செயற்களம் புகுவோருக்கு

செயற்களம் புகுவோருக்கு

ஒவ்வொரு சமூகப் பிரச்சினைகளுக்குமான தீர்வுகள் அததற்கான தனித்தன்மையான அணுகுமுறைகளைக் கோரக் கூடியவை. அப்பிரச்சினைகளைக் கையாளும் தனிமனிதர்களோ சமூக மட்ட அமைப்புகளோ யாரும் எவை குறித்தும் முழுமையான அறிதல்களோ பார்வைகளோ தீர்வுகளோ அறிந்தவர்களல்ல. தொடக்கத்தில் அச் சிக்கலும் அதைத் தீர்க்க வேண்டும் என்ற உந்துதலும் அவர்களிடமிருக்கும். எந்தவொரு செயற் தொடக்கமும் நாம் அவதானிக்கும் அன்றாடத்திலிருந்தே நம்முள் விதையென விழுகின்றன. நாம் அவற்றால் அலைக்கழிகிறோம். என்ன செய்வதெனத் தெரியாமல் திகைக்கின்றோம். ஆனால் செயல்படுதலென்பது அம்மலைப்பை ஒவ்வொன்றாக உதிர்த்து அச்சிக்கலின் விடுவிப்பை நோக்கிய காற்தடங்களாகின்றன.

நமது சமூகத்தில் செயல் என்பது அபூர்வமானது. நம்பிக்கையுடன் எழும் இளம் தலைமுறை செயலூக்கமற்றவர்களால் இழிவுபடுத்தப்படுகிறது. இந்த செயலூக்கமற்ற தரப்பே நம்முன் பெருந்திரளென நிலை கொண்டிருக்கிறது. அதை கவனிப்பதும் அதற்கு எதிர்சினையாற்றுவதும் செயற்களம் புகுவோரைச் சோர்வில் தள்ளிவிடக் கூடியது. கருத்தியல் தளத்தில் செயல்புரிபவர்களின் பணியென்பது வேறு. நிகழுலகில் செயல்புரிபவர்கள் அறிய வேண்டியவை வேறு. நாம் எதிர்கொள்ளும் அனுபவங்கள் கேள்விப்படும் சமூகக் கேடுகள் இள மனங்களைக் கொந்தளிக்க வைக்கக் கூடியவை. நாம் அதை மாற்றமுடியுமா என்று சந்தேகம் கொள்ள வைக்கக் கூடியவை. இந்தச் சந்தேகமே செயலூகமற்றவர்கள் வாழும் வீடு. ஆனால் செயல் வழி அறியக் கூடிய ஞானமென்பது சமூகத்தின் மிகச் சிறு நுண்ணுர்வு கொண்ட தரப்பினருக்கானது. நான் அவர்களுடனே எனது சொற்களைப் பொருதுவேன். அவர்களே என்னளவில் சமூகத்தை முன்னோக்கி நகர்த்துபவர்கள். செயல்கள் எத்தகைய சிறியதாயிருந்தாலும் அவற்றுக்கு நிகழுலகில் மதிப்புண்டு. ஒருவர் மரம் நடுவதைப் பற்றிப் பேசுபவராக இருக்கலாம். ஆனால் ஒரு விதையை ஊன்றி மரமாக்குபவர், ஆயிரம் உயிர்கள் வாழும் செயலைப் புரிந்தவர். அவர் என் பார்வையில் ஒரு கருத்தியல் தரப்பை விட மேலானவர். செயல் எந்த ஒரு மாற்றத்தையும் உண்மையில் நிகழ்த்துவது. அதன் வழி கிடைக்கும் நிறைவே செயற்படுபவருக்கான பரிசு.

சமூகத்தில் ஏராளமான சிக்கல்கள் நிலவுகின்றன. அதுவே சமூக முரணியக்கத்தின் விசை. ஒன்று இன்னொன்றோடு நுட்பமாகப் பிணைந்திருக்கின்றது. அண்மையில் ஒரு சமூக அமைப்பின் நண்பரொருவர் தங்களது அமைப்பிற்குப் புதிதாக அறியக் கிடைத்த ஒரு சிக்கல் தொடர்பில் தன் சந்தேகங்களைக் கேட்டிருந்தார். இதை என்ன செய்வது? எங்களுடைய அமைப்பின் தன்மைக்கு இச்சிக்கல்களைக் கையாளும் பக்குவமோ அறிவோ இருக்கிறதா? ஒரு உணர்வு பூர்வமான பிரச்சினை எம்மிடம் தெரிவிக்கப்படும் போது நாம் எவ்விதம் எதிர்வினையாற்றுவது, செயற்படுவது? இவையே அவரது கேள்விகளின் சாராம்சம்.

