ஆதித் தூசு

ஆதித் தூசு

போகன் சங்கரின் மொழியுலகிற்கு அலாதியானது என்று பெயர். அதற்குள் யாரும் எதுவும் சுந்தந்திரமாக வந்தும் வாழ்ந்தும் விலகியும் செல்லலாம். மனிதர்களின் அக உலகின் வினோதங்களை எழுதும் பொழுது, தோற்பாவைக் கயிறென அவர் விரல்கள் மொழியை ஆட்டுகின்றன.

அவரது கவிதைகளில் உள்ள சுயவிசாரணை எனும் பாவனை சாதரண வாசகருக்கு எரிச்சலையும் கோபத்தையும் மூட்டக்கூடியது. அவை பரிகாசத்தினதும் எள்ளலதும் உணர்கொம்புகள் கொண்டவை. அதனால் சராசரி அரசியல் சரிநிலைகள் கொண்டவர்களின் அறிவு மூர்க்கமாகச் சீண்டப்படும். அவர்களின் பாவனைகளைச் சீண்டி அந்த மனநிலைகளின் போலிகளை நிலைக்கண்ணாடியென உணர வைக்கும் கவிதைகள் அவை.

போகனின் கவிதைகள் துல்லியமான சொற் தேர்வுகள் கொண்டவை அல்ல. அவை நேர்த்தியற்றவையின் கலை. ஒழுங்காக அடுக்கப்பட்ட கார்போர்ட் பெட்டிகளாலான வீடொன்றை எதற்கென்றே தெரியாமல் உதைத்துவிட்டுச் சிரிக்கும் சிறுவனின் குறும்புள்ள புன்னகை அவரது கவிதைகளில் உள்ளன. அதே பொழுது, மெய்யறிதலின் தீவிரமும் அகத்தின் கொந்தளிப்பும் கைவிடப்படுதலும் வலியும் கூர் முட்க் குத்திய உள்ளங்காலெனக் துடிக்க வைக்கும் கவிதைகளும் உள்ளன.

அவரது நகைச்சுவை உணர்வு நோவில் தழுவிய களிம்பென வாழ்வின் போலித்தனங்களுக்கும் அரசியல் நேர்த்திகளுக்கும் எதிரில் மருந்தென ஆகிறது. அன்றாட வாழ்வின் ஏராளமான நுண்ணிய சித்தரிப்புகளும் கூர்மையான அவதானங்களும் அவரது கவிதைகளின் மதிப்பை அதிகரித்துக் கொண்டே செல்வன. வெள்ளொளியென நுழையும் கீற்று வானவில்லென வெளியேறும் மனதின் கவிதைகள் இவை.

*
ஜெயமோகன் எழுதிய கட்டுரையொன்று இப்படித் தொடங்கும், “கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் சொன்ன ஒரு வரி உண்டு. கவிஞன் திரும்பத் திரும்ப ‘இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?’ என்று கேட்கிறான். மேலே இருந்து மேற்படியான் ‘போடா மயிரே’ என்று அதற்குப் பதில் சொல்கிறான். கவிஞன் திருப்தியுடன் ‘அப்டிச்சொல்லு, பின்னே?’ என்றபடி கவிதை எழுத ஆரம்பிக்கிறான்”

(போகன் சங்கர்)

*

“தூக்க மாத்திரைகளின்
நேர்மையும்
காலத் தேய்மானத்துக்குட்பட்டதே”
என்றாள் அவள்.
“ஐந்து மில்லிகிராம்
கொஞ்ச காலத்துக்குப் பிறகு
பத்து மில்லிகிராமாகச்
சம்பளத்தை உயர்த்திக் கேட்கும்.
பிறகு இருபதாக.
The law of diminishing returns
எல்லா விஷயத்துக்கும்
பொருந்தக் கூடியதே” என்றாள்.
“ஒரு எளிய அன்பைப் பெற
சிறிய புன்னகையைப் பெற
நீ செய்ய வேண்டிய காரியங்கள்
புரியவேண்டிய தியாகங்களின்
எண்ணிக்கை
கூடிக்கொண்டே போகும்.
ஒரு நாள்
அவற்றின் சுமை தாங்காது
உன் அச்சு முறிந்து
நீ உடைந்து போவாய்.

*

கை தவறி
உடைத்த விஷயங்களை
திரும்ப ஒட்டிச்
சரிசெய்ய
நான் முயன்றிருக்கிறேன்.

