ஓதி எறிந்த சொற்கள்
விளிம்பின் அகமொழி மையத்திற்குள் நகர்கையில் அவை ஓதி எறியும் சொற்களெனவும் சூனியத்தின் மாந்திரீக மொழியெனவும் ஆகும். தன்னைக் கேட்பவரை ஆவாகனம் செய்து வசியத்தின் விழிகள் சொருக நிற்க வைக்கும். அம்மொழியின் உள்ளெரியும் கனலால் அடி முடியற்ற சோதியின் நூறுநூறு தீக்கொழுந்துகளை தலையில் சூடியபடி வாழ்வை ஆடுபவை என். டி. ராஜ்குமாரின் கவிதைகள்.
அவரது சொற்கள் அதீதமான மனப்பெருக்கின் குழை சேற்றை மிதித்தபடி தன்னைத் தானே சுட்டுக் கொள்ளும் சுடுசிற்பங்களென மொழி வெளியில் உறைந்து நிற்பவை. வெய்யிலில் உலர்ந்தும் பெருமழைக்கு இறுகியும் கரையாது தன்னிருப்பில் வேர் கொண்டவை. என். டி. ராஜ்குமாரின் கவியுலகில், கவிதைகளின் அன்றாடத்தில் விலக்கப்பட்டிருந்த மனித வாழ்வுகள் பதனீரில் பொங்கும் நிலவுகளென உள் நிகழ்ந்தார்கள்.
என். டி. ராஜ்குமாரின் மொழியின் இசை, தமிழின் அரிதான சொல்லிணைவுகளினால் அதிகாலைப் பனியில் சுடுகாட்டில் எரியும் பிணங்களை உயிர்த்தெழ வைக்கும் மாந்திரீகனின் மாயக் குரலில் பாடப்படுபவை. பாதி எரிந்தும் எரியாதபடியும் உடல்கள் எழுந்து தம் கேவல்களையும் கொண்டாட்டங்களையும் சாம்பலாகும் வரை சன்னதங் கொள்ள வைக்கும் உலுக்கும் இசை கொண்டவை.
அவரது சொற்களின் அகக் கொந்தளிப்பு தன் தெய்வத்தின் தலையை அறுத்துத் தனக்கே படையலிட்டுக் கொள்ளும் பக்தனின் பாவனை கொண்டது. தன்னைக் குற்றமுள்ளவற்றின் தெய்வமென சாமியாட வைப்பது.
*
இந்த ஓலைச்சுவடியை நாமல்லாத மற்றவர்கள்
படிக்க நேரிடுமானால்
தலைசுற்றும் நெஞ்சு படபடக்கும்
வெப்புறாளம் வந்து கண்மயங்கும்
மூளை கலங்கும்
படித்ததெல்லாம் வலுவற்றுப்போகும் என்று
இப்போது
என் எழுத்துக்களில் நான் வாதைகளை
ஏவி விட்டிருக்கிறேன்.
*
ஒரு முத்தம் கேட்டு கெஞ்சுகிறேன் நான்
குழந்தையின் மலம் துடைத்தெறிகிறாள் மனைவி
ஒரு முத்தம்கேட்டு அலைகிறேன் நான்
குழந்தையின் மூத்திரத்துணியை கழுவிப்போடத் தருகிறாள்
மனைவி
ஒரு முத்தம் கேட்டு புலம்புகிறேன் நான்
குழந்தையை உறங்கவிடாத நாயின் வள்வள்ளை
திட்டித்தீர்க்கிறாள் மனைவி
ஒரு முத்தம் கேட்டு சண்டையிடுகிறேன் நான்
பால்குடிக்கும் குழந்தையின் மார்பை மறைக்கிறாள் மனைவி
ஒரு முத்தம் கேட்டு கறங்குகிறேன் நான்
கொசுக்கள் அண்டாமலிருக்க வலைபோட்டு மூடுகிறாள் மனைவி
அடிவயிர் கிழிசல் காய்ந்தபின்னும்
பச்சை உடம்புக்காரி பதறுகிறாள் என்னைப் பார்த்து
எரிகிற உடலின் மனவிளி நிராகரிக்கப்படுகையில்
புணர்ச்சி பழகிய பேருடலில் விந்து முட்டி நிற்கிறது
எனது மிருகங்களின் கூரேறிய குறிகளை
மிகப்பக்குவமாய் வெட்டிச்சாய்த்தும்
மூளையின் பின்னால் பதுங்கியிருக்கிறதொரு
கலவரமனம்.
