மூப்பரின் உளி

மூப்பரின் உளி

இதுவரை பிறந்தவர்க்கும் இனிப் பிறக்கவிருப்பவருக்கும் நெஞ்சினுள் ஒரு சின்னஞ்சிறு கருங்கல் அளிக்கப்பட்டிருக்கிறது. அது கூடியுருண்ட மாபெரும் கருங்கல் மலையின் சிறு பொடி. அதனை மலையென ஆக்கும் பணி கவிஞர்களுடையது. அக்கூட்டின் இழைவை உளிமுனையால் ஒட்டும் மொழி எவ்வளவு நுட்பமோ அதேயளவு அவ்வளவு துல்லியமான இணைவும் கொள்ள வேண்டியது.

துல்லியம் என்பதிரு கண்ணினுட் பார்வை. க. மோகனரங்கனின் கவிதை மொழி அவ்வுளிகளில் கூர்தக்கது. அவரின் கவிதைப் பிராகரத்தின் அகற்சுடர்கள் கூட உளியாலானவையோ என்று வியக்கத்தக்க நுட்பங்கள் கொண்டவை. மானுட வாழ்வின் பலநூறு கணங்களை அபூர்வமான தன் பார்வையால் கவிதைகளென ஆகவிடுகிறார்.

அவர் கவிதைகளின் இசை, அம்மாபெரும் கருங்கல் மலையின் நுனியில் விழி திறந்து அதனைத்தையும் தழுவி வழியும் நீரருவியென ஒவ்வொரு சொல்லையும் மூழ்கடித்து வழிந்து படருபவை. அது அகச் சங்கீத நரம்புகளின் பின்னலை மீட்டும் யாழுழல் விரல்களென வாசிப்பவரில் வந்து இதயம் துழாவுபவை.

அவரின் சொற்கள், அன்றாடம் உலைக்கும் வாழ்விலிருந்து ஆன்மீகத்தின் வேரென இக் கருங்கல் மலையில் உள்நுழைபவை. மானுட உணர்ச்சிகள் உரசிக்கொண்டு தீமூளும் கற்களென உடைந்து விழுகையில் அது ஆற்றில் உருண்டு முழுமையான சரளைகளென ஆவதைப் போல கவிதைக்குள் அவை உருண்டு வாளித்து ஆன்மீகத்தின் உணர்கொம்பென ஆகிவருகின்றன.

(க. மோகனரங்கன்)

*

கல் திறந்த கணம்

பெயரழிந்த ஊர்
அரவமற்ற பிரகாரம்
கரையழியா சரவிளக்கு
திரியெரிந்து பிரகாசித்தது இருள்
காலடியோசைக்கு
சடசடத்துப் பறந்தது புறாக்கள்
எச்சம் வழிந்த முலையொன்றில்
எதேச்சையாய் விரல்பட்டுவிட
உறுத்துப் பார்த்தது
கருத்த சிலை
திகைப்புற்றுக் கண் திருப்ப
காதில் விழுந்தது
நூறு நூறு வருடங்கள் கடந்து
உளியின் ஒலி.

*

பொய்யா விளக்கு

விழித்துத் தேடுகையில்
நினைவுக்குப் பிடிபடாது
சுழித்து மறையும்
சுகக் கனவென,
துங்கச் சுடரும்
தூமணி முகம்தனை
கணப்பொழுதிற்குக்
காட்டி மறைத்தாய்
அங்கமெல்லாம் விதிர் விதிர்க்க
அயர்ந்து நிற்கிறேன்
அம்மட்டோ
இம்மட்டோ
என அகத்திருள்.

