கண்ணீர் மிக்க ஒளியுடையது

கண்ணீர் மிக்க ஒளியுடையது

ஈழக் கவிதைகளின் மொழியுள் தேச விடுதலை என்ற கனவுடன் எழுந்த கவிஞர்களில் அக்காலம் முழுவதிலும் அதன் பின்னரும் சக பயணியாயும் சாட்சியாயும் எழுதப்பட்ட கவிதைகள் கருணாகரனுடையவை.

அவரது மொழி தளும்பும் குடத்தின் நீராட்டம் போன்றது. அதற்குள் எப்பொழுதும் முடிவுறாத குற்றவுணர்ச்சிகளினதும் பொறுப்பேற்றலினதும் குரல் தளும்பிக்கொண்டேயிருக்கும். உறுதியான நம்பிக்கைகள் எரியும், பின்னர் அது நீறாகும், நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் அவரது கவிதைகள் தொடர்ந்து அலைந்து கொண்டேயிருக்கும்.

குற்றவுணர்ச்சியின் முனைகள் மொழியுள் முளைக்கும் போது அவை நம்பிக்கையின் வேர்களை அரித்துக்கொண்டே முன்னகரும். வரலாறென்ற மயக்கும் சுழற்பாதையை கவிஞர்கள் ஒருபோதும் திசை மாற்ற முடிவதில்லை. அதன் மயக்கும் வழிகளும் சுழற்பாதைகளும் அவர்கள் மொழியில் பனியில் ஈரமென உறையும்.

கருணாகரனின் கவிதைகளில் குற்றத்தினதும் கைவிடப்படலினதும் ஒதுக்கப்படலினதும் குரல் எழும் போது அவரது மொழியின் சங்கீதம் உறுதியான கூர்மையை அடைகின்றது. சொற்செறிவான உள்ளோடும் மனலயம் ஒருங்கிணைகிறது.

ஈழ விடுதலைப்போரின் நம்பிக்கைகளின் குரல்களுக்கு ஒரு மொழி உருவானதென்றால், அதன் அழிவுகளினதும் குற்றவுணர்ச்சிகளினதும் மொழி கருணாகரன் உருவாக்கியளித்தது.

(கருணாகரன்)

*

நட்சத்திரம்

விடைபெறுகிறேன் உன்னிடமிருந்து
சிறு கூடாரம் வானமல்ல
வானம் சிறு கூடாரமுமல்ல
எப்போதும் வாதிட்டுக் கொண்டிருக்க முடியாது
பொய்யை விடப் பிடிவாதத்தின் கூர்
அதிக காயங்களைத் தரும்.

விடைபெறுகிறேன்
எந்தத் தோல்வியுமில்லை எந்த வஞ்சனையுமில்லை
கழிவிரக்கங்கள் இனியும் வேண்டாம்
இனியும் கத்தியாகவும் கேடயமாகவும் இருக்க முடியாது
ஒரு பயணிக்கு அது அவசியமுமில்லை

கோபங்களில்லாத காடு
தீப்பற்றியெரியாத வெளி
விசமற்ற நீர்ச்சுனை
பொறிகளில்லாத வழி
எங்கேனுமிருக்குமென்று தெரியவில்லை.

குலுக்கும் கரங்களில் பளபளக்கும் நகங்கள்
சினேகத்தின் ஈரத்தையும்
அன்பின் நெருக்கத்தையும் சிதைக்கின்றன.

எல்லாவற்றையும் பிரித்துப் பார்ப்பதில்
அழிய வேண்டுமா பொழுது
எல்லாவற்றுக்கும் பொறி வைப்பதில்
கசங்க வேண்டுமா மூளையின் மலர்?

எதையும் நான் எடுத்துச் செல்லவில்லை
என்னிடமும் எதுவுமில்லை கொண்டு போவதற்கு
ஞாபகங்களும் வேண்டாம்
வலிதரும் நினைவுகளால் என்ன லாபம்?

அதோ பறவைகள், பூக்கள், மனிதர்கள்
குழந்தைகளும் விரிந்த நிலமும் புன்னகையும்

வழி தவறிய ஆட்டுடன்
ஓரிடையன் தொடர்ந்து அலைய முடியாது

உனது சொற்களிலிருந்தும்
புள்ளியிலிருந்தும் விடைபெறுகிறேன்.

