மகத்தான மாகளிறு

மகத்தான மாகளிறு

தமிழ்க்கவிஞர்களை ஒரு யானைக் கூட்டமென்று கொண்டால் மொழிக்காட்டில் அலையும் இக்கூட்டம் அதன் மூதறிவைச் சுமப்பவை. தம் உணர்கரத்தால் திசைகளையும் நறுமணங்களையும் உள்ளீர்ப்பவை. பித்தேறி வெருண்டு காட்டைப் புரட்டுபவை. அக்கூட்டத்தின் மகத்தான மாகளிறுகளிலொருவர் மனுஷ்ய புத்திரன்.

மொழியை மிக நீண்ட புனைவுப்பரப்பென ஆக்கி நாவல்களுக்கு நிகரான உரையாடற் பரப்பைத் தனக்குள் கொண்டது அவரது கவியுலகு. எத்தனை நூறு மகத்தான வரிகளை அவர் ஆக்கியளித்திருக்கிறார். சிலவேளைகளில் மண்டியிடுகிறார், சிலவேளைகளில் தூக்கிப் போட்டு மிதிக்கிறார், சில வேளைகளில் மின்கம்பத்தின் பின் ஒளிந்து விளையாட்டுக் காட்டும் குட்டியானையெனக் குறும்பு புரிகிறார். சிலவேளைகளில் தனித்த யானையின் அசைவற்ற உடல் கொள்கிறார், சிலவேளைகளில் அதன் தாங்கிக் கொள்ள முடியாத எடையுடன் போராடுகிறார், சிலவேளைகளில் சகதிக்குள் விழுந்து கிடக்கும் சகயானையொன்றுக்கு கரம் நீட்டுகிறார், சிலவேளைகளில் பெரு மரங்களைச் சுழற்றி வீழ்த்துகிறார், சிலவேளைகளில் மூர்க்கத்துடன் தந்தங்கள் உரசப் போர் புரிகிறார்.. இப்படி எத்தனையெத்தனை உருக்கொண்டு மதம் கொண்ட வேழமென மொழி வெளியில் அலைகிறார்.

அவரின் மொழியின் இசை காற்றுக் கோதும் வானத்தின் ஒலி. அதைக் கேட்பது போலவுமிருக்கும் கேட்க முடியாதது போலவுமிருக்கும். அதனுள்ளே நிகழும் அந்தரத்துடனான உரையாடலுக்கு என்ன சங்கீதம் தேவையோ அது ஒலிக்கும்.

அன்றாட வாழ்வின் நூறுநூறு கணங்களினை நுட்பமாகத் தொட்டுத் திறந்திருக்கிறார், ஒருசமயம் தும்பிக்கையாலும் இன்னொரு சமயம் தும்பிக்கையென நீண்டிருக்கும் வாழைக்குருத்தினாலும். வாழைக்குருத்து ஒரு தும்பிக்கையெனத் தோன்றும் இவ்வுவமையை எங்கோ வாசித்திருக்கிறேன், அப்பொழுது உடனே நினைவுக்கு வந்தது மனுஷ்ய புத்திரனின் கவிதைகளின் தொடுகை.

ஓயாது அலையடிக்கும் மொழிக்கடலில் ஆயிரம் யானைகள் நீராடி, துங்கரத்தால் நீர்விசிறிக் கொண்டாட வானம் கட்டியென இறுகிப் பொழியும் மழையில், மின்னல்கள் எரிந்து சொட்ட, மகத்தான மாகளிறென மொழியில் எழுந்து வந்த கவியவர்.

