எல்லாமே கவிதை அல்ல அல்லது எல்லாமே கவிதை
தேவதேவனின் கவிதைகள் பற்றி எழுதுவதற்கான முதற் சொல்லை மனதில் துழாவியபடி இந்த அதிகாலைப் பனியில் பஸ்ஸிற்காகக் காத்துக்கொண்டிருந்தேன். ஒரு இளம் பெண் கையில் வீணையைத் தூக்கியபடி நடந்து வந்து அருகில் நின்றார். தற்செயலாய் அவர் விரல்கள் பட்டு அந்த வீணை ஹம் என்று ஒரு கணத்தை இசைத்தது. அவர் வீணையைத் தூக்க முடியாமல் மாற்றி மாற்றிக் கைகளில் பிடித்துக் கொண்டிருந்தார். நான் அவரிடமிருந்து அந்த வீணையை பஸ் வரும் வரை வாங்கி வைத்துக் கொண்டேன். திரும்பக் கொடுக்கும் போது என் கைகள் பட்டும் அந்த வீணை இசை துளித்தது. இருவரும் ஒருவர் முகத்தில் இன்னொருவர் புன்னகைத்துக் கொண்டோம்.
தேவதேவன் கவிதைகள் மொழியின் கைகளிலொரு வீணை. அதன் தந்திகளை அவர் எங்கோ தற்செயலாய்த் தொடும் போது அதிர்ந்து இசைகொள்கிறது. அது காலையிருட் பனியில் அதிரும் சிறு மொட்டுகளென மனதை இதழ்கின்றன.
அவரது மொழியின் அபூர்வமான தற்செயல்களின் ஆன்மீகம் தமிழின் அரிதான கவியுலகைச் சேர்ந்தது. அவரது இருப்பு, நூறுநூறு ஆண்டுகளாய் ஓடிவரும் நதியில் உள்நீச்சலும் பின்நீச்சலும் அடிக்கும் நீரோடியினது. அன்றாடத் துக்கங்களின் மேற் கவிந்த கவியுலகிலிருந்து அன்றாடங்களிலிருந்து என்றைக்குமுள்ளதன் இணைப்பை தன் தூரிகை தொட்டு வரைபவர், வரைந்து முடித்த பின்னர் தூரிகை பழுதுபடாமல் இருக்க, அதை மேல் நோக்கி வைத்திருப்பவர்.
அவரது கவிதைகளுக்குள் மென்மலர்களும் சங்கீதங்களும் மனிதர் உட்பட பல உயிரிகளும் அறியமுடியாமையில் விரிந்திருக்கும் வாழ்வின் நிறைகணங்களென உயிர்கொள்பவை. தீராத வியப்பின் கண்கள் கொண்டவை. குன்றாத அகலின் தீவிரம் கொண்டவை. தன்னைப் பிறிதில் காண்தலும் பிறிது தன்னில் உறைவதையும் அறியும் தேவதேவன், ஓயாத உங்கள் துயர்களை மூடிவைத்துவிட்டு, கொஞ்சம் வாழ்வதற்கான அழைப்பிதழை நடுவீதியில் நின்று வழங்கிக் கொண்டிருப்பவர்.
*
காவியம்
எட்டுத்திக்குகளும் மதர்த்தெழுந்து கைகட்டி நிற்க
எந்த ஓர் அற்புத விளக்கை
நான் தீண்டி விட்டேன்?
கைகட்டி நிற்கும் இப்பூதத்தை ஏவிக்
காவியமொன்று பெற்றுக்கொள்வதெளிது.
ஆனால் திக்குகளதிரத் தாண்டவமாடும் மூர்த்தி
நான் எதற்காகக் காத்திருக்கிறேன்?
*
ஒளியின் முகம்
நான் என் கைவிளக்கை
ஏற்றிக் கொண்டதன் காரணம்
என்னை சுற்றியுள்ளவற்றை
நான் கண்டுகொள்வதற்காகவே
என் முகத்தை உனக்குக் காட்டுவதற்காக அல்ல
அல்ல
நீ என் முகத்தை கண்டுகொள்வதற்காகவும்தான்
என்கிறது ஒளி.
