வெற்றிடத்தால் எழும் வீடு
ஈழத்தின் ஆன்மீகத் தொடர்ச்சி சித்தர்களின் சொற்களின் கவிதையாக இன்றும் திகழ்கிறது. யோகர் சுவாமி அமர்ந்திருந்த மரம் இன்னமும் நல்லூர்த் தேர்முட்டியடியில் இருக்கிறது. இளவயதில் நண்பர்களுடன் அவ்விடம் சென்று அமர்வதுண்டு. எல்லாம் எப்பொழுதோ முடிந்த காரியம், ஒரு பொல்லாப்பும் இல்லை, எல்லாம் செப்படி வித்தை இவை இந்த நிலத்தின் சித்துச் சொற்கள். அவற்றின் கவித்துவமான அடைவு வாழ்வை வேறொன்றின் தொடர்ச்சியெனத் தன்னை உருவகித்துக் கொள்வது.
எனக்கு எந்த மதத்தின் மீதும் கடவுளின் மீதும் இளவயதிலிருந்தே நம்பிக்கையில்லை. ஓஷோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, வரலாறு, விஞ்ஞானம் சார்ந்து வாசிக்க வாசிக்க அது பெரும் விலகலை அளித்தது. அதே நேரம் எந்த மதத்தின் பண்டிகைகளிலும் திருவிழாக்களிலும் நான் விரும்பிக் கலந்து கொள்வதும் உண்டு. அதை மனித நம்பிக்கைகளின் திரளாக, மானுடக் கொண்டாட்டமாக அத்திரளில் கரைய முடிவதை ஒரு அனுபவமாக வாழ முடியும்.
தமிழின் கவிதைப் பரப்புக்குள் ஏராளமான பக்தி இலக்கியங்கள் உண்டு. மொழிபெயர்ப்பினூடாக அக்கமா தேவியின் கன்னட வீர சைவ வசனங்களும், கலீல் ஜிப்ரான், ரூமி போன்ற சூபியிச இறைக் கவிதைகளும் வாசிக்கப்படுவதுண்டு. நவீன கவிதையில் தேவதேவனின் கவிதைகளுக்கு ஆன்மீகமான உள்ளடக்கம் உண்டு. அவை இயற்கையை அறிதலின் ஆன்மீகக் கருவியாகக் கவிதையைக் கொள்பவை. அவரது இக் கவிதை நவீன ஆன்மீகக் கவிதைகளுக்கான சிறந்த உதாரணம்,
‘அசையும் போது தோணி
அசையாத போதே தீவு
தோணிக்கும் தீவுக்கும் இடையே
மின்னற் பொழுதே தூரம்’
*
இந்தப் பின்னணியில், ஈழத்தின் இலக்கியப் போக்கில், மு. தளையசிங்கம் தனது எழுத்துக்களில் பிரபஞ்ச யதார்த்தம் என்ற தனது ஆன்மீகத் தத்துவார்த்த தளத்தின் முன்னடிகளை எடுத்து வைத்திருந்தார். ஈழத்துக் கவிதைகளில் ஆன்மீகமான உள்விசாரணை நிகழ்வது இல்லை. அது மட்டுமே நிகழும் பிறிதொன்றல்லாது தன் அகத்தை எந் நேரமும் தனது உள் மன யாத்திரைக்கே பயன்படுத்தும் சமகாலக் கவிஞர்களில் தனித்துவமானவர் யோகி. இவரது இயற் பெயர் தஜேந்திரன். புனைபெயர் யோகி. காண்பியக் கலைஞராகவும் கவிஞராகவும் அவர் தனது ஆன்மீகத்தைத் தொடர்ந்தும் விசாரணை செய்தும் உரையாடியபடியும் இருக்கிறார். அவரது சில கவிதைகள் மெளனவாக்கிய மாலை என்ற பெயரில் பிரக்ஞை வெளியீடாக நூலாக வெளியாகியிருக்கிறது.
ஆன்மீகத்தை விசாரணை செய்யும் கருவிகளாக உருவாகும் கவிதைகள் என்பவை மெளனம் கொள்ளும் மனது உச்சரிக்கும் சொற்கள். தனது நம்பிக்கைகளை அறிதல்களை எதன் பொருட்டும் கைவிடாமல் தானே தன்னை விடுவித்துக் கொள்ள அயராது முன் செல்லும் வேட்கை. யுத்தமும் வன்முறைகளும் ஏராளம் நிகழ்ந்த மண்ணில் ஆன்மீகம் தனது அறாத தொடர்ச்சியால் இம்மனிதர்களிடம் வாழ்வு பற்றிய நம்பிக்கையை, இருத்தலின் கேள்விகளை இன்னொரு திசையில் திறக்கிறது.
யோகியின் கவிதைகளின் முக்கிய பண்பு, அவர் கவிதைகள் முழுவதுமே அகத்திலிருந்து புறத்தை அணுகுபவை. அவரது அதிர்ந்து பேசாத இயல்பு, மிக மெல்லிய நுண்ணுணர்வுகளும் பக்தியும் வாய்க்கப்பெற்ற இதயம், எந்நேரமும் தன்னிலையை அவர் நீங்கிவிடாமல் மனதை இழக்காமல் இருக்கக் கொள்ளும் கூருணர்வுடனான பிரக்ஞை என்பன அவரது சொற்களிலும் நிகழ்கிறது. அவரது சொற்கள் அதிர்ந்து பேசுவதில்லை. மிக நிதானமானவை. தங்களை இழந்து இன்னொன்றை உள்விடும் கூடென ஆகுபவை. ஒரு வகையில் கூடு விட்டுக் கூடு பாயத் தன்னையளிக்கும் வெற்றுடல்கள்.
