ஒரு நிலவுருவில் மூன்று மொழியுடல்கள்

ஒரு நிலவுருவில் மூன்று மொழியுடல்கள்

ஜெர்மனி நாட்டின் கலாசார அமைப்பின் பெயர் Gothe institute. ஈழத்தில் பிறந்து அகதியாக அந்த நாட்டுக்குச் சென்று, படித்து, ஜெர்மானிய மொழியில் எழுதும் எழுத்தாளர் செந்தூரன் வரதராஜா. இவரது முதலாவது புத்தகம் பெரும் வரவேற்பையும் அந்நாட்டின் உயர் விருதையும் பெற்றது. அவருடனான கலந்துரையாடல் ஒன்று சமகாலக் கலை, கட்டடக்கலை மற்றும் வடிவமைப்புக்கான ஆவணக் காப்பகத்தில் சில வருடங்களின் முன்னர் நடைபெற்றிருந்தது. அப்போது அவருடன் அறிமுகமாகி நண்பர்களானோம்.

சில காலங்களின் பின், கெதே நிறுவனம் எங்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்றைச் செய்ய விரும்பியது. செந்தூரன் வரதராஜா, அனுக் அருட்பிரகாசம், நான், யதார்த்தன், பிரிந்தன் கணேசலிங்கம் ஆகியோருக்கிடையிலான இலக்கியம் பற்றிய கலந்துரையாடலது. அதில் என்ன விடயங்களை உரையாடுவது என்பதை நாங்கள் ஐவரும் கலந்துரையாடி முடிவெடுத்தோம். ஒரே நிலப்பின்னணியைக் கொண்ட ஐவரும் தமிழ், ஆங்கிலம், டச் ஆகிய மூன்று வெவ்வேறு மொழிகளில் எழுதுபவர்கள். நிலத்தின் வாழ்க்கை அல்லது பின்னணி, அம்மூன்று மொழிகளிலும் எவ்விதம் வெளிப்படுகின்றது என்பதே ஆதாரமான கேள்வி. 2019 இல் இடம்பெற்ற இவ்வுரையாடலில் மட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளர்களே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். மூன்று நாட்கள் இடம்பெற்றிருந்தது. இலக்கியத்தின் நுட்பங்கள் பற்றியும் அரசியல் பற்றியும் உரையாடியிருந்தோம்.

அதன் சிறு ஆவணத்தை ஒரு நூலாக அந்த நிறுவனம் ஆக்கியது, புதிய சொல்லின் பத்தாவது இதழுடன் இலவச இணைப்பாக வழங்கிவைக்கப்பட்டது.

அதில் வெளியாகிய எனது குறிப்பு இது. 2020 இல் வெளியாகியது.

(செந்தூரன்,குமாரதேவன்,அனுக்)

*

மொழியின் உடல்களும் அவற்றை மீள மீளத் திறத்தலும்

மூன்று மொழிகளுக்கு இடையிலான ஒரு நிலத்தின் கதை மாந்தர்கள் உலவிடும் புனைவு வெளிபற்றிய உரையாடல்களை நாம் மேற்கொண்டிருந்தோம். ஒவ்வொரு மொழியும் தன்னளவில் அது திறக்கக்கூடிய விரிவுகளை நோக்கிச்செல்வதற்கு பாரம்பரியமான மனநிலைகளின் தடைகளைக் கடந்து புனைவுச்சுதந்திரத்துடன் பிரக்ஞையுடனும் பிரக்ஞையற்றும் நிகழக்கூடிய மொழி விளையாட்டின் சாத்தியங்களை, அகலத்திறக்க இவ்வுரையாடல் பயனளித்தது. தமிழ், ஜேர்மன், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளின் மொழியியல் அமைப்புகள் எவ்வாறு அசமத்துவமானதாயும் ஒடுக்குமுறையைப் பிரயோகிப்பதுமாகப் புழக்கத்தில் மாறி வந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் அவற்றினை விசாரணை செய்வதும், புதிய வடிவங்களுடன் மீள மீள உருவாக்குவதும் அவற்றின் அதிகார ஒழுங்குகளைக் குலைத்துப் போடுபவை.

இலங்கைத்தீவின் கடந்த காலமென்பது இன அசமத்துவப் போராகவே பிரதானமாகக் கருத்தப்பட்டு வந்தாலும், அது ஒரு மொழி அசமத்துவத்திலான போரும்தான். மொழி இங்கே மனிதர்களை தொடர்புபடுத்துவதற்குப் பதிலாக விலக்கி வைத்திருக்கின்றது. ஒரு மொழி இன்னொரு மொழியை ஒடுக்குகின்றது. இருமொழிகளுமே தன்னளவில் தனக்குள் இருப்பவற்றை ஒடுக்குவதாகவும் இருக்கின்றது. மொழிப்பற்று, மொழிப்பெருமை, மொழிவாதம் என்பன எந்த மொழியைப்பேசும் மனிதர்களுக்கும் ஆபத்தானவை. மொழி தனித்தியங்கக் கூடிய ஒரு கருவி அல்ல. அது ஒரு கூட்டுச்செயற்பாடு. மனித உணர்வுகளில் இருந்தும் புறச்சூழ்நிலைகளில் இருந்தும் உண்டாகும் விளைவுகளின் தொகுப்பாகவும் அதற்கொரு பரிமாணம் இருக்கிறது. அதே நேரம் குறித்த மொழிகள் கொண்டியங்கும் அசமத்துவங்களை நீக்கி ஒடுக்குமுறைகளை எதிர்த்து அறங்களை விரிவாக்கும் ஒரு செயலாகவும் இலக்கியம் ஆகிவிடுகிறது. மொழியில் நிகழும் கலை என்ற அடிப்படையில் இலக்கியம் பிற அறிவுத்துறைகளுடன் மிக நெருக்கமாகவே செயற்பட்டு வருகின்றது. அதேநேரம் அது தர்க்கத்திற்கு அப்பாலான சில முன்வைப்புக்களை நோக்கியும் நகர முடியும். மனிதர்களின் அக உணர்ச்சிகள் சார்ந்து அறிவியலுக்கு முன் இலக்கியம் அதைக் கண்டடைந்திருக்கிறது.