எனது அனுபவத்திலிருந்து சில பதில்களைத் தொகுத்துக் கொள்வது பிறருக்கும் பயனளிக்கும் என்று இதை எழுத எண்ணினேன்.

முதன்மையாக எந்தச் சமூகச் சிக்கல்களையும் தீர்க்க விழையும் ஒருவருக்கு இருக்க வேண்டிய அடிப்படைக் குணநலன் என நான் கருதுவது ‘நிதானம்’. எத்தகைய பாரிய சிக்கல்கள் முன்வைக்கப்படினும் அதைத் தீர்க்க முனையும் ஒருவர் சமநிலை இழக்கக் கூடாது. நான் பலதடவைகள் உணர்ச்சி வேகத்தில் பிரச்சினைகள் எரியும் களங்களுக்குச் சென்றிருக்கிறேன். பிரச்சினை உக்கிரமாக இருக்கும் பொழுது அங்கு உண்மையில் நாம் கையாளும் தரப்போ அல்லது தீர்மானிக்கும் சக்தியோ அல்ல. நாம் அந்த அலையின் ஒரு பகுதியாகவே ஆக்கப்படுவோம். அப்படியாகும் பொழுது தேவைக்கு மீறிய, நம் சக்திக்கு அப்பாற்பட்ட பொறுப்புகளைத் தூக்கிச் சுமக்க நினைப்போம். ஆனால் நடைமுறையில் அது சாத்தியமில்லை. தனிநபரோ அமைப்போ ஒரு சிக்கலில் தனது எல்லை என்ன, தன்னிடமுள்ள ஆற்றல் என்ன என்பது குறித்து நிதானமாக முடிவெடுக்க வேண்டும். உதாரணத்திற்குக் கேப்பாபுலவு நில மீட்புப் போராட்டத்தில் அம்மக்களுடன் இருந்து அவர்களின் கதைகளைக் கேட்டு, அவற்றைப் பலருடன் இணைந்து தொகுத்து விதை குழுமம் ஒரு பிரசுரமாக்கியது. நான் அங்கிருந்து சமூக வலைத்தளங்களிலும் இணையத்திலும் கட்டுரைகள் எழுதினேன். முதல் நாளில் ஒரு உணர்ச்சி வேகத்தில் அங்கு சென்று விட்டேன். என்ன செய்யப் போகிறோம், யார் இந்த மக்கள் என்ற எந்த அறிதலும் இல்லை. நண்பரொருவர் தொலைபேசியில் அழைத்தார், சென்று விட்டேன்.

பின்னர் அம்மக்களுடன் தங்கியிருந்து அங்கு இரவும் பகலும் களப்பணியாற்றிய ஊடகவியலாளர்களுடன் உரையாடி, அச்சிக்கலை விளங்கிக் கொண்டேன். அதில் என்னால் ஆகக் கூடியது என்ன, விதை குழுமத்தால் ஆகக் கூடியது என்ன என்பதைத் தொகுத்துக் கொண்டு அச்சிறு பணியை ஆற்றினோம். அப்போராட்டம் பெருவெள்ளமென மக்களை ஈர்த்த ஒரு போராட்டம். அதன் அடிவிசை போராடும் மக்களே. அவர்களது குரலின் சில பகுதிகளைத் தொகுக்கவும் எழுதவும் எம்மால் முடிந்தது. அது அந்தப் போராட்டத்திற்கு மட்டுமின்றி அத்தகைய போராட்டங்கள் எவ்விதம் நிகழ்த்தப்பட வேண்டும் என்கிற வகைமைக்கு ஒரு முன்மாதிரியை உருவாக்கிய போராட்டம். நில மீட்புக்கான மக்களின் கதை அப்படி வெளியாகிய ஒன்று. அதன் இன்றைய பயன்பெறுமதி என்ன?

அதன் பின்னரும் எத்தனை நிலமீட்புப் போராட்டங்கள் நிகழ்கின்றன? ஏன் அவை அப்பிரச்சினையளவுக்குக் கவனம் கொள்ளப்படவில்லை? ஏன் என்பதன் பதில், அப்பிரசுரத்தில் உள்ளது. அப்போராட்டம் நிகழ்த்தப்பட்ட முறை மிக முக்கியமானதொன்று. செயற்களம் புகுவோர் கற்க வேண்டியது.

