வெள்ளத்தனையது மலர் நீட்டம்

வெள்ளத்தனையது மலர் நீட்டம்

வடக்கிற்கு வந்த வெள்ளம் புதியதல்ல, இடர் புதியதல்ல. யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னரான காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு வெளியேயான வடக்கில், யுத்தம் உண்மையில் நேரிடையாக இடம்பெற்ற நிலத்தில் ஒரே நேரத்தில் இவ்வளவு இளம் தலைமுறையினரை சேர வேண்டிய இடத்தில் சேர்த்திருக்கிறது வெள்ளம். அவர்கள் பார்க்க வேண்டிய மக்களைப் பார்க்க வைத்திருக்கிறது.
அண்மையில் வந்த வெள்ளத்தில் அதிகம் கவனிக்கப்பட்ட ஒன்று, குச்சொழுங்கைக்குள்ளும், மதவடிகளிலும், பெரிய மரங்கள் நிற்கும் சனசமூக நிலையங்களுக்குப் பக்கத்திலும் நின்று தமது அன்றாடங்களைக் கழித்துக் கொண்டிருந்த பெருந்தொகுதி இளம் தலைமுறையினரை வெள்ளம் மக்களை நோக்கித் திருப்பியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் உள்ள ஒரு தரப்பு ஏற்கனவே ஜல்லிக்கட்டுடன் வெளியே தெருவுக்கு இறங்கியிருந்தது. அடுக்கடுக்கான அரசியல் போராட்டங்களில் அவர்கள் முன்வரிசையில் நின்றனர். இந்தமுறை சனசமூக நிலையங்கள், விளையாட்டுக் கழகங்கள், தன்னார்வ அமைப்புகள் கல்வி நிறுவனங்கள், வியாபாரிகள், குடும்பங்கள், புலம்பெயர்ந்தவர்கள், சமூக வலைத்தள நண்பர்கள் என்று பல்வேறு அடையாளங்களுடன் பலரும் இடர்நேர உதவிகளில் பங்காற்றியிருந்தனர். அதுவொரு மகத்தான பணி. சக மனிதருக்கு ஆபத்தில் நாம் செய்யக்கூடியதைச் செய்தோம். திருப்தி.
ஏன் இப்பொழுது இதைச் செய்தோம்? உண்மையில் இதனை இப்பொழுது எங்களால் செய்ய முடியும். இங்கு அவ்வளவு பேர் இன்னுமிருக்கிறார்கள். மற்ற மனிதருக்காகக் கண்ணீர் சிந்துவதும் உழைப்பதும் நேசிப்பதும் என்றும் ஓயப்போவதில்லை. ஆனால், இவ்வளவும் போதுமா? இவ்வளவு தான் எங்களால் இந்த மக்களுக்குச் செய்யக்கூடியதா? சமூக வலைத்தளங்களோ அல்லது சிறு சிறு குழுக்களோ இதனை நகர்த்துவதென்பதும் நீடித்திருக்கும் மக்களின் பிரச்சினையை மனிதராக எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை நோக்கி நாம் வளர்வதென்பதும் தேவையானதில்லையா?
நாம் ஓர் உதவிக் குழுவா? இல்லை. நாம் ஓர் உதவிக் குழுவில்லை. நாம் இதனை அரசியல் ரீதியில் முக்கியமானதொன்றாகவே பார்த்தோம். அரசு தேவையில்லையென்று சொன்னோம். ஏன்? ஏனென்றால் நாம் செய்திருப்பது இடர் உதவி மட்டுமல்ல. இதுவொரு அரசியல் அர்த்தம் கொண்ட உதவி என்றும் சொன்னோம். ஆனால், நாம் நம்புவது சரியா? இதுபோன்ற இடர் நேரங்களில் பணியாற்ற வேண்டியது அரசின் கடமையும் தானே? நாம் அதற்காகத் தானே வரி செலுத்துகிறோம். அரசின் இரக்கத்தினால் கொடுக்க வேண்டிய நிவாரணங்களல்ல நாம் கேட்பது. நிவாரணத்தைக் கொடுப்பது அரசின் கடமை. இயங்காது தவறினால் அதுவே அநீதி. இதனையும் நாம் கருத்திலெடுத்துக் கொள்ளவேண்டும். ஆகவே, நாம் செய்திருப்பது ஆபத்திலிருக்கும் மக்களுக்கான உடனடி உதவி. இதன் அரசியல் அர்த்தம் என நாம் கருதியிருப்பது சரியானது தானா என்று நம்மை நாமே கேட்டுப் பார்க்க வேண்டும்.
