புறமுதுகிடுதல்

புறமுதுகிடுதல்

விதை குழும செயற்பாட்டாளர்களின் பாலியல் சுரண்டல் குறித்த எதிர்வினையாகவே ஆரம்பித்த உரையாடல் இப்போ வேறு எங்கோ போய் நிற்கிறது. கிரிசாந் கெட்டிக்காரன். அறிவாளியான தன்மீது பாமரர்கள் தொடுக்கும் தாக்குதல் என்பதுபோல திசைதிருப்பி அங்கிருந்து ஜெயமோகன் மறுதலிப்பாக மாற்றி பாலியல் குற்றச்சாட்டுகளை நீர்த்துப்போக செய்திருக்கிறார். சரி, நாம் திரும்ப விசயத்துக்கு வருவோம்.

சமூகத்தில் சக மனிதர்கள் செய்யும் பிழைகளை, சுரண்டல்களை சுட்டிக்காட்டுவது, கண்டிப்பது, கட்டுரை எழுதுவது ; அதே தம் வாழ்வில் தமக்கு வசதியாக பிழைகளையும் சுரண்டல்களையும் செய்துவிட்டு கமுக்கமாக இருப்பது அயோக்கியத்தனம். அதைப்போலவே, ஏனையவர்களின் தவறுகளை கண்டிப்பது, அதே தம் நண்பர்களின் பிழைகளை சந்தர்ப்பத்துக்கு ஏற்ப பேசி காப்பாற்றிவிடுவது அயோக்கியத்தனம்.

யதார்த்தனும் கிரிசாந்தும் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். கடந்த பாலியல் சுரண்டல் குறித்த உரையாடல்களில் கிரிசாந் இந்த தவறுகளை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள தயங்கினாலும் குழப்பமான, மழுப்பலான பதில்களை வழங்கிவிட்டு சென்றிருக்கிறார். அதன் ஒரு பகுதியை இணைத்து இந்த உரையாடலை தொடர்கிறேன்.

ஒரே நேரத்தில் பல்வேறு பெண்களுடன் காதல் உறவில் இருந்த எழுத்தாளர் யதார்த்தன் அந்த விபரங்களை வெளியே கசியவிட்டு குறித்த பெண்களின் சமூக பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியிருக்கிறார். அதன்மூலம் தனது துணைவியார் மேலான சுரண்டலையும் நிகழ்த்தியிருக்கிறார்.

இப்போது எனது கேள்வி, இத்தனையும் தெரிந்துகொண்டிருந்தும் “யதார்த்தன் அவரது உறவுகள் குறித்த உங்கள் கேள்விக்கு தனது கட்டுரையில் பதிலளிப்பார்” என்கிறார் கிரிசாந். இது என்ன வகையான காப்பாற்றுதல்? யதார்த்தன் என்னவகையான பதிலை கட்டுரையில் எழுதமுடியும் என்று கிரிசாந் நினைக்கிறார்? யதார்த்தனின் பல பெண்களுடனான உறவு பற்றியும் அதன் சிக்கல்கள் பற்றியும் என்னோடு பகிர்ந்துகொண்டது கிரிசாந்தான். என்னோடு மட்டுமல்ல, இலக்கியம் சார்ந்த வேறு சில நண்பர்களோடும் பகிர்ந்திருக்கிறார். அதே தகவல்களை யதார்த்தனின் அப்போதைய துணைவிக்கும் சொல்லியிருக்கிறார். அதன்மூலம் ஏற்பட்ட கசப்புணர்வில் யதார்த்தனும் கிரிசாந்தும் பிரிந்திருக்கிறார்கள். கீழே நான் இணைத்திருக்கும் கிரிசாந்தின் பதிலில் இவையெல்லாம் பெண்கள் மீதான சுரண்டல்தான் என்கிறார். அப்போ யதார்த்தன் செய்தது பாலியல் சுரண்டல்தானே? அதை ஏற்றுக்கொள்வதில் யதார்த்தனுக்கோ கிரிசாந்துக்கோ என்ன தயக்கம்.