ஆனால்
அழகான பிரதிமைகள்
திரும்ப உருவாக்கப் படும்போது
கோரமான உருவங்களாகி விடுகின்றன

எவ்வளவு அழகாய்
இருந்தனவோ
அவ்வளவு கோரம்.

*

யாரிடமாவது பேசவேண்டும் போலிருக்கிறது.
ஆனால் எல்லோரும் பழைய விஷயங்கள் பற்றிப் பேசுகிறார்கள்.
பழைய விஷயங்களில் இருந்து பேசுகிறார்கள்.
ஒரு மன்னிப்பு கோரலோடோ விளக்கத்தோடோ எப்போதும் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.
பிறகு அது பழைய பேச்சாகிவிடுகிறது.
பழைய சண்டைகள்,சந்தேகங்கள் எல்லாம் திரும்ப வந்துவிடுகிறது.
நான் புதிதாய் எதையாவது பேச விரும்புகிறேன்.
அதற்கு புதிய மனிதர்கள்தான் தேவை.

ஆனால் புதியவர்களும் தொட்டவுடன் கல்படிவமாகி விடுகிறார்கள்.
யாரோ ஒரு பழையவரின் சாயல்,புன்னகை,ஆங்காரம்
அவர்கள் மீது படிந்து நிற்கிறது.

தூசு.
தூசின் மேல் தூசு.
தூசு வளர்ந்துகொண்டே போகிறது.
நானாய்
நீயாய்
ஊராய்
நாடாய்
பிரபஞ்சமாய்.

பிரபஞ்சம்
ஒரு தூசு கோபுரம்.
அதன் சாளரங்களிலிருந்து
பறக்கும் தூசு புறாக்கள்
நீயும் நானும்.
எங்கோ விம்மலோடே
துடித்துக்கொண்டிருக்கும்
ஒரு ஆதித் தூசைத் தேடி.

*

ஒரு பெரும் அவமானத்தை
ஏந்தக்கூடிய கோப்பை
உங்களிடம்
எப்போதும் தயாராகவே உள்ளது
என்பதை
அவர்கள் எப்போதோ
கண்டுபிடித்துவிட்டார்கள்

கோப்பையை ஏந்திக் கொண்டிருக்கும்
உங்களுக்குத் தெரியாததென்ன?

*

தொடர்ந்து வெல்லத் தவறுகிறவனை
பெண் நுட்பமாக விலக்குகிறாள்.

காதலை நட்பாக
அவள் மாற்றி இருப்பதை
அவன் உணரத் துவங்கும்போது
நட்பை அவள் பச்சாதபமாகவும்
அதன் பின்பு வெறும்
பரிச்சயமாகவும் மாற்றி இருப்பாள் .

ஆனால் இதனால்
ஏதோ அநீதி
இழைக்கப்பட்டது போல்
அவன் உணர்வது என்ன?

வெற்றி என்பது கள்ளக் காசு.
எப்போது வேண்டுமானாலும்
மதிப்பு வீழ்ந்து விடக் கூடிய
பலவீனமுடையது.

அவன் நிரந்தரமான மதிப்புடைய ஒன்றை
அவளுக்கு அளித்திருக்க வேண்டும்.

அதற்கு நிரந்தரமான ஒன்று எது
என்று
அவன் அறிந்திருக்க வேண்டும்.

அதை அவன் அறிந்திருந்தால் சரியான ஒருவரிடமே
அதை அளித்திருப்பான்.

*

எனக்கு என் மேல் கோபம்
மற்றவர்கள் போல் தந்திரமாய் இருக்க முடியவில்லையே
என்று கோபம்.

தேவைப்படும்போது
எதிராளி செய்வது போல்
மவுனமாய் இருக்க முடியவில்லையே என்று கோபம்.

என்றாவது அவர்கள் போல் எதையாவது செய்துவிட்டு
குற்ற உணர்வின்றி தூங்க முடியவில்லையே என்ற கோபம்.

போலியாய் முகமன் சொல்லமுடியவில்லை என்று கோபம்.

சொல்லிவிட்டு அருவெறுப்பு அடையாமல் இருக்கமுடியவில்லை என்று கோபம்.

நான் ஏன் எனது எல்லா கார்டுகளையும்
முதலிலேயே காட்டிவிடுகிறேன் என்று கோபம்.

நான் ஏன் எதிர் தரப்பின் நியாயத்தையும் சேர்த்து
எல்லாவற்றையும் பேசிவிடுகிறேன் என்று கோபம்.