இந்த அனர்த்த நேரத்தில் நாம் அடைந்த முக்கியமான அனுபவம் சனசமூக நிலையங்களினதும் விளையாட்டுக்கழகங்களினதும் காலம் முடிந்து விட்டதாக பலரும் கருதியிருந்த காலத்தில், மக்களை ஒன்றிணைக்கவும், ஆக்கபூர்வமாகக் களப்பணியாற்றவும் அமைப்பாகவிருத்தலின் தேவையையும் அதனூடான செயலூக்கத்தையும் நம் கண்முன்னால் பார்த்துதான். இது அமைப்புகளாக நாம் இணைந்திருந்ததால் ஆற்றக்கூடியதாகவிருந்த பணி. மீண்டும் இவை துளிர்த்து எல்லா இடங்களிலும் முளைக்க வேண்டும். பல இடங்களில் சனசமூக நிலையங்களும் விளையாட்டுக்கழகங்களும் தன்னார்வ அமைப்புகளும் உண்டு. ஆனால், இவற்றின் அறிவார்ந்ததன்மை பற்றியும், அதற்கான இடைவெளியென்பதுவும் மிகவும் குறைந்திருக்கிறது. சனசமூக நிலையங்களுடனும் கோயில்களுடனும் இணைந்த வாசிகசாலைகள் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகின்றன. நூலகங்கள் பரீட்சைகளுக்காக அமர்ந்து படிக்கின்ற அமைதியான இடங்களாகவே நீண்டகாலம் புழக்கத்தில் இருக்கிறது.
நண்பர்களே, அமைப்பாக ஒன்றிணைதலும், அதனூடான மக்கள் பணியுமே சமூகத்தின் உள் நீரோட்டங்களை அறியச் செய்யும். அதனூடாகவே நாம் அரசியல்மயப்படுவோம். நாம் அரசியல்மயப்படுவதுதான், இந்தச் சமூகம் அரசியல்மயப்படுவதின் முதற் காலடி.
போன வருடம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலில், அதே வருடம் இடம்பெற்ற அரசியல் கைதிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் இணைந்து பணியாற்றிய மாணவர் ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பினார். நாம் மிகக் கடுமையாகப் போராடினோம், எம்மால் முடிந்ததைச் செய்தோம், ஆனால் எம்மால் ஏன் அதில் வெற்றி பெற முடியவில்லை. அந்த அரசியல் கைதிகளில் ஒருவருடைய சகோதரி எங்களோடு தான் படிக்கிறார். உணர்வு ரீதியாக மிக நெருக்கமாக நாம் அந்த வலியை உணர்ந்திருந்தோம். எங்களால் ஏன் அவர்களின் விடுதலையை சாத்தியமாக்க முடியவில்லையென்று கேட்டார். அதற்குப் பதிலளித்த பேச்சாளர், நீங்கள் ஒரு போராட்டத்திற்குச் செல்ல முன் சமூகத்துடன் கலந்துரையாடியிருக்க வேண்டும். பிரச்சினையை விளங்கிக்கொண்டிருக்க வேண்டும். உணர்ச்சி வேகத்திலோ, இருக்கின்ற அறிவை வைத்துக்கொண்டோ போராடச் செல்வது நம்மை சரியான பாதையில் இட்டுச் செல்லாது. இதுதான் பெருமளவான நேரங்களில் நாம் சமூகமாக எதிர்கொள்ளும் பிரச்சினை. இதுபோன்ற இடர் நேரங்களில் நாம் அனைவரும் ஆற்ற வேண்டிய பணிகள் தொடர்பில் நாம் சரியாகத்தானிருக்கிறோம். ஆனால், இதற்கு