செயலின் முகம் விரிகிறது
இன்னொரு வெளியில்.

*

ஒரு பயணியின் குறிப்புரை

இரவின் மீது வீழ்கிறது பனி

நிலா ஒரு குழந்தை
வானத்தின் மடியில் தவழுது

வெண்ணிலவு எழுதும் பாடலின் வரிகள்
எல்லா முற்றங்களிலும்
புராதன கீதமாய் இசைகிறது

நினைவிழந்த ஞாபகம் நான்.

மாமிசக் கனவும்
நெருப்பின் ஞாபகமும்
இல்லாத காலம் மலரும் நாளை உணருகின்றேன்.

கடவுளின் குரலைக் கொன்றவர்களை
மன்னியுங்கள்
சாத்தான்களின் உலகில்
கடவுளின் குரல் மதிப்பிறங்கிய பழைய காகிதம்

பொறிகள் உடைபடத் திறபடும்
வெளியில்
துளிர்க்கும் புன்னகையில்
குழந்தைகளின் பொம்மைகளும் உயிர்க்கின்றன
விரிகிறது காலவெளி.

என்னுடைய புன்னகையைத் தந்துவிட்டு
எல்லோருடைய கண்ணீரையும் எடுத்துச் செல்கிறேன்

மாபெரும் சவப்பெட்டியில்
நிரம்பியிருக்கும் கண்ணீரைப் போக்கி விடுகிறேன்
கள்ளிச்செடிகள் இனி இல்லை.

காற்றுக்கு வேர்களில்லை
ஒளிக்குச் சுவடுகள் இல்லை

எனது புன்னகை
நிலவின் ஒளியாய் இருக்கட்டும்.

*

அபாயவெளி

பொய்யின் எல்லா அழகும்
ஒரு நொடியில் மறைந்தபோது
முதல்முறையாக அவர்கள் கண்டார்கள்
யதார்த்தத்தின் அபாய வெளியையும்
ஒரு நாளின் இதயத்தையும்

இருளும்
மாய வர்ணங்களும் படர்ந்திருந்த
ஒரு நிலப்பரப்பில்
முதற்குமிழி உடைந்த கணத்தில்
பேச்சோசையெழுந்தது
பாட்டோசை கேட்டது
பாங்கொலியோடு சூரியோதயம் நிகழ்ந்தது.

உடைந்த மாளிகையின்
அடியில்
இருளடர்ந்த பதுங்குகுழியின்
உள்ளே
முதற்தடவையாக ஒளி சுவறியதைக் கண்டேன்

ஊற்றுவாய்கள் அடைபட்டிருந்த
ஆழ்பதிவில்
சிலுவை முளைத்திருந்தது.
சிலுவைக்கருகில்
கைவிடப்பட்டிருந்த வாளில்
ஒட்டியிருந்த நெருப்புத்துளிகளில்
பறிக்கப்பட்ட உயிர்களின்
கடைசி வாக்கு மூலங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன

கல்லாக்கப்பட்ட முகங்களை
முத்தமிடத்துடிக்கும் தாயொருத்தியின் நிழல்
கண்ணீரில் மிதக்கக்கண்டேன்
அப்போது
கல்லாக்கப்பட்ட முகங்களிலிருந்து
பீறிட்டெழுந்தது
ரத்தம்

சிதிலமாகியிருந்த நாட்களில்
விதிக்கப்பட்டிருந்த
கோடுகளை அஞ்சிய குழந்தைகளை
வாரியணைத்துக் கொண்டு போகும்
வயோதிபனிடம்
இருக்குமா இன்னும்
வாசலற்றிருந்த சமாதியின் தடயங்கள்.

*

சிலுவை, இறுதி முத்தம், தண்டனை, உண்மை
என்பவற்றுக்கான முகாந்திரம்

மாம்பூக்கள் நிரம்பிய முற்றத்தில்
இன்று கோலமில்லை
கண்ணீர்த்துளிகளைப் பெருக்கிய காலையில்
ஒரு
மூடப்பட்ட சவப்பெட்டி
கடக்க முடியாத நிழலாய்
சாட்சியாய் வைக்கப்பட்டிருக்கிறது
எனக்கும் உங்களுக்குமிடையில்

