நறுங்காற்றின் இசை

நறுங்காற்றின் இசை

ஈழத்தின் முதலாவது பெண்ணிய அலையின் முக்கியமான கவிஞர்களில் ஊர்வசியும் ஒருவர். 1980 களின் முன்னும் பின்னுமென நிகழ்ந்து வந்த சமூக அசைவுகளின் வழியாவகவும், உருவாகி வந்த பெண் என்ற தன்னிலையின் சிக்கல்களை உரையாடும் வெளியும், பல்வேறு ஆக்கங்களை எழுதும் செயற்படும் காலத்தை உதிக்க வைத்தது.

பெண்கள் சந்ததி உற்பத்திச் சாதனம் மட்டுமல்ல. அவர்களது உழைப்புகளிலிருந்து விடுதலையும் சம உரிமைகளும் அகத் தேவைகளும் விரிவாக உரையாடப்படத் தொடங்கிய காலமது. சொல்லாத சேதிகள் என்ற பெண் கவிஞர்களின் கூட்டுத் தொகுப்பு, இலக்கிய அழகியல் மதிப்பீடுகளின் அடிப்படையில் மதிக்கத்தக்க குரல்களைத் தொகுத்தளித்தது. அதில் ஊர்வசியின் சில கவிதைகளும் பிரசுரமாகின.

ஊர்வசி நுண்ணுணர்வுகளின் கவிஞை. ஆயுத விடுதலைப் போராட்ட ஆரம்ப காலங்களில் அவரது எழுத்துகள் பெண்களும் போராட எழும் காலத்திற்கான அழைப்புகளாக இருந்தன. அதுவோர் பிரச்சார அழைப்பு மட்டுமல்ல. அகவயமான அழைப்பு. அக்கால மொழிபெயர்ப்புகளின் வழி உருவான கூரிய மொழிதலை உருவாக்கும் வகைமைகளையும் எழுதியுள்ளார். ஆனால் பிற்காலத்தில் வெளிவந்த அவரது கவிதைகளின் அடிப்படையில் தன்னுணர்வுகளின் கவிஞையென வெளிப்படுகிறார்.

ஊர்வசியின் கவிதைகளில் கற்சிற்பம் போன்ற அடர்த்தியும் வாளிப்பும் உள்ள மொழி நிகழ்கிறது. ஒரு உணர்வு மெல்ல மெல்லத் தன் தண்டிலிருந்து சிறு வேர்களால் சுவற்றின் இடுக்குகளில் பற்றி மேலேறி மலர்கள் கொள்வதைப் போல் அவரது கவிதைகள் மனதில் வளரக்கூடியவை. மெல்லுணர்வுகளை அவர் எழுதும் போது அவ்வுலகில் உருக்கொள்ளும் நுண் சித்திரங்கள் அதிகாலைப் பனியின் காற்றென உடலில் மோதி சிலிர்க்க வைப்பவை. அடைய வேண்டிய சமூக விடுதலையின் எல்லைகளை மேலும் விரிவாகவும் நுட்பமாகவும் தொடர்ந்து எழுதியவர்.

பெண் விடுதலையின் அகக் குரல்களில் இசை மிக்க குரல் ஊர்வசியினுடையது. அவரது கவிதைகளுக்குள் உள்ளோடும் சங்கீதம் ஈழத்து நவீன கவிதைகளில் முக்கியமானதொரு தொடக்கம். ஒளவை, சிவரமணி, செல்வி, அ. சங்கரி போன்றோரிடமும் இத்தகைய வேறு வகையில் ஒலிக்கக் கூடிய இசை கூடியிருந்தது. அதுவே இலக்கிய வாசிப்பில் இவர்களின் கவிதைகளுக்கான மதிப்பை இன்று வரை நீட்டிக்கும் முக்கிய அம்சம்.

கருத்தியல் ரீதியிலான மாற்றங்கள் சக மனிதர்களின் ஆழுள்ளத்துடனும் சமூகத்தின் கூட்டுப் பிரக்ஞையுடனும் உரையாடப்பட வேண்டியவை. அதற்கு அம்மனிதர்களின் மனதிற்குள் ஒரு கவிதை, இதயத்துடிப்பென உள்ள பிரக்ஞையின் சந்தத்தை அறிந்து தொட வேண்டும். அதுவே அவர்களின் அகத்தை மாற்றும் தொடக்கம். ஊர்வசி அகங்களைத் தொடும் நறுங்காற்றின் இசை.