முன்னும் பின்னும் நாம் இந்தச் சமூகம் தொடர்பில் என்ன கரிசனையிலிருந்தோம்? நாமும் வெள்ளத்தைப் போன்றே திடீரென்று வந்தவர்கள் தானா? ஓர் உதாரணத்திற்கு இந்த வெள்ள அனர்த்தத்தை எடுத்துக் கொண்டால், நமது சூழலியல் பற்றிய அக்கறை, அதற்கான உழைப்பு, அதன் கடந்தகாலம் எதிர்காலம் எதைப்பற்றியாவது நாம் ஒன்றாக இருந்து சிந்தித்திருக்கிறோமோ, மர நடுகை என்பது ஒரு செயல்பாடு. சூழலியல் என்பது தான் அரசியல். ஆனால், நாம் மரம் நடுவதைத் தான் அரசியல் என்று நம்புகிறோம். அனர்த்த நேரத்தில் பலரும் அடுத்த கல்வியாண்டுக்கான பாடசாலை உபகரணங்களை மாணவர்களுக்காகப் பொறுப்பெடுத்து வாங்கி கொடுத்தனர். அது ஒரு செயல்பாடு. நமது பிள்ளைகள் கற்றுக்கொண்டிருக்கும் இலங்கை அரசின் கல்வி முறைமையும் அதன் உள்ளடக்கமும் பற்றி நாம் எதிர்வினையாற்றுவதும் இயங்குவதும் தான் அரசியல். முன்னையது நமது அரசியல் செயல்பாட்டின் ஒரு பகுதி, பின்னையது தான் உண்மையான அர்த்தத்தில் சமூக மாற்றத்திற்காக இயங்குவது.
உதாரணத்திற்கு இந்த வெள்ளத்திற்குப் பின்னர், நிலம் எங்கள் உரிமை என்று கோஷமெழுப்பினால் மட்டும் போதாது. அந்த நிலத்தை உணர வேண்டும். ஏன் ஊர்களிற்குள் வெள்ளம் வந்தது, மக்களை ஏன் பள்ளங்களில், வெள்ளம் வழிந்தோடும் இடங்களில் குடியிருத்தினார்கள். குளங்கள் என்ன நிலையிலிருக்கின்றன? விவசாயம் என்னவாகும்? இதைப் போல நீண்ட பட்டியலைக் கொண்ட கேள்விகள் நம்முன் இந்த வெள்ளம் விட்டுச் சென்றிருக்கிறது. ஆனால், நாம் வெள்ள நேரத்தில் செய்த உதவியை ஒரு சமூக மாற்றமாக நம்பத் தலைப்பட்டிருக்கிறோம்.
சமூக வலைத்தளத்திலிருந்து அபிப்பிராயங்களை உருவாக்கும் தலைமுறையாக நாம் மாறியிருப்பது அவலம். நாம் அபிப்பிராயங்களை பரப்பவும், உரையாடவும் அதுவொரு வெளி. மறுக்கவில்லை. ஆனால், அதற்காக நம் அறிவுழைப்பை மொத்தமுமே சமூக வலைத்தளங்களை நம்பி உருவாக்கக் கூடாது. அது ஆபத்தானது. நாம் ட்ரெண்ட்களின் பின்னால் ஓடிக்கொண்டிருப்பவர்களாக இருக்கிறோம். நிகழ்வுகளுக்கும் சம்பவங்களுக்கும் வாயில் வந்ததை, அரை குறையில் கேட்டதையெல்லாம் வைத்து எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறோம். இந்த ஆழமற்ற தன்மை பரிதாபகரமானது. அது தான், சமூக வலைத்தளத்தில் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறீர்களே என்று பேசிக்கொண்டிருந்தவர்களே இப்பொழுது பாருங்கள் நாம் எவ்வளவு பெரிய வேலையைச் செய்து விட்டோம் பாருங்கள் என்ற மமதையைத் தந்திருக்கிறது. இது தேவையில்லாதது நண்பர்களே. நீண்டகாலமாக