சணற்காட்டில் மஞ்சள் மெளனம்
கற்சிற்பங்களாலான ஒரு மாபெரும் அரண்மனை மொழியென்றால் அதன் ஒவ்வொரு நுண்மையும் வாளிப்பும் திரட்சியின் முழுமையும் கவிதையினால் உண்டாகுவது. பூ வேலைப்பாடுகள், ஆண் பெண் உடல்கள், அதீத மிருகங்கள், பறவைகள், கனவுகள் எல்லாமும் மொழியில் கவிதையால் உறைவிக்கப்படுபவை.
யுத்தத்துள் ஈழம், தன் நிலத்திலிருந்து நிலமிலி வரை பலநூறு வரிகளால் சொல்லப்பட்டிருக்கிறது, அதன் ஆன்மா மொழியில் நினைவாலயம் என எழுப்பப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் மாந்தரும் அவர்தம் வாழ்வும் செதுக்கிச் செதுக்கி மேலும் வாளிப்படைந்துள்ளது.
பா. அகிலனின் கவிதைகள் தமிழின் மொழியுலகிற்குள் சொற்களின் கற்சிற்ப நேர்த்தியென எழுந்தவை. அவரின் கவிதைகள், சாந்தமான ஒரு நதி, தாள் போற் பரந்து கிடக்க, அதில் ஆகாயத்தின் இரவும் பகலும் விழ, மேகங்களும் நட்சத்திரங்களும் விழ, கடக்கும் பறவைகளின் நிழலும் விழ, கரைமரங்களின் உதிரிலைகள் விழ, பெருமழையின் நீரிலைகள் விழ, அசையாத ஓவியத் தாளென அவை விழுந்து விரியும் வெளி கொண்டவை.
அவற்றின் இசை, தாள முடியாத வாழ்வின் நடுநடுக்கத்துடனும் வாழ்ந்தே ஆகவேண்டிய பிடிவாதத்துடனும் ஒலிப்பவை. அக்கவிதைகளின் அரசியலும் அகத்தின் உள்மடிப்புகளும் அவரது மனம் நுட்பமாகத் தேர்ந்தெடுத்த சொற்களின் மடிப்புகளுக்கிடையில் வைக்கப்பட்டிருக்கும் மயிலிற் பீலிகளெனத் தோன்றுபவை.
தமிழின் தொல்மொழி அதன் நவீன மனத்துடன் கொள்ளும் உறவின் நீட்சியான கொடி பா. அகிலனின் கவிதைகள் வரை தொடர்ந்து நீள்கிறது. அவரது மனம் கொதித்து உலையும் அரிதான சில வரிகளில் உண்டாகும் கூர்மை, கலையாடிகள் தம்மைத் தாமே அடித்துக் கொள்ளும் சாட்டையின் வார் நுனிகளின் செதில்கள் கொண்டவை. அதனாலேயே அவரது கவிதை மொழி அகத்தின் மயிற் பீலிகளும் குற்றவுணர்ச்சிகளின் வார் நுனிகளும் கொண்டவை.
தமிழின் நெடும்பரப்பில் தனித்தொலிக்கும் பா. அகிலனின் கவிதைகள், அவற்றின் அடர்த்தியான சொற் கேணியுள் வாழ்வின் சேற்றில் தாமரைகளென மலர்ந்து நிற்பவை.
*
யாரோ ஏதோ
சில நட்சத்திரங்கள்
துயர நிலவு
யாரோ மட்டும் வருகிறேன்.
கையில் பற்றியிருந்த கொண்டல் மலர்களும்
காற்றில் அலைவுற்ற கூந்தலுமாய்
குரூர வெளியில்
உன்னையும் பறிகொடுத்தாயிற்று…
“எங்கே போகிறாய்” கற்றில் யாரோ ஒலிக்கவும்
“தெரியாது…”
(1990)
*
முடிந்துபோன மாலைப்பொழுது
பார்க்கிறோம்,
விழி கொள்ளாத் துயரம்
உதடுகள் துடிக்கின்றன
தடுமாறி உயிராகும் வார்த்தைகளும்
காற்றள்ளப் போய்த் தொலைகிறது…
நேற்று
சணற்காட்டில் மஞ்சள் மௌனம்,
இன்று
கண்களில் நீர்
போகிறாய்
மேற்கில் வீழ்ந்தணைகிறது சூரியன்.
(1990)
*
பதுங்குகுழி நாட்கள் – 3
பெரிய வெள்ளி
உன்னைச் சிலுவையிலறைந்த நாள்
அனற்காற்று
கடலுக்கும், தரைக்குமாய் வீசிக்கொண்டிருந்தது,
ஒன்றோ இரண்டோ கடற்காக்கைகள்
நிர்மல வானிற் பறந்தன.
