சர்ப்பத்தின் வால் நுனி

சர்ப்பத்தின் வால் நுனி

தமிழின் அகமும் புறமுமான கவிதை அடுக்குகளுக்குள் இரண்டின் வெளிகளுக்குள் நுழைந்து மீளும் தன்னிலைகள் ஈழத்தமிழ்க் கவிதைகளில் அதிகம் நிகழ்ந்திருக்கின்றன. சண்முகம் சிவலிங்கம் அவரது அரசியல் கவிதைகளுக்காக தொடர்ந்து கவனிக்கப்படுபவர். அவரது அரசியல் கவிதைகள் நீரின் ஆழத்தொலிக்கும் மெளனமும் அதன் மேலெழும் புயலைப் போன்ற சீற்றமும் கொண்டவை.

என்னளவில் அவரது அகக் கவிதைகள் மிக நுட்பமான வேலைப்பாடுகள் உள்ள ஆபரணங்கள் போன்றவை. பாலியல் வேட்கை, உறவுகள், தனிமை, ஆன்மீகம் என்று பல்வேறு பின்னல்கள் வழி செழுமையுற்ற கவிப்பரப்பு அவரது.

அவரது கவிதைகள் மரபின் நீங்காத தாளங் கொண்டவை. அதன் சொல்லிணைவுகள் மரபினதும் அன்றாடத்தினதும் உருவகங்களை நவீனத் தமிழில் மீட்டெடுத்தவை. அவரது தொன்ம மீளுருவாக்கம் இதுவரையான ஈழத்தமிழ்க்கவிதைகளில் தனித்தொலிக்கும் பாதைகளை உருவாக்கியவை. ஒரு மலையுச்சியை நோக்கி நிலவு முழுதாய்ப் பிரகாசம் கொட்டும் இரவில் வழிப்போக்கனென, தன்னுணர்வே துணையென்ற ஆன்மீகம் அவரது அகக் கவிதைகளின் இயல்பு. அந்தத் தனித்துணரும் அகத்தின் உள்நிரம்பும் உணர்வுகள் மெய்யறிதலின் கருவியாக ஆகுபவை.

அவரது கவிதைகள் உருவாக்கிய தாளமிகு மொழியின் சர்ப்பங்கள், வால்நுனியில் நின்றாடும் வேட்கையின் நாவுகள் என மனங்களைப் பின்னிக்கொள்பவை.

(சண்முகம் சிவலிங்கம்)

*

படுக்கை

பயங்கரம்,
அந்தப் படுக்கை இனி வேண்டாம்.

பாம்புகளோடு கிடந்து நெளியும் படுக்கை!
சுருட்டைகள் நிமிர்வதும்
நிமிர்ந்தவை நீள்வதும்
கை மேலும் கால் மேலும் ஊர்வதும்
களிப்பில்
தோளிலும் விலாவிலும் தொங்குவதும்
துவண்டு,
பின்னிப் பிணைவதும்
முலை நரும்பி
முகம் கார்ந்து
மறி ஏறிச் செருகுவதும்
வாய்களைப் பின்னுவதும்
மடிவதும் சூழ்வதும்
வயிற்றை முகர்தலும்
மென்துகில் போர்த்த நாரியினைக் கல்லி
மணியின் நாவிலே
பூந்தளிர் உமிழ்நீர் நனைவதும்…

கடைசியில்
உடல் சுற்றி முறுகி
வாலிலே நின்று கூரையைத் தொட்டு
பிளவுண்ட நாக்குகளைப் பின்னிக்கொள்வதும்…

ஓ! பயங்கரம்
இனி வேண்டாம் இந்தப் படுக்கை.

*

அற்பங்கள்

அற்ப நிகழ்வும்
அர்த்தம் அற்றதும்
என்னுடன் வருக.

உதிரும் மணலும்
உருவழியும் நீர்வரையும்
எனது உவப்புகள்.

மங்கல் நிலவும்
மாலைக் கருக்கலும்
விடியற் கலங்கலும்
எனது விருந்துகள்.