(மனுஷ்ய புத்திரன்)

*

கேட்கப்படாத ஒருவன்

‘என்னைப் பற்றி
யாருமே கேட்கவில்லையா?’
என்று கேட்கும்போது
உன் குரல் கொஞ்சம் உடைந்து விடுகிறது
உன்னைப் பற்றி
அங்கே யாரும் கேட்கவில்லை
நான் அங்குதான் இருந்தேன்
எங்கு
நீ அவ்வளவு சம்பந்தப்பட்டிருப்பதாக
நினைத்தாயோ
அங்குதான்
வேர் பரப்பி அமர்ந்திருந்தேன்
உன்னைப் பற்றி யாரும் கேட்கவில்லை
வேறு எல்லாமே கேட்கப்பட்டது
நீ வாழ்கிற உலகில் உன்னைத்தவிர
எல்லாமே பேசப்பட்டன
ஒரு வேளை உன்னைப் பற்றிக்
கேட்க நினைக்கிற எதுவுமே
துரதிருஷ்டத்தைக் கொண்டுவருவதாக இருக்கலாம்
உன்னைப் பற்றி
நினைக்க விரும்புகிற எதுவும்
யாரோ ஒருவரை மனமுடையச் செய்துவிடலாம்
நீ அங்கிருந்து வெளியேறிச் சென்ற
வழிகளின்மீது
இப்போது முற்புதர்கள் படர்ந்திருக்கலாம்
ஒருவேளை
நீ ஒரு மறக்கப்பட்டவனாக இருந்திருந்தால்
நான் நினைவூட்டுபவனாக இருந்திருப்பேன்
நீ தவிர்க்கப்படுபவனாக இருந்தாய்
உன் பெயருக்கு
அவர்கள் அஞ்சினார்கள்
அது உறையிலிருந்து உருவப்படாத
வாள் போல
அந்த வீட்டின் மையத்தில் இருந்தது
அவர்கள் அதைத் தாண்டிக்கொண்டு
குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார்கள்
நீ உன் ரத்தக்கவுச்சியுடன்
பொறுமையாக காத்திருந்தாய்
‘யாருமே என்னைப் பற்றிக் கேட்கவில்லையா’
என்று தவிக்கும் உன் கண்களின் பளபளப்பு
ஒரு கானல் நீர்போல அசைந்துகொண்டிருக்கிறது
நீ இல்லாத இடத்தில்
நீ இல்லாமல் போவதில்லை
இருக்கிறாய் வேறொன்றாக
என்பதை எப்படி நிரூபிப்பேன்
நீ விலக்கப்படும் இடங்களில்
அவர்களின் கனவுகளில் உயிர்த்தெழும்
தீய ஆவியாக உருக்கொள்கிறாய்
அவர்கள் விழித்தெழும்போதோ
அவர்களின் நிழல்களுக்குள்
உன் நிழல்களைக் கரைத்துவிடுகிறாய்
நீ இல்லை என்று
அவர்கள் ஒருவருக்கொருவர்
நிரூபிக்கும் வேளையில்
உன் ஏவல் பொம்மைகள்
நடனமாடத் தொடங்குகின்றன
உன் பெயரின் தடங்களை
அவர்கள் தம் பேச்சிலிருந்து கழுவும்போது
உன் வார்த்தைகளின் பைத்தியக்குரல்கள்
சுவர்களிலிருந்து பெருகத் தொடங்குகின்றன
உன்னைப் பற்றி அவர்கள்
இனி ஒருபோதும்
கேட்காமலேயே இருந்துவிடக்கூடும்
அவர்கள் வேறெப்படியும்
உன் சதுரங்க கட்டங்களின் சூழ்ச்சிகளைத் தாண்டி
தங்கள் வீடுகளில்
பாதுகாப்பாக இருக்க முடியாதுதானே.