இப்போது அதற்கு நேரெதிராக மாறி, யதார்த்தனின் தவறுகளுக்கு முட்டுக்கொடுத்து காப்பாற்றி அவரை தன்னோடு வைத்துக்கொள்ளவேண்டிய தேவை ஏன் கிரிசாந்துக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதே முக்கியமான கேள்வி. அதுபோக தான் பல்லுறவில் இருந்தது உண்மைதான் ஆனால் அது வெவ்வேறு காலப்பகுதி என்றும், தானும் கிரிசாந்தும் பிரிந்ததுக்கு அது காரணமல்ல என்றும் யதார்த்தன் கதைகளை மாற்றி மாற்றி பேசுவதுபோல கிரிசாந்தும் செய்யப்போகிறாரா?

இதை “அவதூறு” என்று சொல்லி கிரிசாந்தும் யதார்த்தனும் கடக்கக்கூடும். வழக்கமாக பாலியல் சுரண்டல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் சொல்லும் பதிலும் இதுவேதான். கடந்தகாலங்களில் இதற்கெதிராகத்தான் விதை குழுமத்தினரின் செயற்பாடும் இருந்திருக்கிறது. ஆனால் தம்மீது குற்றச்சாட்டு வரும்போது அவர்களும் அதையே பயன்படுத்துவது அவர்களுடைய சந்தர்ப்பவாதத்தையே வெளிப்படுத்துகிறது.

குற்றச்சாட்டுக்களின் லிஸ்ட் இன்னும் இருக்கிறது. சுரண்டல்கள் இன்னும் தொடர்கிறது. வெளிப்படுத்துவதில் கவனம் தேவை. எந்த பெண்களும் சிறிதளவும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். அது கத்திமேல் நடப்பதுபோல. சில குற்றச்சாட்டுக்கள் குறித்த பெண்களே வெளிப்படுத்துவார்கள் என நம்புகிறேன். அதேபோல விதை குழுமத்தில் யதார்த்தன் மட்டும்தான் பாலியல் சுரண்டலில் ஈடுபட்டிருக்கிறாரா? மற்றவர்களின் சுரண்டல் பற்றி மதுரன் கதைக்கமாட்டாரா என்ற கேள்வி பல இடங்களில் எழுந்திருக்கிறது. எனக்கு தெரிந்ததை நான் பேசுகிறேன். அதேபோல உங்களுக்கு தெரிந்திருந்தால் நீங்கள் பேசலாம். கூட நிற்பேன்.

அதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கள்ளமௌனம் காக்கும் ஏனைய சமூகசெயற்பாட்டாளர்களையும் அவதானிக்கிறேன். அவர்களிடமும் எனது கேள்வி இருக்கிறது.

தொடர்ந்து பேசுவோம் !

மதுரன் ரவீந்திரன்

*

வணக்கம் மதுரன்,

விதை குழுமம் என்ற அமைப்பினை சமூக செயற்பாட்டிற்கான அமைப்பாகத் தொடங்கியிருந்தோம். இலக்கியம் மட்டுமே சமூக மாற்றத்திற்கான கருவியல்ல. பண்பாட்டுச் செயல்பாடுகளும் சமூக மாற்றத்திற்குத் தேவையென்று கருதினோம். பின்னர் சில வருடங்கள் அமைப்பினுள் பலரும் வந்து பணியாற்றியிருக்கிறார்கள், விலகியிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள் இருக்கலாம். எனக்கு இப்பொழுது எனது தன்னிலை ஒரு செயற்பாட்டாளன் இல்லை, அது கோரக்கூடிய இயல்புகள் இல்லை என்ற எண்ணம் உருவாகிவிட்டது. அது அரசியல் சரிநிலைகளுக்கும் சராசரிகளின் அறங்களுக்கும் கட்டுப்பட வேண்டிய தன்னிலை. வாழ்க்கை அப்படியான எளிய தர்க்கங்களால் தீர்மானிக்கப்படக் கூடியதல்ல. வரையறுக்கப்படக் கூடியதுமல்ல. செயற்பாட்டுக்கு வர முதலிருந்து இப்பொழுது வரை நான் எழுத்தாளர், அதுவே என் அடிப்படையான விசை.

