திராவகத்தின் மொழி

திராவகத்தின் மொழி

ஆவேசம் கவிதைக்குள் புயற் காற்றின் கண்ணென உறைகையில் கலை நிகழும் எழுத்துகள் ஆழியாளினுடையவை. பெண் மனம் அனுபவிக்கும் உலகத்தில் ஆவேசம் ஓர் எதிர்கொள் முறையென எழுதப்பட்டே வருகிறது. அவை அம்மனங்களின் நீதியுணர்ச்சியிலிருந்தும் அன்றாடத்தின் அவநம்பிக்கையிலிருந்தும் எழுந்து இன்னொரு புறவுலகை உருவாக்குகின்றன. அது பெண்கள் உரத்துப் பேசும் உலகம். இலக்கியத்திலும் பண்பாட்டிலும் அதற்கு முக்கியமான பங்களிப்புண்டு. எவ்வளவு ஆவேசமாகவும் அம்மொழி நிகழலாம்.

ஆழியாளின் கவிதைகளில் உள்ள முக்கியமான அம்சம் ஆவேசம். அவரது மனம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் நுரைத்துத் தகிக்கும் பொழுது வடிவ முழுமை கூடிய கேள்விகள் கவிதைகளாகின்றன. அதை ஆதித்தாயின் பெண் மொழி என்று அவர் சொல்வதை ஆமோதிக்கிறேன். இன்னொரு அம்சம், அவரது அடுக்குமுறையும் உள்ளூர்த்தன்மையும்.

வட்டார வழக்குகள் ஆழியாளின் கவிதைகளில், கிளைகளில் இயல்பாய் வந்தமரும் கிளிகள் போல் மொழியில் கொழுவிப்பிடித்தபடி பேசுகின்றன. அவ் வட்டார வழக்குகளின் வழி எழும் புறச்சித்திரங்கள் அம்மனிதர்களின் வாழ்வின் நிறங்களை எழுதிச் செல்கிறது.

முதல் வரியிலிருந்து கவிதை எப்படித் திகழ ஆரம்பிக்கிறது, இறுதிச் சொல் எப்படி வந்தமைகிறது என்பவை தற்செயல்களின் பெருக்கே. ஆழியாளின் கவிதைகள், சரளமான தற்செயல்களின் வழி அவதானிப்புகள் ஒருங்கு திரள்கையில் கவிதையின் அடுக்குமுறை தனக்குள் ஒரு கோலத் தொடர்ச்சியை அடைகிறது. தானே தனக்குள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, திடுமெனப் பற்றிக் கொள்ளும் தீக் கொழுந்துகளின் திரிச்சுடரென எழும் சொற்கள், உரத்துப்பேசவும், வெளியெழுந்து உரையாடவும் தொடங்குகின்றன.

மொழி ஒரு திராவகமெனக் கொதித்துக் கொண்டிருக்கும் மனத்துள், அது தளும்பிச் சரிகையில் அவை படும் இடங்களை எரிக்கும் தன்மை கொண்டவை. ஆண்களினதும் ஆணாதிக்கத்தினதும் மன அமைப்புகளையும் பண்பாட்டில் அது நிலை பெற்று உறைவதையும் ஆழியாளின் கவிதைகள் திராவக மொழியெனப் பட்டு எரிக்கிறது.

யுத்தம் பற்றிய அவரது விமர்சனங்கள் நூற்றுக்கணக்கான வரிகளில் அது அழிக்கும் வாழ்வினை மூர்க்கத்துடன் எதிர்க்கிறது. அதற்குள் நிகழும் ஒடுக்குமுறைகள், ஒடுக்குமுறைக்கெதிராய்ப் போராடுபவர்களின் வன்முறை, நாங்கள் இழந்து கொண்டிருப்பது அடிப்படையில் எவை என்பவன அவரது அக்காலக் கவிதைகளின் சாராம்சமான தன்மைகள். அவ்வரிகள் தங்களது நீதியுணர்ச்சியை பெண்களின் கண்களின் வழி உருக்கொடுக்கின்றன.