ஒன்றுமிலா வெளியும்
உதிர்ந்து விழும் இலையும்
நெஞ்சை முழுதும் நிரப்பும்.

பாதையின் ஓரம்படரும் சிறுபுல்லும்
கானகத்தில் எங்கோ கண்மலரும் ஓர் பூவும்
போதும் எனக்கு.
(மற்றதெல்லாம் போக)

அற்ப நிகழ்வும்
அர்த்தம் அற்றதும்
என்னுடன் வருக.

*

கிடாய்

இன்று பகல் கிடாய் எழும்பிற்று
பக்கத்தில்
மோந்து மோந்து
படுத்துக் கிடந்த
ஒரு பெட்டையை எழுப்பி
பிரிதியூட்டிக் கொணர்ந்தது.

முட்டிற்று
மோதிற்று
முகத்தை உராய்ந்தது.

பட்டுப் போன்ற ரோமத்தில்
கன்னம் படர்ந்தது.
நின்று
மேலுயர்ந்து
சட்டென வீழ்ந்து தடக்கிற்று
முகத்தை நக்கிற்று
நறும்பிற்று
கழுத்து வழியாகச் செலுத்திய தலையை
கீழ் வயிற்றில் கவிழ்த்தது
முலையைக் கார்ந்தது
மீண்டும்
முகத்தோடு முகம் வைத்து
முத்தம் ஈந்தது
மீண்டும் முலைக்குள் புகைந்தது
நுனி மேய்ந்தது
பெட்டை நுகைத்தது
பின், விலக்கிற்று
மீண்டும் நுழைய முயன்ற கிடாயின்
முகத்துடன் முகம் வைத்து
தானும் முத்திற்று
கிடாய் மிகைத்தது
எழுந்தது
எஃறிச் சரிந்தது
பெட்டை நிமிர்ந்ததாய் நிற்கவே
ஏறிற்று கிடாய்
கவடு
இணைய.

*

இருளானால்

இருளானால்
என் உலகம் ஒளிரும்
பசும் இலைகள் கறுப்பாகி
வெள்ளி நரம்புகள் மிளிரும்
என் கோயில் வெளியில்
ஆவிகள் உலா வரும்.
அன்னமுத்துக் கிழவி அமுதம் வார்ப்பாள்.

நள்ளிரவில்
என் ஆண்மகன் குடைபிடிப்பான்
என் பெண்மை
தன் மார்புக் கச்சையைக் களைவாள்
இடுப்பைச் சுற்றிய
சிறிய புரையையும் எடுத்தெறிவாள்
சர்ப்பங்கள்
வால் நுனியில் நின்று உடல் திருகும்.

நொங்கு இதழ் உறிஞ்சும்
மென்வருடலில்
முதுகுப்புறமோடிய நரம்புகள்
வயிற்றில் படரும்.
வயிற்றைத் தடவிய நாதஸ்வரங்கள்
மார்பில் வீணை வாசிக்கும்.
அர்த்த நாரீஸ்வரன்
அப்போது உதிப்பான்.

என் எழுத்தாணி பிடித்து
என் அரசி
ஓவியம் கிறுக்குவாள்
அடுத்த நாள் விடிய
ஆலிலையில்
படுத்திருப்பான் திருமால்.

*

நண்டும் முள்முருக்கும்

சிவப்பு பூக்கள்
முள் முருக்கம்
மைனாக்கள் வரும், போகும்,
இலைகள் உதி-ர்-ந்-து
வெறும் கிளைகள்
முட்களுடன்.

நுனிகளில்
வளைந்த பூந்தண்டுகள்.

அடியில் உள்ள பெரிய பூக்களை
மைனா கோதும்,
அவை பின்னரும் கோத,
நுனியில்,
வரவர, சிறிய
நலிந்து நீண்ட
மொட்டுகள்,
நண்டின் பூப்போல
ஆமாம்
நண்டின் பூப்போல
அம்மா சொன்னாள்;
நண்டு சினைக்க
பூக்கும் முள்முருக்கு,
முள்முருக்கு பூக்க
சினைக்கும் நண்டுகள்

நாளைக் காலை
சந்தைக்குப் போகலாம்.