ஒரு பண்பாட்டு அமைப்புத் தேவையெனும் எண்ணமிருந்த எனக்கு அது எவ்வகையான உட்கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும், அதனுள் எவை கரிசனம் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையான புரிதல்களே ஆரம்ப காலத்தில் இருந்தது. பெருமாள் முருகனின் எழுத்துகளைக் கொழுத்தி இந்துத்துவ கும்பல்கள் நிகழ்த்திய வன்முறைக்கெதிராக விதை குழுமம் ஒருங்கிணைத்த போராட்டமே எமது முதலாவது போராட்டம். யாழ்ப்பாண நூலகத்தின் பின் பகுதியில் பத்துப்பேரளவில் பங்கு பற்றியது. அன்றிலிருந்து, ஒரு வருடத்திற்கு முன் வரை ஏராளமான களப்பணிகள், கருத்தியல் சார்ந்த உரையாடல்கள் அமைப்பினால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கடந்த இரு வருடங்களாக அமைப்பினுள் ஏற்பட்ட தனிநபர் முரண்களால் அதன் மையக்குழு இயங்க முடியாமல் போயிற்று. எல்லா அமைப்புகளையும் போல தீவிரம் கொண்ட ஒரு சிலரே அதன் இழுவிசையை முன்னகர்த்தினார்கள். தற்போது விதைகுழுமம் செயற்பாட்டில் இல்லை. இது உள் முரண்பாடே தவிர கருத்தியல் சார்ந்து உண்டான முரண்பாடு அல்ல. வேலைகளில் தாமதங்கள், பிற்போடுதல், தனிநபர் சிக்கல்கள், அதிகமான வேலைப்பளுக்கள் என்பன சிலர் மீது குவிந்தமை என்று பலகாரணிகளால் வினைத்திறன் பாதிக்கப்பட்டு, இறுதியில் அமைப்பு தனது செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டது. இதற்கு மேல் விளக்கம் அளிக்கத் தேவையில்லை.

ஒரு பண்பாட்டு அமைப்பினை உருவாக்குவதும் தொடர்ந்து அதே விசையுடன் பயணிப்பதும் அதிலுள்ள தனிநபர்களின் குணவியல்புகளிலும் தங்கியிருக்கிறது. எவ்வளவு கருத்தியல் ஒற்றுமைகள் இருந்தாலும், தனிநபர் முரண்கள் அதில் ஆழமான செல்வாக்கைச் செலுத்தும் என்பது எனது பட்டறிவு.
அமைப்பின் செயற்பாடுகளின் போதோ அமைப்பினுள்ளோ, பாலியல் சுரண்டல்களோ, நிதி மோசடிகளோ இடம்பெற்றிருக்கவில்லை.

அமைப்பின் உறுப்பினர்கள் அல்லது இணைந்து பயணிக்கும் நண்பர்களுடன் உருவாகும் முரணை நட்பு முரண் எனும் வகையிலேயே அணுக வேண்டும். அவர்கள் மீது உள்ளார்ந்து எழும் சந்தேகங்கள், குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான் எனது எதிர்வினைகளை அவர்களுக்கு நேரில் சொல்லியிருக்கிறேன். அதனை அவர்கள் தொடர்கிறார்கள், சிக்கல்கள் நிலவுகின்றன எனும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அது கடுமையான தொனிக்கு மாறியே எதிர்வினையாற்றப்பட்டிருக்கிறது.

