பிரியத்துக்குரிய பெண்ணுக்கு: கடிதம் 03

பிரியத்துக்குரிய பெண்ணுக்கு: கடிதம் 03

பிரியத்துக்குரிய கிரிக்கு,

அகச் சிக்கலை வழமைக்கு மாறாக, வாசிக்க நினைக்கும் வாசகருக்கு கொஞ்சம் விளங்கும் படியும் எழுதியிருப்பது குறித்து – இது உரையாடலுக்கான களங்களை அமைத்து தருமென்பதில் நம்பிக்கை கொள்கிறேன்.

நீங்கள் எழுதியிருப்பதை ஒரு பொதுவெளியில் தனியே வாசிக்கும் சந்தர்ப்பம் அமைந்தது. வாசித்தவுடன் அதனை நான் புரிந்துகொண்ட விதம் உடனடியாக எனக்கு எந்த உணர்ச்சியையும் தரவில்லை. ஆனால் தொடர்ச்சியான அந்த ஆண் குரலின் சொற்கள் சமகாலத்தின் எல்லா நாவுக்குமான என் குற்ற உணர்ச்சியாக நீண்டிருந்தது. இது தான் காதல், இப்படித்தானே காதலிக்கிறோம் என்று என்னால் அதை பொதுவெளியில் பகிர்ந்துகொள்ள முடிகிறது என்றால் எவ்வளவு பெரிய அகச்சிக்கலை லாவகமாக கடந்து செல்லும் உத்தியை பயன்படுத்துகிறோம். அண்மைக்காலத்தில் கேட்கும்/ பகிரப்படும் உறவுநிலை சார்த்த வன்முறை சம்வங்கள் எல்லாமே ஒரு காலத்தில் அதீத காதலாயிருந்ததை நான் அறிந்திருக்கிறேன். தெரிந்த தனிப்பட்ட கதைகளுக்கு அப்பால், பொசெசிவ்னஸ் காதலின் தீவிரம் மிக்க positive கூறாக மாறியிருப்பதையும் அவதானிக்கிறேன். காதலை பற்றிய உரையாடல்கள் இல்லாத சமூகத்தில் வளர்ந்த நான் காமத்தை பற்றி கதைக்க யாருமிருக்கவில்லை என்று சொல்வது ஆச்சர்யமான ஒன்றில்லை. “அன்பின்- பாசத்தில்” – காதலில் – உறவில்- காமத்தில் முரண்பாடுகளை அதை அனுபவித்து எதிர்கொண்டு உரையாடி தெளிய வேண்டியிருக்கிறது.

ஆனால்,

இந்த அதீத காமத்தின் கூறுகளென்று அறியப்படுபவற்றை அவ்வளவு எளிதாய் என்னால் பொதுமைப்படுத்த முடியாமலிருக்கிறது, இந்த மனநிலை ஆரம்பத்திலேயே விவாதிக்கப்பட, சுய சிந்தனைக்கு உற்படுத்தப்பட வேண்டியது. இது மனநிலை சார்ந்து உதவி கேட்கவேண்டிய ஒரு நிலை! உடல்களை கையாண்டுதான் உடலிலிருந்து மீளமுடியுமென்பது எப்படிச் சரி? உடல்களைப் பதப்படுத்தி தான் என் மனதின் அகோரங்களை செம்மைப்படுத்த நினைப்பது எப்படிச் சரி?

ஜெனோஷன்

(requiem for a dream)