அதே நேரம் அத்தகைய சிக்கலில் ஒரு பண்பாட்டு அமைப்பின் எல்லை என்பது, சிந்தனை ரீதியில் அப்பிரச்சினையைத் தொகுத்தளிப்பது. வரலாற்றை எழுதுவது. அதை மக்களிடம் கையளிப்பது. இது ஒரு சிக்கலைக் கையாண்ட வகையின் சிறு பகுதி. ஒரு செயற்பாட்டாளர் அல்லது அமைப்பு தனது எல்லைகளை அறிய வேண்டும். அதுவே தன்னுணர்தல். அதிலிருந்து எழும் எச் செயல்களும் அச்சிக்கலைத் தீர்க்கும் பகுதியென ஆகுவது. அச் செயல் வென்ற பின் ஒரு செயற்பாட்டாளருக்கு அல்லது அமைப்புக்கு அதிலிருந்து பெற்றுக் கொள்ள நிறைவன்றி வேறெந்த உணர்வும் சொந்தமில்லை. அந்த நிறைவுணர்வே செயற்களம் புகுவோரின் ஆன்மீகம்.

ஆரம்பத்தில் உணர்ச்சி வேகத்தில் நிகழும் சமூகப் பிரவேசமே பொதுவில் இளைஞர்களுக்கு நிகழக்கூடியது. ஆனால் தொடர்ந்து அவர்கள் செயலாற்றத் தேவையான அடிப்படையான பண்பு சமநிலை இழக்காத நிதானமே.

இரண்டாவது, அறிவார்ந்த தன்மை. ஒரு சமூக அமைப்பென்பது தனது வகைமாதிரியை எப்படியும் வைத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு ஒரு அமைப்பு ஊர் ஊராக நூலகங்களை உருவாக்குகிறது, இன்னொன்று மக்களிடம் கருத்துக்களை நாடக வடிவில் ஆற்றுகிறது, இன்னொரு அமைப்பு கருத்தியல் ரீதியிலான உரையாடல்களை உண்டாக்கும் பண்பாட்டு அமைப்பாகத் தொழிற்படுகிறது, இன்னொன்று சூழலியல் அமைப்பாக இயங்குகிறது.. இப்படிப் பலவகைமாதிரிகள் நம் சமூகத்தில் உண்டு. இவை எவையுமே அறிவின் தளத்தில் நிலைகொள்ளவும் தொடரவும் வேண்டியவை.

அறிவார்ந்த தன்மை என்றால் என்ன?

எந்தவொரு சமூகப் பிரச்சினையையும் நாம் அணுகும் கோணமே அப்பிரச்சினையின் ஆழத்தையும் தீர்வையும் நமக்குப் புலப்படச் செய்யும். திருமாவளவன் ஒரு உரையில் சொல்லுவார், ஒரு கோயிலில் இத்தனை மணிக்கு, இந்த இடத்தில், இப்படி நின்று பார்த்தால் தான் கோபுரத்தின் அந்தப் பகுதி உங்களுக்குத் தெரியும் என்றால், வேறு எங்கு எப்படி நின்று பார்த்தாலும் அது கண்களுக்குத் தெரியாது. பிரச்சினைகளின் வேரும் தீர்வும் அத்தகையதே. எந்தவொரு பிரச்சினையையும் சொந்த உணர்வெழுச்சியுடன் அணுகாது, அதன் மேல் உள்ள பிற பார்வைகளையும் கருத்தில் கொண்டு, அப்பிரச்சினையைக் கையாளும் குறைந்த பட்ச அறிவு செயற்பாட்டாளர்களால் தேடிக்கொள்ளப்பட வேண்டும். அச்சிக்கலுக்கான தீர்வை, அஹிம்சை வழியிலும் ஜனநாயக அடிப்படையிலும் வென்றெடுக்கவே சிந்திக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் நம்மைச் செயலூக்கமற்றவர்கள் ஆக்கிவிடும். அறிவார்ந்து நாம் அப்பிரச்சினைக்கு வெளியில் நின்று அப்பிரச்சினையின் தன்மை என்ன? அதற்கான மூலக்காரணி என்ன? அதனால் உண்டாகும் பாதிப்பு என்ன? இதில் நானோ அல்லது அமைப்போ எத்தகைய பங்கை ஆற்ற முடியும்? வேறு யார் இச்சிக்கலைக் கையாளப் பொருத்தமானவர்கள்? போன்றவை சிந்திக்கப்பட வேண்டும்.