யதார்த்தன் மேலெழும் குற்றச்சாட்டுகளைத் திசை திருப்ப வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அவை குற்றச் சாட்டுகள், பாதிக்கப்பட்டதாக யாரும் என்னிடம் இதுவரை சொன்னதில்லை. நானே ஊகிக்கும் இடங்களில் தான் நான் அவரிடம் இந்த எதிர்வினைகளை ஆற்றியிருக்கிறேன். சில வருடங்களுக்கு முன் அத்தகைய சந்தேகம் எழுந்த போதே அவரது அப்போதைய காதலிக்கு இப்படியிருக்கிறது, இதனை நீங்கள் அறிய வேண்டும். நண்பர்கள் என்பதற்காக அதை மறைப்பது தேவையற்றது. குழப்பமற்று உங்கள் உறவு தொடர்வதற்கு அது அவசியம் என்பதைக் கூறியிருந்தேன். அச் சந்தர்ப்பத்தில், அவருடன் ஒரு பெண் நிறைய தடவை வட்ஸ் அப்பில் கோல் செய்த ஹிஸ்டிரியை மட்டுமே நான் பார்த்திருந்தேன். அவருக்கும் யதார்த்தனுக்கும் என்ன உறவு என்பதைக் கூட நானறிந்திருக்கவில்லை. ஆனால் ஒரு சந்தேகம். ஆகவே அனுப்பி வைத்தேன். அப்பெண்ணுடனும் அது தொடர்பில் உடனேயே தொலைபேசியில் பேசியிருந்தேன்.

அன்றே யாதார்த்தன் அமைப்பிலிருந்து விலகினார். அதன் பின் அவரது விலகலின் காரணம் கோரி, அவை உரையாடப்படக் கூடியவை என்னும் கடிதம் விதைகுழுமத்தால் அனுப்பி வைக்கப்பட்டது. அவர் அதன் பின் இருவருடங்கள் விதைகுழுமத்தில் இல்லை. என்னுடனும் கதைப்பதை நிறுத்தியிருந்தார். அவர் தன்னை மீட்டுக் கொண்டு, உறவைச் சீர்படுத்த முனையும் காலமாக நான் அதை எடுத்துக் கொண்டேன். பின்னர் அவர் அமைப்பின் வேறு உறுப்பினர்கள் மூலம் நிதானப்படுத்தப்பட்டு உரையாடி மீள இணைந்தார். நீங்கள் சமூக வலைத்தளத்தில் எழுதிய பின்னர் அவர் ஒரு பாலியல் சுரண்டல்காரர் என்பதிலிருந்து பாலியல் குற்றவாளி, ஏராளமான குற்றங்களை இழைத்திருக்கிறார் என்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

அவர் மீண்டும் என் நண்பரான காலத்தில் அவர் சுரண்டலான உறவிலோ அல்லது ஏமாற்றும் வகையிலோ அவரது பெண் நண்பர்களைப் பயன்படுத்தினார் என்று நான் கருதவில்லை. ஒரு தனிநபரின் உறவுகள், அதன் நிலைகள் குறித்து நாம் ஊகங்களைக் கொண்டு மட்டுமே முடிவுக்கு வர முடியாது. அதே நேரம் ஊகங்களைத் தெளிவுபடுத்த அவரை நிர்ப்பந்திக்கவும் வேண்டும். அவரைத் தனது தரப்பை எழுதச் சொல்வதும் அதன் பாற்பட்டதே. நான் அவரது வாழ்வின் அனைத்தும் அறிந்தவனல்ல. அவர் வேறொரு வெளியில் குற்றமிழைத்திருக்கக் கூடும். அனைவரையுமே நான் அப்படியே அணுகுகிறேன். உங்களைப் போலவே நானும் நான் அறிந்தவற்றைக் கேட்பதுண்டு. நண்பர்களுடன் இச்சிக்கல்கள் தொடர்பில் உரையாடுவதுமுண்டு. அவை எப்பொழுதும் அவதூறோ குற்றச்சாட்டோ அல்ல. அது கரிசனை. நான் நண்பர்களுடன் நடந்து கொள்ளும் முறை.

நான் தான் உங்களுக்கு அவர் தொடர்பிலான சுரண்டல்களைச் சொன்னதாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறீர்கள். நான் எனது ஊகங்களையே சொல்லி வந்திருக்கிறேன் என்பதை மீளவும் உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். அவர் யாருடன் எவ்விதம் நடந்து கொண்டிருக்கிறார் என்பதை நான் அறியேன். இருவருக்கிடையில் நட்பிருக்கிறது, பழகுகிறார்கள் என்பது தெரியும். அதற்காகவே அதனை ஒரு குற்றச்சாட்டென முன்வைக்க இயலாது. நானும் உங்களிடம் அதை ஒரு குற்றம் என்னுமளவில் சொல்லியிருக்கவில்லை. சந்தேகங்களையே சொல்லியிருந்தேன். ஆனால் உங்கள் பதிவில் சில பெண்கள் அதை வெளிப்படுத்துவார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அப்படிச் செய்வது மிக நல்லது. அதுவே அவர் குற்றங்கள் புரிந்திருந்தால் எத்தகைய குற்றங்களை இழைத்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்தும்.