ஓலங்கள்
அழுகை
கோபம்
வசைகள்
மன்னிப்பில்லை
மகிமையில்லை
பெருந்துக்கத்தின் முன்னே
எல்லா வேஷங்களும் களையப்படுகின்றன
அவர்களை
அழவிடுங்கள்
அவர்கள் வசைபாடட்டும்
அவர்கள் அப்படித்தான்
உண்மையைப்பேச விரும்புகிறார்கள்.
உண்மையைப் பேசுவதற்காக
ஒரு உயிரைக் கொடுத்தே ஆகவேண்டியிருக்கிறது
அதுவும் இந்தக்கணத்தில் மட்டுமே
அவர்களால் அப்படிப் பேசமுடியும்

திறக்கப்படாத சவப்பெட்டியில்
ஒரு சாவியுண்டு
அதுதான் இப்போது
உண்மையைத்திறக்கிறது

தூக்கு மேடையில் வைக்கப்பட்ட
வாக்கு மூலம்

எனக்கு
சாட்சியங்களில்லை
நிம்மதியுமில்லை
இதோ
எனக்கான தூக்கு மேடை
இதோ எனக்கான சவுக்கு
நான் குற்றமிழைக்கவில்லை என்றபோதும்
தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது
இன்னும் நேரமிருக்கிறது
இன்னும் நேரமிருக்கிறது
உண்மையைக்கண்டறியுங்கள்
தயவுசெய்து கண்டறியுங்கள்
அதன்பிறகு
என்னைப்பலியிடுங்கள்
அதற்காக நான் மகிழ்வேன்
உண்மைக்காக என்னைப்பலியிடத்தயாராக இருக்கிறேன்.

அதுவரையில் நான் சாட்சியாக
இருக்க விரும்புகிறேன்

நல்ல நம்பிக்கைகளை
உங்களிடம் சொல்வேன்
எதுவும் பெரியதில்லை
எதுவும் சிறியதுமில்லை

நான் யாருக்கும் விரோதமாக இருந்ததுமில்லை
எந்த விசமும் படர்ந்ததில்லை
என் நிழலில்

உண்மையைக் கண்டவன்
அதைச் சொல்லாதிருப்பது
மாபெரும் பாவச் செயலாகுமல்லவா
தண்டனைக்குரியதல்லவா

எனவேதான் உண்மையைச் சொன்னேன்
பாவங்களும் தண்டனையும்சேராதிரக்கும்படியாக
அதையே நான் செய்தேன்
அதையே நான் செய்தேன்
இதில் உங்களுக்குண்டா பேதங்கள்

நான் உங்களில் ஒருவன்;
அன்பின் கூக்குரலை
நான் ஒலித்தேன்
நாம் தோற்கடிக்கப்படலாமா
என்னைக் கோவிக்காதே
என்னைக்கோவிக்காதே

நான் சொல்வதைக்கேளும்
நான் சொல்வதையும் கேளும்

உண்மைகளை நாம் ஒரு போதும்
அழியவிடலாமா
உண்மைக்குச் செய்யும் அவமானம்
நம்மைத் தூக்கு மரததில் நிறுத்தும்

நமது நாக்குக்கசக்கிறது
நமது கால்கள் வலிக்கின்றன
நமது வயிறு கொதிக்கிறது

என்ன செய்ய முடியம்
அவற்றுக்கு
மன்னிப்பா
ஆறுதலா
தண்டனையா

காலத்திடம் சொல்லு
இன்னும் இன்னுமாய்.

*

பலி

பீரங்கிகளை அதிகம் நம்பும் நாட்களில்
உலர்ந்து போகின்றன
எல்லா வார்த்தைகளும்
எல்லாக்கனவுகளும்

இப்போது
ஒரு சொல்லுக்கும் மதிப்பில்லை
கண்ணீர் மிக்க ஒளியுடையதாகக் கண்டேன்
மண்டியிட்டழுகின்றேன்
பீரங்கியின் முன்னே
வெட்கம்தான் என்றபோதும்.

யாரையும் காப்பாற்ற முடியவில்லை
யாருடைய கண்ணீரையும் துடைக்கவும் முடியவில்லை
கண்முன்னே
பலிடப்படுகின்றன கனவுகளும் நம்பிக்கைகளும்

பொறிகளின் மேல்
நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது
குழந்தைகளுக்கான விளையாட்டுத்திடல்
உடைந்து விழுகிறது பாலம்

பீரங்கிக்கில்லை
இதயமும் கருணையும் என்றறிந்தபோதும்;
மண்டியிட்டழுகிறார்கள்
முதியபெண்கள்

என் செய்வேன்
என் செய்வேன்

முள்முருக்க மரங்கள் பூத்துச் சொரியும்
ஒழுங்கையில் போகிறாள்
வசைகளோடு
ஒரு பெண்
அவளைத் துயிலுரிந்த நிகழ்காலம்
பைத்தியக்காரியாக்கவும் துடிக்கிறது.