*

சிறையதிகாரிக்கு ஒரு விண்ணப்பம்

ஜயா,
என்னை அடைத்து வைக்கிறீர்கள்
நான் ஆட்சேபிக்க முடியாது
சித்திரவதைகளையும்
என்னால் தடுக்க முடியாது
ஏனெனில்,
நான் கைதி.
நாங்கள் கோருவது விடுதலை எனினும்
உங்களது வார்த்தைகளில்
பயங்கரவாதி.

உரத்துக் கத்தி அல்லது முனகி
எனது வேதனையைக்
குறைக்கக்கூட முடியாதபோது
எனது புண்களில்
பெயர் தெரியாத எரிதிராவகம்
ஊற்றப்படும் போது
எதையும் எதிர்த்து
எனது சுண்டுவிரலும் அசையாது.
மேலும் அது
என்னால் முடியாதது என்பதும்
உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

அதனால்தான் ஐயா,
ஒரு தாழ்மையான விண்ணப்பம்
என்னை அடைக்கிற இடத்தில்
எட்டாத உயரத்திலாயினும்
ஒரு சிறு சாளரம் வேண்டும்.
அல்லது, கூரையில்
இரண்டு கையகல துவாரம் வேண்டும்
சத்தியமான வார்த்தை இது.
தப்பிச்செல்லத் தேடும் மார்க்கமல்ல
தகிக்கும் எனது ரணங்களில்
காற்று வந்து சற்றே தடவட்டும்
சிறுதுண்டு மேகம்
மேலே ஊர்ந்து செல்வதில்
இன்னும்
மரக்கிளையின் நுனி அரும்பித் தளிர்ப்பதில்
எப்போதாவது ஒரு குருவி
நிலைகுத்திய என் பார்வைப்பரப்பைத்
தாண்டிப் பறப்பதில், நான்
இதுவரை வாழ்ந்த உலகில்
என் மனிதரைக் காண்பேன்
பைத்தியமென்று நீங்கள் நினைக்கலாம்
ஆனால்,
எதைத்தான் இழப்பினும்
ஊனிலும் உணர்விலும்
கொண்ட உறுதி தளராதிருக்க
அவர்களுக்கு நான் அனுப்பும் செய்தி
இவைகளிடம்தான் உள்ளது ஐயா.

*

வேலி

நட்சத்திரப் பூக்களை
எண்ணமுடியாமல்
மேலே கவிழ்ந்தபடி கூரை
ஒட்டடைகள் படிந்து
கறுப்பாய்ப் போனது
கம்பி போட்ட சாளரம் கூட
உயரமாய்,
ஆனாலும் திறந்தபடி
அதனூடே காற்று;
எப்பொழுதும்
மிகவும் இரகசியமாய்
உன்னிடம் என்னை
அழைக்கிற காற்று
என்னைச் சூழவும் சுவர்கள்தான்
நச்…நச் என்று
ஓயாமல் கத்திக் கொண்டிருக்கிற
பல்லிகள் ஊர்கிற சுவர்கள்
அவையும்
ஒட்டடைகள் படிந்து
எப்போதோ கறுத்துப் போனவை.

உனக்காக நான்
தனிமையிலே தோய்ந்தவளாய்
இங்கே காத்திருக்கிறேன்
பழைய பஞ்சாங்கங்களில்
புதிதாக
நம்பிக்கை தருவதாய்
ஒரு சொல்லைத் தேடிப்பார்ர்த்தபடி.

எப்பொழுதுதான் என்னால்
நீ வசிக்கின்ற அந்த
திறந்த வெளிக்கு வரமுடியும்?
உன் இருப்பிடம்
இங்கிருந்து வெகு தொலைவோ?
இரண்டு சிட்டுக்குருவிகளை
இங்கே அனுப்பேன்!
அல்லது
இரண்டு வண்ணத்துப் பூச்சிகளையாவது..

(1981)

*

இன்னும் வராத சேதி 1

புதிதாகப் பெயர்ந்த சோளகத்தில்
தெற்கிருந்து பூவாசம்
உன் வீட்டுப் பக்கம்தான்
எங்கேனும்
கோடை மழைக்குக் காட்டுமல்லி
பூத்திருக்கும்.

