உருவச் சிதைப்பிலிருந்து பருமட்டான உருவத்துக்கு

உருவச் சிதைப்பிலிருந்து பருமட்டான உருவத்துக்கு

*

கண்ணாடிப் பேழைக்குள் நெளியும் பாம்புகள்.

திருவிழாத் தெருக்கள் கலகலத்துக் கொண்டிருக்கின்றன. ஞாபகம் தன் அந்தக் கணத்திலிருந்து ஆதிக் கணம் வரை திரும்பத் திரும்ப அலைகிறது. பாதளக் கிணற்றில் ஓடும் மோட்டார் சைக்கிளைப் போல் மறுபடியும் மறுபடியும் வளைய வளைய சுற்றுகிறது.

ஒரேயொரு “கிளிப் ” வாங்கிக் கொடுத்துவிட வேண்டும். அம்மா ஞாபகங்கள் இராத்திரித் திருவிழாவில் சீலையில் முடிந்திருந்த தாள்களில் சிலவற்றைத் தருகிறாள். விபூதி வாசம் குங்கும முகம்.

எல்லா நிறங்களும் இருளில் அலைந்த தெருவில் குரல்களின் சத்தமும் உடல்களின் சத்தமும் குமைந்து மூச்சுத் திணறியது.

ஞாபகம் மீண்டும் நிகழ்காலத்தில் தள்ளி விட, இதோ பக்கத்தில் வரும் இவளுக்கு ஏதாவது வாங்கி கொடுக்க வேண்டும். தொண்டையில் இறங்கிய குளிர்களி அலையும் இருளில் தொலைந்த சிறுவனின் கண்களை அவளுக்கு காட்டியிருக்க வேண்டும். கைகளைப் பிடித்தாள்.

வானத்தில் மிதந்து விரிந்து சுற்றி பூமிக்குத் திரும்பும் விசிறிகளை ஒருவன் பறக்க விட்டுக் கொண்டிருந்தான்.

நினைவு வானத்திற்குத் திரும்பியது.

அப்பாவின் சைக்கிள் பின் கரியரில் இருந்தபடி செல்கிறாள் அம்மா. மாறாத சிரிப்பு. இரக்கத்தின் கண்கள்.

ஐஸ் பழங்களை உறிஞ்சியபடி நிற்கும் அத்தைகள், மச்சான்கள், மச்சாள்கள். உறவின் இந்தக் கணம் கரைந்துவிடாத படி ஞாபகத்தில் உறைந்திருக்கிறது. நகைகளின் சரசரப்பு, பவுடர் வாசனை, மணலில் புதையும் கால்கள். வியர்வை கசியும் ஒன்றையொன்று பற்றிப் பிடித்த கைகள்.

யானைத் துப்பாக்கி வாங்கித் தரும் அப்பா. துப்பாக்கிகளை மட்டுமே வாங்கி கொண்டிருந்த சிறுவர்கள்.

கச்சானின் வறுத்த காற்று மூக்கில் சோளனைப் பொரிய வைத்தது. ஊறிய ஒழுகும் தேன்குழல் நாக்கைப் போல் நீண்டு வளைந்திருந்தது.

பலூன்களை விற்றுக் கொண்டிருந்த சிறுவர்கள் இந்தக் காலத்திற்கும் அந்தக் காலத்திற்கும் இடையில் பறந்து செல்பவர்களாக நின்று கொண்டிருந்தார்கள்.

பெரிய தாங்கியிலிருந்து நீரை விசிறியபடி யானையைப் போல நகர்கிறது காலம்.

கிரிசாந்
(2014)

*

(லலிதகோபன்)

கவிதையொன்றில் அல்லது பிரதியொன்றில் காலங்கள் நிலைத்து தங்கியிருக்க வேண்டும் என்ற அவசியங்களேதுமில்லை என நினைக்கிறேன். ஏனெனில் அது ஒரு புனைவுப்பிரதி. நவீனம் தாண்டிய பிந்தைய புனைவுகளில் காலம் மாறாத படிமமாக தங்குவதில்லை. அது அங்குமிங்குமாக அலைவுகிறது. மனித மனங்களில் உள்ள நினைவுகளும் இவ்விதமே. நினைவுகள் ஒரு காலத்தில் நிலைத்து நிற்பதில்லை. அங்குமிங்துமாக அலைவுறும் நினைவுகளின் பிரதியாக இந்த கவிதையினை அமைத்துள்ளார் கிரிசாந் அவர்கள்.