காற்று பனைமரங்களை உரசியவொலி
விவரிக்க முடியாத பீதியைக் கிளப்பிற்று
அன்றைக்குத்தான் ஊரிற் கடைசி நாள்
கரைக்கு வந்தோம்,
அலை மட்டும் திரும்பிப் போயிற்று.
சூரியன் கடலுள் வீழ்ந்தபோது
மண்டியிட்டழுதோம்
ஒரு கரீய ஊளை எழுந்து
இரவென ஆயிற்று.
தொலைவில்
மயான வெளியில் ஒற்றைப் பிணமென
எரிந்து கொண்டிருந்தது எங்களூர்,
பெரிய வெள்ளி
உன்னைச் சிலுவையிலறைந்த நாள்.
*
இராதை கண்ணனுக்கு எழுதிய கடிதம் (சுருக்கப்பட்டது)
கோகுலம்,
மழைக்காலம்
வாவிகள் நிரம்பிவிட்டன
வெள்ளிகள் முளைக்காத
இருண்ட இரவுகளில்
காத்திருக்கிறேன் நான் உனக்காக
எங்கோ தொலைதூர நகரங்களின்
தொன்மையான இரகசியங்களிற்கு
அழைப்பது போன்ற உன் விழிகள்
வெகு தொலைவில் இருந்தன
என்னை விட்டு
புதைந்திருக்கிறது மௌனத்துள் மலை
இருக்கிறேன் நான் துயராய்
அசைகிறது சலனமின்றி நதி
காற்றில் துகளாய்ப் போனேன்
இங்கே,
என் கண்ணா
சற்றுக்கேள் இதை
மல்லிகைச் சரம்போன்றது என் இதயம்
கசக்கிடவேண்டாம் அதை
ராதா
பிரியமுடன்
(1993)
*
செம்மணி 02
மூன்றாவது வெள்ளி நள்ளிராவைக் கடக்கையில்
திரும்பினாள் மரியை
யாருக்காவது தெரியுமா?
பட்டினங்களிற்கிடையில்
நெட்டுயிர்த்து நீண்டது அவளாடை
சீடர்களில்லை, அயலாரில்லை
உற்றாரில்லை, பகையாருமில்லை
காற்றுறைந்த கரிய புற்களை
தகட்டு நீரில் செத்துச் சிதம்பிய நிலவை
அவள் கடந்த பின்னாலெழுந்தது
யுகங்களை நடுவாய்ப் பிளக்குமொரு பிலாக்கணம்.
*
செம்மணி 04
உப்பு வயல்களின் கீழே
துரதிர்ஷ்டவசமான அந்த மனிதர்களை
அவர்களின் தேகத்தை உலரவிடாது
பெருகும் நேசர்களின் கண்ணீரை
கரிய நீர் புற்களின் மேலே விடாது காயும்
பயங்கர நாட்களின் சாம்பரை
தீண்டுவார் யாருமில்லை
விளம்பரப் பதாகைகளின் கீழே
மறத்தலின் விளிம்பிலிருந்தன அவர்தம் நினைவுகள்…
கல்லாலல்ல;
நீராலுமல்ல;
வளியாற் கட்டுகிறேன்
விடாது பின்தொடருமொரு ஒலியால்
அவர்களிற்கொரு நினைவிடம்.
(கார்த்திகை 2009 – மாசி 2010)
*
பெரு நிலம்:
மண்ணடுக்குகள் பற்றிய அறிமுகம்
பூண்டும் புராணிகமும்
நீரும் இல்லும் சேர்த்துப் பொத்தப்பட்ட
பெரு நகரத்திற்குக் கீழே
பகலிரா ஓயா
தெருக்களும் கிளைகளும் மொய்த்துப் பரவி
சனங்கள் நெரிந்து
வாகனங்கள் விரையுமொரு நிலப்பரப்பிற்கு இன்னும் கீழே
கீழிறங்கிப் போனால்
சாம்பரால் ஆன வெம்மையடங்காவொரு புயற்பரப்பு
நீங்கி
மேலும் நடந்து கீழிறங்கிப்போனால்
அழுகையும், கதறலும் பரவியொட்டிய ஒலியடுக்கு
அதற்கும் கீழே
முடிவடையாத குருதியால் ஒரு திரவப் படுக்கை
அதற்கும் கீழே
கெட்டிபட்டு முள்ளடர்ந்து மண்டிய நினைவடுக்கு
அதற்குக் கீழே
மரங்களின் வேர்களும் முட்டாதவொரு மௌனப்பரப்பு
நீங்கி இன்னும் மேல் நடந்து
கீழிறங்கினால்
ஒரு முதிய பெண்
காலங்களை விரித்தெறிந்த தோலாசனத்தின் மீதொரு
துறவிப் பெண்.
(2010)