*

தற்பிறப்பு

வெகுநேரமாகியும் யாரும்
தேடி வரவில்லை என்பதால்
மறைவிடத்தை விட்டு
வெளியே வந்த சிறுவன்
வெறுச்சோடி கிடக்கிற
தெருவைப் பார்க்கிறான்
இருட்டிவிட்டதால் விளையாட்டை
இடையில் நிறுத்திவிட்டு
எல்லோரும் போயிருந்தார்கள்
நில ஒளியில்
வீதியில் பாதியை மறைத்தவாறு,
வீழ்ந்துகிடக்கும்
வீடுகளின் நிழல்களை மிதித்தபடி
எந்நேரத்திலும் வந்து
எதிரே மறித்து நிற்கப்போகும்
நாய்களுக்குப் பயந்து
நடப்பவன்
அவ்விரவில்
அந்தத் தனிமையில்
அவ்வளவு
அநாதரவாக உணர்கிறான்
ஒருகணம்
உடைந்து அழப்போகிறவனைப்போல,
தடுமாறி நிற்பவன்
மறுபோது வீம்புடன்
தலையை உதறிக்கொள்கிறான்.
தன்னை யாரோ அல்ல,
தானே கண்டுபிடித்தவன் போல
தயக்கமேதுமின்றி
நேரிட்டு நிதானமாக
நடக்கத்தொடங்குகிறான்.

*

உண்ணீர்

பொருள்வயின் பிரிந்து
தண்ணென்றிருந்த
உன்நிழலைவிடுத்து
தனியே
வெகுதூரம்
வந்துவிட்டேன்
சுடுகிற
சூரியனுக்குக் கீழே
இன்னும் இன்னுமென்று
நீளுமிந்த நெடுஞ்சுரத்தில்
நெடுக நடந்த களைப்போடு
தேடிச் சேர்த்த
திரவியத்தின் வியர்த்தமும்
கூடி வருத்த
நா வறளத்
தேடி அயர்கிறேன்
இதோ
இங்கெங்கோ தானிருக்கிறது
நான்
வாய்மடுக்க வேண்டிய
ஊற்றின் முகம்.

*

தோற்ற மயக்கம்

துள்ளும் மீனுக்கும்
தூண்டில் முள்ளுக்கும்
இடையே
எப்போதுமிருப்பது
கை சொடுக்கும் நேரம்தான்;
அதற்குள்
ஓடி முடிகிறது ஒரு நதி.
தேங்கி நிறைகிறது ஒரு ஏரி
புரண்டு மறிகிறது ஒரு கடல்
தோன்றி மறைகிறது ஒரு கனவு
வாழ்வென மயங்குகிறது நினைவு.

*

ஈற்றடி

மனமுடைந்து
நீர்தளும்பும் கண்களோடு,
நீ திரும்பிப் போகையில்
வழிமறித்து தடுத்திருக்கலாம்!
தேறுதல் வார்த்தைகள் சொல்லவும்
கூடத் தோன்றாது,
திகைத்து நின்றுவிட்டேன்
மரம் போல்.
அது ஆயிற்று வெகுகாலம்
இப்போது,
இலைகள் உதிர்ந்து
கிளைகள் முறிந்து
பட்டைகள் தளர்ந்துவிட்டன .
அடியோடு சரிகிற காலமும் விரைவில் வரும்!
அப்போது,
சவகாசமாக வந்து சேரும்
குழிதோண்டுபவர்கள்
காண்பார்கள்;
உன் திசை நோக்கி
ஒடி ஓய்ந்திருக்கும் வேர்களை,
அவற்றில் ஒட்டியிருக்கும் மண்துகள்களில்
இன்னமும் எஞ்சியிருக்கும் ஈரத்தை .
அறுத்து அடுக்கியபிறகு
அடித் துண்டில்
வரிவரியாய் சுழித்துக்கிடக்கும்
வட்டங்களை வருடிப்பார்த்து ஒருவன் சொல்லக்கூடும்,
வைரம் பாய்ந்திருக்கிறது
நெஞ்சு வேகும் மட்டும்
நின்று நிதானமாக எரியும்.

*

அன்பு
என்பது வெறொன்றுமில்லை
மதுரம்தான்.
நான்
ஒவ்வொரு முறையும்
உங்களுக்குப் பருகத்தரும்
தேநீரில்,
அது
ஒரு சிட்டிகை
கூடுதலாகவோ அல்லது
குறைவாகவோ
அமைந்துவிடுகிறது.
அரிதாக
அன்றொரு நாள்
அளவாகக்
கலந்து வைத்துக்
காத்திருந்த போது
நீங்கள்
தாமதித்து வந்ததால்
ஆறிப்போய்விட்டிருந்தது.
அன்பு
என்பது
பருக முடியாத
துயரமும்தான்.