பீரங்கி அவளைத் தோற்கடித்து விட்டது

பைத்தியக்காரர்களின் கூடாரத்தில்
நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்
பீரங்கி
தோற்கடித்து வருகிறது
எல்லோரையும்
சிதைந்த நாட்களைக் கூட்டியள்ளி
சிதையிலேறு
எல்லாம் முடிந்ததென்று

பீரங்கிகளை அதிகம் நம்பும் காலத்தில்
புலன்கள்
கல்லறைக்குள் வைக்கப்படுகின்றன
உயிரைச் சிலுவையிலறையுங்கள்
இல்லையென்றால்
கண்ணீரில் கரைத்து
பதுங்கு குழிக்கடியில் புதைத்து விடுங்கள்.

பலியிடுங்கள்
உங்களைப் பலியிடுங்கள்
பலியிட முடியாதபோது
பீரங்கிவருகிறது பலிகொள்ள
எல்லாவற்றையும் விட
எல்லாவற்றையுமே விட
துப்பாக்கிகள்
பச்சையுடைகள்
சப்பாத்துகள்
வலிமையாகிவிட்டன
இந்தப்பூமியையும் விட
இந்த வானத்தையும் விட

இது பீரங்கிகளை அதிகம் நம்பும் காலம்

எனது வார்த்தைகள்
வெளியே வீசப்பட்டிருக்கின்றன
உலர்ந்த சருகாய்
குப்பையாய்

பீரங்கியின் வடிவில்
முட்டாள்தனமா
முட்டாள்தனத்தின் வடிவில்
பீரங்கியா

விகாரையின் முன்னே
போர்க்கலங்களின் படையல்
தேமாப்பூக்களைச் சூடிய
பீரங்கிகளை
வழிநீளம் இழுத்துச் செல்கிறார்கள்.

பிக்குகளின் நிழலை நசித்துச் செல்கின்றன
பீரங்கிகள்.

*

கோடை வதம்

பழங்காலத்துச் சுவரோவியத்தில் அவனைக் கண்டேன்
பசித்திருந்தன கண்கள்
யாரோ ஒரு இளம்பெண் களவாடிப்போனதால்
அவனுடைய மனதில் ஏற்பட்டிருந்த பள்ளத்தாக்கு
முதற்காதலின் சாட்சியாக அப்படியே இருந்தது.
பழுப்பேறிய கண்களில்
அவனிழந்துபோன காடுகளின் நிழல் படிந்த ஆறு
ஒரு நூலாக ஓடிக்கொண்டிருந்தது.
அது கோடையாக இருக்கலாம்
என்றால் அதுதான் இல்லை.
மாரிமழை அவனுடலின் குளிரிலிருந்து
காட்டாறாகப் பிரவாகிக்கத் திமிறித் துடித்த கணங்கள்
தகித்துக் கொண்டிருந்தன.
தகிக்கும் அக்கண்களில்
அவனறிந்திருந்த ஓருண்மையோ தீர்க்கதரிசனமோ எதுவோ
சோகத்தோடு மின்னியது துயர்ச் சேதியுடன்.
பின்வரும் காலத்தின் துயருணர்ந்த அக்கண்களில்
காடழிந்து கோடை பெருகிப் பாழடைந்து போகும்
பின்வருவோர் வாழ்க்கை என்றும்
பின்வருவோரெல்லாம் பின்வருவோரை
கோடையில் தகித்தலைய விடுவர் என்றும்.

முன்னிருந்தோர் தின்றழித்த காட்டின் நிழலைக் காணாத விதி
அவனைப் பாழடைந்த காலத்தின் மீதமர்த்தியதை
அந்தப் புராதனச் சுவரோவியத்தில் தீட்டிய ஓவியன்
இருந்தான் தானும் நீங்காத கோடையில்.

