பிறழ்வுகளின் தெய்வம்
ஒரு மரபில் கனவுகளிற்கான தெய்வங்கள் நிகழ்வதைப் போல பிறழ்வுகளுக்கும் தெய்வங்கள் நிகழ்கின்றன. மொழிக்குள் வாழும் கோடிக்கணக்கான மனித மனங்கள் தத்தம் தெய்வங்களை அறிந்து தம்மை அத்தெய்வங்களின் சந்நிதிகளில் ஒப்படைப்பார்கள். கனவுகளின் தெய்வங்கள் கொண்டாட்டமான திருவிழாக்களை மானுடருக்கு அளிப்பவை, அதே நேரம் பிறழ்வுகளின் தெய்வமோ நம்மில் ஒரு பகுதியை வெட்டித் தமக்குப் படையலிட்டாலே தோன்றக் கூடியவை.
மானுடரில் பிறழ்வுகள் என்பவை மீறல்கள். தெய்வீகம் என்பதொரு தற்செயல் என்பதைப் போலவே பிறழ்வுகளும். அது எங்கு எவ்விதம் எதை மீறிச் செல்கின்றது என்பதை எப்படிக் கணக்கிட முடியும்? வாழ்க்கையின் உணர்கொம்புகள் எப்பொழுதும் முன்னோக்கி நகர்பவை. கனவுகள் ஒருகொம்பு என்றால் பிறழ்வுகள் மறுகொம்பு என்றுணர்ந்தே மானுட நுண்ணுணர்வு தன்னை விரிவாக்கி முன்னகர முடியும்.
பொன்முகலியின் மொழி சாரத்தில் தன்னையும் பிறரையும் மூர்கமென விழைகிறது. அதுவே அக் கவிதைகள் கொள்ளும் ஆடலுக்கிரத்தின் இருசினம். ஒருகண் தான். மறுகண் பிறர். மொழி காமத்தின் உச்சத்திலும் பாதளத்திலும் வால் நுனியில் எழுந்து நிற்கும் சர்ப்பத்தின் கண்களென ஒளிருகின்றது. பொன்முகலி ஆதார விசையின் பண் கொண்ட மொழியில் தன் தலையை அறுத்துத் தானே மீட்டிக் கொள்ளும் பிறழ்வின் தெய்வமென ஆகுபவர்.
அவரது கவிதைகள் தமிழின் பக்தி மரபின் சாரச்சுவை கொண்ட கனிகள். அதே நேரம் மூளைக்குள் அலையும் ஆயிரங் கொடுங்கனவுகளிலிருந்து விடுபடத் துடிக்கும் இயற்கையின் மூலத்திற்குத் திரும்புவது அக்கவிதைகளின் விழைதிசை.
நம் அகத்தைப் படையலிட்டால் தன் ஆலயத்திலிருந்து இறங்கி வந்து, பக்தர்களின் உடலில் சன்னதங் கொண்டெழும் தேவியெனத் திகழும் கவிதைகள் பொன்முகலியுடையவை.
*
நான் புசிக்க நினைக்கிற மாமிசம்
நான் குடிக்க விழைகிற குருதி
நான் செய்ய விரும்புகிற துரோகம்
நான் வழங்க விரும்புகிற மன்னிப்பு
எல்லாம் நீயே.
தெப்பத்தில் மிதக்கிற என் சிறு இலையே
இனி நீ வழிபட வேண்டிய கடவுள்
நானே.
*
பிறழ்வு நம்மைக் காக்கிறது பகவதி.
நம் கூரிய வேல்முனைகளில் குத்தப்பட்டிருக்கிற
குங்குமம் வழிகிற எலுமிச்சையைப் போல.
இந்தப் பிறழ்வு நம்மை சாந்தப்படுத்துகிறது.
நெஞ்சு வரை நீள்கிற நம் நாவுகளில்
படிந்து கிடக்கிற குருதியின் ஏடுகள்
நம் நிராசைகளின் துவர்ப்பிலிருந்து நம்மைக் காக்கிறதா இல்லையா?
நம் பிரக்ஞையைக் கொன்று
இரவுகள் வளர்கின்றன.