*
ஒரு மரத்தடி நிழல் போதும்
உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்
வெட்டவெளியில் நீ நின்றால்
என் மனம் தாங்க மாட்டேன் என்கிறது
மேலும்
மரத்தடியில் நிற்கையில்தான்
நீ அழகாயிருக்கிறாய்
கர்ப்பிணிபெண்ணை
அவள் தாயிடம் சேர்ப்பதுபோல
உன்னை ஒரு மர நிழலில் விட்டுப்போக விழைகிறேன்
மரங்களின் தாய்மை
முலை முலையாய் கனிகள் கொடுக்கும்
கிளைகளின் காற்று
வாத்சல்யத்துடன் உன் தலையை கோதும்
மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்
பறவைகள் உனக்கு வானத்தையும் தீவுகளையும்
வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடுமே
ஒரு மரத்தடி நிழல் தேவை
உன்னை தைரியமாய் நிற்க வைத்து விட்டுப்
போவேன்.
*
தூரிகை
வரைந்து முடித்தாயிற்றா?
சரி
இனி தூரிகையை
நன்றாகக் கழுவிவிடு
அதன் மிருதுவான தூவிகளுக்கு
சேதம் விளையாதபடி
வெகு மென்மையாய்
வருடிக் கழுவி விடு
கவனம்,
கழுவப்படாத வர்ணங்கள்
தூரிகையைக் கெடுத்துவிடும்
சுத்தமாய்க் கழுவிய
உந்தூரிகையை
அதன் தீட்சண்யமான முனை
பூமியில் புரண்டு
பழுதுபட்டு விடாதபடி
எப்போதும் மேல் நோக்கிய
வெளியில் இருக்க-
இப்படிப் போட்டு வை
ஒரு குவளையில்.
*
யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்?
குப்பைத் தொட்டியோரம்
குடித்துவிட்டு விழுந்து கிடப்போனை
வீடற்று நாடற்று
வேறெந்தப் பாதுகாப்புமற்று
புழுதி படிந்த நடைபாதையின்
பூட்டு தொங்கும் கடை ஒட்டிப்
படுத்துத் துயில்வோனை
நள்ளிரவில் அரசு மருத்துவமனை நோக்கிக்
கைக்குழந்தை குலுங்க அழுதுகொண்டு ஓடும் பெண்ணை
நடை பாதைப் புழுதியில் அம்மணமாய்
கைத்தலையணையும் அட்டணக்காலுமாய்
வானம் வெறித்துப் படுத்திருக்கும் பைத்தியக்காரனை
எதனையும் கவனிக்க முடியாத வேகத்தில்
வாகனாதிகளில் விரைவோனை
காக்கிச் சட்டை துப்பாக்கிகளால் கைவிலங்குடன்
அழைத்துச் செல்லப்படும் ஒற்றைக் கைதியை.
*
தூய்மையில்
புல்லிய
சிறு மாசும்-
அது தாளாத
துயர்க் கனலும்
பிறப்பித்தன
ஒளிரும் ஒரு
முத்தினை.
*
அசையும் பல்
என்ன காலம் இது?
என்ன வேலை இது?
அசையும் பல்லை
சுட்டு விரல் ஒன்றால்
தொட்டு அழுத்தி
ஆட்டு ஆட்டு என்று
ஆட்டிக் கொண்டிருந்தான் அவன்!
அதுவும் ஆட்டத்தில்
ஆட்டத்தை இரசித்துக்கொண்டே
ஆடிக்கொண்டிருந்தது
உயிரினின்றும்
கழன்று போகப் போகும்
கவலையே இல்லை
மரணம் பற்றியோ
எதிர்காலம் பற்றியோ
இழப்பு பற்றியோ
எந்த நினைவுகளுமே இல்லாத
பேறுபெற்ற வாழ்வின்
பெருநடனத்திலல்லவா
திளைத்துக் கொண்டிருந்தது அது!
*
சைக்கிள் ஓட்டுதல்
எத்துணை பெரிய மகிழ்ச்சி அது!
”அவள் சைக்கிள் ஓட்டக்
கற்று விட்டாள்! கற்று விட்டாள்!” எனக்
கத்தினான் தெருவில்
கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த சிறுவன்
நேற்று சைக்கிள் ஓட்டத்
திணறிக் கொண்டிருந்த தன் தோழி
இன்று வெற்றிகரமாய்ச்
சைக்கிள் ஓட்டிச் செல்வதைக் கண்டு!
அது எத்துணை பெரிய அதிசயம் என்பதும்
நம் ஒவ்வொரு செயலும்
நம் பேருலகத்தோடே இணைந்திருப்பதும்
அந்த பேரொலிக்கன்றி யாருக்குத் தெரியும்?
*
உன் துயரங்களையெல்லாம்
உன் துயரங்களையெல்லாம்
எங்காவது இறக்கிவைக்கப் பார்க்காதே
இறக்கி வைத்து வைத்த இடத்தையே
கைகூப்பித் தொழுகிறவனாய் ஆகாதே.