நீங்கள் எந்தத் தகவல்களை எப்படிப் பொருள் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. எதையெதை இணைத்து அவர் ஒரு தொடர் சுரண்டல்காரர் என்று கருதுகிறீர்கள் என்றும் விளங்கவில்லை. இல்லை அவர் ஒரு கடுமையான குற்றவாளியென்ற ஆதாரங்கள் இருந்தால் அவற்றை நீங்கள் வெளியிடலாம்.

அவர் சுரண்டலில் ஈடுபட்டிருந்த காலங்கள் என்று நான் கருதிய போது அதைக் கண்டித்திருக்கிறேன். அவர் மீண்டு வரும் வழிகளைச் சொல்லியிருக்கிறேன். இவை சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக ஆகுமளவுக்கான குற்றங்களாக நான் கருதவில்லை. அப்படி யாரேனும் பெண்கள் வெளியிலோ அல்லது என்னுடன் தனிப்படவோ அவை தொடர்பில் அறியத்தந்தால், அவற்றைக் குறித்தும் அவரிடம் கேட்பேன். இதில் மழுப்பவோ குழப்பவோ ஒன்றுமில்லை. அப்படி ஒருவர் கூட அவர் ஒரு சுரண்டல்காரர் என்பதை என்னிடம் வெளிப்படுத்தவோ பகிரவோ இல்லை என்பதையும் தெளிவாகச் சொல்லிக்கொள்கிறேன்.

முன்னரான காலங்களில் வேறு நபர்களின் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்ட போது அவை எதிர்கொள்ளப்பட்ட விதமும் அதில் குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்டவர்களும் அவர்கள் இருதரப்பினரையும் சார்ந்த ஏனைய மனிதர்களையும் அவர்கள்
வாழ்க்கையையும் பொதுவெளி எப்படிக் கையாண்டது என்பது தொடர்பில் எனது கருத்துகளை எனது முன்னைய கட்டுரைகளில் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இப்போதும் என் மீதும் என் குடும்பம் மீதும் அத்தகைய ஏராளமான வசைகளும் திரிபுகளும் சேறடிப்புகளும் நிகழ ஆரம்பித்து விட்டன. உங்களது கேள்விகளிலிருந்தே அவை ஆரம்பித்தன. இன்று எங்கெங்கோ அலைய ஆரம்பித்து விட்டன. இப்படியாகும் என்பதை முன்னரே விரிவாகவே நான் எழுதியுமிருக்கிறேன். நான் அந்த வெளியை இத்தகைய விடயங்களைப் பேசப் பாதுகாப்பற்றதாகவே இப்போதும் கருதுகிறேன். எல்லாமே பொதுவெளியில் உரையாடப்பட வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தத்தையும் ஒருவர் இன்னொருவர் மீது செலுத்த முடியாது. ஆனால் கோரலாம்.

இதே போல் பாதிக்கப்பட்ட பெண்களதோ அல்லது அவருடன் நட்பிலிருந்த பெண்களதோ தனிப்பட்ட வாழ்க்கையோ அல்லது திரிபுகளோ சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கினால் அதற்கு முழுப்பொறுப்பும் நீங்களே. ஏற்கெனவே, அத்தகைய கண்டுபிடிப்புகள், ஊகங்கள் எழத் தொடங்கி விட்டன. இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்பது? நீங்கள் அதை விரும்பவில்லை என்றாலும் இவற்றுடன் தொடர்பில் இல்லாமல் அவருடன் நட்பிலிருப்பவர்கள், பெண்கள் இழக்கப்போவதை ஒருவரால் மீட்டுத் தர முடியுமா?

