற்றிய உங்களின் கருத்து என்னவென ஒரு நேர்காணலில் கேட்கப்படுகிறது.

“சிறுவர் போராளிகளைப் பொறுத்த வரைக்கும் இப்போதுள்ள காலகட்டத்தில் யுனிசெப்புக்கு கொடுத்த சில வாக்குறுதிகளின் படி, இப்ப நாங்கள் 18 வயதும் அதற்கு மேற்பட்டவர்களையும் தான் சேர்ப்பது என்பதைத் தான் வழமையாகக் கொண்டிருக்கிறம்.
அதேவேளை ஆரம்ப காலகட்டத்தில் சில சிறுவர் போராளிகள் எம்மில் இணைந்தது உண்மை தான். அது கூட அவர்களின் அடக்குமுறை காரணமாக, அதாவது அவையின்ர அம்மாவைக் கொன்று அப்பாவைக் கொன்று பாதிக்கப்பட்ட போராளிகள் வந்து போராடியிருக்கிறார்கள். (அரசின்) அவர்களின் அடக்குமுறைகள் உச்சம் பெற்ற வேளைகளில் எல்லாம் அவர்கள் வந்து இணைந்தனர்.
இப்ப இந்த சிறுவர்களுக்காக வந்து கதைக்கிற அமைப்புகள், கொக்கொட்டிச்சோலையில் கொண்டே மக்களைப் படுகொலை செய்யும் போது அங்கே எவ்வளவு சிறுவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் கணக்கில எடுக்க மாட்டினம்.

அதே போல இங்கே சிறுவர்கள் ஒழுங்கான உணவில்லாமல் உடையில்லாமல் கல்வியில்லாமல் திரியினம் அதைப் பற்றி அக்கறை எடுக்க மாட்டினம்.
இந்தக் குற்றச்சாட்டு அப்படியில்லை. ஒரு குற்றச் சாட்டும் இல்லையென்பதற்காக, ஏதாவது தேட வேணுமெண்டதற்காக, உருவாக்கப்பட்ட குற்றச்சாட்டாகத் தான் இதை நான் கருதிறன்.


ஆனால் இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு கூடிய அளவு இதைத்( சிறுவர் போராளிகளை) தவிர்த்து வருகிறம். அப்படியிருந்தும் சில சிறுவர்களைப் பொறுத்த வரையும் 17 வயதெண்டாலும் 18 வயதெண்டு சொல்லிப்போட்டு வந்து அமைப்பில சேர்ந்து விடுவார்கள். பிறகு கண்டுபிடிச்சாத் தான் நாங்கள் கொண்டே வீட்ட விடுறது. அப்பிடியான வேலைகள் இப்பவும் நடந்து கொண்டு தானிருக்கு. 16 வயதில கொஞ்சம் தோற்றமுள்ளவர் என்ன செய்வார், தனக்கு 18 எண்டு போட்டு வருவார். அது மட்டுமில்லை. வீட்டு அட்ரசையும் பொய்யாக் குடுத்துவிடுவார். அப்பிடியான நிலமைகள் இங்க இருக்கு. ஆனால் கூடியவரை நாங்கள் இதைத் தவிர்த்துக் கொண்டு வாறம். இப்ப கூட 84 பேரை அந்த வயதில வீட்ட அனுப்பியிருக்கிறம். ஆனால் தொடர்ந்து அந்த வயதில வரத் தான் பார்ப்பார்கள். ஏனெண்டா அதுதான் அந்த வயது, அவர்களுக்குரிய அந்த இயக்கத்துக்குள்ள வாற.


இப்ப நாங்கள் 18 இல இறுக்கமா இருக்கிறம்”.

*

ஆயுதம் தாங்கிய சிறுவர்கள் எவ்விதம் வன்முறைக்குப் பழக்கப்படுகிறார்கள், விடுதலை என்பது அமைப்பின் மீதான விசுவாசமாக எவ்விதம் ஆகியது என்பதெல்லாம் பல்வேறு வரிகளால் சுட்டப்பட்டிருக்கிறது. சேரனின் கவிதை குழந்தைகளென நாம் கருதிய சிறுவர்கள் எவ்விதம் அச்சமூட்டும் முகங்களை அடைந்தார்கள் என்பதை அழுத்தமாகக் கேட்கின்றது.