அப்போது நாம்
உருள்கிற ஒரு துளியிலிருந்து
ஓர் இலையாய் மாறுகின்றோம்.
பிறகு
அசைகிற கதிராய்
பொன் வெயிலாய்…
பிறழ்வல்லவோ
உன்னையும் என்னையும்
பிறகு
நம்மிலிருந்து எவரையும் காப்பதும்
சிறிய நெருஞ்சிப் பூக்களாய்
நம் நித்திரையற்ற இரவுகளில் விரிவதும்?
*
பித்தேறிப் பெருங்காமம் கொண்டு,
நித்தந் தவங்கிடந்து
நாச் சிவக்க நாமமுரைத்து அகம் முற்றி இகம் மறந்து நினைவழிந்து மனங்குழற பின்னும் போதாது
பேயுருக் கொண்டு
பெரும் பாதம் பற்றினேன் என் இம்மையில் ஆடும் கடலே
நெருப்பே
துயரே.
*
நீ என்னை காதலித்திருக்க வேண்டும்.
நீருக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிற ஒருவனை
கரைக்கு இழுப்பவனின் தீவிரத்துடன்.
கழுத்தெலும்பு உடைபட்ட குதிரையை
கருணைக்கொலை செய்பவனின்
அனுதாபத்துடன்.
முற்றிலும் இலைகள் உதிர்ந்த
ஒரு கருவேலமரத்தைப்போல,
எவரையும் கிழித்துவிடும்
கூரிய வன்மத்தின் முட்களோடு
நான் இருந்திருந்தாலும்,
கனிந்த முகத்தோடு
தனது மேடிட்ட வயிற்றை
பரிவோடு வருடுகிற
ஒரு கர்ப்பிணியைப் போல
நீ என்னைத் தொடர்ந்து நேசித்திருக்க வேண்டும்.
*
நான் உன்னை ஒரு சொல்லில் வைப்பேன்.
பிறர் அறியாதபடி…
பிறர் திருடாதபடி…
யாரும் கண்டடைய முடியாத ஒரு
புதிர்ச் சொல்,
யாரும் தீண்டிவிட முடியாத
ஒரு முட் சொல்,
யாரும் நினைத்துவிட முடியாத
ஒரு மாயச் சொல்…
பின், அச்சொல்லை
ஒரு வெண்ணெல்லி மலரில் வைத்து,
அம் மலரைக் குழலில் வைத்து,
அலைவேன் இக் கானகமெங்கும்.
*
கர்ப்பகிரகத்தின் இருள்
மூலையில்
எரிந்துகொண்டிருந்த
அகல் விளக்கின்
சுடரொன்றிலிருந்து
அவள் எழுந்து வந்தாள்.
அகிற்புகை வான்தழுவி முயங்கும்
மலைநாட்டின் அருவிக்
கரையொன்றில்
அவளை செதுக்கி முடித்த தச்சன்
ஒரு கணம் மயங்கி,
தான் செதுக்கி முடித்தது ஒரு
பேரழிவின் அழகை
எனப் புலம்பியபடியே
அங்கிருந்த அணையாச்
சுடரொன்றின் வெம்மைக்குள்
அவளை அடைத்து
வைத்திருந்தான்.
செந்நிறச் சேலை மார் நழுவ
நீள் உறக்கம் கலைந்து
வெளி வருகிற அவள்
காலம் என்பது நீண்ட சொப்பனம்
எனக் கூறி சோம்பல் முறிக்கிறாள்.
*
வாழ்க்கை என்பது
உண்மையில் ஓர் எளிய உண்மை.
நீ பார்க்காத உலகத்தில்,
நீ பார்க்காத சூரியன்கள்,
தினம், தினம்
வெடித்துச் சிதறுகின்றன.
எல்லாவற்றையும் மிதக்க வைக்கிற கடலொன்று,
உன் கண்களுக்குப் புலப்படாமல்,
உன் பக்கவாட்டில் பொங்கிக்கொண்டிருக்கிறது.
புலங்களின் அச்சிலிருந்து
தவறி விழுகிற கிரகங்கள்,
நீயறியாத இடங்களில் ஆயிரம்
பள்ளத்தாக்குகளை உருவாக்குகின்றன.
