மல்லிகைக் கொடியில் ஒரு பாகற்காய்

மல்லிகைக் கொடியில் ஒரு பாகற்காய்

யுத்தம் உக்கிரமாக நிகழ்ந்து கொண்டிருந்த 90 களின் பிற்பகுதியில் எழுந்து வந்த இளைய தலைமுறையில் எஸ்போஸ் என அழைக்கப்படும் சந்திரபோஸ் சுதாகர் மொழியின் அடுக்குகளில் இன்னொரு திசையைத் திறந்தார். அவரது சொற்தேர்வுகள் புதிதான சொல்லிணைவுகளை இசைத்தன்மையை உண்டாக்கின. அவருக்கு அறமோ காதலோ, சீற்றமே மொழி. அவரது சொல்முறையினால் ஈர்க்கப்பட்டு உருவாகிய இளம் தலைமுறையினரில் சித்தாந்தனும் தானா விஷ்ணுவும் முக்கியமானவர்கள். அவர்களின் சொற் தேர்வுகளிலும் இணைவுகளிலும் எஸ் போஸ் இன்னமும் புன்னகைத்தபடி வாழ்வதை அவர்களை வாசிக்கும் தோறும் உணர்கிறேன்.

தானா விஷ்ணுவின் மொழி எஸ் போசின் தனித்த படிம உலகின் சொற்களிலிருந்து வளர்ச்சியடைந்தவை. தமக்கென்று ஒரு சொல்லுலகை உருவாக்கும் கவிஞர்கள், அவ்வுலகிற்குள் சொற்களின் அர்த்தங்களை மாற்றியபடி வருகிறார்கள். அவ்வர்த்தங்களை அறிவதன் மூலமே அக்கவிஞரின் அகத்தினை நெருங்கி அதிலிருந்து வேறொன்றை எங்களுக்குள் நாங்களே உருவாக்கி வெளியேறவோ வாழவோ முடியும்.

விஷ்ணுவின் கவிதைகள் மெல்லியதும் உக்கிரமானதுமான கலவையான சாந்துக் கரைசல் மொழி. அவருடைய உலகில் அன்றாடத்தின் மனிதர்கள், அவர்களின் இழப்புகள் என்பன சிற்றுயிரிகளின் மூலம் இன்னொரு உலகென ஆக்கப்படுகின்றன. சிற்றுலகினதும் சிற்றுயிர்களொனதும் கவிஞன் அவர். பல்லிகளும் நத்தைகளும் அட்டைகளும் வண்ணத்துப்பூச்சிகளும் குக்குடுப்பான்களும் செடிகளும் கொடிகளிம் வாழும் கவியுலகு அவரது. அவை அம்மனிதர்களின் நிழல்களெனக் கவிதையில் விழுபவை.

அவரது இளவயதுச் சோகங்கள், யுத்தம் உண்டாக்கிய அலைச்சல்கள், இழப்புகள், அவரது சிற்றுலகின் மீது அக்கறையற்று நகரும் யுத்தத்தின் மீதான விமர்சனங்கள் சாபங்கள் அவரது கவிதைகளெங்கும் துயர் நிறை பாடலின் பின்னணியிசையென ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. அன்பு பற்றிய துயரம், காதலின் ஆற்றாமைகள், முன் பருவத்தின் சொற்கள் ஆகியவை இணைந்த அவரது கவிதைகளில் அவை அதன் அன்றாடத்தின் சிக்கல்களுக்குள் திரும்பும் இன்னொரு உலகின் வாசலைக் கொண்டவை. இன்னொரு மொழியின் படிமங்களைக் கொண்டவை.

சுயம் அழியும் வாதையால் உண்டாகும் கசப்பின் சுவை உதட்டின் உப்பென அவரது கவிதைகளில் ஒட்டியிருக்கிறது. மொழியதைத் தொடுந்தோறும் நோயுறும் உடலென மனம் சுருண்டு படுத்துக்கொள்கிறது. ஆயிரங்கால்களில் நடக்கும் அட்டை, தன் ஒரு கால் தடக்கி விழுவதைப் போல.

நினைவுள் மீள்தல், கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள், நின்று தூறும் மழை ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. தவிர என்ற இலக்கிய இதழின் ஆசிரியர்.

*

ஈரமற்ற புன்னகை

கடல் மணலின் சிறுகுழிகளெங்கும்
நிறைந்து போயிருந்த
எனது முன்னைய பாடல்களை
அள்ளிப் போயிற்று அலை.

கரையில் திட்டுமணல் மேல்
அசையாது இருந்தபடி
பாடிக்கொண்டிருக்கிறேன்
மீண்டும் அள்ளிப் போகிறது
எனது பாடல்களை.

பாதச் சுவடுகளை மணலில் பதித்து
வீடு திரும்புகையில்
அதனையும் எடுத்துப் போகிறது அலை.

எனது தூக்கத்தைக் கலைத்து
துள்ளிச் சிரிக்கும் சிறுபிள்ளையாய்
என்னுள் விரிக்கிறது தன்னை.

