ஏறி வருதல்

ஏறி வருதல்

உலகம் முழுவதிலுமுள்ள வணிக சினிமா என்பது கேளிக்கையினூடாகவும் மிகைப் புனைவுக் காட்சிகளின் ஊடாகவும் பெரும்பான்மைப் பார்வையாளர்களின் பார்வைக்குள் சலனங்களை ஏற்படுத்துவதை வெற்றிகரமாகச் செய்வதையே வணிக சினிமாவின் வெற்றியாக ஈட்டுகின்றன. இறுதி யுத்தத்திற்குப் பின்னரான ஈழத்து சினிமாவின் முழுநீளத் திரைப்படங்களை அவை உருவாகத் தொடங்கிய காலகட்டத்திலிருந்தே ஒரு பார்வையாளராக நெருக்கமாக அவதானித்து வருகிறேன். ஒவ்வொரு சிறு வெற்றியும் முன்னேற்றமும் என்னை உவகை கொள்ளச் செய்திருக்கிறது. அது ஒரு திரளின் கனவும் இந்த நிலத்தின் வாழ்வும் திரையில் விரிவதன் உவகை.

ஏராளமான படங்களைப் பார்த்திருந்தாலும் பெரும்பாலானவை சராசரிக்கும் கீழான வெகுசன ஏற்பையே அடைந்து வருகின்றன. இதற்கான முக்கியமான காரணமாக நான் அவதானிப்பது வணிக சினிமாவின் சட்டகத்தை ஈழத்து வாழ்விற்குள் நுழைக்க முடியாமல் இயக்குனர்கள் அடையும் நெருக்கடிகள். இரண்டையும் இணைப்பதற்குத் தேவையான அறிவுழைப்பும் குன்றாத ஊக்கமும் உருவாகாமை. எப்பாடு பட்டாவது, ஒரு படத்தை எடுப்பது, அதை சில ஆயிரம் பார்வையாளர்களைப் பார்க்க வைப்பது. அதன் வழி நானும் சினிமாவில் இருக்கிறேன் என்ற நிறைவை உணர்வது. ஆனால் பார்வையாளர்கள் எங்கட ஆக்களின்ர படம், நாங்கள் பார்த்து ஊக்கப்படுத்த வேணுமென்று, மரதன் ஓடுகின்ற சிறுவர்களுக்கு வீடு வீடாக நின்று தண்ணீர் ஊற்றி உற்சாகப்படுத்துவது போல் ஊக்கப்படுத்துகிறார்கள். ஈழத்து சினிமா என்ற நீண்ட மரதனோட்டத்துக்கு இந்த நீரூற்றல் தொடக்க நிலைக்கு அவசியமானது தான். அதே நேரம் யாராவது ஒருவர் மொத்த ஈழத்துத் தமிழ்ப் பார்வையாளர்களையும் எந்த ஊக்குவிப்பும் அவசியமின்றி தன் சினிமாவின் வெற்றியால் தங்கள் சொந்த வெற்றியாக மக்கள் கொண்டாடக் கூடிய படத்தினை எடுப்பார்கள் என்று எல்லாப் பார்வையாளர்களுடனும் நீரூற்றுபவர்களுடனும் ஒருவராக நானும் காத்திருந்தேன்.

டக் டிக் டோஸ் திரைப்படத்தை ராஜா திரையரங்கில் குடும்பத்துடன் சென்று பார்த்தேன். படம் நிறைவடையும் போது நெஞ்சில் எழுந்தது வென்று விட்டார்கள் என்ற ஒற்றை வரிதான். மொத்தத் திரைப்படமாக, தொழில்நுட்பமாக, இசையாக, வணிக சினிமாவாக இதுவரை ஈழத்தில் வெளிவந்த திரைப்படங்களில் இதுவொரு மகத்தான பாய்ச்சல். சிரிப்பும் தீவிரமுமாக மழை பெய்யும் நதியொன்று இலைகளைப் புரட்டி எடுத்துச் செல்வது போல் பார்வையாளர்களை அழைத்துச் சென்றது படம். வணிக சினிமாவின் தர்க்கப்பிழைகளை ஊகங்களைப் பார்ப்பதற்கு நேரமின்றி பெரும்பான்மைக் காட்சிகள் மிக நேர்த்தியாகக் கோர்க்கப்பட்டிருக்கிறது.