குழந்தைகள்

குழந்தைகளை யார் உருவாக்குகிறார்கள்
என்று நான் கேட்டேன்

திறந்து வைத்த யன்னலூடாகச் சலசலத்தது
நானல்ல ; அவர்களின் குரலுக்குச்
சங்கீத நரம்புகளைத் தருவதே என் வேலை
என்றது காற்று

அவர்களுடைய கண்களுக்கு
ஆழமான நிறங்களைத் தருகிறேன் நான்
என்றது ஒளி

அவர்களுடைய பிஞ்சுப் பாதங்களுக்கு
ஒரு புன்னகையைத் தருகிறேன் நான்
என்றது செவ்வலரிப் பூ

அவர்களுடைய இதயத்தின் சுவர்களை
காதலின் இழைகளால் நெய்கிறேன்
என்றது கடல்

அவர்களுடைய சிரிப்புக்கு
மந்திர வலிமையைச் சேர்க்கிறேன்
என்றன காடுகள்

அப்படியானால்
அவர்களுடைய கைகளில் துப்பாக்கிகளையும்
கால்களுக்கு ராணுவச் சப்பாத்துகளையும்
இடுப்பில் வெடிகுண்டுகளையும்
கண்களில் வெறுப்பையும்
தந்தது யார் என்று கேட்டேன்

காற்றும் கடலும் உறைந்தன ;
வெளியில்
உலர்ந்து நொறுங்கிற்று
கண்ணாடித் துண்டுகளாக ஒளி.

ஒரு மின்னல் வெட்டில்
எரிய ஆரம்பித்தன பூக்களும் காடுகளும்
எல்லாப் பறவைகளும்
கூட்டமாகப் பறந்து சென்று
அத்தீயுள் விழுந்தன.

குழந்தைகள்
எங்களுடைய குழந்தைகள்.

*

சிவரமணியின் இக் கவிதை இக்காலகட்டத்தின் மகத்தான ஆக்கங்களில் ஒன்று. சிறுவர்களை யுத்தகாலம் எவ்வாறு உளமாற்றம் செய்கின்றது. இராணுவம் எப்படி அவர்களின் அன்றாடத்தை உருச்சிதைக்கிறது. மேலும் நண்பர்களை எதிரி என்று எண்ணி எவ்வாறு போரைக் கற்பனை செய்கிறார்கள் என்பதையும் இக் கவிதை ஊடும் பாவுமென உளத்தை எழுதுகிறது.

யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்

யுத்தகால
இரவொன்றின் நெருக்குதல்
எங்கள் குழந்தைகளை
வளர்ந்தவர்களாக்கிவிடும்.

ஒரு சிறிய குருவியினுடையதைப் போன்ற
அவர்களின் அழகிய காலையின்
பாதைகளின் குறுக்காய்
வீசப்படும் ஒவ்வொரு குருதிதோய்ந்த
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த
அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற்சுவர்களும்
காரணமாய்,
எங்களுடைய சிறுவர்கள்
சிறுவர்களாயில்லாது போயினர்.
நட்சத்திரம் நிறைந்த இரவில்
அதன் அமைதியை உடைத்து வெடித்த
ஒரு தனித்த துப்பாக்கிச் சன்னத்தின் ஓசை
எல்லாக் குழந்தைக் கதைகளினதும் அர்த்தத்தை
இல்லா தொழித்தது.

எஞ்சிய சிறிய பகலிலோ
ஊமங் கொட்டையில் தேர் செய்வதையும்
கிளித்தட்டு மறிப்பதையும்
அவர்கள் மறந்து போனார்கள்.

அதன் பின்னர்
படலையை நேரத்துடன் சாத்திக்கொள்ளவும்
நாயின் வித்தியாசமான குரைப்பை இனம் காணவும்
கேள்வி கேட்காதிருக்கவும்
மெளனமாயிருக்கவும்
மந்தைகள் போல எல்லாவற்றையும்
பழகிக் கொண்டனர்.

தும்பியின் இறக்கையைப் பிய்த்து எறிவது
தடியையும் பொல்லையும் துப்பாக்கியாக்கி
எதிரியாய் நினைத்து நண்பனைக் கொல்வதும்
எமது சிறுவரின் விளையாட்டானது.

யுத்தகால இரவுகளின் நெருக்குதலில்
எங்கள் குழந்தைகள்
“வளர்ந்தவர்” ஆயினர்.

(1989)

*

சிறுவர்கள் போராட்டத்திற்குள் நுழைவது எளிது. அவர்கள் வயதில் சாகச உணர்வு மிகுந்திருக்கும். ஆனால் ஆயுத வழி மூலமான போர்கள் உருவாக்கும் மனநிலைகள் ஆபத்தானவை. யுத்ததிற்குள் அவர்கள் நுழையலாம். அதிலிருந்து மீள்வது எளிதல்ல.

ஜெயமோகன் 1997 இல் எழுதிய பத்மவியூகம் என்ற சிறுகதை இந்த அடிப்படையான கேள்வியை எழுப்புகிறது.