களப்பணியாற்றுபவர்களைப் பாருங்கள். அவர்களைத்தான் நாங்கள் பின்பற்ற வேண்டும். அவர்களின் நிதானம், உழைப்பு, அக்கறை, தீவிரம், உண்மை இதையெல்லாம் நாம் அறிந்தாலே நாம் கொள்ளும் கர்வம் எத்தகையது என்பதை உணர முடியும். தங்களது உயிரையும் வாழ்க்கையையும் கொடுத்து சமூகத்திற்குப் போராடியவர்கள் பலரையும் அறிந்திருக்கும் தலைமுறைதான் எங்களது. ஆனால், அதையெல்லாம் வெறும் வீரம் கதைப்பதற்கும், பெருமை பேசுவதற்குமே நாம் பயன்படுத்துகிறோம். மேலே ஜல்லிக்கட்டின் உதாரணத்தைப் பார்த்தோம். அதன் பலவீனத்தையும் அரசியலற்றதனத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் ஒரே மாதிரியான நிலைமையே ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப் பிந்தைய காலம் கையளித்திருக்கிறது. அந்த இளம் தலைமுறை மறுபடியும் கரைந்துவிட்டது. வெகு சிலர் எப்பொழுதாவது ஏதாவது போராட்டங்களில் தலை காட்டுவதோடு சரி, இன்னும் சிலர் அவை பற்றிய தகவல்களை பேஸ்புக்கில் பகிர்ந்து விட்டு ஓய்ந்துவிடுகிறார்கள். போராடியதாகவே கற்பனை செய்கிறார்கள். இதுதான் அரசியலற்ற அரசியலின் அவலம். தன்னெழுச்சியின் காலாவதித் திகதி.
பேஸ்புக்கின் வருகைக்குப் பின், சமூக வலைத்தள நண்பர்கள் எனும் பெயரிலும் தன்னெழுச்சி என்ற அடையாளத்தின் கீழும் பொது நோக்கிற்காக புதிய தலைமுறை அணிதிரளத் தயாராய் இருக்கின்றனர். ஆனால், அமைப்புகள் நான்கு வந்து விட்டால், அரசியல் கட்சியொன்று நுழைந்து விட்டால் சோர்ந்து போய் விடுகிறார்கள். அமைப்புகளின் மீதும் அரசியலின் மீதும் ஒரு தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறார்கள். இது ஒரு அரசியல் அறிவீனம். அமைப்புக்களாக இணைவதே பலம். தனி நபர்களின் அடையாளங்களும், அவர்கள் அநீதியை எதிர்க்கும்போது கொள்ளும் ஆபத்தும் பலமடங்கு அதிகம். அமைப்போ பலமானது, அமைப்புகள் மக்களிடம் இருந்து பலத்தைப் பெற்று மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும், அவர்கள் பண்பாட்டை மறுசீரமைக்கவும், சிந்தனை முறையை வளர்த்தெடுக்கவும் மிகவும் அவசியமானவை. அமைப்பே நீண்டகாலம் உழைக்கக் கூடிய அரசியல் வடிவம். இல்லையென்றால் கூடினோம் கலைந்தோம் என்பதாகவே நமது போராட்டங்கள் சென்றுகொண்டிருக்கும். யுத்தத்திற்குப் பின்னரான நம் போராட்டங்களின் அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். இல்லையென்றால் நாம் யாருக்காகப் போராடுகிறோமோ அவர்களுக்கு அநீதியிழைப்பவர்களாய் ஆவோம்.

அமைப்பு ரீதியில் அரசியல்மயப்படுத்தலென்பது என்ன?