*
சாகக்கிடந்தாள் அம்மா
மருத்துவர் சொன்னார் கர்ப்பப்பாத்திரத்தை
எடுத்துவிடவேண்டுமென்று.
எனது முதல் வீடு இடிந்து தலைகுப்புற வந்து விழுந்த
வேற்றுலக அதிர்ச்சி
எனது மூப்பனின் சுடலையிலிருந்தொரு ஜோதி
ஒரு முட்டையின் வடிவில் பறந்து சென்று
இளமையை வாரிக்குடித்த மயக்கத்தில்
ஒரு தீக்கொழுந்தைப்போல் நின்றுகொண்டிருந்த
அம்மாவின் வயிற்றில் சென்றது கிளிக்குஞ்சாகிக் கொண்டது.
மண்ணெடுத்துச் சுட்டுப்பொடித்து அரித்துத் தின்றாளவள்
மண்வாசனை முதலில் வந்தப்பிக்கொண்டதப்படி.
மாடன் கோவில் திருநீறை மடியில் கட்டிவைத்து அள்ளித்தின்ன
நானந்த சாம்பல் கிண்ணத்தில் பாதுகாப்பாய் மிதந்தேன்.
பாம்புகள் புணருமொரு பௌர்ணமி நாளில்
மணக்கும் மரவள்ளிக்கிழங்கைப்போல் பூமியில் வந்திறங்கிய
என்னுடலில் ஒட்டிக்கொண்டிருந்த அழுக்கை
தெற்றிப்பூ, கஸ்தூரி மஞ்சள், சிறுபயறு பொடித்துத் தேய்த்து
குளிப்பாட்டி முலைப்பால் தந்து உறங்க வைத்த அம்மா
குடல்புண்ணில் வயிறு நொந்து ஏங்கி அழுகிறபோது
முண்டு மொருவீடு இடிந்தென் தலையில் வீழுமோவென
மூப்பனின் குரலில் அழுகிறது கிளிநெஞ்சு.
*
எங்களது முரட்டுத்தனமான பூமி
உங்களுக்குக் கரடுமுரடாக இருக்கலாம்
ஒரு நிம்மதி என்னவென்றால்
எங்களது உலகத்தில் நாங்களேயெல்லாமும்
ஒருநாள் ஒருநேரம் ஒருநொடிப்பொழுதில்
என்னவெல்லாமோ நடக்கிறதிங்கு
இரவுத்தொழில் செய்கிறோம்
அப்படியென்றால் பகலில் நாங்கள்
செய்யமாட்டோம் என்று பொருளல்ல
தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும்
கூட்டிவிடுவதிலிருந்து
பல் முளைக்காத குழந்தை பால் குடிக்க வருகையில்
முலை கொண்டழுத்தி மூச்சுத் திணறடித்து
கொல்வதுவரை.
*
நாகலிங்க பூவிற்குள் பூலிங்கமும்
பூலிங்கத்திற்குள் நாகலிங்கமும்
வரைந்து கொண்டிருந்த பரமனை
பூப்பந்து முலையது செருக்கு முலையாகி
எழுந்து தாக்கியது
மேலும்
சந்ராயோகத்தில்
சரமழை உதிர்த்து பூங்கிணர் திறக்க
காதளவு கண்ணுடையாளும்
உளிமுனைக் கூத்தாடியும்
கோலங்கள் பல செய்து
புணர்ந்து தீர்த்தனர்.
