நூல் பிறையளவு கொடை
கசந்து வெண்ணிறமாகப் புன்னகைக்கும் மொழி பிரான்சிஸ் கிருபாவினுடையது. மொழி ஒரு கோப்பை வைன் என்றால் அதன் ஆயிராமாண்டு காலத் துயர் பிரான்சிஸின் சொற்களில் வடியும் கைப்பு.
வாழ்வின் உவர்ப்பளிக்கும் அந்தரத்துடன் கத்திக் கொண்டு எதிர்ப்படும் மொழி, பைத்தியம் நிறை சொற்களால் இன்னொரு அகத்தை கையில் பற்றி உலுப்பி அறைந்து நீதி கேட்பவை. நீங்கள் ஏன் என்னைக் கைவிட்டீர் என்று ஒவ்வொரு கைவிடலுக்கும் ஒவ்வொரு விலக்கத்திற்கும் காரணம் கேட்பவை. பின்னர் தன்னைத் தானே மயிரென உதிர்த்துக் காற்றேகும் வண்ணத்துப்பூச்சிகளாகுபவை.
பிரான்சிஸ் கிருபாவின் மொழி தன் உணர்ச்சிகரங்கள் கொதியுலையென எழுகையின் சங்கீதம் கொண்டவை. அதனுள் அடைந்து கொதிக்கும் ஆன்மாவின் வாழ்வின் மூடியை உந்தி உதைத்துக் கொண்டேயிருக்கும் கால்களின் தீவிரம் மிக்கவை.
குழந்தையின் கண்களுக்கும் கசப்பின் நாநுனிக்குமிடையில் ஓர் அந்தர வெளியில் சக்தியின் கூத்தை ஆடுமொரு தாளம் பிரான்சிஸ் கிருபா.
*
உணவு
சிலிர்க்கச் சிலிர்க்க அலைகளை மறித்து
முத்தம் தரும் போதெல்லாம்
துடிக்கத் துடிக்க ஒரு மீனைப் பிடித்து
அப்பறவைக்குத் தருகிறது
இக்கடல்.
*
முதலில்
அண்ணன்கள் கைவிட்டார்கள்.
பிறகு
காதலிகள் கைவிட்டார்கள்.
முடிவில்
தம்பி தங்கைகளும் கைவிட்டார்கள்.
இத்தோடு நிறுத்திக்கொள்ளப்படவில்லை.
இன்னும் தொடர்ந்தது
கைவிடல் படலம்.
இறுதியாக
அவனை அவனே கைவிட்டான்.
அதற்குப் பிறகுதான்
நிகழ்ந்தது அற்புதம்.
*
உன்னை உன்னிடம் கேட்பேன்
ஏழு முறையல்ல எழுபது முறையல்ல
எல்லா முறையிலும்
உன்னை உன்னிடம் கேட்பேன்
மண்டியிடுவேன் மன்றாடுவேன்
துளி நீரும் பருகாமல்
மறுகியுலர்வேன்
மரிக்கும் கணத்திலும்
உன்னை உன்னிடம் கேட்பேன்
கடவுளிடம் கூட அல்ல.
*
வானத்தைத் தோற்றவன்
பறவையொன்றிடம் நான் இன்று
பந்தயம் கட்டி தோற்ற வானத்துக்கு
வரவில்லை நிலவு.
நூல் பிறையளவு கொடையுமில்லை.
எட்டிக் கூடப் பார்க்கவில்லை
யாதொரு நட்சத்திரமும்.
இப்படிப் பாழடைந்த வானம்
பார்த்ததேயில்லை இதற்கு முன்.
அவமானம் மிகுந்த இரவு
இதுவே கடைசியாக இருக்கட்டும்.
சூதாடக்கூடாது இனி
வானத்தை பூமியில் வைத்து.
*
தெரிந்தோ தெரியாமலோ
தெரிந்தோ தெரியாமலோ
உன் காலடி மண்ணெடுத்து
ஒரு பூமி செய்துவிட்டேன்
உன் ஈரக் கூந்தலை
கடலாகச் செய்யும் முன்னே
கடந்து போய்விட்டாய்
உயரத்திலிருந்து சூரியனாய்
வருத்துகிறது ஒற்றைப் பார்வை
வெப்பத்தில் வறள்கிறது
எனது சின்னஞ்சிறிய பூமி
நீரூற்று தேடிக் கிணறுகள் தோண்டினால்
பீறிட்டடிக்கிறது ரத்தம்.
கண்ணே
இரண்டொரு தீர்த்தமணிகளைத்
தானமிடு.
*
மழை பெய்யும் போதெல்லாம்
மழை பெய்யும் போதெல்லாம்
நிலைகுலையும் ஒருமனிதன்
இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவான்
சின்னஞ்சிறு மழையோடு.
குடையேதும் கண்டிராதவன்.
வானம் ஒரு ஒப்பந்தம்
அவனோடு செய்வதாக நம்புகிறான்
சற்றே நீளமான கையெழுத்தைத்தான்
கால்களால் இட்டபடி திரிகிறான்
நீரோட்டமோ அவன் அடையாளங்களைப்
புரட்டிப் போட்டுக்கொண்டே ஓடுகிறது
அவனது ஒரே லட்சியம்
மழையில் நனைவதுதான்
எத்தனையோ மழைக்காலங்களுக்குள்
ஏங்கி அலைந்தும்
ஒரு துளிகூட அவன் நனைந்ததேயில்லை.
துரும்புபோல் மெலிந்தவனாக
உடல் வாய்த்ததால்
மழைத்துளிகளின் இடைவெளிகளே
எங்கும் வாய்த்தன.
எல்லா மழைக்காலங்களிலும்
அவனுக்கு முன்னே பெருமழையொன்றும்
நடந்து வருவதுண்டு.
அதோ வெள்ளத்தில் படகுபோல
ஒரு துளி கூட நனையாமல்
பெரும் மழையின் பெரும் இடைவெளியில்
ஆடி வருகிறது அவன் வீடு.
*
உயிர் பிரியும் கணத்தில்
உயிர் பிரியும் கணத்தில்
தம் காயங்களை
கடைசியாய் பார்வையிட்ட
மெசியாவின் கண்களை
பல நூற்றாண்டுகள் கழித்து
இன்று சந்தித்தேன்
கடற்கரையில்
மடித்த கைப்பைகளுடன்
சூழ்ந்து நின்ற மனிதர்களுக்கு
மத்தியில் மல்லாத்தியிட்டு
தன் வயிற்றில் இறங்கி முழு
வட்டமடித்த கத்தியைத்
தலை தூக்கி எட்டிப் பார்த்தது
ஆமை.
*
ஒளி
பழகியிருந்தன
எல்லா வீடுகளும்.
ஆணும் பெண்ணுமாக
ஏழு பிள்ளைகள்
ஒரே திண்ணையில்
இடம் விட்டு விட்டு நித்திரையில்
குறுக்கே வெளிகளற்ற ஒரு கனவோடு.
இடைவெளி குறையும் போதெல்லாம்
எழுந்து பிள்ளைகளை
சரி செய்வாள் அம்மா.
ஏழு வீட்டிலும்
விளக்குகுழியில் சிம்னி விளக்கிருந்தது
அதற்கு மேலும்
குறைக்க முடியாத
வெளிச்சத்தோடு.