நாம் ஜனநாயக அரசியலின் அமைப்பிற்கும் அதன் வழக்கங்களுக்கும் பண்பாட்டு ரீதியில் தயாரில்லாதவர்கள் என்றே நான் கருதுகிறேன். குடும்ப மற்றும் நமது சமூக அமைப்புகள் பெருமளவுக்கு அதிகாரத்தை தமது பலமாகவும், அதனை மற்றவர்களின் வாழ்வில் முடிவெடுக்கும், அழுத்தத்தை உண்டாக்கும் கருவியாகவுமே பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே, நமக்குத் தெரிந்து சிறுவயது முதல் பழக்கப்பட்டு வந்த அமைப்புகள் எல்லாமே அதிகாரத்தை தவறான அர்த்தத்தில் பிரயோகிப்பவை, அமைப்பிலிருந்து உரையாடலை, பிற தொகுதியினரின் விருப்பங்களை எப்பொழுதும் தள்ளியே வைத்திருப்பவை.
ஜனநாயகத்திற்குப் பழக்கப்படுத்தலென்பதும், ஜனநாயகத்தை உள்ளடக்கமாகக் கொண்ட ஓர் அமைப்பை உருவாக்குவதும் வழிநடத்துவதென்பதும் ஆகக் கடினமான நடைமுறையைக் கொண்டவை. ஆனால், நாம் அதனைத் தான் நடைமுறைப்படுத்தியாகவேண்டியிருக்கிறது. அனைவரும் உரையாடி, விட்டுக்கொடுத்து, எதிர்த்தரப்பை மதித்து, கருத்துக்களையும் நமது விருப்பங்களையும் எப்பொழுதும் பொதுநன்மைக்காக திறந்து வைத்திருக்கும் வெளிகளாக உள்ள அமைப்புகளையே நமது காலத்தின் தேவையென்று கொள்கிறேன். இது பார்ப்பதற்கு எளிமையாகவும் நடைமுறைபடுத்துவதற்கு மிகக் கடினமாகவும் இருக்கும்.
மேலே குறிப்பிட்டுள்ள அரசியல்மயப்படுத்தல் எனும் பண்பு மாற்றத்திற்கு நாம் தயாராவதற்கு நமக்குத் தேவையான அடிப்படைத் தகுதியாக ஜனநாயகத்தை முன்வைக்கிறேன். இல்லையென்றால் நாம், நாம் விரும்புவதைத்தான் கேட்போம், நாம் விரும்புவதைத்தான் பார்ப்போம். அது நாம் இப்போதுள்ள அறிவு மட்டத்திலிருந்தும் அனுபவங்களிலிருந்து கொஞ்சமும் நான் நகரமாட்டேன் என்ற மந்தத்தனத்திலிருந்து வருவது. நிபந்தனையற்ற அன்பும் பிடிவாதமான நேர்மையும்தான் இந்த மனித சமூகத்தை வழிநடத்திச் செல்கிறது.
ஆகவே, அரசியல் ரீதியில் இன்னும் ஆழப்படுவதற்கு நம் முன்னுள்ள வழிகளைப் பரிசீலனை செய்து பார்க்கவேண்டும். முதலாவதுவழி, வாசிப்பது. வாசிப்பதென்று எழுதியவுடனேயே இவர்களுக்கு வேறு வேலையில்லை, இனியெங்கே புத்தகமெடுத்துப் படிப்பதென்று ஓடிவிடாதீர்கள். நாம் தினமும் எவ்வளவு விஷயங்களை வாசிக்கிறோம், ஒவ்வொரு நாளும் பேஸ்புக்கிலும் பிற இணையங்களிலும் செய்தியாகவும் பொழுதுபோக்காகவும் ஏராளமானவற்றை வாசித்துத் தள்ளுகிறோம், கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் ஆயிரம் பக்கப் புத்தகமளவிற்கான வரிகளையும் தகவல்களையும் வாசிக்கிறோம். ஆனால், நாம் பெரிய குப்பைக்கிடங்கில் நின்று தேடிக்கொண்டிருக்கிறோம், அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை. நாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆழமான விஷயங்களைத் தேர்ந்தெடுத்து வாசிப்பதைத் தவிர அறிவை அடைய வேறு குறுக்கு வழிகள் இல்லை. அரசியற் பத்திகள், விவாதங்கள், பண்பாடு, இலக்கியம், சூழலியல் என்று சமகாலத்தின் மிக அவசியமான தரப்புகளை நாம் தொடர்ந்து கொஞ்சமாவது வாசிக்க வேண்டும். அப்பொழுதுதான் சம்பவங்களைத் தொகுத்துப் புரிந்துகொள்ளும் தன்மையும் அறிவார்ந்த தர்க்கமும் விரிவடையும், அதுவே அமைப்பை உள்ளிருந்து பலப்படுத்தும் அம்சமாகும். அறிவுதான் ஓர் அமைப்பின் அடிப்படையான மூலதனம். அறிவற்றதோர் அமைப்பு மந்தையாடுகள் போல் அரசியல்வாதிகளினதும் ஊரின் பிரமுகர்களினதும் புலம்பெயர் பினாமிகளினதும் பின்னும் அலைய வேண்டியிருக்கும்.
