மகிழ்ச்சியான உறுமல்
மொழிக்குள் நொதித்து மொழியைச் சீவித் தன் கலயத்தில் வார்க்கும் கலைஞர்கள் நிகழ்வதுண்டு. தமிழுக்குள் பனைகளின் முலையெனத் திரண்ட மொழி வெய்யிலினுடையது. பனைகள் நெடிது நிற்பவை, இரண்டு காதுகளில் இரண்டு கலயங்கள் தொங்கும் பனை, முதுதாயின் தோற்றம் கொண்டது, வடலிகள் சிறு கரங்கள் நீட்டி விளையாட்டுடன் வளர்பவை. பனை என்பது முழுதும் நல்லது என்பதன் குறியீடு.
ஈழம் பனைகளின் வெளி. இந்த நிலத்திலும் நின்றுயிர்க்கும் பனைகளில் ஓங்கி நிமிரும் கனவென வெய்யிலின் கவிதைகள் குலதாதைகளின் குரலில் ஒலிக்கின்றன.
வெய்யிலின் மொழிக்குள் தாகம் தாகமெனத் தவிக்கும் நாக்குகள் விடாயின் தீத்தழல்களெனத் துடித்துக் கொண்டிருக்கின்றன. அவரது கவியுலகு எரியும் சிகரட்டின் நுனி போன்றது, அதன் தீத்தொடுகைகள் வடுக்களென மொழியை சுட்டெரித்து நிலைப்பவை. இன்னொரு திசையில், மகிழ்ச்சியும் அழகும் இதுவரையில்லாத வாழ்வின் செழுமையுடன் மொழியைத் திறந்து உள் நுழையும் கதவுகள் ஆகுபவை.
வெய்யிலின் கவிதைகளின் சங்கீதம் சலங்கை கட்டியாடும் முதுதாதைகளின் கலையாடி நாக்குகளில் உருத்திரண்டு, விதிர்விதிர்த்து ஒலிபிறந்த ஆதிக்கணத்திலிருந்து இன்று வரை நீளும் பாணர்களின் நவீனக்கணம் வரை விட்டகலாது மொழியைத் தொடரும் பெருநடனத்தின் தாளமும் இசையும் கொண்டவை.
மகிழ்ச்சியான பன்றிக்குட்டியென உறுமிச் சுழன்று தாவி விளையாடுபவை வெய்யிலின் கவிதைகள்.
*
எங்களிடம் இருநூறு பனைமரங்கள் இருந்தன
எம் குடிலின் உத்திரமும் கூரையும் கதவும்
பனைகளாலானவை
சுவர்ப்பூச்சிலும்கூட பனஞ்சோறும் பதநீரும் கலந்திருந்தன
கள்ளோடு களித்தாடி
கருக்கோடு மூர்க்கம் பழகிவந்தோம்
கிழங்குகள் முளைத்தெழும் மார்கழியின் முடிவில்
மட்டையை நசுக்கி மண்சுவர்களுக்குச் சுண்ணம் பூசுவோம்
புத்தோலையில் பொங்கும் பாலில் தை மணக்கும்
அம்மா குருத்தோலைகளை மாதா கோயிலுக்கு எடுத்துச்செல்வாள்
ஊர் மீது இறங்கிய இடியை
தலை மீது வாங்கிக்கொண்ட ஒற்றைப்பனை
எங்களின் குலசாமியாக இருந்தது
அதன் பொந்தில் கண்கள் திறக்காத
மூன்று கிளிக்குஞ்சுகள் இருந்தன
‘அவர்கள்’ எப்போது வந்தார்கள்…
எப்படி வந்தார்கள்?