ஆனால் இந்த கவிதை எந்தெந்த காலங்களுக்கிடையே நிகழ்வுறுகிறது என்பதை கவிதையின் மீதான வாசிப்பனுவம் காட்டி கொடுத்து விடுகிறது.

//யானைத்துப்பாக்கி வாங்கி தரும் அப்பா. துப்பாக்கிகளை மட்டும் வாங்கி கொண்டிருந்த சிறுவர்கள்//

//ஞாபகம் மீண்டும் நிகழ்காலத்தில் தள்ளிவிட ,இதோ பக்கத்தில் வரும் இவளுக்கு ஏதாவது வாங்கி கொடுக்க வேண்டும்//

சிறுவனாயிருக்கும் காலத்திற்கும் வளர்ந்த பின்னான காலத்திற்குமிடையே கவிதை பாம்பாக நெளிகிறது. ஒன்றல்ல பல பாம்புகள். நினைவுகள் பாம்புகளாகி கவிதைச்சம்பவங்களை நிகழ்த்துகிறது. வாசகன் கண்ணாடிப் பெட்டியின் முன்பு அமர்ந்துள்ளான். ஒரு திரைப்படத்தின் காட்சிகளாய் காலம் முன்னும் பின்னுமாக அலைவுறுகிறது.

இந்தப் பகுதியில் கவிதைசொல்லியினால் அறிமுகத்தப்படும் “அவள்” என்பது மகளாக, மனைவியாக, காதலியாக பல அர்த்தங்களைக் கொள்ள வைக்கிறது.

அம்மா குறித்த நினைவுகள் நிகழ்நிலை படிமங்களாக காலத்தினிடையே அலைக்கப்படுகின்றன.

//இராத்திரி திருவிழாவில் சீலையில் முடித்திருந்த தாள்களில் சிலவற்றை தருகிறாள். விபூதி வாசம். குங்கும முகம்//

//அப்பாவின் சைக்கிள் பின் கரியரில் அமர்ந்தபடி செல்கிறாள். மாறாத சிரிப்பு. இரக்கத்தின் கண்கள்//

அம்மாவின் தொன்மங்களில் அம்மா எப்போதும் அம்மாவாகவே அறியப்படுகிறாள். இது எல்லோருக்கும் பொதுவான அம்மாவின் நினைவுகளாக மனதில் தங்கி நிலைத்து விடுகின்றன.

எல்லா நிறங்களும் அலைந்த தெருவில் அம்மாவின் முகம் குங்குமமாக நிலைத்திருக்கிறது. திருவிழா என்பது நிறங்களிலானதாக இருக்க இங்கே வகைக்குறிக்கப்படும் நிறமாக குங்குமமே இருக்கிறது. ஒருவேளை இந்த நினைவுகளின் நிறமும் குங்குமமாக இருப்பதனால்தானோ அது இவ்வாறு கரைக்கப்படுகிறது.

//பெரிய தாங்கியிலிருந்து நீரை
விசிறியபடி யானையைப்போல
நகர்கிறது காலம்//

காலத்தின் நகர்வு பெரும் பரிணாமமாக இருக்கிறது. அதன் நீர்ப்பாய்ச்சலில் கரையும் வண்ணங்களின் நிறமாக குங்குமமே எஞ்சுகிறது. ஏனெனில் அம்மா மட்டுமே நிறங்களை நினைவூட்டும் ஒரேயொரு படிமம்.