ஏன் அறிவார்ந்த தன்மையையும் அமைப்புகளின் சுயாதீனத்தையும் வலியுறுத்தவேண்டியிருக்கிறதென்றால், ஒரு அமைப்பு அதிலிருக்கும் நல்லவர்களினாலோ ஆபத்தானவர்களினாலோ பல்வேறு அடையாளங்களைக் கொண்டிருக்கும். ஆனால், அனைவரும் பொதுப்பணியில் ஒவ்வொரு தரப்பினருடனும் நெருக்கமான உறவை வளர்த்து வைத்திருப்பவர்கள். உதாரணத்திற்கு, ஒரு நல்லவர், சமூக அந்தஸ்த்துக் கொண்டவர் ஆனால் கருத்தியல் தெளிவற்றவர் என்றால் அவர் மோசமான கருத்தியலை நீண்டகால நோக்கில் நாசூக்காகச் செய்து வரும் அமைப்புகளில் இணைவதினூடாக அந்த அமைப்புகள் பலம்பெறத் தொடங்கும், அந்தத் தனி மனிதரின் அல்லது சில மனிதர்களின் நற்குணங்களை தமது மோசமான கருத்தியலை விதைக்க அந்த அமைப்புகள் பயன்படுத்தி விடுவார்கள். அதேநேரத்தில் ஒரு அமைப்பை அதிலுள்ள நல்லவர்களாலும் தீயவர்களாலும் மதிப்பிடுவதை விட முதன்மையானது அதன் கருத்தியல் ரீதியிலான தெளிவிலிருந்து அதன் மீது விமர்சனங்களைத் தொடங்குவது. அந்தத் தீயவர்களை அகற்றிவிட முடியும். அவர்களை எந்த அமைப்பிலும் தவிர்க்க முடியாது. ஆனால், நாம் அதனை இரண்டாவது தளத்திற்கு நகர்த்த வேண்டும். அதற்காக ஒரு மோசமான கும்பல், அது எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் அதுவொரு சரியான கொள்கை விளக்கத்தைக் கொண்டிருக்குமென்றால் அது சரியானதென்று கருதவில்லை. எடுக்கின்ற நிலைப்பாடுகளைக் கொள்கைகளை நடைமுறையில் அவர்கள் என்னவாகக் கையாள்கிறார்கள் என்பதிலிருந்துதான் அமைப்பு, அரசியல் ரீதியில் எவ்வாறு தனது பயணத்தை நகர்த்துகிறது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அமைப்பின் கருத்தியலும் அதனை வழிநடத்தும் நபர்களும் சம அளவில் முக்கியத்துவமிக்க பங்களிப்பை இந்த இடத்தில் ஆற்ற வேண்டும்.