தொடர்ச்சியான இலக்கிய மற்றும் சமூக அறிவியக்கங்களுடனான தொடர்பு செயற்பாட்டாளர்களுக்கு இருந்தாக வேண்டும். இலக்கியம் செயல்புரிபவர்களுக்கான மன உறுதியை அளிக்கக் கூடியது. அறிவியக்க உரையாடல்கள் பார்வைகளை விசாலிக்கக் கூடியது. ஒருவர் தான் ஏற்கெனவே அறிந்தவற்றுடன் ஒரு சிக்கலைத் தீர்க்க முடியாது. ஒரு சிக்கலை அறியக் கிடைக்கும் பொழுது அது தொடர்பில் அறிவியக்கத்தில் செயற்களத்தில் இதுவரை எத்தகைய விவாதங்கள் செயல்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்பவற்றை அறிய முனைய வேண்டும். நாமே முதலில் இருந்து தொடங்க வேண்டிய சிக்கல்கள் என்று சமூகத்தில் எதுவும் இல்லை.

நாம் அறிந்தவற்றைக் கொண்டு செயற்களம் புகுவோர் அதைக் கையாள முடியாமல் சோர்வடையும் நிலமை ஏற்படும். அல்லது வினைத்திறனான செயலை ஆற்ற முடியாமல் போகும். அதற்கே வாசிப்பு இன்றியமையாதது. அது ஒரே நேரத்தில் செயல்களுக்கான நம்பிக்கையையும் வழிகளையும் நம் மனத்துக்குள் விரிவாக்கும்.

ஏற்கனவே நமக்குள்ள அறிவுடனும் உந்துதலுடனும் நாம் கையாள முடியாத பிரச்சினைகளுக்குள் செல்வதை இயன்றளவு தவிர்ப்பது நல்லது. நமக்கு அச்சிக்கலை அறிவார்ந்து அணுகி ஆராய்ந்து அதைத் தீர்க்கும் வழிவகைகளை உருவாக்க முடியுமென்றால் அதைச் செய்ய வேண்டும். அல்லது உணர்வுத் தோழமையுடன் தேவையுள்ள இடத்தில் பங்களிக்க வேண்டும்.

மூன்றாவது, எங்கு விலகுவது?

பெரும்பாலான சமூகச் சிக்கல்களை தனிநபர்களோ அமைப்புகளோ முழுதும் தீர்த்துவிட முடியாது. ஓரளவு தூரம் அதில் தளராது பயணிப்பதே கூட பெரும் மனித உழைப்பைக் கோரக்கூடியது. உதாரணத்திற்கு முன்னர் சொன்ன உதாரணத்தின் பின்கதையை எடுத்துக் கொள்வோம். கேப்பாபுலவின் பிலக்குடியிருப்பு நிலம் அம்மக்களால் போராடி வென்றெடுக்கப்பட்டது. பல அமைப்புகள் உணர்வுத் தோழமையுடன் பங்காற்றின. விதை குழுமம் ஒரு பிரசுரம் வெளியிட்டது. ஆனால் தொடர்ந்து அந்த நிலத்தில் மக்கள் என்ன செய்தார்கள்? அவர்களது வாழ்க்கை அதன் பின்னர் என்னவாகியது?, அங்கு உருவாகிய இதர சமூகச்சிக்கல்கள் எவை? என்று அறியச் செல்லச் செல்ல, பிரச்சினை விரிந்து கொண்டே சென்றது.

அச்சிக்கல்களைத் தீர்ப்பது முக்கியம் தான். ஆனால் நமது எல்லை என்ன? ஒரு சிக்கலில் இருந்து எந்த இடத்தில் விலகுவது? இந்த முடிவை நாம் உறுதியோடு எடுத்தாக வேண்டும். மிகையான உணர்ச்சிவசங்கள் இந்த இடத்தில் தேவையற்றவை. ஒரு அமைப்பு ஒரு சிக்கலில் இருந்து தனது விலகலைக் கொள்வது கைவிடுதல் ஆகாது. அது இயலுமையின் எல்லை. ஒவ்வொரு செயற்பாட்டாளரும் தன் வாழ்வின் பெரும் பொழுதை, ஆற்றலை, அரச, சமூக நெருக்கடிகளைக் கடந்தே செயற்களத்துக்கு வருகின்றனர். அதன் பின்னாலுள்ள உழைப்பையும் கரிசனத்தையும் நான் அறிவேன். அவர்களின் விலகுதல்களும் அத்தகைய பின்னணிகளுடனே சமூகத்தால் பொருள் கொள்ளப்பட வேண்டும். எல்லாச் சுமைகளும் மிகையான பொறுப்புகளும் அமைப்புகளைச் சுருளச் செய்து செயலூக்கமற்றதாக்கி விடும்.