*

இன்று இல்லெங்கிலும் நாளை

எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன.
எங்கள் இமைகள் கவிந்துள்ளன.
எங்கள் உதடுகள் அண்டியுள்ளன.
எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன.
நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம்.

எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக.
எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக.
எங்கள் முதுகில் கசையால் அடிக்குக.
எங்கள் முதுகுத்தோல் பிய்ந்துரிந்து போகட்டும்
தாழ்ந்த புருவங்கள் ஓர்நாள் நிமிரும்
கவிந்த இமைகள் ஒருநாள் உயரும்.
இறுகிய உதடுகள் ஒருநாள் துடிதுடிக்கும்.
கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்.

அதுவரை நீங்கள் எங்களை ஆள்க.
அதுவரை உங்கள் வல்லபம் ஓங்குக.

*

நிலவும் ஒரு வழிப்போக்கனும்

நிலவே,
இந்த வழிப்போக்கனும்
உன்னைக் காண்கிறான்
நீ அவனைக் காண்கிறாயா?

நிலவே,
நீ உயரத்தில்
வானத்தில், இருக்கிறாய்,
அகண்டமான வானத்தின் நடுவே
அமர்ந்திருக்கிறாய்.
உனது தண்ணொளி
எங்கும் தழைகிறது
ஒரு ஓரத்திலிருந்து
இந்த வழிப்போக்கன்
உன்னைக் காண்கிறான்.

உனது
வெள்ளி ஓரவிளிம்பின்
இமைப்புக்குள்
இந்தச்
சின்ன மனிதன் தெவிகிறானா?
நீ இந்த வழிப்போக்கனைக் காண்கிறாயா?

நீ அமர்ந்துள்ளாய்,
நிறைவாகத் ததும்புகிறாய்,
உன் நிறைவுக்கு
இவன் உவமை தேடுகிறான்.
உன்னையும்
இவன் கிக்கிலிக் கொட்டை
என்று எண்ணினானா?
கிக்கிலிக் கொட்டையை கிலுக்கிப் பார்த்தால்
சத்தம் கேட்கும்.
அந்தச் சத்தம்தான்
இவனுக்கு சந்தோஷமளித்ததா?
சத்தம்
கிக்கிலிக் கொட்டைக்கு உள்ளமைக்கு
சான்று என இவன் நினைத்தானா?
அதே சத்தம்,
அதனுள் இருக்கும்
வெற்றிடத்திற்கு சாட்சி என்று
இவன் ஏன் உணரவில்லை

நீயோ நிறைந்திருக்கின்றாய்
இவன் இன்று வந்தவன்
இவன் வர முன்னரே
நீ நிரம்பி இருக்கின்றாய்.
நிரம்பி இருப்பது கிலுங்காது அல்லவா?
அது அடக்கமானது அல்ல.
நிறைவு.
உன் நிறைவைக் கண்டு
இவன் திகைக்கிறான்.
தன் கிக்கிலிக் கொட்டையை
கிலுக்கிப் பார்க்கும்
குற்றத்திற்காக முகங்கோனி
ஒதுங்குகிறான்.
அந்த இலைகளின் இருளில்,
இந்தப் புதர்களின் மறைவில்
இவன் ஒதுங்கி ஒதுங்கி நடக்கின்றான்.
நிலவே,
நீ இந்த வழிப்போக்கனைக் காண்கிறாயா?
உனது வெள்ளி விளிம்பின் அமைப்புக்குள்
இந்தச்
சின்ன மனிதனும் தெரிகின்றானா?

அவரது நூல்கள்:

நீர் வளையங்கள் – கவிதைத் தொகுதி – தமிழியல் பதிப்பகம்

    சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும், காலச்சுவடு வெளியீடு, 2011.

    காண்டாவனம் – சிறுகதைத் தொகுதி

    நூலக இணைப்பு: சண்முகம் சிவலிங்கம்

    https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

    TAGS
    Share This