மற்றவர் போல்
சமயோசிதமான பொய்களை
முன்கூட்டியே யோசித்து வைத்துக்கொள்ள முடியவில்லையே என்று கோபம்.

தெருவில் மயங்கி விழுந்தவனுக்கு
உதவிக்கொண்டிருக்கும்போது
அவன் என் பர்சை திருடிவிட்டதைக் கவனிக்கவில்லையே
என்று கோபம்.

முட்டாள் போல் இந்தக் கவிதையையும் வேறு
எழுதிவிட்டேனே என்று கோபம்.

*

எல்லா தெய்வங்களாலும்
கைவிடப்பட்ட
ஒரு நண்பனை
நேற்று தெருவில் பார்த்தேன்.
ஒரு சாலையோரப்
பிள்ளையார்கோவில் வாசலில்
அமர்ந்திருந்தான்.

மனம் சிதறியவர்களின்
உலகச் சீருடையான
கிழிந்த ஆடைகளை
அணிந்திருந்தான்.
பரட்டைத் தலை.
கோணிப் பை.
அதனுள் அவனது
சிதறிய மனம்.

நான் யார் என்று அறியாத பார்வை.
“ஏசு கிறிஸ்துவோ?
ஏனித்தனை தாமதம்?
உலகம் வற்றி உலர்ந்து
சுக்காய்ப் போய்விட்டதே?”
என்றான்.

நான் “சாப்பிட்டாயா?”
என்றேன்.
அவன் “இறைத்தூதரே!
சாப்பாடு வேண்டாம்.
பீடி மட்டும் வாங்கித் தாரும்!”
என்றான்.

வாங்கிக் கொடுத்த
பீடியைப் பற்றவைக்க முடியாது
அவன் கைகள் நடுங்கின.

நான் உதவி செய்தேன்.

அவன் பற்ற வைத்துக் கொண்டு
உள்பக்கம் திரும்பி
‘கணேசா!
பீடி வேணுமா? “

அவன் எந்தத் தெய்வத்தையும்
கைவிடவில்லை.

*

உங்கள் துயரைச் சொல்ல
(மிகுந்த தயக்கத்துக்குப் பிறகுதான் )
நீங்கள் நெருக்கமானவர் என்று நினைக்கும்
யாரோ ஒருவரை
போனில் அழைக்கிறீர்கள்.

நீங்கள் அழைக்கும் போதெல்லாம்
அந்த நெருக்கமானவர் காரோட்டிக் கொண்டிருக்கிறார்
அல்லது
நீங்கள் கண்ணீர் விடும் இடைவேளையில்
எதையோ தின்றுகொண்டிருக்கிறார்
என்பதை நீங்கள்
சில தடவைகளுக்குப் பிறகுதான்
உணர்கிறீர்கள்.
துக்கத்தின் சூடான ஆவேச ஒழுக்கு
முதலில் இவை எதையும்
நீங்கள் கவனிக்க அனுமதிக்கவில்லை

ஒரு தடவை அவர்களில் ஒருவர்
மூத்திரம் போய் விட்டு
டாய்லட்டில் ஃபிளஷ்
செய்தவாறே
உங்களுக்கு ஏதோ
ஆறுதல் சொல்கிறார்.

நீங்கள் அவமானத்தில் குறுகிப் போய் விடுகிறீர்கள்.

அப்படியே அங்கேயே
மடங்கி அமர்ந்து
அழுகிறீர்கள்.

ஏதோ ஒரு மென்மையான
சிறிய கை உங்களைத் தொடுகிறது.
நீங்கள் நிமிர்ந்து பார்க்கிறீர்கள்.

‘அங்கிளை தொந்திரவு செய்யக் கூடாது!”
ஒரு பெரிய கை
அதை எடுத்துக் கொண்டு
அவசரமாக விலகுகிறதைக்
காண்கிறீர்கள்.

*

The New Improved Adam

விவசாயிகளுக்கு
நான் எதுவும் செய்யவில்லை
என்பது பொய்.

நான் வாரம்தோறும்
ஒருமுறையாவது
ராட்சத மால்களில்
விலையதிகம் இருந்தாலும்
ஆர்கானிக் ஆப்பிள்களையே
வாங்குகிறேன்.

பெண்களை
நான் மதிக்கவில்லை
என்பது இன்னொரு பொய்.

விலையுயர்ந்த
ஆர்கானிக் ஆப்பிள்களை மட்டுமே
சாப்பிடும்
என்னைத்தான்
நான் அவர்களுக்கு வழங்குகிறேன்.

TAGS
Share This