இரண்டாவது வழி, உரையாடல். சனசமூக நிலையங்களும் இதர சுயாதீன மற்றும் மக்களை ஒன்றிணைக்கும் சமூக மையங்களும் தமது பொதுப்பிரச்சினைகளை உரையாடுவதற்கும், தமது பிரதேச எல்லைகளைத் தாண்டிய பிரச்சினைகளை உரையாடுவதற்குமான ஒன்று கூடல்களையும் செயல்வாதங்களையும் மாதாந்தம் தொடர்ச்சியாக நிகழ்த்துவது நீண்டகால நோக்கில், அனைவரையும் உரையாடக் கூடியவர்களாகவும் அறிவு ரீதியிலான வளர்ச்சிக்குத் தயாரானவர்களாயும் மாற்றும். நீண்டகால நோக்கில் விளைவுகளை உருவாக்கக் கூடியது சிந்தனை ரீதியிலும் பண்பாட்டு ரீதியிலும் நமது அகத்தில் நிகழ்த்தப்படும் மாற்றங்களே. அவைதான் சமூகத்தை மெய்யாகவே மாற்றுகின்றது. தண்டனைகள் மூலமோ அதிகாரத்தின் வல்லமைக்குப் பயந்தோ நிகழ்த்தப்படும் செயல்கள் சமூகத்தின் உள்ளே வளரும் சீழ்க்கட்டி. ஆகவே, எப்பொழுதும் போல அரசியல்வாதிகளை அழைத்து நிகழ்வுகளை செய்துவிட்டு கதிரை வேண்டும் ஒலிபெருக்கி வேண்டும் என்று கெஞ்சிக்கொண்டிருக்காமல் உருப்படியான நபர்களை அழைத்துப் பேசவைக்கலாம். பாதிக்கப்பட்ட தரப்புக்களை அழைத்துப் பேசச் செய்யலாம். உதாரணத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் யாழ்ப்பாணத்திலிருக்கின்ற அல்லது மட்டக்களப்பிலிருக்கின்ற அல்லது மலையகத்திலிருக்கின்ற ஓர் அமைப்புக் கொண்டிருக்கும் நிலைப்பாடு என்ன? அறிவு என்ன? இதனை நீங்கள் வாசித்து அறியலாம், யாராவது அதற்காகப் போராடும் அமைப்புக்களைச் சார்ந்தவர்களைப் பேச அழைக்கலாம். அல்லது ஒரு தாயை, சகோதரியை, மனைவியை, தந்தையை, சகோதரனை அழைத்துப் பேசவைக்கலாம். உண்மையில் அவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் எப்படிப் போராடுகிறார்கள் என்பதை நாம் நேரடியாக அறிய வேண்டும், அவர்களை சக மனிதர்களாக நாம் கருத்துவோமாயின், இங்கிருக்கின்ற அமைப்புகள் எத்தனை காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறதென்பதை வைத்தே நாம் கணிக்க முடியும். அல்லது மலைகளில் இரத்தத்தை அட்டைகளுக்குக் கொடுத்து லயன்களில் நித்திரை கொள்ளும் மக்கள் எதற்காக சம்பள உயர்வு கேட்கிறார்கள்? அல்லது புத்தளத்தில் குப்பை கொட்டுவது என்ன பிரச்சினை? என்று நமக்கிருக்கும் பிரச்சினைகளை அடுத்தடுத்து எழுதினாலே ஒரு புத்தகம் போடுமளவுக்கு நீளமான பிரச்சினைகள் உண்டு. ஆனால், ஏன் நம்மால் எதிலிருந்தும் மீள முடியவில்லை. மிக எளிமையாகச் சொன்னால், வெள்ளம் வந்தபோது வந்தவர்களில் நூறில் ஒரு பகுதியினர் தான் மிச்சப் பிரச்சினைகளை அறிகிறார்கள், களத்தில் பணியாற்றுகிறார்கள்.
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் ஒரு வருடத்திற்கு மேலே நடந்துகொண்டிருந்ததே, ஏன் அந்தத் தாய்மாரும் தந்தையரும் கூடாரத்தைக் கலைத்துப்போட்டுவிட்டு சென்றுவிட்டனர்? அப்பொழுது நம்மில் எத்தனை பேர் கிளிநொச்சிக்குப் போனோம்? ஏன் போகவில்லை? அப்பொழுது இவர்கள் நம் மக்களில்லையா? அப்பொழுது அவர்கள் ஆபத்திலில்லையா? அவர்கள் ஆபத்திலிருக்கும்போது உதவுவது மட்டுமல்ல நமது பணி. அவர்களுக்கு உதவுவதால் நமக்கு ஆபத்து வந்தாலும் ஆற்றுவதே அரசியல்மயப்படுத்தப்பட்ட செயல்வாதம்.