*

காது கொள்ளாக் காட்சிகள்

மழை ஓய்ந்ததும்
ஓட்டுக் கூரைகள்
பளீரெனச் சுத்தமாயக்; கிடந்தன.
வானம் இன்னமும்;
நீலம் பாரிக்காத மனமாய்.
தார் ரோடுகள்
வானவில்லை இடைக்கிடை
நினைவூட்ட,
பூமிப் பரப்பு முழுதினின்றும்
புகையெழுந்து
சாம்பிராணியையும் அகிலையும்
நினைவிருத்த,
மண்வாசனை சுகந்த கீதமாய்
நாசி வருடிப் போயிற்று.

என் எதிரே
வந்த இராணுவ வண்டி
விலத்திப் போகையில்,
பஞ்சு மிட்டாயை கைமாற்றி
வலது விரற் பிஞ்சுகளால்
கையை எக்கி,
உயர வீசி ஆட்டுகிறாள்
ஓர்; சிறுமி.

இனிய வான்கடிதப்
பதிலாக
அதனுள் நின்ற
அவர்களில் பலரும்
அவ்வாறே கைகாட்ட,
வியப்பில் ஒரு நொடி
உறைந்த இரத்தம்
அவசரமாய் ஓடியது
உரத்துக் கேட்டபடி;
“என் நாட்டில் போரா,
யார் சொன்னது?”

(1996)

*

பதில்

என் ஆதித்தாயின்
முதுகில் பட்ட
திருக்கைச் சவுக்கடி
நான் காணும் ஒவ்வொரு
முகத்திலும்
தழும்பாய் தேமலாய்
படர்ந்து கிடக்கிறது.

அடையாளத்தை
உணரும் போதெல்லாம்
வீரியங் கொண்ட
ஊழிச்சவுக்கின் ஒலி
மீளவும் என்னை
வலிக்கப் பண்ணும்.

என்னைப் பிளந்து
ரத்த உடுக்கள்
வெடித்துப் பறந்து
தனித்துச் சிதறிக் கொட்டும்.

தனித்து,
அவை ஒவ்வொன்றும்
கிரகங்கள் என
உருப்பெறும்.
தன்னிச்சையாய்ச் சுற்றி வரும்
தாள லயத்துடன்.

அங்கு
எனக்கென
ஓர் பிரபஞ்சம் உருவாகும்
அப்போது உயிர் பெறும்
எனக்கான வரிவடிவங்களுடன் கூடிய
என்மொழி.

அதன் பின்
தேமல் படர்ந்த எவனாயினும்
என்னோடு உரையாடட்டும்
அப்போது கூறுகிறேன்
பதிலை,
என் மொழியில்
என் ஆதித்தாயின்
பெண் மொழியில்.

அதுவரை நீ காத்திரு.

(1997)

*

மன்னம்பேரிகள்

காலப் பொழுதுகள் பலவற்றில்
வீதி வேலி ஓரங்களில்
நாற்சந்தி சந்தைகளில்
பிரயாணங்கள்; பலவற்றில் கண்டிருக்கிறேன்.

நாய் கரடி ஓநாய்
கழுகு பூனை எருதாய்ப்
பல வடிவங்கள் அதற்குண்டு.

தந்திக் கம்பத் தருகே
கால் தூக்கியபடிக்கு
என்னை உற்றுக் கிடக்கும்
அம் மிருகம் துயின்று
நாட்கள் பலவாகியிருக்கும்.

அதன் கண்கள்
நான் அறியாததோர்
மிருகத்தின் கண்களைப் பறைசாற்றிற்று
அவற்றின் பாலைத் தாகம்
அறியாப் பாஷையை
எனக்குள் உணர்த்திற்று.

அதன் கண்கள்
நான் அறியாததோர்
மிருகத்தின் கண்களைப் பறைசாற்றிற்று
அவற்றின் பாலைத் தாகம்
அறியாப் பாஷையை
எனக்குள் உணர்த்திற்று.

அழகி மன்னம்பேரிக்கும்;
அவள் கோணேஸ்வரிக்கும்;
புரிந்த வன்மொழியாகத்தான்
இது இருக்கும் என
அவதியாய் எட்டிக் கடந்து போனேன்.

அன்றைய அலைச்சலும்
மனக்குமைச்சலும் கூடிய
தூக்கத்தின் இடையில் – நானும்
அவள்களுக்குப் புரிந்த
அதே அதே ஆழத்திணிக்கப்பட்ட
பாஷையை புரிந்து கொண்டேன்.