*

அம்பொற் கபாடம்

அன்பின் பொருட்டு
ஏங்கவும்
எதிர்பார்த்து ஏமாறவும் பழகிவிட்டவர்களுக்கு
( எவ்வளவு முயன்றாலும்
குணப்படுத்தவியலாத
இளம்பருவத்துக் கோளாறு அது )
உள்ளுக்குள்
உறுப்பு போலவே
ஒட்டிக்கொண்டு இயங்கும்
உணர்வு மானி ஒன்றுண்டு
அதைக் கொண்டு
வரப்போகிற துரதிர்ஷ்டம் எதையும் அவர்கள் எளிதாக
முன்னுணர்ந்து கொள்வதுண்டு.
நேரம் கடந்தும் நீளும்
நேசத்தின் பெரு விருந்தில்
தம் தட்டில் பரிமாறுவதற்கு
இனி ஏதுமில்லை
என்பதை அறியவரும்போது
பாதியிலேயே
பசியின் மிச்சத்தோடு
எவ்வித தயக்கமுமின்றி
எழுந்து வந்துவிடுகிறார்கள்
படியிறங்கிப் போகுமுன்
பரிதவிப்போடு ஒருதரம்
திரும்பிப் பார்க்கிறார்கள்.
அங்குதான்
அந்த பாதாளம் தொடங்குகிறது
மனிதர்களுக்கு எதிரான
கடவுளின் வஞ்சகத்தை
அவர்கள் எதிரிட நேரிடுகிறது.
தமது
முகத்திற்கு முன்பாகவே
அறைந்து மூடப்படும்
கதவை
நம்பவே முடியாமல்
வெறித்துப்பார்த்தபடி
விக்கித்து நின்றுவிடுகிறார்கள்.

*

பரிசில் பாடல்

அன்பைச் சொல்ல‌
அநேகமிருக்கிறது வழிகள்
மலர்களைத் தருவது
மரபும் கூட
வாழ்த்துச் சொல்லி
வந்த அட்டைகளுக்கும்
வண்ணக் காகிதங்களில் சுற்றப்பட்ட‌
வெகுமதிப் பொருட்களுக்கும்
நடுவே
தானென பூத்து வீசுமுன்
முகத்தினை கசங்கச் செய்வதில்லை
என் விழைவும்
மேலும்
வசீகரத்தின் பயங்கரத்தையும்
அன்பின் குரூரத்தையும்
பரஸ்பரம் அறியாதவர்களல்ல நாம்
உப்பின் கரிந்த நீர் பரவிய‌
என் தோட்டச் சிறுவெளியில்
கருகி உதிர்ந்தவை போக‌
எஞ்சிக் கிளைத்தது
இம் முட்கள் மட்டுமே‌ ‌
முனை முறிந்துவிடாமல்
காத்துவை
அடிக்கடி நகம் கடிக்குமுனக்கு
எப்போதாவதென் முகம் கிழிக்க‌
உதவும்.

*

கண்ணேறு கழித்தல்

சிறு இலையென
முளைவிடத் தொடங்கிய
எனது இச்சைகள்,
இனியும் வேலிகட்டி
மூடி வைக்க முடியாதபடிக்கு
நெடிதோங்கி
நிமிர்ந்து வளர்ந்துவிட,
உறக்கத்தின் பாதியில்
ஒசையெழாது
ஒன்றன் பின்னொன்றாய்
இறகசைத்தபடி
எழுந்து வருகின்ற
எண்ணிறந்த வெட்டுக்கிளிகளை
கனவில் கண்டு
பதறியெழுந்தவன்,
பயம் தெளிந்து
பதற்றம் குறைந்த பின்
பரிகாரமாய்
நினைவின்
நிரலொழுங்கைப் புரட்டி,
அதனொரு
இருள் மூலையில்
மறைந்திருந்தபடி
எந்நேரமும்
இமையாது வெறிக்குமந்த
இரு விழிகளையும்
எச்சில் தொட்டு
மிச்சமின்றி அழிக்கத் தொடங்கினேன்.

*

வாழ்வென்னும் கதை

உலகப் புகழ்பெற்ற
மாய யதார்த்தவாதப் புதினம்
ஒன்றில்
இடம் பெற்றிருந்த
மறக்கமுடியாத
கதாப்பாத்திரம்
அவள்.