என் பாடல்களையும் பாதச்சுவடுகளையும்
விழுங்கிய பின்னும்
படர்த்த முனைகிறது
என் மீது தன் புன்னகையை.

(2004)

*

மரங்கொத்தி

விடைபெறும் நேரங்களில்
மெல்லிய புன்னகைக்குப் பின்
நீர் கோர்க்கும் உன் விழிகள்
எப்போதுமே ஞாபகத்தில் வரும்.

நத்தையின் உக்கிய கோதுகளுக்குள்
நீர் தேங்குமளவு வாழ்க்கையுடன்
கழியும் காலங்களை
மெழுகுவர்த்தியின் உருக்குகளுக்குள்
தேடியலைகிறேன்.

மெளனம் நிறைக்கும்
எமது இடைவெளிகளில்
சாம்பல் மேட்டிலிருந்து
உயிர்க்கும் தவளைகளின் குரல்கள்
நிறையும் வேளையில்
உன் கண்ணீரில் கலந்துவரும்
இயலாமைகளுக்கு
என்னால் முகம் கொடுக்க முடிவதில்லை.

மெளனம் கலைக்க முனையும்
உனது ராகங்களையும் தாண்டி
தெறித்தெழும்
தெரு நாய்களின் ஓலங்களிடை
கலைந்து விலகும் உன் முகத்தை
மழைத் தூறல்களிடையே
தேட முனைகிறது மனசு.

பின்னொரு நிழல் தொடர
பகல் அடங்கும் பொழுதுகளில்
எமக்கிடையில்
வந்து மறைகிறது கொத்தும் அலகுகளுடன்
மரங்கொத்தி.

(2005)

(தானா விஷ்ணு)

*
கசப்புவெளி

பல்லியொன்றிற்கு இரையாகும்
பூச்சியினது
மூச்சின் வெப்பத்தினை
அவசரமாய்த் தேடியலைகின்றன சருகுகள்.

நிகழ்காலத்து இரவுகளில்
வெறும் கதையாய் நிம்மதி.
ஓடும் பேருந்தின் சக்கரத்தில்
நசியுண்ட அட்டையின்
உடலாகிப் போயிற்று மனசு.

எல்லாச் சிதிலங்களிடை
இரத்தச் சகதியுடன்
தவறுதலாய்த் தப்பி எழும் ஒருவனாய்த்
திரும்புகிறது வாழ்க்கை.

ஒரு பாவற்காய்
மல்லிகைக் கொடியொன்றில்
தொங்கிக் கொண்டிருக்கிறது.

(2007)

*
பரிவு

என்னை மன்னிக்க நேரிடும்
கணங்களில்
ஒரு தாயின் பரிவுக்கு சென்றுவிடுகிறாய்.

எம் குழந்தையின் தலையினைக்
கோதிய படி
உன் பார்வைகளால்
எல்லாவற்றினையும் துடைத்தெறிந்துவிடுகிறாய்

எல்லாவற்றினையுமென்றால்
என் தவறுகளை,
என் மீதான கோபங்களை,
இன்னமும் இருக்கக் கூடிய ஏதேனும் எல்லாவற்றையும்

(2006)

*
ஓவியத்தின் கோடுகளில் நீளும் வாழ்ந்து போனவனின் குறிப்பு

வாழ்தல் மீதான வேணவாவினை
நிர்க்கதிக்குள்ளாக்கும் போர் மீதில் கவிகிறது
மீளவும் எனது சாபம்

தேவதைகாள்!
எனது இறுதிப் பிரார்த்தனைகளும்
அர்த்தமிழந்தன.

தூக்கிலிடப்பட்ட எனது இளமையை
குற்றுயிராகவேனும் காப்பாற்ற முடியா
விழிகள் இழந்த குரங்கென
தெங்கித் திரிகிறேன் பிரபஞ்சக் கிளைகளெங்கும்.

சுருக்கில் நசுங்கும் ஆயுள் கழுத்தில்
கயிறுவரைந்த கோடுகளை
யாவரும் அறிவதற்காய்
யாரேனும் பத்திரப் படுத்தட்டும்

தேவதைகாள்!
அர்த்தமிழந்துபோன உங்களுக்கான
துயர் மிகுந்த பிரார்த்தனைகளையும்
மீளத்தாரும்
வாழ்வினைத் தொலைத்தலையும்
பைத்தியக்காரனின் நாட்குறிப்புக்களில்
அவற்றினைச் சேமித்தல் வேண்டும்.

வரலாற்றிலிருந்து துடைத்தழிக்கப்படப் போகும்
எனது குறிப்புகளை
நான் வரையும்
சிக்கல் நிறைந்த ஓவியங்களிலிருந்து
யாவரும் வேறுபடுத்திக் கொள்ளட்டும்.

வாழ்வின் மீதான வேணவாவினை
நிர்க்கதிக்குள்ளாக்கும் போர் மீது கவிகிறது
மீள,மீள எனது சாபம்
ஒரு குடுகுடுப்பைக் காரனின் வார்த்தைகள் போல.

(2007)

TAGS
Share This