//தொலைந்த சிறுவனின் கண்கள்//
கவிதையில் காட்சிகள் முன்னும் பின்னுமாக நகர்த்தப்படுவதன் குறியீடு இது. உண்மையிலேயே இப்போது அங்குமிங்கும் அலைக்கப்படும் நினைவுகளுக்கு இப்போது ஒரு உருவம் கிடைத்து விடுகிறது. அம்மாவின் முகம்; சிறுவனின் கண்கள்; கச்சான் வறுத்த வாசம்; தேன்குழல் நாக்கு. இவை யாவும் இணைந்து ஞாபகங்களை நகர்த்தி செல்கின்றன எனலாம்.

திருவிழாவில் தொலைந்த சிறுவனின் கண்களூடே காட்சிகள் நகர்வதன் காரணமாயே காட்சிகள் அங்குமிங்கும் அலைவுறுவதாக கொள்ளலாம்.

ஆனால் அவள் கண்களால் உணர்வுகளை படித்து கையை பிடிக்கையில் பிரக்ஞை நிகழ்காலத்திற்குத் திரும்புவதாக கூறலாம்.

//நினைவு வானத்திற்கு திரும்பியது//

இதன் பின்னால் நிகழும் காட்சிகள் கவிதைசொல்லியின் பால்ய கால உறவுகள் யாரும் அருகில் இல்லையோவென அர்த்தங்களை பிறப்பிக்கிறது. நினைவுகளை இக்கணத்திற்கும் அக்கணத்திற்கும் கடத்தும் அங்குமிங்கும் அலைக்கழிக்கும் ஊடகங்களாக பலூன் மற்றும் விசிறி என்பன காட்சிப்படுத்தப்படுகின்றன.

//பாதாளக்கிணற்றில் ஓடும்
மோட்டார் சைக்கிளைப்போல மறுபடியும் மறுபடியும் வளைய வளைய சுற்றுகிறது//

இப்போது நினைவுகள் சுழலும் பாதையின் வடிவம் புலனாகிறது. அது வட்டமென ஊகிக்க முடிகிறது. அதனாலேயே காலத்தினால் நீர்த்தாரையென அழிக்கப்படுபவை சுழற்சி வட்டத்தில் மீள்கிறது.

//தொண்டையில் இறங்கிய குளிர்களி//
//வியர்வை கசியும் ஒன்றையொன்று பற்றிப்பிடித்த கைகள்//

திருவிழாக்களின் நினைவுகள் எப்போதும் ஈரம் ஊறியவையாகவே இருக்கின்றன. அதற்கான சான்றுகள் உண்கிற குளிர்களியும் கசிகின்ற வியர்வையும் இரண்டிலுமே பற்றிப்பிடித்தலே நிகழ்கிறது.

நினைவுகள் சுழலும் நாட்களின் வானிலையை குறிப்பதாக அமைகின்றன குளிர்களியும் வியர்வையும்.இந்த குளிர்மையும் வியர்வையும் தொடர்ச்சியாக நினைவுகளை காயாது வைத்திருக்கின்றன.

மொத்தத்தில் காலங்களினூடே அலைக்கழிக்கப்படும் நினைவுகளை சிதறலாக வெளிப்படுத்துகிறார் கவிஞர். அதற்கு ஒழுங்கென்று ஒன்றில்லை.உருவமும் இல்லை. ஆனால் கவிதையை மீள மீள வாசிப்பதனூடே பருமட்டான உருவமொன்றை வரைய முடிகிறது. இதனையே எனது வாசிப்பு அனுபவம் தந்தது.

பொதுவாகவே நினைவுகளுக்கு ஒழுங்கான வடிவம் ஏதுமில்லை. இந்த கவிதையில் விசேடமாக உருவச்சிதைப்பு உத்தியை தேர்வு செய்தமை அது நிகழ்ந்த காலமாக கூட இருக்கலாம். கவிதையின் வாசிப்பு முடிவில் உணர்வுகள் எதுவும் எஞ்சவில்லை. ஆனால் அந்த காலம் நினைவில் மீள மீள அலைக்கழிக்கிறது.

//துப்பாக்கிகளை மட்டுமே
வாங்கி கொண்டிருந்த சிறுவர்கள்//

லலிதகோபன்

TAGS
Share This