மகாபாரதப் போர் முடிவடைந்து பாண்டவர்கள் வென்ற பின்னர், போரில் இறந்தவர்களின் தாய்களும், மனைவியரும் பிள்ளைகளும் அழும் ஓலம் எழுந்து பிணங்கள் குவிந்திருக்கும் வெளியாக குருஷ்சேஷ்திரமும் நாடும் ஆகியது. இறந்தவர்களுக்குத் தர்ப்பணம் செய்யும் நேரம், தனது மகன் அபிமன்யுவை இழந்த புத்திர சோகத்திலிருக்கும் சுபத்திரை. தனது அண்ணன் கிருஷ்ணன், அபிமன்யு கர்ப்பத்திலிருந்த போது, பத்மவியூகத்திற்குள் நுழையும் வழியைச் சொன்னவர். அதிலிருந்து வெளியேறும் வழியைச் சொல்லவில்லையென்ற சினத்துடன் கிருஷ்ணனை எதிர் கொள்கிறாள்.

என் குழந்தை எப்படி இறந்தான்?
அவன் என் கருவில் இருந்தபோது பத்மவியூகத்தில் நுழையும் வழியை இவர் கற்றுத் தந்தார். வெளியேறும் வழியைக் கூறாமலேயே விட்டுவிட்டார். எங்கும் எதிலும் முட்டி மோதி நுழைபவனாக, வெளியேறும் வழி தெரியாதவனாக, அவன் வளர்ந்தான். ஏன் என் குழந்தைக்கு அவன் பிறந்து வளர்ந்து களம் காணும் தினம் வரை இவர் வெளியேறும் வழியை சொல்லித் தரவில்லை? சதி. வேறு என்ன? இவருக்கு பந்தமில்லை. பாசமில்லை. தர்மம் என அவர் நம்பும் ஒன்றை நிறைவேற்றுவது தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை.”

வியாசர், அவளுடைய கெஞ்சுதலுக்கு இரங்கி அபிமன்யுவின் அடுத்த பிறவியைக் காட்ட ஒரு முனிவரை அழைக்கிறார். அப்போது அப் பத்மவியூகத்திலிருந்து வெளியேற வழியைச் சொல்ல விரும்புகிறாள். ஆனால் சில கணங்களே திறந்திருக்கும் தாமரை மொட்டொன்றினுள் உள்ள இரண்டு புழுக்களைக் காட்டி, இது தான் உன் மகன், கர்ப்ப நிலைக்குச் செல்ல இருக்கிறான். நீ சொல்ல வேண்டியதை உடனே சொல் என்கிறார். அவள் தாயல்லவா, என் மகனே என்று அழைத்து என்னைத் தெரிகிறதா என்று சொல்ல ஆரம்பித்து, அவனுடன் இருக்கும் மற்றவர் யார் என்று கேட்கிறாள். அவன் அடுத்த பிறவியில் இரட்டையராகப் பிறக்க இருக்கிறான். அது கோசல நாட்டு மன்னன் என்று சொல்கிறார். அது அபிமன்யுவால் கொல்லப்பட்ட எதிரி மன்னன். அவர்கள் இருவருக்கும் இடையே மாற்ற முடியாத ஓர் உறவு பிறவிகள்தோறும் தொடர்கிறது. அதன் காரணத்தை யாரும் அறிய முடியாது. நீ உன் குழந்தையிடம் சொல்ல வேண்டியதை சொல்லிவிடு என்கிறார் முனிவர். கலங்கிய சுபத்திரை மகனே உன்னருகில் இருப்பவன் உன் எதிரி என்கிறாள். முனிவர் அதட்டினார். நீ சொல்ல வேண்டியதைச் சொல் என்கிறார். அவள் பத்ம வியூகம் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கும் வேளையில், தாமரை கூம்பிவிடுகிறது. அவள் அழுதபடி முனிவரின் காலைப் பிடிக்க, அவர் உதறி விட்டு நகர்ந்தார்.

அவள் அண்ணனைப் பார்த்தாள், என் குழந்தையின் விதி என்னவாகும் என்று கேட்டாள், மழையின் சத்தத்தில் மங்கலாக, “தெரியவில்லை. அதன் தொடக்கம் மட்டும் இன்று தெரிந்தது என்று” ஒலித்தது கிருஷ்ணனின் குரல். எப்படி? என்று கேட்டபடி அவள் நிற்க, பதில் சொல்லாமல் அடர்ந்த மழையின் திரைக்குள் கிருஷ்ணன் சென்று மறைவதாகக் கதை முடியும்.

எப்படி?

இந்த யுத்தத்திற்குள் சிறுவர்களாகக் காடேகியவர்கள் அதன் கொடும் வியூகங்களிலிருந்து எப்படி வெளியேற முடியும்? அவர்கள் மனதிலிருந்து அந்த நினைவுகள் வெளியேற வழியுண்டா?

TAGS
Share This