வைரமுத்துவும் தாஸ்தவேஸ்கியும்: ஒரு கடிதம்
அன்புள்ள கிரி,
வாசிப்பு பற்றி நீங்கள் அவ்வப்போது எழுதியவற்றைப், பேசியவற்றை வாசித்தும் கேட்டும் இருக்கிறேன். புத்தக சந்தைகளில் வைரமுத்துவையும் தாஸ்தவெஸ்கியையும் ஒருவர் வாங்கிச்செல்கிறார். நான் அப்படியே அவரைப்பார்த்தபடி நிற்கிறேன். இந்த முரண் எங்கிருந்து வருகிறது. உங்களுடைய வாசிப்பு எப்படி படிப்படியாக விரிந்தது என்பதைத் எழுதலாம் இல்லையா? சமகாலச் சூழலில் இது முக்கியமானதாக இருக்கும் என்று நினைக்கிறன்.
கீர்த்தனா
*
வணக்கம் கீர்த்தனா,
ஒருவர் வைரமுத்துவையும் தஸ்தவேஸ்கியையும் இரண்டு கைகளில் ஏந்திச் செல்லும் சித்திரம் நமது சூழலில் இயல்பானதே. கடந்த இருபதாண்டுகளில் உருவாகியிருக்கக் கூடிய இணையச் சூழலும் சமூக வலைத்தளங்களும் வாசிப்பவர்களின் தெரிவுகளில் செல்வாக்குச் செலுத்துகின்றன. புத்தகச் சந்தை பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள், நீங்கள் தமிழ்நாடா புலம்பெயர் தேசமா என்று தெரியவில்லை. ஈழத்துச் சூழலில் புத்தகச் சந்தைகள் எவையும் இல்லை. கிழக்கிலும் வடக்கிலும் சில புத்தகக் கண்காட்சிகள் நடப்பதுண்டு. அங்கு வைரமுத்துவுக்கும் தஸ்தவேஸ்கிக்கும் இடமுண்டு. ரமணிச்சந்திரனுக்கும் தபூசங்கருக்கும் கலீல் ஜிப்ரானுக்கும் ரூமிக்கும் கூட ஒரே தட்டு உண்டு. நாம் அறிய வேண்டியது, வாங்கிக் கொண்டு செல்பவர் இரண்டில் எதையாவது வாசிக்கிறாரா, அல்லது வாங்கி வைத்துக்கொள்கிறாரா என்பதைத்தான். இக்காலத்தில் புத்தகத்தை வாங்கிவிட்டு போட்டோ போட்டு வாசிப்பதாகக் காட்டிக் கொள்ளும் புதிய தலைமுறை உருவாகி விட்டது. அவ்வளவு தான் அவர்கள், அதற்கு மேல் வாசிப்பிலோ இலக்கியம் சார்ந்த உரையாடல்களிலோ அவர்களுக்கு அக்கறை இருப்பதில்லை. இங்கு சாதாரண ஒரு இலக்கிய உரையாடலுக்கு வருபவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தாலே இதன் பின்னணி விளங்கிவிடும். ஈழத்துச் சூழலைப் பொறுத்த வரையில் பொழுதுபோக்கிற்கு வாசிப்பவர்களே பெரும்பான்மையானவர்கள். அவர்களுக்கு இலக்கிய நுட்பங்களைப் பற்றியோ அறிவுச் செயல்பாடுகள் குறித்தோ கரிசனை இருப்பதில்லை. இந்த நிலமை மாற வேண்டும். வாசகர்கள் என்பது ஒவ்வொரு பண்பாட்டினையும் முன்னகர்த்தும் ஆளுமைகள் என்ற தன்னுணர்வு உருவாக வேண்டும். அவர்கள் வழியாகவே எந்தவொரு சிந்தனையும் வாழ்க்கைக்குள் நுழைகிறது. முரண்படுகிறது, பரவுகிறது.