*
அவள் எனக்குப் பசி தீர்த்தவள்
நீ காமம் தீர்த்தவள்
எருமைபோல வளர்ந்தநான்
அவளுக்குக் குழந்தை
எனக்கு என்னைப் போலல்லாத
ஒரு பிள்ளை வேண்டும்
பற்றியெரிகிற தீயை
புணர்ந்து அணைக்கிற அன்பு மனைவியே
ஓங்கிய கையை நிறுத்திவிடு
மூச்சுத் திணறுகிறது
சூசகமாய் ஒருவார்த்தை சொல்
சோற்றில் விஷம் வைத்து
என் அம்மாவைக் கொன்று விடுகிறேன்.
*
பேருந்து நெரிசலில் பிடித்த முலைகளை
திருடித் தின்கிறதென் அறைக்குள் பூனை
சுயமாய் சுகம் தர இடையும் பின்னஞ்சதைகளுமெல்லாம்
மனத்திரை மீதினில் எழுந்ததுமுண்டு பற்பலநேரம்
மனைவியை ஏற்றும் பயணத்திலெல்லாம்
என் முகமிரு பூனைக்கண்ணாய் மாறும்
ஆடையைத் திருத்தி விடுவதற்கு
எடுத்து வைக்கும் அடிகள் வரையில்
எழுந்துநிற்குமென ஆணவம் பெரிதென
இயம்பிடுவேன் பகல் வேளையிலும்
என் ஆண்மையில் உன்னைப் புழுவெனத் தைத்து
இரையென உண்டு சுகித்திடுவேன்
தோணியில் துடுப்பினை இறக்கியே நானந்த
அக்கரை செல்ல முயல்கையிலே
புலிமுலையால் எனை அடித்து வீழ்த்தி
இடுப்புக்குக்கீழே முகம் புதைக்கவைத்து
பாலும் தெளிந்ததேனும் தந்தெனை
உடைத்து நொறுக்கிய ஆங்காரி நீ.
*
நீ ஒரு அழகிய பன்றியாய்
எனக்குள் உறுமிக் கொண்டிருந்தாய்
நமது அற்புதமான உறுமல்களிலிருந்து
நீ கசியத்துவங்கியதால்
நாம் ஒருவரை ஒருவர்
உரசிக் கொண்டோம்
அப்படி
நம் இருவருக்குள்ளிருந்தும்
ஒரு பன்றிக்குட்டி பிறந்தது
பிறகு ஒரு
பன்றிப் பிடிப்பவன் வந்து
உனது கழுத்தில் சுருக்கிட்டு பிடித்தபோது
மூஞ்சியெடுத்து அவனது
குதிரை முகத்தை அடித்து
நொறுக்குவாய் என நினைத்தேன்
நீயோ ஒரு சுவாரசியமான கொலைநிகழ
ஒத்துக்கொண்டு
கால்களையும் கைகளையும் உயர்த்தி
மல்லாக்கப்படுத்துக் கொண்டாய்
நான்கு பக்கங்களும் இறுகக் கட்டப்பட்டது
இப்பொழுது நானும் பன்றிக்குட்டியும்
மூச்சுத்திணறியபடி ஓடிக்கொண்டிருந்தோம்
ஆளற்ற ஒரு கூட்டம் துரத்திக் கொண்டிருக்கிறது.
*
சிரசில் எதையோ சிலாகித்துக்கொண்டே
குறிபார்த்தடிக்குமென் மாந்ரீகக் கிழவியைப்போல்
பளிச்செனச் சொல்லிவிடுகிறேன் கண்ணில்பட்டதை
சொல்லித்தெரிவதா சொல்லில் உதிக்கும் சூட்சுமம்
கொழுந்து விட்டெரியும் தீயினுள்ளே
நீலப்புடவை கட்டி புணர்ந்தாடுகிறாள்
நெருப்பு மங்கை.