*

முருங்கைப் பூக்கள் உதிர்ந்து காற்றில் பறக்கும்
இந்தக் கோடை காலக் காலையில்
முடிக்காத கவிதையைக் கிழித்தெறிகிறேன்
எதற்காகக் கவிதை?
யாருக்காகப் பாடல்?
எதற்குத் தோத்திரமும் பிரார்த்தனையும்?

உயிரில் மூண்டெரிகிற அக்கவிதையில்
காணாமலாக்கப்பட்ட மகள்
என்னை அமைதிப்படுத்த
விம்மலை அடக்கிக் கொண்டு சிரிக்கிறாள்.
அதை மீறித் துயரத்தின் நிழல்
நெடுமரங்களாக அசைந்தாடுகிறது எங்கும்.

அவளுக்கென ஆக்கப்பட்ட சோறு
இதோ உலர்ந்த பருக்கைகளாகி முற்றமெங்கும் சிதறுகின்றன
அப்படியே அது உலகம் முழுவதும் பரவுகிறது
“சோற்றுப் பருக்கைகளால்
உலகம் முழுவதையும் மூடிச் செல்கிறாய்“ என்று
கைது செய்யப்படலாம் நான்.

தேடிக் கண்டடைய முடியாத மகளின் பசிக்கு வேறெப்படி நான்
இந்தச் சோற்றை ஊட்ட முடியும்?

முற்றத்தில் அதைக் கொத்திச் செல்லும்
காக்கை, குருவிகளிடம் கேட்கிறேன்
“காக்கை, குருவியெல்லாம் எங்கள் ஜாதி… என்றும்மைப்
பாடித் திரிந்த இனிய தோழியல்லவோ அவள்!
அவளிடம் இந்தச் சோற்றுப் பருக்கைகளைச் சேர்த்து விடுங்கள்
அல்லது
அவளின் நிமித்தமான பிதுர்க்கடனாக இதை ஏற்றுக் கொள்க” என்று.

இதோ அவள் முற்றத்தில் நட்ட மாமரம் பழுத்துச் சொரிகிறது
அந்தப் பழங்களின் வாசனை அவளைத் தேடியலைகிறது.
தாங்க முடியாத அவளின் நினைவுகளோடு
அந்தப் பழங்களை மரத்தின் அடியில் புதைக்கிறேன்.
என்னிதயத்திலிருந்து பீறிட்டெழும் துயரத்தைப்போல
பழங்களின் வாசனை கிளர்ந்து கிளர்ந்து மேலெழுகிறது
அதுதான் உன்னுடைய வாசனை மகளே
அதை எங்கே நான் புதைப்பேன்?
அந்த வாசனை பழங்களைப் போல இனிப்பதில்லை.

“அம்மா” என்றொரு சொல்
அல்லது
“நான் இங்கிருக்கிறேன்” என்றொரு வார்த்தை சொல்!
நீண்டெரியும் எனதிந்தத் தூக்கமற்ற நாட்களும்
பசியும் தாகமும்
அலைவும் முடிவுற்று விடும்.

ஏனிந்தக் கனத்த மௌனம்
ஏளனமா? புறக்கணிப்பா? இயலாமையா?

இந்தக் காலம் உனக்காகவும் இல்லை
எனக்காகவும் இல்லாமலாயிற்றுப் பெண்ணே!
அது நம்மை விட்டுச் சென்று விட்டதடி
நம்மைக் கொல்லாமற் கொன்று விட்டதடி…

*

அதனால்

அதனால் வண்ணத்துப் பூச்சிகள் துக்கமாகப் பறந்தன
அதனால் பாம்புகள் நகரத்துக்கு வந்தன
அதனால் விளக்கில் இருள் குடியிருந்தது
அதனால் அந்தக் கொலையை அவள் செய்ய மறுத்தாள்
அதனால் அந்த முத்தம் மறக்கப்படலாயிற்று
அதனால் இருவரும் அன்றைய உணவைப் பகிரமுடியாதிருந்தனர்
அதனால் பொதுக்கழிப்பறை சுத்தமாக இருந்தது
அதனால் படையதிகாரி தன்னைத்தானே சுட்டுக் கொன்றான்
அதனால் நீண்ட நேரமாகக் காத்துக் கொண்டிருந்தவள் திடீரெனத் தற்கொலை செய்து கொண்டாள்
அதனால் அது திரும்பிப் பெறப்பட்ட பரிசாகியது.

TAGS
Share This