அவரது கவிதைகள் மற்றும் காண்பிய ஆக்கங்களின் மீது வாசக கவனம் விரிவாக ஏற்பட வேண்டும். அவை உரையாடப்பட்டு முன்னகர்த்தப்பட வேண்டும்.
*
வெற்றிடத்தால் ஒருவீட்டை எழுப்புகிறேன்.
தொடக்கமும் முடிவுமற்றதன் ஒரு முனையில் நான். மறுமுனையில் நீ.
தொடுகோட்டை வரைகிறது வெற்றிடம்.
வெற்றிடத்துள் நிரம்புகிறாய் நீ.
அனல்மேனிக்குள், வெற்றிடங்களால் எழுப்புகிறேன் அதேவீட்டை,
மீண்டும் மீண்டும், புதிதாய்.
(ஆடி – 2013)
*
இறையே,
இறவா உணர்வின்
சுடர்க்கொழுந்துகளைப்
பரிமாறிக்கொள்வோம்.
காதலில்,
ஒரு பெரும்பொழுது கழிய,
நீயும் நானுமற்று மலர,
அவிழ்கிறது ஓர் அமரவெளி.
துணையே,
உன்னதம் நிரம்பிய பொழுதுகளைக்
கவிதை செய்வோம்.
உதயமுமில்லை,
மறைவுமில்லை பொழுதுகளுக்கு.
பொழுதாகி,
பொழுதுகளை நீங்கிப் போவோம்.
(ஆடி – 2013)
*
திரியற்றதொரு தீபத்தை ஏற்றிவைக்கிறாய் நீ, என் தேகத்துள்ளே.
தீயெரிய,
தீயினிலெரியாத் தேகம் வளர்கிறது,
மனமொரு வாத்தியமாய்.
மனமொரு மகாவாக்கியமாய்.
அதன்பின்
ஒளிர்கிறேன்.
(ஆவணி – 2013)
*
ஒலியே செவியைத்திற. விழியே விழியைத்திற.
சுவாசமே எனதன்பே ஏகாந்தப்பெருவெளிக்கு என்னை இட்டுச்செல்.
காலத்தைக் கட்டு கட்டு. அதீதத்தை எனக்குள் உருவாக்கு.
குளிரும் நெருப்பே
என்னை உனதாக்கு
உன்வசப்படுத்து.
உடலே தெய்வ வேடந்தரி. உயிரே கவிதையாகித் தங்குக நீ.
(ஆடி – 2015)
*
கோடை மலர்க் கொண்டல்
1.
தேசம் கடந்து வந்த பறவை நான்.
உனது கிளைகளில்
என் தேசத்து நினைவுகளால்
ஒரு வீட்டைக் கட்டினேன்.
உனக்கும் எனக்குமிடையில் பெயரற்று மலர்கிறது ஓர் உறவு.
துறவியின் புன்னகை போல்வன உனது பூக்கள்.
லாகூரின் வெப்பத் தெருக்களில்;,
உன் மஞ்சட் புன்னகைகளைச்
சேகரித்து வைக்கிறேன்.
கோடையின் வெம்மையோ கொடிது.
மஞ்சளாய்,
கோடையை நகைத்துக் கடக்கிறாய் நீ.
2.
*வைரவனின் அம்சம் நீ.
அகாலமாய் அவன் உனக்குள்ளுறைய காலவெளியில் முளைத்தெழுந்தாய்.
உனக்கு என் வணக்கங்கள்.
காலமொடுங்க
காரணிந்து தோன்றும் என் கடவுளுக்கு
மனதின் இடைவெளியில் ஒரு கொத்து மஞ்சட் பூக்கள்.
3.
வளர்பிறைக் காலப் பின்னிரவு தெருக்கள் இன்னும் ஓயவில்லை.
லாகூரின் திசைமுகங்களில் பாங்கொலி கேட்கிறது. முகமதியர்கள் நோன்புநோற்கத் தொடங்குகிறார்கள்.
கொண்டல் மலர்களை ஒளிர்விக்கிறது இரவு.
மஞ்சள் வனப்பெய்தும் மோனவெளியில்
கவிதை பூக்கும் மரமானேன் நான்.
(லாகூர் 2017)
(லாகூர் நகரத்து வீதியோரங்களில் வளர்ந்து பூத்து நிற்கும் கொண்டல் மலர்களால் அருட்டப்பெற்றது.)
*எங்கள் வைரவர் கோவிலின் தலவிருட்சம் கொண்டல்.
*
நான் அற்றிருக்க
வருகிறாய்
அனைத்துமாகி ஏதுமற்ற ஒன்றை
தருகிறாய்
காலமற்றது உன் வருகை
இடமற்றது உன்னிருப்பு
பொழுதொன்றை இடைமறித்து
பூத்திருந்துவிட்டுப் போகிறாய்
மீள வருவாயோ.
(ஆனி – 2017, லாகூர்)