விழித்தபோது பனங்காடு விளையாட்டுத் திடலாகியிருந்தது
நான் விடாமல் விரட்டிச்சென்றேன்
முரட்டு லாரிகள் வெகுதூரம் போய்விட்டன
மூச்சிரைத்துத் திரும்பும் வழியில்
மூன்று முதிய கிளிகளைப் பார்த்தேன்
அவை என் தோள்களில் இறங்கின
நிமித்தமாய் கடலில் சூறை எழுந்து தணிந்தது
நான் பனைகளின் பிள்ளையானேன்
என் ரத்தத்தைப் பதநீராக… கள்ளாக மாற்றுவேன்
உங்களது குடிலின் சுவர்க் கீறலுக்கு பூச என் தசைகளையும்
கூரைக்கு உத்திரமாய் என் எலும்புகளையும் தருவேன்
என் இதயம் இம்மண்ணில் பனைகளாய் முளைக்கும்
சிறுமிகள் தோண்டித் தின்னும் நுங்காய் என் கண்கள் கனியும்
உங்களின் கோடைகளுக்காக
நீர்மையோடு சாகாதிருக்கும் என் வேர்கள்
நான் பனைகளின் பிள்ளை
அம் முதிய கிளிகள் அப்படித்தான் என்னை வாழ்த்தின.
*
சித்தசுவாதீனமற்ற அத்தையிடம்
பால் கறந்து விளையாடியிருக்கக்கூடாது நாம்.
அக்கடும் புளிப்பை
பூனைகளோடு சேர்ந்து ருசித்தவர்களில்
சிலர்
இன்னும்
விழித்துக்கொள்ளவே இல்லை.
முலையில் பொங்கும்
“கனவைச்
சிசுக்களுக்குக் குடிக்கக் கொடுக்காதீர்கள்”
என்று
பிரசவ வார்டின் வாசலில்
நின்று கத்துகிறவர்கள்
என்னைப் போன்றவர்கள்.
அவர்களுக்கு அடிக்கடி எலும்பில்
வியர்க்கும் பிரச்சனைகொஞ்சம் விசிறிவிடுங்கள் போதுமானது.
*
மெல்ல மெல்ல நாகம்
சட்டை உரிப்பதைப் பார்க்கிறேன்
பாளைகள் கள்ளைச் சீறுகிறது
முகத்தில்.
இவ்வளவு உயரத்திலிருந்து
பார்க்க
உன் வீடு மோகமூட்டுகிறது
பனைகள் லயத்தோடு தலையாட்டுகின்றன.
என் காமத்தின் மூச்சிரைப்பிடம்
உன்
தெருநாய்கள் தோற்றுப்போகும்
நான் வந்துவிட்டேன்
வீதிமுனைக்கு.
துவைத்த ஆடைகள் மத்யானத்தில்
உலர்கின்றன
அடுக்களையில் புகை ஓய்ந்திருக்கிறது
‘ஞாயிறு’ உன்
வாசணைத்தைலத்தின் பெயர்
என் விடுமுறை நாளின்
பெயரும்கூட
கடந்தகாலத்தின் மார்பில்
அதன் ஒரு துளியைச் சுண்டு கமழட்டும்.
தாவரங்கள் நினைவாற்றல் மிக்கவை
நாகரிகத்தின் முதல் தீயை
ஈன்ற மூங்கில்கள் நாம்தான்
நன்றாக நினைவிருக்கிறது
நான் இருபதாவதுமுறை
சூரியனைச் சுற்றிவரும்போது
நீ ருதுவெய்தினாய்.
என் ரகசிய விலாஎலும்பே
நேரம் தீர்கிறது
உன் பிள்ளையை விளையாட
அனுப்பு.
பச்சைத் தானியங்கள் உலரும்
மைதானத்தில்
அவனின் நண்பர்கள் கூச்சலோடு
பட்டம் விடுகிறார்கள்
நீலமும் சிவப்புமாய் படபடத்து
நம் வாசலிலிருந்தும்
ஒன்று காற்றிலேகட்டும்.
அதன் வாலாக நான்
வருகிறேன் என்கிறது,
நீயுன் மடிச்சூட்டில்
அடைகாத்த
நானென் புயங்களில் தரித்துத்
திரிந்த
நீள நீல நாகம்.