வெள்ளம் எந்தளவிற்கு உயர்வாக உள்ளதோ அந்தளவிற்கே மலரின் தண்டு உயரும். வளரும். அதேபோல் மக்களின் அறிவும் அரசியல் புரிதலும் எந்தளவோ அதற்கான அளவே நமக்கான தலைவர்களும் வருவார்கள். அதற்கே நாம் அரசியல் ரீதியில் விழிப்படைந்த அமைப்புகளாக அந்தந்த ஊரில் இயங்கத் தொடங்க வேண்டும். அரசியல் கட்சிகளிற்குப் போஸ்டர் ஒட்டுவதற்கும், வீதி விளக்குகளிற்கும் பாதைகளிற்கும் சப்பாத்துகளிற்கும் பந்துகளிற்கும் அவர்களிடம் சென்று கெஞ்சுவதற்கும் நாம் ஒரு வழக்கமான அமைப்பாக இருப்பதே போதுமானது. அவர்கள் மடிப்புக் குலையாமல் மக்கள் பணியாற்றுவதற்கு இவ்வளவு மந்தைத்தனம் போதும். ஆனால், மக்களின் அறிவு எவ்வளவோ அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு அரசியல் ரீதியியல் சிந்திக்கவும் செயல்படவும் தெரிந்த மக்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களுக்குப் பொருத்தமான தலைவர்கள் வருவார்கள், நாம் விழுந்து தொழக் கடவுள் வேஷம் போடும் அரசியல்வாதிகள் உருவாக்கி வைத்திருக்கும் மன்னர்களின் காலம் ஒழியட்டும். விழும் போது தோளைக் கொடுக்கும் தலைவர்களின் காலம் வரட்டும்.
ஓஷோவிடம் ஒரு தடவை, நீங்கள் போராட்டங்களுக்கு எதிரானவரா என்று கேட்பார்கள். ஓஷோ ஒரு சிக்கலான ஆசாமி. ஆன்மீகவாதி தானே, அவர் இதற்கு எதிராகத் தானிருப்பார் என்ற தொனியில் கேள்வி கேட்கப்படுகிறது. அவர் ஒரு கணம் நிறுத்தி யோசித்து விட்டுச் சொன்னார். இல்லை நான் போராட்டங்களுக்கு எதிரானவனில்லை. ஆனால், நாம் ஒன்றிற்காகப் போராடுவதென்றால் அதற்காக உண்மையாகப் போராட வேண்டும். எதற்காகப் போராடுகிறோமோ அதற்காக உயிரைக் கொடுத்துப் போராடவேண்டும். எந்த உழைப்பும் இல்லாமல் வெறும் கொடியை மட்டும் பிடித்துவிட்டு நான் போராடினேன் என்று ஒருவர் சொல்வதைத் தான் நான் எதிர்க்கிறேன். பிரச்சினைக்கான கிளைகளை விட்டுவிடுங்கள். அதன் வேர்களைக் கண்டு பிடியுங்கள். அதனை மாற்றுவதற்கானதே போராட்டம். கிளைகளை வெட்டி, பிரச்சினையைப் பராமரிப்பதல்ல நமது வேலை”. ஆம் நண்பர்களே, பிரச்சினைகளிற்கான மூல காரணங்களைக் கண்டுபிடித்து அதனை மாற்றுவதற்கான சமூகப் பணிக்கு, நாம் தயாராவதுதான் உண்மையான சமூக மாற்றத்திற்காக உழைப்பது. சிந்திப்பது. செயல்படுவது.

(2019)

https://maatram.org/?p=7437&fbclid=IwAR1QEjH7_YkaJkjhvf601ubiJYCGIIXUQ18vPvnVEpZCosalQR11hNBsqRM

Share This