அலட்சியமாகவொரு
கம்பளித் துணியை
தேகத்தில் போர்த்தியபடி
அலைந்து திரியும்
அவளுடைய அழகு
அவ்வூரின் ஆண்கள்
பலரையும் சித்தம் பேதலிக்கச் செய்தது.

அவள் தோட்டத்தில் உலவச் செல்கையில்
எண்ணிறந்த மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சிகள்
சூழ்ந்துகொள்கின்றன.

அவள் மீது
அளவிறந்த நேசம் கொண்ட
இசைக் கலைஞன் ஒருவன்
இரவு முழுவதும்
பனியில் நனைந்தபடி
விடியும் வரை
அவள் வீட்டு ஜன்னலின்
கீழ் நின்றவாறு
கீதமிசைத்தவாறிருக்கிறான்.

குளிக்கும் போது
கூரையின் ஓட்டை பிரித்து,
அவளுடைய நிர்வாணத்தை
காணும் முயற்சியில்
தோற்று
பிடி நழுவி விழுந்து
மரித்துப் போகிறான்
மற்றொருவன்.

இவ்விதமாகப்
பித்துற்று தன் பின்னால்
அலைகழியும் ஆண்களை
ஒரு பொருட்டாகக் கருதாமலும்
அதற்குக் காரணமான
தன் வசியசக்தி குறித்த
தன்ணுர்வு ஏதுமின்றியும்
அரியதொரு காந்தக்கல் போல்
அவள் தன்னியல்பில் மிளிர்ந்துகொண்டிருந்தாள்.

புனைவின் போக்கிற்கு
உதவாது
உலகியல் இச்சை
ஒன்றுமில்லாமல்
உலவி திரிகிறவளை
எழுத்துக்குள் வைத்துக்கொண்டு
என்ன செய்வதெனப் புரியாமல்,
கடைசியாகக்
கதையின் பாதியில்
பறக்கும் கம்பளமொன்றில்
ஏற்றி அனுப்பிவிட்டு
அவளைக் காணாமலாக்கி விடுகிறார்
கதாசிரியர்.

வருடங்கள் கடந்த
பிறகொரு பேட்டியில்
‘தெய்வத்தின் அம்சம் போலும் உருக்கொண்டுவிட்ட
அப்பாத்திரத்திற்கு
பூமியில் வசிக்கும்
எளிய மனிதர்களுக்குரிய
எந்த முடிவும் பொருந்தாது
என்பதாலேயே
தேவதைக் கதைகளில்
வருவது போல்
அவ் அழகியை
அடி வானத்தில் பறந்து போகவிட்டு
படிப்பவர்களின்
பார்வையிலினின்றும்
மறைந்துபோகச் செய்தேன்!’
என்றவர் விளக்கம்
தந்திருந்ததை
பத்திரிகை ஒன்றில்
படித்தபோதும் எனக்கது
அவ்வளவாக உவக்கவில்லை.

பின்னொரு பொழுதில்
என் வாழ்வில்,
மின்னி மறையும்
விண்மீன் போலும்
பெண்னொருத்தி
தன்னியல்பாய் வந்து, தடயமேதுமின்றி
மறைந்து போனபோதுதான்
தெளிந்தேன்;
உய்த்துணரவும்
உணர்ந்ததை
உள்ளபடிச் சொல்வதற்கும்
கதையைக் காட்டிலும்
வாழ்வுதான் அதிகமும் புனைவாயிருக்கிறது.

(கவிஞர் சுகுமாரனுக்கு)

*

திரவியம்

மனம் மறுகி நான்
நின்ற பொழுதுகளில்
தனதேயான அருவ விரல்களால்
எனது அகத்தின் சுருக்கங்களை
வருடிப் போக்கிய
உனது அந்தரங்கமான குரலை
ஒரு வாசனைத் திரவியம் போல
உள்ளம் முழுவதுமாய்
அள்ளிப் பூசிக்கொண்டு
அத்துயர இரவுகளை
விடியுமளவிற்கும் பரிமளிக்கச் செய்தேன்!
இன்றோ
எனது செவிகளின் கேள் எல்லைக்கப்பால்
எங்கோ
எட்டாத தொலைவுக்கு
விட்டகன்று போனாலும்
உனது குரலின்
குறையாத நறுமணத்தை
எண்ணும் போதெல்லாம்
தன்னைப்போல
மலர்கிறது நினைவு.

TAGS
Share This