உன் பாற்குடத்துக்கு
இரவில் உறையிட ஒரு சொட்டுக் கள் போதுமென்கிறது பனை.
*
மயிரடர்ந்த குரங்கின் மார்பைப்போன்ற
மலை
குடிக்க யாருமற்று மல்லாந்து
கிடக்குமதன்
காம்பினுச்சியில் மேயும்
வரையாடு
உவமைகள் அடுக்கி மோனையொலிக்கப்
பாடும்
அவ்வைக்கு புலரியின் தேறல்
எங்களுக்கு அவளின் பெருமுலைப்பால்
பசியென்று துக்கமென்று வரும்
யாருக்கும் தந்துவிட
பெண்மையிடம் முலை இருக்கிறது
பாடல்களை இசைத்தபடி இந்த
மலையைக் கடந்து
சிசுப்பருவத்துக்குள்ளா போகிறோம்
துடிபாணனே நமக்கு முலைகள்
இல்லை
வெட்கி வெறும் மார்பை
பனையோலையில் மறைத்துக்கொள்வோம்
கூட்டத்திலொருவன் கேட்டுக்
கேட்டுக் கொல்கிறான்
தாய்ப்பாலும் முலைப்பாலும் ஒன்றா?
குறிஞ்சி யாழே
என் மொழிக்கும் எனக்கும்
பைத்தியம்தான் பிடித்திருக்கிறது
சற்று காதுகொடுங்களேன்
சிசுக்கள் முலை சப்புவதில்
சங்கக் கவியொருத்தியின் சந்தம் எழுகிறது.
அகால மலைப்பாதை மௌனமாய்
வளர்கிறது.
*
மகிழ்ச்சியான பன்றிக்குட்டி
தலைமுறை ஒன்று:
என்னிடம் விசுவாசமிக்க ஒரு பன்றி இருந்தது
அதை பல நூற்றாண்டுகளாக நான் பழக்கினேன்
என் தேவையைப் பொறுத்து
அதன் தசைகளை அவ்வப்போது அறுத்துக்கொள்வேன்
சாந்தமாக இப்படிச் சொல்லும்…
“நான் உங்கள் வீட்டுக் கோதுமைத் தவிட்டாலும் நீராலுமானவன்!”
எதிர்பாராத விருந்தினர்களால் ஒருநாள் வீடு நிறைந்துவிட
நான் புழக்கடைப் பக்கம் போய் மௌனமாக நின்றேன்
புரிந்துகொண்டு சிரித்தபடி வந்து
வெட்டு மேசையில் படுத்தது
அதன் காதில் சொன்னேன்…
“ஞாயிறு அந்தியில் உன் ரத்தத்தால் செவ்வானம் செய்வேன்
உன் மாமிசம் மகிழம் பூவில் வாசமாயிருக்கும்”
இப்போது அதன் கழுத்து வெட்டுவதற்கு சிரமமாயிருக்கவில்லை
மறுநாள் நான் உறங்குகையில்
அதன் குட்டி என் சுண்டுவிரலைத் தின்றுவிட்டது
“கேரட் என்று நினைத்தேன்!” என்றபடி தலைகுனிந்து நின்றது
நானதன் விழிகளில்
எதிர்ப்பின் சிறு ஒளிவளையத்தைக் கண்டேன்.
தலைமுறை இரண்டு:
இதயத்தைப் பிடுங்கியெடுத்த பின்னும்கூட
பாருங்கள்
கனத்த உடலை இழுத்துக்கொண்டு
அந்தப் பன்றி காட்டுக்குள் எப்படி ஓடுகிறது
ஈட்டியோடு அதை விரட்டினோம்
ஓர் அடுக்குச் செம்பருத்திப் பூவைப் பறித்து
தன் இதயமிருந்த இடத்தில் வைத்துக்கொண்டு
இன்னும் அது வேகமெடுத்து மறைந்தது
நானிந்த கதையைச் சொன்னதிலிருந்து
நாளும் என் கிழத்தி செம்பருத்தியைச் சூடிக்கொள்கிறாள்
ரத்தக்கறையேறிய ஈட்டியில் துரு பரவி மிகுகிறது
மழை விட்டபாடில்லை.