*

மறுபக்கம்

நான் மறுபக்கத்தைப்
பார்க்க விரும்பவில்லை
ஒரு நியாயத்தின் மறுபக்கம்
நமது நியாயங்களை மறுதலித்துவிடும்
ஒரு கண்ணீரின் மறுபக்கம்
நமது கண்ணீரை அர்த்தமற்றதாக்கிவிடும்
ஒரு மனிதனின் மறுபக்கம்
அவனை நிரந்தரமாக நம்மிடமிருந்து பிரித்து விடுகிறது
நான் மறுபக்கத்தைப்
பார்க்க விரும்பவில்லை
நாம் மறுபக்கத்தைப் பார்க்கும்போது
நம் கைகள் கட்டப்பட்டுவிடுகின்றன
நமது இதயம் கனத்து விடுகிறது
நமது அம்புகள் முனை முறிந்துபோய் விடுகின்றன
நமது எல்லா வழிமுறைகளும் பயனற்றதாகிவிடுகின்றன
நான் ஒரு மறுபக்கத்திற்குள் நுழையும்போது
ஒரு இருண்ட அறைக்குள் நுழைகிறேன்
நான் ஒரு மறுபக்கத்தை தொடும்போது
இருளில் வழுவழுப்பான எதையோ தொடுகிறேன்
நான் ஒரு மறுபக்கத்தின் மூச்சுக்காற்றை உணரும்போது
எனது சுவாசம் ஒரு கணம் நின்றுவிடுகிறது
நான் ஒரு மறுபக்கத்தைப் புரிந்துகொள்ளும்போது
நான் அவ்வளவு நஞ்சாகிவிடுகிறேன்
யாருமற்ற அறையில்
திடீரென நிலைக்கண்னாடியில்
ஒரு பிம்பம் விழுகிறது
நீங்கள் நிலை குலைந்து போகிறீர்கள்
உங்களுடைய மறுபக்கம்
நீங்கள் அங்கே இல்லாதபோது விழும்
உங்கள் நிழல்
உங்களால் அதை வழி நடத்த முடியாது
உங்களிடமிருந்து அதைத் துண்டிக்கவும் முடியாது
நீங்கள் அதை ஒரு துணியால் மூடுகிறீர்கள்
ஒரு காகிதத்தால் மூடுகிறீர்கள்
ஒரு கோப்பை மதுவால் மூடுகிறீர்கள்
அதிகாரத்தால், பணத்தால், அன்பால், வன்மத்தால் மூடுகிறீர்கள்
அதுவோ
உங்கள் மண்டியிடுதலுக்காக காத்திருக்கிறது
உங்கள் நிர்வாணத்திற்காக காத்திருக்கிறது
உங்கள் சாவுக்காக காத்திருக்கிறது
நான் ஒரு மறுபக்கத்தைப் பார்க்க நேரும்போது
மேலும் புரிந்துகொள்பவனாக இருக்கிறேன்
மேலும் விட்டுக் கொடுப்பவனாக இருக்கிறேன்
மேலும் என் இயல்புகளை மாற்றிக்கொள்கிறேன்
மேலும் நான் என் சொற்களை இழக்கிறேன்
எந்த ஒன்றிலும் மறுபக்கத்தைக் காண்பது
அது
இன்னொரு பாதியைப் பூர்த்தி செய்வதல்ல
ஒரு பாதியை அழிப்பது
அது
அறியாத ஒன்றை அறிவதல்ல
அறிந்த ஒன்றை இழப்பது
அது
ஒரு முழு நிலவிற்குக் கீழ் நடப்பதல்ல
ஒரு உடைந்த நிலவிற்குக் கீழ் கண்ணீர் சிந்துவது
அது
நள்ளிரவில் ஒரு பூனையின் குழந்தைஅழுகுரல் அல்ல
உண்மையிலேயே ஒரு குழந்தையின் அழு குரல்
ஒரு உண்மையின் மறுபக்கத்திலிருந்து
இன்றைய நம் பொய்கள் அனைத்தும் பிறக்கின்றன
ஒரு காதலின் மறுபக்கத்திலிருந்து
இன்றைய நம் பாசாங்குகள் அனைத்தும் நிகழ்கின்றன
ஒரு புத்திசாலித்தனத்தின் மறுபக்கத்திலிருந்து
இன்றைய நம் வீழ்ச்சியின் பாதைகள் தொடங்கின
ஒரு கருணையின் மறுபக்கத்திலிருந்து
இன்று நாம் கொலைக்களம் நோக்கி நடந்துகொண்டிருக்கிறோம்
எங்கேனும் இருக்கக்கூடும்
மறுபக்கம் இல்லாத ஒரு சுவர்
நாம் அதைத் தாண்டிச்செல்ல வேண்டியதில்லை
மறுபக்கம் இல்லாத ஒரு அன்பு
நாம் அதை சந்தேகிக்க வேண்டியதில்லை
மறுபக்கம் இல்லாத ஒரு ரகசியம்
நாம் அதற்கு அஞ்ச வேண்டியதில்லை
மறுபக்கம் இல்லாத ஒரு காகிதம்
நாம் இந்த வரிகளை
அதன் இன்னொரு பக்கம் நோக்கி செலுத்த வேண்டியதில்லை.