வட்டிக்குப் பணம் வாங்கிய ஒருவர், அதனைத் திருப்பிச் செலுத்தாத போது, அவரைக் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தும் காணொலி ஒன்று சிலகாலங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பரவியது. அடித்தவர்களே எடுத்த காணொலியது. பார்த்தவர்கள் நெஞ்சம் பதறித் துடிக்கும் வன்முறையது. அதைப் பார்த்த பின்னர் அது தொடர்பில் எதுவும் செய்ய முடியாமல் வருந்திய ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். என்ன செய்வது இதற்கு, இந்த வட்டிக்கு விடும், கொடுத்த பணத்தினைத் திருப்பிக் கொடுப்பதில் இடர்களை எதிர்கொள்பவர்களை அடித்து நொறுக்கும் ரவுடிகளை நாங்கள் என்ன செய்ய முடிந்தது? அந்தக் குற்றவுணர்வு சமூகமாக நாம் கொள்ள வேண்டியது. அத்தகைய சிக்கலின் மீது பின்னப்பட்ட கதை தான் டக் டிக் டோஸ். சிவராஜ் எப்பொழுதும் கவனம் கொள்ளும் சமூகச் சிக்கல்கள் தீவிரமானவை. சாதரண மக்கள் பேச அஞ்சும் அல்லது தயங்கும் மையக் கருக்கள். அந்தத் துணிவுக்கும், கரிசனத்துக்கும் முதற் பாராட்டுகள். நம் மனசாட்சியை நோக்கி எழுப்பப்படும் கேள்வியுடன் எழுவதே வணிகசினிமாவின் முதல் வெற்றி.

திரைக்கதை படத்தின் இரண்டாவது முக்கிய வெற்றி. மனநலக்காப்பகமாக வாழும் இந்தச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஊடும்பாவுமாக கதை பின்னப்பட்ட விதம், விறுவிறுப்பாக ஓடிக்கொண்டேயிருந்த காட்சிகள் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டிருந்தது.

பின்னணி இசையில் பெரும் வளர்ச்சியை அடைந்துள்ள மதீசனின் அற்புதமான இசை படத்திற்கு மூன்றாவது வெற்றி, அவரது பின்னணி இசை, திரைக் காட்சிகளை வேறொரு தளத்திற்கு நகர்த்துகிறது. பலகாட்சிகளைத் தூக்கி நிறுத்தியதில் பின்னணி இசைக்கு முக்கிய பங்களிப்பிருக்கிறது. மனநலக் காப்பகத்தில் இடம்பெறும் பாடலை மிகவும் ரசித்தேன். வரிகளும் இசையும் நடனமும் இணைந்து ஒரு வணிக சினிமாவிற்குள் பேசும் சமூக அரசியலை மிகப் புதிதாகக் கையாண்ட ஒரு பாடல். அதன் தன்மை ஈழத்தின் அசல் வணிக சினிமாப் பாடல்களின் தொடக்கம் என்றே நான் மதிப்பிடுகிறேன். குறிப்பாக நர்சின் நடனம் அட்டகாசம்😉.