துக்கம் ஒரு மணிமுடியாய்
இரத்தம் வடிக்கும் முள்முடியாய்
உன் சிரசிலேயே இருக்கட்டும்
துக்கம் அறிந்தவன்தானே
துக்கம் நீக்கும் வழிசுட்ட முடியும்?
துக்கம் நீங்கி
துக்கம் போலுமே பெருநிறை ஒளிரும்
பேரின்மை வெளியில்தானே
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியத்தைக்
காட்ட முடியும்?
*
எல்லாம் எவ்வளவு அருமை!
நுரைத்துவரும் சிற்றலைபோல
வரிசையாய் நாலைந்து சிறுவர்கள்
ஒருபெண்
எடையில்லாமல் நடந்து போய்க்கொண்டிருந்தாள்
ஒரு காரணமும் இல்லாமல்
தளிர்பொங்கிச் சிரித்துக்கொண்டிருந்தது
கொன்றை
ஒரு துரும்பும் நோகாதபடி
உலவிக்கொண்டிருந்தது காற்று
பழுத்தும் விழாது ஒட்டிக்கொண்டிருக்கும்
இலைகள் தான் தொட்டதனால்தான்
உதிந்ததென்றிருக்கக் கூடாதென்ற
எச்சரிக்கை நேர்ந்து
அப்படி ஒரு மென்மையை
அடைந்திருந்தது காற்று
மீறி விதிவசமாய் உதிந்த இலை ஒன்றை
தன் சுற்றமமைத்துக்கும் குரல்கொடுத்து
குழுமி நின்று
தாங்கித் தாங்கித் தாங்கித்
அப்படி ஒரு கவனத்துடன் காதலுடன்
மெல்ல மெல்ல மெல்ல
பூமியில் கொண்டு சேர்த்தது.
*
பூனை
முதல் அம்சம்
அதன் மெத்தென்ற ஸ்பரிசம்
குழைவு அடிவயிற்றின்
பீதியூட்டும் உயிர் கதகதப்பு
இருவிழிகள் நட்சத்திரங்கள்
பார்க்கும் பார்வையில்
சிதறிஓடும் இருள் எலிகள்
‘நான்! நான்!”என புலிபோல
நட்டுக்குத்தென வால் தூக்கி நடக்கையில்
உருளும் கோட்டமுள்ள சக்கரமென
புழுப்போல
அதன் வயிறசைதல் காணலாம்
கூர் நகங்களுடன் ஒலியெழுப்பாத
சாமர்த்திய நடை இருந்தும்
‘மியாவ்’என்ற சுயப்பிரலாப குரலால்
தன் இரையை தானே ஓட்டிவிடும்
முட்டாள் ஜென்மம்
நூல்கண்டோடும்
திரைச்சீலைகளின் அசையும் நுனியோடும்
விளையாடும் புத்திதான் எனினும்
பறவைகளை பாய்ந்து கவ்வும் குரூரமும் உண்டு
எலியை குதறுகையில்
பகிரங்கப்படும் அதன் கொடும்பல்லையும்
நக்கி நக்கி பாலருந்துகையில்
தெரியவரும் இளகிய நாக்கையும்
ஒரே மண்டைக்குள் வைத்துவிட்டார் கடவுள்
ஞாபகப்படுத்திப்பாருங்கள்
உங்கள் குழந்தைப்பருவத்தில் நீங்கள்
இப்பூனையைக் கண்டு பயந்ததைப்போலவே
சினேகிக்கவும் செய்திருக்கிறீர்களல்லவா?
*
அமைதி என்பது…
பொழுதுகளோடு நான் புரிந்த
யுத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு
உன்னருகே வருகிறேன்
அமைதி என்பது மரணத் தறுவாயோ?
வந்தமர்ந்த பறவையினால்
அசையும் கிளையோ ?
வாழ்வின் பொருள் புரியும்போது
உலக ஒழுங்கு முறையின் லட்சணமும்
புரிந்துவிடுகிறது.
அமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ?
எழுந்து சென்ற பறவையினால்
அசையும் கிளையோ?
*
பயணம்
அசையும்போது தோணி
அசையாதபோதே தீவு
தோணிக்கும் தீவுக்குமிடையே
மின்னற் பொழுதே தூரம்
அகண்டாகார விண்ணும்
தூணாய் எழுந்து நிற்கும்
தோணிக்காரன் புஜ வலிவும்
நரம்பு முறுக்க நெஞ்சைப்
பாய்மரமாய் விடைக்கும் காற்றும்
அலைக்கழிக்கும்
ஆழ்கடல் ரகசியங்களும்
எனக்கு, என்னை மறக்கடிக்கும்!