எனது வாசிப்பு அனுபவங்களைப் பற்றி விரிவாக எழுத எண்ணமுண்டு. சில அடிப்படைகளை மட்டும் இப்பொழுது எழுதுகிறேன்.
எனது ஆரம்ப வயதுகளில் கோயில்களில் பாடப்படும் தேவராங்களும் ஒலிபெருக்கிகளின் வழி காற்றில் படரும் பக்திப்பாடல்களும் அவற்றின் கவித்துவமும் உள்ளத்தை நெகிழ்த்தின. கவிதையும் கற்பனையும் பக்தி இலக்கியங்களின் வழியாகத் தான் என்னை வந்தடைந்தது.
பின்னர் எனது வீட்டின் அருகிலிருந்த ஒரு சிறந்த இலக்கிய வாசகரின் தனிச் சேகரிப்புகளை வாசித்தேன். சிறுவயதில் எனக்கு ஆன்மீகம், உளவியல், சோதிடம், தியானம் போன்றவற்றில் ஆர்வம் அதிகம். அவரிடம் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. அவற்றைத் தெரிந்து வாசிக்க ஆரம்பித்தேன். வாசிப்பது எனது கற்பனை செய்யும் திறனை விரிவாக்கியபடியே வந்தது. எனது நுண்ணுணர்வும் சமநிலைத் தன்மையும் இணைவு கொண்டது, ஒருதடவை அவரின் புத்தமொன்றைத் தொலைத்து விட்டேன். சண்டைக்காலம் என்பதால் அவர் என்மீது கோபப்பட்டு புத்தகங்கள் தருவதை நிறுத்தி விட்டார். பின்னர் ஊர் நூலகத்தைப் பயன்படுத்தினேன். லீவு காலங்களில் காலை எட்டு மணி முதல் மாலை நான்கு முப்பது வரை கூட அங்கேயே இருப்பதுண்டு. சிறுவர் கதைகள், சுயசரிதைகள், வரலாற்றுப் புதினங்கள், பத்திரிகைகள், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, கண்ணதாசன், ஓஷோ என்று பலபக்கத்திலும் வாசித்துக் கொண்டிருந்தேன். கவிதைகளில் அப்துல் ரகுமான், பா. விஜய், வைரமுத்து, புதுவை ரத்தினதுரை என்று பலரையும் வாசித்ததுண்டு. ஆனால் சில கிழமைகளிலேயே பெரும்பாலானவர்களின் புத்தகங்களை வாசித்து முடித்துவிட்டேன். தீராத தாகமொன்று கவிதை பற்றி எனக்கு எப்போதுமுண்டு. அந்த நூலகத்தில் ஆரம்ப வாசிப்பிற்குரிய ஏராளமான நூல்கள் இருந்தன.
சிறிது காலத்தின் பின் மீண்டும் எனது அயலவரின் வீட்டு நூலகம் எனக்குத் திறந்தளிக்கப்பட்டது. அப்போது தான் தீவிர இலக்கியம் என்ற தளத்திற்குள் உள் நுழைந்தேன். ரஷ்ய சிறுகதைகள், நாவல்கள், சுந்தரராமசாமி, ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், புதுமைப்பித்தன், தீராநதி, காலச்சுவடு, உயிர்மை போன்ற தமிழ் நாட்டு இதழ்கள், அலை, அறிவிசை, தூண்டி, ஞானம், கலைமுகம் போன்ற ஈழத்து இதழ்கள்.. என்று மிக நீண்ட பட்டியலை வாசித்து முடித்தேன். விடாய் பெருகியதே தவிர, தணியவில்லை.