*

பயனற்றுப் போகும்போது

நீ பயனற்றுப் போகையில்
எல்லா பொறுப்புகளிலிருந்தும்
விடுவிக்கப்பட்டு விடுகிறாய்
உன்மீதான மனக்குறைகள்
நிரந்தரமாக நீங்கிவிடுகின்றன
உன்னைப் பற்றிய புகார்கள்
என்றென்றைக்குமாக
ரத்து செய்யப்பட்டுவிடுகின்றன
நீ பயனற்றுப்போகும்போது
வேலியில் பூத்துக்கிடக்கும்
ஒரு கொடிபோல ஆகிவிடுகிறாய்
உனக்கு யாரும் நீரூற்றுவதில்லை
உனது மலர்களுக்காக யாரும் காத்திருப்பதில்லை
ஆனாலும் நீ ஒரு செடியாகவோ
மலராகவோ இருக்கத்தான் செய்கிறாய்
உன் மேல் திணிக்கப்பட்ட
குற்ற உணர்வுகளை இறக்கி வைப்பதற்கு
உனக்கு இதைவிட
வேறு சந்தர்ப்பம் வரப்போவதில்லை
நீ செய்யத் தவறிய ஒவ்வொன்றிற்கும்
பதிலளிக்கும் கடமையிலிருந்து நீ விடுவிக்கப்பட
இதைவிட்டால்
உனக்கும் வேறொரு தருணம் வரப்போவதில்லை
நீ பயனற்றுப் போகும்போது
நீ நிபந்தனைகளிலிருந்து விடுவிக்கப்படுகிறாய்
நிபந்தனையற்று மன்னிக்கப்படுகிறாய்
உனது ஆரோக்கியம்
உன்னை ஒரு பணயப் பொருளாக்குகிறது
உனது திறன்கள்
உன்னைப் புதிய பொறிகளில் சிக்க வைக்கின்றன
உனது சாத்தியங்கள்
உண்மையில் உனக்கான
எல்லா சாத்தியங்களையும் மூடி விடுகிறது
நான் நலமற்றுப் போகையில்
இந்தப் படுக்கை முழுக்க
என்னுடையதாகிவிடுகிறது
நான் அதன் பரப்பளவை
முழுமையாகப் பயன்படுத்துகிறேன்
அதன் தனிமைக்குள்
முழுமையாக என்னை ஒப்புக் கொடுக்கிறேன்
அது ஒரு தீவு போல இருக்கிறது
அல்லது
வனாந்திரத்தின் சின்னக் குகைபோல இருக்கிறது
என் காலடி ஓசைகளை அதில் நானே கேட்கிறேன்
எனக்குக் கிழமைகள் இல்லாமல் போகிறது
தேதிகள் இல்லாமல் போகிறது
மணிகளோ
பகல்களோ இரவுகளோகூட
இல்லாமல் போகும்போது
அப்போது
இந்த உலகம் முற்றிலும் வேறொன்றாக மாறிவிடுகிறது
அது நாம் இதுவரை வாழ்ந்த உலகம்போலவே இல்லை
அது ஒரு துறவியின்
உலர்ந்த மான் தோல்போல உள்ளது
அப்போது நான் கட்டவேண்டிய
ஒரு பில் பற்றி நினைக்கிறேன்
உடனே அதை மறந்து போகிறேன்
ஒரு அன்பை
ஒரு விரோதத்தை நினைக்கிறேன்
உடனே மறந்து போகிறேன்
ஒரு நோய்ப்படுக்கை
ஒரு புனிதரின் மடிபோல உள்ளது
நான் அதன் பயனின்மையை வணங்குகிறேன்
நீ பயனற்றுப் போகும்போது
கண்ணீர் சிந்த வேண்டியதில்லை
ஏதோ ஒன்று
வீணாகிவிட்டது என்று பயப்பட வேண்டியதில்லை
பயனற்றுப் போகாவிட்டால்
பிறகு எப்படி
ஒரு சிசுவைப்போல
மறுபடி பிறந்து
இந்த உலகத்திற்குள் வர முடியும்?