அருகே கணவன்
மூச்சு ஆறிக்கிடக்கிறான்.

மன்னம்பேரி(22) 1971 ஜே.வி.பி கிளர்ச்சியில் பங்கு கொண்டவள். பெண்கள் அணிக்கு தலைமை தாங்கியவள். 1971 ஏப்பிரல் 16இல் மன்னம்பேரி படையினரால் கைது செய்யப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டாள்.

கோணேஸ்வரி(33) அம்பாறை சென்றல் கேம்ப் 1ம் கொலனியைச் சேர்ந்தவள். 1997 மே 17 இரவு இவரது வீட்டுக்குச் சென்ற படையினர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியபின் அவளின் யோனியில் கிரனெட் வைத்து வெடிக்கச் செய்து சிதறடித்துச் சென்றனர்.

(1997)

*

பயணம்

நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்
கூடவே பலரும்.

இடையிடையே புன்னகைகள்
குசல விசாரிப்புகள்.

சிலர் மென்றபடி
சிலர் வாய் பிளந்து தூங்கியபடி
சிலர் வானவெளியில் வளையக்கலங்களைப் புகைத்தனுப்பி
எதை எந்த மண்டலத்தில் இறக்கலாம் என்ற
எண்ணத்தில் மிதந்தபடி,
எதிர்ப்பட்ட மூடிய சேலை முலைகளை
சுவைத்தபடி வேறு சிலர்,
இன்னும் சிலர் பேசத் தொடங்கியிருந்தனர்.

என்னிடமும் சில கேள்விகள்
விண்வெளிக் கற்களைப் போல்
சுழன்று பறந்து விர்ரெனக் குத்திட்டு
நேராய் வந்து விழுந்தபடி கிடந்தன.

நாங்கள் கதைக்கத் தொடங்கினோம்
தாய்மொழி, தேசியமொழி,
உலகமொழி, பழையமொழி
முதல்மொழி, மூன்றாம்மொழி, சைகைமொழி என
பலமொழிகளிலும் கதைத்தோம்.

நான் சொல்வது பொய்யென்று
அவர்கள் அறிந்தார்கள்
அவர்கள் பேச்சு புழுகென்று
நானும் அறிந்தேன்
ஆளை ஆள் அறிந்து கொண்டபோது,
என்கதையெல்லாம் வெற்றுக்குமிழிகள் என
எனக்குள் அறிகிறேன்
அவர்கள் வாக்கு பொய்யென்று
தமக்குள் அறிவார்களா?

எதுவாய் இருந்தால் என்ன?
நாங்கள் தொடர்ந்து கதைத்தோம்
பறைந்தோம், செப்பினோம்,
உரையாடினோம், திருவாய்மொழிந்தோம், பேசினோம் ….

குமிறும் ஒரு பத்தாயிரத்து எண்பத்து எட்டுக்கோடி அலைகள்
மலையாய் சீறிக் கொந்தளித்து எழுந்து
துளாவி எமை இழுத்துச் சுருட்டி – எங்கோ
அளவறியா ஒற்றைப் பொந்தின் ஆழத்தில்
திணித்துச் செருகி
சுடு மண்படைகளால் அடுக்கி மூடி – மேலே
குறுங்கற்களால் செப்பனிட்டு மேவிக் களையாறி
முறுவலிக்கும் ஆழ்கடலின் மௌனத்தினூடு
உண்மை நீலமாய்க் கசியும் வரை
பேசினோம் பேசினோம்
நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்;.

உயிர்க்காற்றின் வீரிட்ட அலறல்
உடற்குகையின் இருள்வெளியில் அலமலந்து அலமலந்து மோதி
எதிரொலித்தது.

(1999)

*

கொப்பித்தாளில் கிடந்த (பான் கீ மூனுக்கு விளங்காத) குறிப்பு யாருடையது?

என்ர ஊர் சின்ன ஊர்

பெரியம்மா, பெரியப்பாக்களாலும் – மாமா
அத்தை சித்தி சித்தப்பாக்களாலும்,

கிளி மாமி, விஜி மாமி
வடிவு அன்ரி, வனிதா அன்ரி
சொக்கா அங்கிள்களாலும் நிறைஞ்ச ஊர்.