அப்படி எதுவும் நிகழாமல், குற்றச்சாட்டுகள் பற்றி மட்டுமேயாக உரையாடல் சென்றால் நல்லது. அதையே நான் விரும்புகிறேன். ஆனால் அப்படிச் செல்லும் என்பதை நம்பவில்லை. இல்லை, அப்படிப் பெண்கள் வெளிப்படுத்தப்படுவது தான் பாதிக்கப்பட்டவர்களுக்காக நீங்கள் கோரும் உள மகிழ்வும் நீதியுமா?

அதே நேரம் செயற்பாட்டாளர்கள் செய்வது தான் குற்றங்கள், சுரண்டல்கள் அவை தான் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதுவும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. சாதரணர் என்னும் அடிப்படையில் வாழ்பவர்களுக்கு அவர்கள் சுரண்டல்களில் ஈடுபடும் போது வெளிப்படுத்தத் தேவையில்லை என்பது அவர்களுக்கு அச் சுரண்டலைத் தொடர்ந்து செய்ய நாங்கள் அளிக்கும் சலுகையா? சுரண்டலில் எனக்குச் சாதரணம் செயற்பாட்டாளர் என்று எந்தப் பிரிவுகளும் இல்லை. வெளிப்படுத்துவதன் நோக்கம் பொதுவான உரையாடலுக்கானதும் அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் அடைய விரும்பும் நீதியின் வகைமை சார்ந்ததும். யதார்த்தன் தான் கடந்த காலங்களில் தவறிழைத்திருக்கிறேன் என்று சொல்லி, அது தொடர்பில் அப்பெண்களிடம் உரையாடி மன்னிப்புக் கேட்டுவிட்டால் எல்லாம் முடிந்து விடுமா? அது தான் எதிர்பார்க்கப்படும் நீதியா? இங்கு எதிர்பார்க்கப்படும் நீதி தொடர்பில் திட்டவட்டமான வரையறைகள் இல்லை.

யதார்த்தன் தனது கடந்தகாலத்தில் சுரண்டல்கள் புரிந்திருந்து அது தொடர்பில் அப்பெண்களுடன் மன்னிப்புக் கோராமல் தொடர்ந்து அதை மறுத்து வந்தால் இப்பொழுது அதை ஒப்புகொள்வது போதுமான நீதியாக இருந்தால் அவரதைச் செய்ய வேண்டும். அல்லது அப்பெண்களிடம் மன்னிப்புக் கேட்பது முறையென்று பாதிக்கப்பட்டவர்கள் விரும்பினால் அதையும் அவர் செய்ய வேண்டும்.

ஆனால் இங்கு இடையில் இருக்கும் நீங்களும் நானும் தான் பேசிக்கொண்டிருக்கிறோம். யதார்த்தனும் தனது சில கருத்துக்களை முன் வைத்திருக்கிறார். அவர் விரிவாக இதனை எழுதவே நான் விரும்புகிறேன். அது நல்லதொரு தொடக்கம். இது வரை நாங்கள் கண்டித்த எந்தச் சந்தேகத்துரியவர்களும் வாய் திறந்ததில்லை. நாங்கள் முன்முடிவுகளுடன் அணுகாமல் இருதரப்பையும் அவர்கள் உரையாட ஒரு பாதுகாப்பான வெளியை உருவாக்கவே முனைய வேண்டும். எதிர்காலத்திலொருவர் சுரண்டல்கள் எப்படி நிகழ்கின்றன என்பதை அறிய வெறும் கண்டனங்களும் மன்னிப்புகளும் மட்டும் போதாது. இணைத்தேர்வின் உள்ளடக்கங்கள், நுட்பங்கள், குறைபாடுகள், பலவீனங்கள் என்று அனைத்தும் கருத்தியல் சார்ந்து உரையாடப்பட வேண்டும். நபர்களை முன்வைத்து மட்டுமல்ல. அதைச் செய்யும் உழைப்பற்று அக்கறையற்று பொறுப்பற்று நாம் கண்டனங்களின் பேரணியை நிகழ்த்தினால் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது.

பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியென்பதோடு மட்டுமல்லாமல், அவர்களோ அல்லது வேறு எந்த ஆணோ பெண்ணோ சுரண்டல்களில் ஈடுபடும் வாய்ப்பைப் பொதுவெளி அச்சம் மூலம் அல்ல, உள்ளார்ந்த மாற்றம் அறிவு முதிர்ச்சி மூலம் கையாளும் உரையாடல்களை உருவாக்க வேண்டும். ஒருவரை அம்பலப்படுத்துதல் என்பது மட்டும் இந்த உரையாடல்களின் போக்கென்றால் அது பல்வேறு திரிபுகளின் மூலமே நிகழும். பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கை மேலும் பாதிக்கப்படக் கூடாது என்ற உங்களது கரிசனமும் தெளிவும் முக்கியமானது, ஆனால் ஏனையவர்களும் அவ்வாறு தெளிவுடன் இருப்பார்கள் என்ற புரிதல் தவறானது. சமூக வலைத்தளம் அத்தகையதல்ல. அது தனிநலன்களுடனேயே அதிகமும் பிணைக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் சென்று நானோ நீங்களோ விளக்கம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அவர்கள் இறைக்கும் சேற்றைத் திருப்பியள்ள முடியாது. இப்பொழுது என் மீது நிகழ்த்தப்படும் கதாப்பாத்திரப் படுகொலையை உங்களால் ஏதாவது ஒருவகையில் கட்டுப்படுத்த இயலுமா? இயலாது. அதை நீங்கள் செய்ய வேண்டும் என்றும் நான் கோரவில்லை. ஆனால் இது நிகழும். இதை எப்படிச் சரி செய்வது? ஆகவே தான் நான் மீள மீள சமூக வலைத்தளங்களின் பொறுப்பற்ற போக்கிற்குள் உரையாடல் தேவையில்லை என்பதை வலியுறுத்துகிறேன்.

பாதிக்கப்பட்ட ஒருவர் பேசும் பொழுது அவருக்காக அவர் தரப்பில் நின்று விடயங்களைக் கையாள்வது எவ்வளவு முக்கியமோ, அதேயளவு
ஒருவரை அவரது குறைகளிலிருந்து மீட்டெடுத்தல், வாழ வழியமைத்தல் என்பதும் முக்கியமானது. அதுவே என்னளவில் பொறுப்புணர்ச்சி. அறம் என்பது நமது கண்ணில் படுவது மட்டுமல்ல. நமது காதுகள் கேட்பது மட்டுமல்ல.

குறிப்பு: என் மீது முகநூலில் நிகழும் கதாப்பாத்திர படுகொலை எனது குடும்பம், கடந்த காலத்தில் அமைப்பினுள் பயணித்த பெண்கள், கூட்டங்களுக்கு வந்தோர் வரை நீண்டு கொண்டு செல்கிறது. அவர்களதும் வேறு பல பெண்களதும் ஒளிப்படங்கள் எனது முகநூலில் இருக்கிறது. எந்தச் செய்தியை யார் எப்படித் திரிக்கிறார்கள் என்பதை யாராலும் நெறிமுறைப்படுத்த முடியாத வெளியில் என்னையும் என் குடும்பத்தையும் நண்பர்களையும் தாக்குகிறார்கள். ஆகவே எனது முகநூல் கணக்கை டிஅக்டிவேட் செய்திருக்கிறேன்.

முகநூல் ஒரு யுத்த களம் என்பது போல் நான் அங்கிருந்து தற்போது வெளியேறியமை ஒரு புறமுதுகிடுதல் என்று கேலி பேசுவார்கள், எதிர்த்தரப்பினர் தான் நெஞ்சில் குத்துவார்கள், நண்பர்களின் வழமை முதுகில் குத்துவது தானே.

யாராவது தாக்க விரும்பினால் என்னை மட்டும் அழியுங்கள். ஏனையவர்களின் வாழ்க்கையை விட்டுவிடுங்கள். தயவு செய்து அவர்களுக்கு நெருக்கடி கொடுக்காதீர்கள்.

TAGS
Share This