எளிமைப்படுத்தப்பட்ட நம்பிக்கைகளுக்கு எதிரான, இயல்புகள் என்று நம்பப்பட்டவைக்கு எதிரான சிதைவுகளை மொழிக்குள் நிகழ்த்த முடியும். அது அம்மொழியில் சிந்திக்கும் மனிதர்களை மேலும் சிந்திக்கத் தூண்டும், வாழ்க்கையை வேறு பக்கங்களில் இருந்து அணுகவும் பார்க்கவும் கோரும். இதன் மூலமாகத் தான் கலைகளுக்கான தேவை மனித சமூகங்களின் தேவைகளுக்கும் நிலைத்திருப்பதாக கருதுகிறேன்.

இலங்கைத்தீவைப் பொறுத்தவரையில் இரண்டு மொழிகள் பிரதானமாக இருந்தாலும், தமிழ் மொழியைப் பேசுகின்ற மக்கள் முஸ்லீம்களாகவும், மலையகத்தமிழர்களாகவும், தமிழர்களாகவும்! பிளவுண்டிருப்பதைப் பார்க்கிறோம். சிங்கள மக்கள் தங்களை ஓர் மொழிவழித்தேசிய இனமாகவும் இந்நிலத்திற்குரியவர்களாகவும் கருதுகின்றார்கள். தமிழ் பேசும் சமூகங்கள் அவற்றுக்குள் நிகழ்ந்த வரலாற்று ரீதியிலான காரணிகளால் அடையாளங்களைப் பிரித்தே பயன்படுத்தி வருகின்றன. தங்களைத் தனித்தனித் தேசிய இனங்களாகக் கருதுகின்றன. இனவாதம், மதவாதம், மொழிவாதம் இவற்றின் கூட்டு உற்பத்திகளான உயிர்ப்பலிகள், யுத்தங்கள் இந்தத்தீவில் நிறையவே சம்பவித்திருக்கின்றன. இத்தனை வாதங்களையும் கொண்டு கடத்தும் கருவியாகத் தொழிற்படும் மொழி மீது நாம் பிரக்ஞையுடன் இயங்க வேண்டிய தேவை இதிலிருந்தும் எழுகிறது.

(உரையாடலில் பங்குபற்றியோர்)

பேரினவாத மன நிலை தனக்கான மொழியமைப்பை, பிரபல்யமான சுலோகங்களை உருவாக்கும், அதற்கு எதிரான மனிதர்களை, கலைஞர்களை அது ஒடுக்கும். அண்மையில் சிங்கள எழுத்தாளரான ஷக்திக சத்குமார, பவுத்த பிக்குகளுக்கிடையில் நிகழும் தற்பாலீர்ப்பு பற்றியொரு புனைவை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். தனது மொழிச் சூழலுக்குள் இருந்து எழும் கேள்விகளையும், கலைகளையும் கூட பேரினவாதம் ஒடுக்கும் என்பதற்கு மேலும் ஒரு சான்று இது. அவை தாங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கும் புனித பிம்பங்களை கேள்வி கேட்பதை அதிகார அமைப்புகள் விரும்புவதில்லை. ஆகவே தான் கடும்போக்குவாத, பாசிச மனநிலை கொண்ட எந்த அதிகார அமைப்பும் கலைகளைக் கட்டுப்படுத்த விரும்புகின்றன.

விரிவான அனுபவங்களும் அகன்ற வாசிப்பும் மொழிபெயர்ப்புகளும் நிகழவேண்டிய காலமிது. இன்னமும் இனவாதம் தன்னுடைய சக்தியை இழந்துவிடவில்லை. மிகப்பெரிய படுகொலைகளுக்குப் பின்னும் மிக நீண்ட போராட்டங்களுக்குப்பின்னும் இன்றுவரை தமிழ் மொழி பேசும் மக்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவில்லை. இந்த நாடு ஒரு சிங்கள பெளத்த பேரினவாத நாடாகவே தன்னை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகின்றது. இந்த நெருக்கடிகளுக்குள்ளேயே இங்கு எல்லாக்கலைவடிவங்களும் நிகழ்கின்றன. இவற்றை மாற்றவே போராடுகின்றன. அவற்றுக்கான மொழியமைப்பையும் புதிய வடிவங்களையும் கண்டடைவதே எழுத்துச்செயற்பாடாக இருக்கின்றது. மனிதர்கள் உரையாடியே ஆகவேண்டிய விலங்குகள். அந்த உரையாடல்களை அர்த்தமும் செறிவும் கொண்டதாக மாற்றும் விவாதங்களும் வாய்ப்புமே இலக்கியத்தை நோக்கி என்னைத்திரும்ப வைக்கின்றன.

ஒளிப்படங்கள்: கெதே நிறுவன முகநூல்

TAGS
Share This