*

அம்மா இல்லாத முதல் ரம்ஜான்

அம்மா இல்லாத
முதல் ரம்ஜான்
நன்றாய் நினைவிருக்கிறது
அம்மாவைப் போலவே

எல்லா வீடுகளுக்கும்
வெள்ளையடித்த சுவர்களையும்
எங்களுக்கு ஞானத்தையும்
கொண்டு வந்த ரம்ஜான்

அதிகாலையில்
குளிக்க எழுப்பிவிடும்
அம்மாவை எழுப்பிவிட
அன்று யாருமில்லை

தூங்காத இரவை
சூரியன் எடுத்துச் சென்றபின்
எழுந்தோம்

உலகம் முழுவதற்கும் போதுமான
நிராதரவும் ஏழ்மையும்
எங்கள் வீட்டில் கப்பிக்கிடந்தது

பிறரது
இரக்கத்தின் கனத்தைப்
பொறுக்கச் சக்தியில்லாத தங்கை
கொடுத்தனுப்பபட்ட பட்சணங்களை
திருப்பியனுப்பிவிட்டு
ஐதிகம் மீறி
எண்ணைய்ச் சட்டி பற்றவைத்தாள்

தந்தை சாப்பிடாமலே
தொழுகைக்குச் சென்றார்
அவரைப் போன்றோரின்
காதல் பற்றி
கவிதைகளில் குறிப்பிடப்படுவதில்லை

சின்னத தம்பியைக்
கட்டாயப்படுத்திப் புத்தாடை அணிவித்தோம்
அம்மா இறந்த இரவில்
இனிமேல் அம்மா வரவே வராதா?
என்றழுத பிள்ளையை
அப்படியே விட்டுவிட முடியாது

ஆண்டுக்கொருமுறை
தெரு எல்லைகள் கடந்து
வீடு வீடாய்ச் செல்லும்
உறவுக்காரப் பெண்கள்
எங்கள் வீட்டிற்குள்
நுழையாமலே கடந்து சென்றனர்

நரம்புகளைத் தூண்டும்
மந்திரங்களின் பேரொலியுடன்
தொழுகை ஊர்வலம்
வீதியில் சென்றது

பாட்டியின் கைகள்
ஏன் அவ்வளவு பயங்கரமாய்
நடுங்கின?

மூலைக்கு மூலை
சாவு சிரித்தது

அம்மாவை
நீலம் பாரித்த முகத்துடன்
மீண்டும் தூக்கிவந்து
கிடத்தியது போலிருந்தது

முந்தைய ரம்ஜானில்
இந்த அளவுக்கு
இல்லாமல் போவோம் என
நினைத்திருப்பாளா?