(ஷூட்டிங் ஸ்பொட்டில் மதீசன்)

நான்காவது வெற்றி, திரையில் உழைத்த பிரதான கதாபாத்திரங்கள் தொடக்கம் சிறுசிறு கதாப்பாத்திரங்கள் வரை அவர்கள் திரையில் தோன்றியிருக்கும் விதமும் நடிப்புக்கான உழைப்பும். அது ஒரு வகையில் பிரமிப்பூட்டியது. கதாநாயகன், கதாநாயகி, நண்பர்கள் மற்றும் இதர பாத்திரங்கள் மிக மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சில குறைகள், மிகைகள் இருந்தாலும் அவை துருத்தாமல் தங்கள் முழுமையான நடிப்பாற்றலை வழங்கிய இடங்களும் இருக்கின்றன. பலரையும் நேரில் பார்த்திருக்கிறேன், ஆனால் திரையில் அவர்கள் வேறொரு பாத்திரமாக மாறி நின்றமை அந்த ஸ்கிரீன் பிரசென்ஸ், ஈழத்துத் தொழில்முறை நடிப்பின் சாதனையாகக் கொள்ள வேண்டியது.
இப்படத்தின் நடிகர்கள் பிறராலும் பயன்படுத்தப்பட வேண்டியவர்கள். வளர்த்தெடுக்கப்பட வேண்டியவர்கள்.

கதாநாயகனின் நடிப்பு என்னைத் தனிப்பட மிகவும் கவர்ந்தது. கதாநாயகி துணிச்சலானதும் இயல்பானதுமான நடிப்பைத் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார். பிற்போக்கான பார்வைகள் பல கொண்ட இந்தச் சமூகத்தில் சினிமாவை ஒரு கலையாக வளர்க்க இத்தகைய கதாபாத்திரங்கள், அசல் ஈழ முகங்கள் தேவை. வில்லனின் நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது. மிக அநாயசமாக நடித்திருக்கிறார் மனுசன்.

படத்தின் ஐந்தாவது வெற்றி நகைச்சுவை. தியேட்டர் மொத்தமுமே விழுந்து புரண்டு சிரித்துக் கொண்டிருந்தோம். தியேட்டரில் குழந்தைகள் அழாமல், மகிழ்ந்து சிரிக்கும் படமொன்றை இப்போது தான் பார்க்கிறேன் என்று புலம்பெயர்ந்த நண்பரொருவர் தனது நாட்டு அனுபவத்தை போனில் சொன்னார். நானும் அதையே தியேட்டரில் கேட்டேன், வழமையாக வீரிட்டு அழும் குழந்தைகள், வீரிட்டுச் சிரிக்கும் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது.

குழந்தை போன்ற மனநிலை கொண்ட கதாபாத்திரத்தின் வருகை திரையில் ஒரு அற்புதமான இருப்பை நிகழ்த்தியது. ஆனால் அவரின் உடல்மொழியை இன்னும் கவனித்திருக்க வேண்டும். கவிஞர் ஆதி பார்த்திபன் படம் முடிந்த பின் உரையாடிய போது, ஓட்டிசம் கொண்ட பிள்ளைகளின் சில உடல்மொழிகள் பயன்படுத்தப்பட்டமையைத் தவிர்த்திருக்கலாம். அவை நுட்பமான சிக்கல்கள் கொண்டவை. அது ஒரு மனநலக் குறையல்ல என்று கூறினார். அவை எதிர்காலத்தில் திரைக்குழு மற்றும் நடிகர்கள் கவனங் கொள்ள வேண்டியவை. இனிமேல் பொறுப்புகள் அதிகரிக்கும். வென்றவர்கள் தான் பொறுப்பை அதிகம் சுமப்பவர்களாக ஆவார்கள்.

ஒப்பனையைப் பற்றி அனைவருமே பாராட்டினார்கள். சபிலின் பெண் வேடத்தைக் கடைசி வரை நம்பவே முடியவில்லை. வேறொரு முகம் கொண்டது போலிருந்தார். நுட்பமான கவனம் கொண்ட ஒப்பனை. அந்தக் கலைஞர்களுக்கு விசேடமான வாழ்த்துகள். அது தான் ஒரு மெய்நிகர் தோற்றத்தையும் காட்சிகளின் மீதான நெருக்கத்தையும் உண்டாக்கியது.