தலைமுறை மூன்று:
மத்தியான வெயிலில்
தீரம்மிக்க ஒரு தாய்ப்பன்றி
சாக்கடையைப் பாலாக மாற்றுவதற்கு
போராடிக்கொண்டிருக்கிறது
ஊஞ்சல்போலாடும் அதன்
பன்னிரண்டு காம்புகளின் பின்னே
துள்ளித்துள்ளித் திரிகின்றன
மகிழ்ச்சியான சில பன்றிக்குட்டிகள்
அவற்றின் வாலாட்டலில் ஒரு வரலாற்று நிதானமிருக்கிறது
விழிச்சுடர்கள் காலத்தால் தூண்டப்பட்டிருக்கின்றன.
*
தூரத்தில் நின்று!
உங்கள் வசீகரத்தை இழந்துவிடாத தூரத்தில் நின்று காதலியுங்கள்.
அடுத்தடுத்த பரிமாணங்களுக்கு உங்கள் காதலை எடுத்துச்செல்லும்போது,
அது இறந்துவிடாதவாறு
தாய்ப்புலியின் லாகவத்தோடு
அதன் கழுத்தைக் கவ்வுங்கள்.
காதல் ஒரு பல்லக்கு
ஒரே நேரத்தில் இருவரும் அதில் ஏற முடியாது
எனவே, சுமக்கத் தயாராயிருங்கள்.
ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கும்…
ஆனாலும் புரிந்துகொள்ளுங்கள்,
காதலில்
சொற்கள் வெறும் சொற்கள்தான்.
காதலில் உடல் ஒரு பரிசுப்பொருள்
அதை ஒருபோதும் கேட்டுப் பெறாதீர்கள்.
எல்லாக் காதலும் ஒருநாள் உலரும்
அந்த வெறுமையைப் பதற்றமின்றி எதிர்கொள்ள
மனதைத் தொடக்கத்திலிருந்தே பழக்குங்கள்.
உங்கள் காதலைச் செல்லாக்காசாக்கும்படியாய்
உங்கள் இணையைக் கவரும் நபர்
சற்று தூரத்தில்தான் உலாவிக்கொண்டிருக்கிறார் என்பதை நம்புங்கள்.
காதலில் துரோகம் ஒரு தத்துவார்த்த நிகழ்வு
அந்த வலியில் மூழ்கி எழுந்து ஞானம் பெறுங்கள்.
உங்கள் காதல் இறந்த பிறகு
அதைப் புதைப்பதா எரிப்பதா என்பதில்
சச்சரவு செய்யாதீர்கள்
அதைக் கவிதைக்குள் வீசி எரியுங்கள்.
காதல்தான் இருப்பதிலேயே அதிக கோணங்கள் கொண்ட வடிவம்
எனவே ஒருபோதும் அதைப் புரிந்துகொள்ளவோ விளக்கவோ முயலாதீர்கள்.
எல்லோரும் போகட்டும் எல்லாம் முடியட்டும்
ஆனாலும்
ஒருபோதும் உங்கள் காதலைக் கைவிடாதீர்கள்
ஒரே வாழ்வுதான் ஓருடல்தான்
ஐந்தரை லிட்டர் ரத்தத்தில் அதுவொரு ஓரமாய்
சிரித்தபடி நீந்திக்கொண்டிருக்கட்டும்.
உங்கள் கண்கள் கரங்கள் தீண்டும்போது
இணையிடம்
மின்சார உணர்வு தோன்றும்வரைதான்
அதன் பெயர் காதல்.
எனவேதான் நண்பர்களே…
உங்கள் வசீகரத்தை இழந்துவிடாத தூரத்தில் நின்று காதலியுங்கள்.