இங்கே,
முற்றத்து மல்லிகைக்குத்
தேன்சிட்டும் வந்தாச்சு
‘விர்-‘ என்று பின்னால்
அலைகின்ற சோடியுடன்…..

வெள்ளையும் மஞ்சளுமாய்
வண்ணத்திப் பூச்சிகளும், படையாக
செவ்வரளி வரிசைகளில்
காற்றில் மிதந்தபடி.

வீட்டுக்குப் பின் தோப்பில்
மரங்கள் சலசலக்க
குருவிகளின் வம்பளப்பு
தினமும்தான் புதுசாக.

ஆனாலும்,
நீ சொன்ன சேதியை
இன்னும் ஒன்றுமே தரவில்லை
காற்றுங் கூட.

(1986)

*

இன்னும் வராத சேதி 2

வெட்ட வெளி கூடச்
சிறைதான் இங்கே.
கிடுகு வேலியும்
ஒரு பெரும் மதில்தான்.

காற்றுக்கும் காவலுண்டு
ஆனாலும்,

கூரைக்கு மேலாக
அள்காட்டி கிரீச்சிட்டுப்
பறக்கும் நள்ளிரவுப் பொழுதுகளில்
நான் மட்டும்
விழித்திருப்பேன்.
சோளகம் நுழைவதற்காய்
சாளரத்தைத் திறந்து வைப்பேன்.

அப்போது,
வரிசையாய் மின்னுகிற
மூன்று வெள்ளிகளும்
என் சாளரத்தைக் கடக்கு முன்பு

மெல்ல, அதை அனுப்பு.

(1986)

*

கத்திருப்பு எதற்கு?

எதற்காக இந்தக் காத்திருப்பு?
வயல் தழுவிய பனியும்
மலை மூடிய முகிலும்
கரைவதற்காகவா
இல்லையேல்
காலைச் செம்பொன் பரிதி
வான் முகட்டை அடைவதற்காகவா?
அது வரையில் என்னால்
காத்திருக்க முடியாது
என் அன்பே
எத்தனை பொழுதுகள்
இவ்விதம் கழிந்தன?

காதல் பொங்கும் கண்களை
மதியச் சூரியன் பொசுக்கி விடுகிறான்
கடலலைகள் அழகு பெறுவதும்
தென்னோலையில் காற்று
கீதம் இசைப்பதும்
காலையில், அல்லது
மாலையில் மட்டுமே!
ஆனால்
எமது பூமி எமது பொழுதுகள்
எதுவுமே எமக்கு
இல்லையென்றான பின்
இது போல் ஒரு பொழுது
கிடைக்காமலும் போகலாம்…
தொடரும் இரவின் இருளில்
எதுவும் நடக்கலாம்.

ஆதலால் அன்பே
இந்த அதிகாலையின்
ஆழ்ந்த அமைதியில்
நாம் இணைவோம்…

(1983)

*

இன்னொருவனுக்கு….

இப்போதும் என்னை
நினைத்துக் கொண்டுதான்
இருக்கிறாயா?

‘மறந்து விடு’ என்று
உனக்கு,
நான் சொல்ல முடியாதுதான்
இருந்தாலும்
பொருந்தாத வேஷங்கள் எதற்காக?

நீயும் நானுமாய்
நடந்த வெளிகளில்
இன்று,
கட்டிடங்கள் அரைகுறையாய்…
சூழவும் மணல்
தடங்களுடன்
‘அவனதும் என்னதும்’
உனக்கு நினைவிருக்கிறதா?
அந்த மஞ்சள் மலர்கள்…
இப்போதும்,
மரம் நிறைய,
தரை நிறைய
மஞ்சள் தான்

மற்றபடி, இங்கு
எல்லாமே படுமோசம்!
இன்று,
இவனருகில்
மணல் வெளியில்
திரிதலில்
ஏனோ உன்மிகம்
நினைவுக்கு வருகிறது,
அடிக்கடி,
ஒரு புரியாத புத்தகத்தைப்
படிக்க விரும்புகிற
குழந்தையின்
முகம் போல….

(1999)

TAGS
Share This