ஆறாவது வெற்றி ஒளிப்பதிவுக் கலைஞரின் உழைப்பு. பெரும்பாலன காட்சிகள் அமைவிடத் தேர்வுகள், கோணங்கள் படத்தை ஆற்றின் ஒழுக்கென நகர்த்திச் செல்பவை. அனைவருமே திரையில் மிக அழகாகக் காட்டப்பட்டுள்ளார்கள். இதுவொரு முக்கிய அம்சம். ஒவ்வொருவரிற்குள்ளும் உள்ள அழகைப் பார்க்கும் கண்களாலேயே அவர்களை அழகாகக் காட்ட முடியும். அந்த வகையில் ஒளிப்பதிவாளருக்கு தனிப்பாராட்டுகள்.

ஏழாவது வெற்றி படத்தொகுப்பு, ஆற்றின் கரைகளை அளந்து வெட்டினால் தான் ஆறு வேகமாகக் கடலை அடையும், அத்தகைய நேர்த்தி படத்தொகுப்பில் இருந்தது. சில காட்சிகளின் நீளம் சற்று அதிகரித்தது போல் உணர்ந்தேன். அவற்றை சரி பார்த்திருக்கலாம். உதாரணத்திற்கு, இறுதிக்காட்சிக்கு முன் வரும் உடுப்புக்கடை சீன்.

படத்தின் சுட்டிக்காட்டப்பட வேண்டிய குறையென்பது நகைச்சுவைகளின் சில உடல்மொழிகள் மற்றும் தற்பாலீர்ப்பாளர்கள் பற்றி வரும் காட்சிகள். அவற்றில் இன்னும் கவனம் இருந்திருக்க வேண்டும். மையக் கதைக்கு வெளியேயான துண்டுக் காட்சிகளை இணைக்கும் போது அவை ஏற்கனவே சமூகத்தின் பொதுப்புரிதலில் உள்ள பார்வைகளைச் சாதாரணமாக்குவதாக இருக்கக் கூடாது. அதிலும் வணிக சினிமாவிற்கு இன்னும் கூடுதல் பொறுப்பிருக்கிறது. ஏனெனில் அவை பெரும்பான்மை மக்களின் பார்வையில் விழுபவை. புதிதாக அரசியல்மயப்பட்டு வரும் குயர் உரிமைகள் போன்ற ஒடுக்கப்பட்ட பிரிவுகளின் உட்பிரச்சினைகளைக் கையாளும் போது அதிக கவனமும் புரிதலும் தேவை.

இந்தக் குறைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டும் கூட, படம் முன்னகர்ந்திருக்கும் வெளியும் பாய்ச்சலும் முக்கியமானதாகவே கருதுகிறேன். எதிர்காலத்தில் இக்குறைகளைத் திரைக்குழு கவனம் கொள்ள வேண்டும்.

(இயக்குனர் சிவராஜ்)

ஒரு சமூகமாக நாம் கொண்டாடிக் களிக்க வேண்டிய பெரு வெற்றியைத் திரையில் அடைந்திருக்கும் குழுவினர் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். உரையாடலுக்கும் சலனத்திற்கும் வாய்ப்பளித்திருக்கும் டக் டிக் டோஸ், வணிக ரீதியிலும் வெற்றியடைய வேண்டும். இயக்குனருடன் கதைத்துக் கொண்டிருந்த போது படத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் ஊதியமளிக்கப்பட்டது என்று சொன்னார். அதுவொரு முக்கியமான அடைவு, பொறுப்பு. அதற்குப் பதிலாக அப்படம் வணிக ரீதியில் வெற்றியடைவதே அவர்கள் முன்செல்ல, உழைப்புக்கு ஊதியம் தொடர்ந்து உருவாக, சினிமா ஒரு தொழிற்துறையாக வளர அடிப்படையானது. நாம் பார்வையாளர்களாகவும் சமூகமாகவும் இந்த வெற்றியாளர்களின் பணியை மதிப்பதும் வரவேற்பதும் கொண்டாடுவதுமே இதை நம் வெற்றியென உணர்த்தும். வெற்றிகள் பெருகும்.

படத்தின் முன்னோட்டம்:

TAGS
Share This