*
எத்தனை பெண்களால் நேசிக்கப்பட்டால்
தெய்வமாக முடியுமோ
அத்தனை இதயங்களை அடைந்துவிட்டேன்.
எத்தனை நிர்வாணங்களைக் கடந்தால்
ஞானம் பிறக்குமோ
அத்தனை உடல்களைத் திறந்துவிட்டேன்.
எத்தனை முலைகளால் வாழ்த்தப்பட்டால்
தொல்பசி அணையுமோ
அத்தனை கருணையை மாந்திவிட்டேன்.
எத்தனை கால்களில் மண்டியிட்டால்
அமைதி சுரக்குமோ
அத்தனை கண்ணீரில் நீந்திவிட்டேன்.
எத்தனை புள்ளின் அடிவயிற்றை முத்தமிட்டால்
ஆகாயம் விளங்குமோ
அத்தனை முட்டைகளை வணங்கிவிட்டேன்.
எத்தனை பூக்களைத் தின்றால்
முடிவற்ற கனவுகள் மலருமோ
அத்தனை மகரந்தங்களால் நிறைந்துவிட்டேன்!
*
திரௌபதி எதற்காக
பீமனை அதிகம் நேசித்தாளோ
அதே காரணத்திற்காகத்தான்
நான் உன்னை அதிகம் நேசித்தேன்.
கர்ணன் சுடலையில் எரியும்போது
எந்தக் காதலை உணர்ந்து
திரௌபதி நெஞ்சிலடித்துக்கொண்டாளோ
அந்தக் காதலின் பொருட்டே
நான் கிடந்து மாய்கிறேன்.
ஏழாயிரம் மைல் நீளமுள்ள
அவள் சேலையின் முந்தியில்
முடிந்துவைக்கப்பட்டிருக்கிறது
காதலில் பைத்தியமானோர்
பூசிக்கொள்வதற்கான
ரத்தம் தோய்ந்த திருமண்.
திரௌபதியை ரகசியமாய் வெறுத்த
தர்மா… சொல்!
குருஷேத்திரம் என்பது
ஒரே நேரத்தில் இருவர்மீது
காதல் கொள்கிறவனின் மனம்
அப்படித்தானே?
*
…… திரேகக் கதைச் சருக்கம்
மிகச் சரியாக
பூமத்திய ரேகையின் மீது அடுப்பைக்கூட்டி
வடித்தெடுத்த கலகச்சாறு,
நீ சொன்னபடியே
ரத்தச்சூட்டு தாபப்பதம்,
பேச்சி ருதுவாகி
அச்சத்தோடு பாடிவந்தாளே
அதே வயற்பாதை,
வா கருக்கி…
மிருக பாவனையில் பருக
வியர்வையழுக்கின் உப்பேறியவுன்
முதுகுப் பள்ளம்,
தேக்குவேன் அதில்
மந்திரத் திவலைகளின் சேகரம்,
பகிர்ந்துண்ண முத்தத் தசைப்பிண்டம்,
நமதிந்த முதல் மிடருக்கு
தென்கிழக்கென்று பெயர்,
அங்குதானே ஆயிரமாயிரம் கடல்பூச்சிகள்
ஒளிர்ந்தபடி புணர்கின்றன,
அங்குதானே நூற்றாண்டுகளாய்
துக்கித்திருந்த பாறைகள்
களிகொண்டு உருகுகின்றன,
மீன்முள்ளால் தைத்த படுக்கைவிரிப்பொன்றை
அன்பளித்தாள் கடல்விறலி,
கயல்கள் எரிகின்ற
மலைப்பொழுது நிறைகிறது,
கிறக்கம் வேண்டி
உன் மடியை வணங்குகிறேன்,
உயிர்க்கூத்தாடும் அடவை
மெள்ள மெள்ள நளினம் செய்வோம்,
ஊற்று என் மூர்க்க ரசத்தை
ஓவென்று எலும்புமஜ்ஜைகளில்
ரத்தம் கொதிக்கும் ஓசை…
கபால ஆனந்தம்
தம்.