*
வணக்கம் ஜெனோஷன்,

இலக்கியத்தில் கற்பனையே கருவி. ஒருவர் எவ்வளவு துல்லியமாக ஒரு அவதானிப்பை அல்லது சித்தரிப்பை மெய்க்கு நிகரான ஒன்றாக உணர முடியுமோ அந்தளவுக்கு அது உணர்தலை ஏற்படுத்தக் கூடியது. அகச் சிக்கல்களை உரையாடும் மொழி அரசியலுக்கான கட்டுரை மொழியல்ல. தர்க்கங்கங்களோ விவாதங்களோட கூட அல்ல. அது புனைவின் பணி. எங்களிடம் உள்ள இலக்கியங்களில் குறித்த காலகட்டத்தின் பாலியல் மீறல்களை, அகச் சிக்கல்களை உரையாடுபவர்கள் எனது வாசிப்பில் மிகக் குறைவானவர்களே, எஸ். பொன்னுத்துரையின் சடங்கு, தீ ஆகிய குறுநாவல்களையும், சோபாசக்தியின் சில கதைகளையும் நாம் பொருட்படுத்தலாம். அனோஜன் பாலகிருஷ்ணனே இன்றைய தலைமுறை ஈழத்து எழுத்தாளர்களில் பாலியல் சார் உளவமைப்பைத் தமது புனைவுலகில் கையாளுகிறார். அதுவும் கலை வெற்றியாக இன்னும் மதிப்பிட முடியவில்லை. ஆனால் அவர் அதையும் கணக்கில் கொண்டு எழுதியிருக்கிறார்.

எந்தவொரு பண்பாடும் காமத்தை எவ்விதம் தன்னுடைய இலக்கியங்களில் உரையாடுகின்றதோ அந்தளவுக்கு அது தன்னை மேம்படுத்தி முன்னகரும். பொதுவான தமிழ்ப்பரப்பில் இத்தகைய எழுத்துக்கள் உண்டு. கரிச்சான் குஞ்சு, தஞ்சை பிரகாஷ் முதல் சாருநிவேதிதா, ஜெயமோகன், ரமேஷ் பிரேம், கோபி கிருஷ்ணன் வரை பலரும் இந்த பாலியல் அகச்சிக்கல்களை அதற்கான உரையாடல்களை தமிழ்ப்பரப்பில் நிகழ்த்தியிருக்கிறார்கள். இவர்களுடைய புனைவுகள் வாசிக்கத்தக்கவை.

அதீதங்கள் குறித்து கற்பனையில் நிகழ்வது என்பது வேறு. அவை நிகர் வாழ்வில் பயன்படுத்துதல் என்பது வேறு. அது ஒருவகையில் பிறழ்வு. காமத்தில் உள்ள ஒவ்வொரு உடலும் இணையும் போது எதிர் கொள்ளும் மனநிலைகள், மனவடுக்கள் என்பவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இணையர்கள் இணைந்து காமத்தின் ஒரு பகுதியென அதீதங்களின் கற்பனைகளை உருவாக்கிக் கொள்ள முடியும். அது ஒரு நீண்ட உரையாடல். ஒருவரை ஒருவர் உணர்ந்து காமத்தின் எல்லைகளை விசாரணை செய்யும் ஒரு மெய்யறிதல் பயணமாகவே ஆகக் கூடியது. ஆனால் நடைமுறையில் இது எவ்வளவு சாத்தியமானது? ஆணும் பெண்ணும் எவ்வளவு எதிர்த்துருவ முனைகளில் காமத்தைப் பயில்கின்றனர்? இங்கு தான் இந்த உளவமைப்புச் சிக்கல் உருவாகிறது.

காமத்தில் அதீதமென்பதை எதைக் கொண்டு வரையறுப்பது? அதில் காமம் கொள்பவர்களின் புரிதல் இதில் மிக மிக அடிப்படையான விசை. இருவர் இணையும் போது தங்களுக்குள் உண்டாக்கிக் கொள்ளும் காமத்தின் எல்லைகள் என்பவை அவர்களது தன்னறங்கள். அதைப் பொது அறங்களுடனும் ஒழுக்கங்களுடனும் போட்டுக் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.

இந்தப் பின்னணி விளக்கத்துடன் உங்கள் கேள்வியில் உள்ள கரிசனைக்கு வருகிறேன். ஜெயமோகன் எழுதிய இரவு என்ற குறுநாவல் முக்கியமானது. இரவு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சிறு குழுவான மனிதர்கள் பற்றிய கதையது. அவர்களின் வாழ்வின் மகிழ்ச்சிகள், தன்னறங்கள், அழகுகள், உச்சங்கள், வீழ்ச்சிகள் எல்லாம் கொண்டியங்கும் உளச்சித்திரத்தை வழங்கக் கூடியது. நடைமுறை அறிதல்கள் எவ்விதம் நாமே உருவாக்கிக் கொள்ளும் வாழ்முறைகளுடன் முரண்பட்டு மோதுகின்றன என்று ஓரளவு விரிவாக உரையாடிய புனைவு.