பண்டிகைகள் கொண்டாடாத
நாத்திகனான நான்
முகத்தை மூடிக்கொண்டு
அழுதேன்

பின்னர்
வேறு ரம்ஜான்கள் வந்தன

அதிகாலைக் குளியல்
வெள்ளையடித்த சுவர்கள்
வீட்டில் கூட்டம்
புத்தாடைகளின் நறுமணம்
அம்மா இடத்தில் அண்ணி

எல்லாமே
எப்படியோ
சரிக்கட்டப்பட்டு
திரும்பிவிடுகிறது

ஆனால்
நானந்த
முதல் ரம்ஜானை
பத்திரமாய் வைத்திருப்பேன்

ஏனெனில் அது
அல்லாவை எதிர்த்து
அம்மாவுக்காக
கொண்டாடப்பட்ட ரம்ஜான்.

*

அந்தரங்கம்

எனக்குத் தெரியும்

ஓசைப்படாமல்
கதவு திறந்து வந்து

சுற்றுமுற்றும்
கவனித்துவிட்டு

பைய அருகிருந்து
குருடனின் சுயமைதுனம் பார்க்கும்
ஒரு ஜோடிக் கண்களை.

*

ஒரு பெரிய அவமானத்திற்குப் பிறகு

நன்றாகக் குளிக்க வேண்டும்
வெந்நீராக இருந்தால் மிகவும் நல்லது
இருப்பதிலேயே நல்ல அதிகம் பயன்படுத்தாத
தெம்பூட்டும் ஆடையை அணியலாம்

தெருவில் இறங்கி நடக்கும்போது
அடிக்கடித் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை

அதிக இறுக்கம் அதிக இணக்கம்
இரண்டுமே நம்மைக் காட்டிக்கொடுத்துவிடும்
குழந்தைகளை இயல்பாகக் கொஞ்சவேண்டும்

மர்மமாகப் புன்னகைப்பவர்கள்
கேட்காமலேயே நம் கனிவை வழங்குபவர்கள்
செயற்கையாகப் பேச்சை மாற்றுபவர்கள்
எல்லோரையும் நாகரீகமாக வணங்கலாம்

சாதுரியமாக விரைவாக
தப்பிச் சென்றுவிட வேண்டும்
நாம் மதிக்கப்படும் ஒவ்வொரு இடத்திலிருந்தும்

தனித்த அறை ஒன்றில்
மனங்கசந்து அழும்போது
கதவு தட்டும் ஓசைகேட்டு
கண்களைத் துடைத்துக்கொள்ள வேண்டும்

எல்லையற்றது
இந்த உலகின் தீமை
எல்லையற்றது
இந்த உலகின் கருணை.

*

நீ எப்போது வருவாய்

நீ எப்போது
வருவாய்?

அந்தப் பெண்
கண்களில் நீர் தளும்ப
யாரிடமோ
தொலைபேசியில்
இந்தக் கேள்வியைத்
திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருக்கிறாள்

நான் கவனிப்பதைப் பற்றி
கவலைப்பட அவளுக்கு
எந்த அவகாசமும் இல்லை

எப்போது வருவாய்
என்பதைக் கேட்பதைத் தவிர
அவளுக்கு இந்த உலகத்திடமிருந்து
தெரிந்துகொள்ள எதுவும் இல்லை

அவள் பிடிவாதமாக இருந்தாள்
மன்றாடுதலுடன் இருந்தாள்
தனிமையாக இருந்தாள்
எந்தக் கணமும் உடைந்து அழக்கூடியவளாக இருந்தாள்

எத்தனை யுகங்களாய்
இதே குரலில்
இதே கண்ணீருடன்
இதே கேள்வி கேட்கப்படும்
என்று தெரியவில்லை

வர வேண்டிய யாரோ ஒருவர்
இன்னும் வராமலேயே
இருந்துகொண்டிருக்கிறார்.

*

வேறொன்றும் வேண்டியதில்லை

கொஞ்சம் சோறு
கொஞ்சம் சுதந்திரம்
கொஞ்சம் தைரியம்

வேறொன்றும் வேண்டியதில்லை

இவர்களிடமெல்லாம்
எதையும் நிரூபிக்காமல்
முழுப் பைத்தியமாக வாழலாம்.

TAGS
Share This