பதினெட்டு வயதில் அப்படி வாசிப்பது கூட ஒரே மிதியில் பாய்ந்த தாவல் தான். சொற்களைக் கற்பனை செய்யும் திறனும் நுண்ணுணர்வும் சொந்தக் கனவுலகில் வாழும் விருப்பமும் கதைகளையும் கவிதைகளையும் தேடியலைய வைத்தது. யாழ்ப்பாண நூலகத்தில் நண்பர்களின் உறுப்பினர் அட்டைகளைக் கொண்டு, நான்கு புத்தகங்கள் எடுப்பேன். எப்படியும் நான்கு நாளைக்குள் வாசித்து விட்டு மேலும் புத்தகங்களை எடுப்பேன். நாவல்கள், ஆன்மீகம், அவை சார்ந்த தத்துவங்களே என்னை ஈர்த்தன. ஒரு கட்டத்திற்குப் பின் அரசியல் சார்ந்த விரிவான வாசிப்பினைச் செய்ய வேண்டிய தேவையை யுத்தம் முடிவடைந்த பின் இங்கு நிகழ்ந்த இலக்கிய உரையாடல்கள் உண்டாக்கின. ஷோபா சக்தி, யோ. கர்ணன், நிலாந்தன், கருணாகரன், சித்தாந்தன், தானா விஷ்ணு.. என்று பலரையும் வாசித்தேன். அவர்களது புத்தக வெளியீடுகளுக்குச் செல்வது, இலக்கிய உரையாடல்களை அவதானிப்பது என்பவை என்னளவில் களிகொள்ளும் செயல்கள்.
இப்படியாக எனது வாசிப்பு விரிவாகி வந்தது. வாசிப்பில் சில அடிப்படைகள் தேவையென்பதை உணர்ந்திருக்கிறேன். முதன்மையானது கற்பனை செய்யும் திறன். ஒரு சொல்லை மெய்நிகர் அனுபவமாக மாற்றிக்கொள்பவரே புனைவுலகிற்குள் நுழையும் சாவிகள் கொண்டவர். இரண்டாவது தொகுத்துக் கொள்ளல், வாசிப்பவை அலைந்து கொண்டேயிருந்தால் ஒரு கேளிக்கை சினிமாவைப் பார்ப்பது போல் ஆகிவிடும். வாசிப்பு அப்படியல்ல. அதற்கு வேருண்டு, கிளைகளும் உண்டு, அதிலிருந்து விண்தொட எழும் பறவைகளும் உண்டு. ஆனால் இவையெல்லாம் தனது வாசிப்பைத் தொகுத்து, தன் நேர் வாழ்க்கையைக் கடந்து சென்று தன்னையறியும் கருவியாக இலக்கியத்தை ஆக்கிக் கொள்பவர்களுக்கே இவை அடிப்படையானது. பொழுதுபோக்கு வாசகர்கள் இலக்கியச் சூழலில் ஒரு பொருட்டே அல்ல.
எனக்கு என்னையறியும் ஆடியாகியது இலக்கியமே. மானுடக் கடலில் எங்குமுறையும் உப்பின் ஒரு துளி என் உள்ளங்கையிலும் இருப்பது போல் புத்தகங்கள் இருக்கின்றன. அதனாலேயே இடைவிடாது வாசிக்க முடிகிறது. நான் அன்றாடத்தின் சராசரிகளில் ஒருவனில்லை என்ற தன்னுணர்வை அவை அளிக்கின்றன. வாசிப்பு என்னை நான் மீட்டெடுத்துக் கொள்ளும் செயல்வழி. வாசிப்பவற்றை என் சொந்த உள்ளுணர்வுடன் இணைத்து எழுதுவது, என்னை நான் தொகுத்துக் கொள்ளும் முறை. என் வழியாக இப்பண்பாட்டின் வாசிப்பு குன்றாது ஓடிக்கொண்டிருக்கிறது என்ற நிறைவே வாசிப்பு எனக்குத் தினமளிக்கும் கொடை. உங்கள் சொந்த வாசிப்பை மேம்படுத்துங்கள். அதை எழுதுங்கள், முன் செல்லுங்கள்.
வாசிப்பின் உள்விரிவுகளையும் எனது நடைவழியைப் பற்றியும் பின்னர் விரிவாக எழுதுவேன். உங்கள் கடிதம் கிடைத்தது மகிழ்ச்சி.