நாங்கள் அன்றாடத்தில் அறியும் பல உண்மை நிகழ்வுகள் அதீதத்தின் கற்பனையுலகல்ல. அவை உண்மையான வாழ்வு கொண்டவை. அவற்றுக்கிடையில் உரையாடலோ பரஸ்பர மனவிரிவோ இருப்பதில்லை. அது ஒரு வகையில் சுரண்டல். துஷ்பிரயோகம். ஒருவரை ஒருவர் நிரப்பி மீள்வதல்ல. ஒருவர் நிறைந்து இன்னொருவரை மூழ்கடித்து மூச்சுத்திணற வைப்பது.

(requiem for a dream)

பாலியல் உறவுகளில் உடல்களின் மீது வன்முறை நிகழ்த்தப்படுவது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்படத் தேவையில்லை. தன்னை அறிய ஒருவர் இன்னொருவரை வன்முறைக்கு இசைய வைப்பதுவோ, அதீதங்களை நிகழ்த்துவதோ குற்றம் மட்டும் தான். அந்த இணையர் பரஸ்பரம் அத்தகைய உடன்பாட்டினைக் கொண்டிருந்தாலொழிய, காதலின் பெயரிலோ வேறு எதன் பெயரிலோ ஒருவரை, அவரது உடலை வன்முறைக்குட்படுத்துபவர்கள் கிரிமினல்கள். அவர்கள் தண்டிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர் காப்பாற்றப்பட வேண்டியவர்.

பாலியல் அதீதங்களால், பிறழ்வுகளால் அதிகமும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே. அவர்கள் முழுவாழ்வும் சுமந்தலையும் மனவடுவை அளிப்பவை. அதிலிருந்து மீறியெழும் வழிகளை நம் சமூகமும் கொண்டமையவில்லை. கவுன்சிலிங்கோ உளச்சிகிச்சைகளோ இதில் எவ்வளவு பலனை அளிக்கும் என்பதும் உத்தரவாதமற்றவை. ஆனால் இருக்கும் வழி அது மட்டுமே. அதற்கு மேலென்றால், நான் எண்ணுவது, இத்தகைய வன்முறைகளினால் பாதிக்கப்படுபவர்கள் தங்களது வாழ்வை, தாங்கள் முழுதெனப் பற்றி வாழும் செயல்களில் ஈடுபட்டுத் தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளவது. அவர்கள் அகம் நிறைவடையும் சமூகச் செயல்களைக் கண்டறிந்து அவற்றுடன் ஈடுபடுபவது. இலக்கியம், கலைகள் போன்றவற்றில் தங்களது அகப்பயணத்தை முன்னோக்கிச் செலுத்துவது. கலாசாரம் மூலம் உருவாக்கியளிக்கப்பட்ட உடல் பற்றியதும் கற்புப் பற்றியதுமமான அதீதங்களைக் கடந்து, தன்னுடலைத் தானே வென்று செல்வது. செயல் புரிதலின் மூலம் வாழ்வைப் பொருள் கொள்வதாக ஆக்கிக் கொள்வது.

பாலியல் வன்முறைகள் உண்டாக்கக் கூடிய மனவடுக்களிலிருந்தும் உளச் சோர்விலிருந்தும் அறிதலின் மூலம் வாழ்வை மகிழ்ச்சிக்குரியதொன்றாக ஆக்கிக் கொள்வது. காமம் எப்பொழுதும் கொண்டாட்டமுள்ள ஆதார விசை. அதன் பண்பாட்டு மனதை வாசித்தும் உரையாடியும் அகலித்துக் கொள்ள வேண்டும். நிகழும் பிறழ்வுகளால் அது அருவருப்பூட்டும் ஒன்றென பொதுவெளி கணிப்பது மிகத் தவறானது. அதைக் கொண்டாட்டமென ஆக்கிக் கொள்ளும் கற்பனைச் சாத்தியங்களை அளிக்கும் கலைகள் பரவலான அவதானிப்புக்குச் செல்ல வேண்டியவை.

TAGS
Share This