என்றாலும், இந்த வாழ்க்கை, நீ பற்றியிருக்கிற
என் விரல்களைப்போல
ஓர் எளிய உண்மைதான் இன்னமும்.
*
காதலுக்கும் ஊடலுக்கும்
இடையே
எப்போதும் சிறிய தொங்கு பாலம்.
அதில் கிளிகள் கொஞ்சுகின்றன.
நாணம் சிவந்த பருக்களாய் கன்னத்தில் முளைக்கிறது.
கீழ் வானத்தில்
தாவித் திரியும் கிளிகள்
ஊடலின் ஒரு முனையையும்
காதலின் ஒரு முனையையும்
தம் சிவந்த மூக்கால் கொத்திப் பிணைக்கின்றன…
காற்று தன் மாய ஊசியால் கடலையும் வானத்தையும்
தைக்கிறது
தொலைதூரத்தில் மயங்குகிற
அந்தி
இரண்டு மேகப்பொதிகளை
இணைக்கிறது .
ஊடலின் கதவுகள்
காதலின் வேகத்தில்
திறந்து திறந்து மூடுகின்றன…
வா வா என்றும்….
போ போ என்றும்….
*
இரண்டு உடல்கள் இன்று ஓர் அறையில் சந்தித்துக்கொண்டன
ஒன்று
இன்னொன்றை முத்தமிட்டது.
ஒன்று
இன்னொன்றிடம் கேள்விகள் கேட்டது .
ஒரு உடலின் தலை முழுக்க
சந்தேகங்கள் நிரம்பியிருந்தது.
மற்றொன்றின் தலை முழுக்க
பயம் நிரம்பியிருந்தது.
ஒரு உடல்
தனது மனதின்
இருள் மூலைகளைத்
தயங்கித் தயங்கி திறந்து காண்பித்தபோது
மற்றொன்று அதன் ஆன்மாவிற்கு வெளிச்சத்தின் வண்ணத்தைப் பூசியது.
இரண்டு உடல்களும்
பிரிகிற நேரம் வந்தபோது
கைகுலுக்கிக் கொண்டன…
எதேச்சையான
அதில்
பல கோடி பல கோடி
இரு உடல்களின் துயரம் இருந்தது…
*
எனக்கு இந்த உலகத்தைப் பற்றிய கவலை போய்விட்டது.
உடலில் தரித்திருக்கும்
இந்த உயிர் பற்றிய கவலையும் போய்விட்டது.
வெளியே
இரவா பகலா என்பதை அறிய விருப்பமில்லை.
காய்ச்சலில் பிதற்றுவது போல
நாள் முழுவதும்
உன் பெயரைப் பிதற்றுகிறேன்.
முயங்கிய நினைவுகளில்
பகல் தோய்கிறது.
தொடை இடுக்குகள் தகிக்கின்றன.
இது காதல் என்றால் காதல்;
பித்து என்றால் பித்து;
நினைவில் சுரந்து
மனதைச் சூழ்ந்து
என்னை அழிக்கும்
இதற்கு
என்ன பெயர் என்றாலும்
அது உன் பெயரே.
*
எவ்வளவு அமைதியானவன் நீ!
எவ்வளவு நிதானமற்றவள் நான்!
நாம் ஏன் விரும்பினோம்?
காலையில் அனுப்புகிற செய்திகளுக்கு
மாலையில் பதில் சொல்லும்
உன்னிடம்
ஒவ்வொரு சொற்களாக பிய்த்தெடுக்கிறேன்.
உனது தலையில் ஓடும் யோசனைகளை
வரிக்குவரி படிக்க முயல்கிறேன்.
“கொஞ்சம் அமைதியாக இரு” என்கிறாய்.
“இது சரிவருமா”? என்கிறாய்.
வேண்டும், வேண்டாம் என்பதற்கு இடையில் தடுமாறுகிறாய்.
எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை.
எனக்கு
நாம் அணைத்துக் கொள்கிற போது
நம் உடலிலிருந்து
வேர் விடுகிற மலர்கள் வேண்டும்.
அது கொடுக்கிற நாளை பற்றிய
கனவுகள் வேண்டும்.
நம்பிக்கைகள் வேண்டும்.