அம்மம்மா, அம்மப்பாவும்
அப்பப்பா, அப்பம்மாவும்
தாத்தா பாட்டி ஆச்சிகளும் எனக்கு இருந்தார்கள்.

ஒரு நாள்
மீன் விக்கப்போன செல்லம்மா பாட்டியை
மணிக்கூட்டுக் கோபுரத்துக்குக் கீழே கூறாக்கி வீசினார்கள்.

பெரிய மாமாவும், ராஜி அத்தையும்
வெள்ளவத்தைப் பெற்றோல் நெருப்பில் கருகினர்.

பிறகு
ரவிச் சித்தப்பா இயக்கத்துக்குப் போனார்.

வனிதா அன்ரி இன்னோர் இயக்கத்துக்கு போனா.

சேகர் சித்தப்பா காணாமல் போனார்.

சித்தி சின்னாபின்னமாகிச் செத்துப்போனா
(என்ரை ஆசைச் சித்தி)
ஆச்சியையும் போட்டுத் தள்ளினாங்கள்.

சொக்கா அங்கிள் துரோகியாய்த் தொங்கினார்.

நோர்மல் சாவு அப்பப்பாவுக்கு.

சுவிஸில் கிளி மாமி
விஜி மாமியும் மாமாவும் கனடா.

இரண்டு பக்கமும் ஷெல் அடிச்சு பல தலைகள் சிதறிப் போச்சு.

இப்ப
பென்னாம்பெரிய உலகத்தில் இருக்கிறேன் நான் – என்போல
நிறையச் சிறுவர்களோடு.

எங்களைச் சுற்றிலும் முள்வேலி
கண்டுபிடி எங்களைக் கண்டுபிடி – எங்க
கண்டுபிடி எங்களைக் கண்டுபிடி.

(2009)

*

அம்மா

அம்மா
தினமும்
புல்வெளியைக் கடந்து,
தார் வீதியைக் கடந்து,
மைதானத்தைக் கடந்து,
ஓடுகின்றாள்.

பள்ளிக்கூடத்தில்
தெருவில்,
விளையாட்டுத் திடலில்,
வயல்களில்,
தொடர்மாடி வேலைத்தளத்தில்,
வீட்டில் என
எங்கும்
அம்மா சில்லுக்கட்டினாற் போல் ஓடினபடியே இருக்கிறாள்.

நம் ஓய்வுநேரங்களிலும்,
விடுமுறை நாட்களிலும், பண்டிகைக் காலங்களிலும் கூட
அம்மா அவதியாய் ஓடிக்கொண்டுதான் இருக்கிறாள்.

இலைகளைக் காணாது பாதையோரத்து மரங்கள்
வெலவெலத்து நிற்கின்ற நாட்களில்,
சருகுகளைச் சலசலக்க வைத்தபடி
அம்மா ஓடுகிறாள்.

காதோரச் சவ்வுகளில் வலிசுண்ட
கிளைகளாய் உறைந்து தொங்குகிற
கொடும் பனியின் வெண்மையூடு,
ஒரு சறுக்கு வித்தைக்காரியைப் போல்
அம்மா குளிரில் ஓடுகிறாள்.

அம்மா
எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறாள்.
நேரம், நேரம் என்று ஆலாய்ப் பறக்கிறாள்.
அமைதியின் நிழற் பொழுதுகளில்
ஏகோன் காய்கள் பொத் பொத்தெனெ உதிரும் போதும்
பறவைக்கூட்டங்கள் ஜிவ்வென நீருள் இறங்கும் போதும்
அம்மாவின் கால்கள் மாத்திரம் ஓடிக்கொண்டு இருக்கின்றன.

அம்மா ஓடிக்கொண்டே இருக்கிறாள்
வசந்தம் முளைகட்டி மலர்வதைப்போல்
தலைதிருப்பி
என்னையும், உன்னையும் பார்த்தபடி
புன்னகைத்துக் கையசைத்த வண்ணம்
அதோ அம்மா ஓடுகிறாள்.

(2011)

TAGS
Share This