நம் காலத்தின் சிக்கல்களில் பிரதானமானது நமது சமூகத்தின் உட்சுருங்கல், ஒவ்வொருவரும் தனிமனிதர்களென ஆகுதல், அரசியல் பார்வைகளை கடந்த காலத்துடன் மட்டுப்படுத்துதல், தேங்குதல். மாறாக, சமூகத்தில் அக்கறை கொண்டு செயற்களத்தில் நிலைபெறும் இளைஞர்கள் தம்மை அறிவு ரீதியில் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். அரசியல் சரிநிலைகளைத் தாண்டி, சிக்கல்களை அணுகி அறிய வேண்டும். தமக்கான சொந்த நுண்ணுணர்வுள்ள விசாலமான அரசியல் பார்வைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். முன்னர் ஒரு கட்டுரையில் குறிப்பிட்ட இவ்வரிகளை இங்கு மீள நினைவுபடுத்துகிறேன்.

‘நாம் எப்பொழுதும் உட் சுருங்கியவர்களாகச் சிந்திக்கிறோம், இயற்கை முடிவில்லாமல் விரிந்துகொண்டே செல்கிறது. நாம், நமது தரப்பை மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறோம், இந்த பூமி எல்லாவற்றிற்கும் மற்றொன்றின் இருப்பின் மீதான தொடர்பை நமக்கு முன் நிகழ்த்திக்
காட்டியபடியிருக்கிறது. இந்த வினோதமான உறவைப் புரிந்துகொள்வது தான் அரசியல் செயல்பாடு. நாம் நமது நியாயங்களிலிருந்து மட்டும் அறம் என்ற ஒன்றை உருவாக்கமுடியாது. இங்கு எல்லா அறங்களுமே கூட்டுவாழ்வின் நிமித்தம் உருவாக்கிக்கொண்ட கற்பிதங்கள் தான். ஆனால் அவையும் நமக்குத் தேவை. அதனைக் காலத்துக்கு காலம் மனித அறிவு மாற்றியபடியிருக்கிறது. அந்த அறங்களின் இயல்பு தான் அரசியல் பார்வைகளை உருவாக்கிக்
கொண்டிருக்கிறது’.

நாம் செயலில் அடையும் எந்தச் சிறு நிறைவும் முக்கியமானது. அதை நோக்கியே நம் உணர்கொம்புகள் உருவாக வேண்டும். வசைகளும் இழிவுபடுத்தல்களும் விமர்சனங்களும் நம்மைத் துவளச் செய்யக் கூடாது. சோர்வு அளிக்கும் மனநிலைக்கு ஈடான வீழ்ச்சி எதுவுமில்லை. ஊக்கமும் சமூகத்தின் மீதான கனிவுமே செயற்பாட்டாளர்களை சமூகத்தின் மிக முக்கிய பாத்திரங்களாக உருவாக்குபவை. ஆகவே நாம் செயல்புரியும் போது உண்டாகும் சோர்வுகளைக் கடந்து மனம் ஒன்றிச் செயற்படும் ஒவ்வொரு செயலையும் முழுவாழ்வுமளித்து செயல்புரிந்து முன்னேற வேண்டும்.

செயற்படுபவருக்கு எஞ்சுவது என்ன?

எழுத்தாளர் ஜெயமோகன் செயற்படுபவர்களுக்கு எஞ்சுவது என்ன என்பதைப் பற்றிச் சொன்ன வரிகள் இவை, “இளம் வயதில் இலட்சியவாதம் நம்மை வந்தடைகிறது. இலட்சியநோக்கு சூழ இருக்கும் சமூகத்தீங்குகள், அநீதிகள், ஒழுங்கின்மைகள் குறித்த ஒவ்வாமையை உருவாக்குகிறது. ஆகவேதான் நாம் செயல்படத்தொடங்குகிறோம். எதிர்ப்பு இன்றி செயல்பாடு இல்லை. ஆனால் அந்த எதிர்ப்பு கருதுகோள்கள் சார்ந்ததாக மட்டுமே இருக்கவேண்டும். நாம் எதிர்ப்பனவற்றை விட மேலானவர்களாக நம்மை நாமே நிலைநிறுத்திக்கொள்வதாக இருக்கவேண்டும். அதுவே காந்திய வழி. கசப்பு வெறுப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான எச்செயல்பாடும் இறுதியில் வெறுமையையே எஞ்சவைக்கும். எதிர்ப்புச்செயல்பாடும்கூட நம்பிக்கையின் கனிவின் அடிப்படையிலேயே நிகழ்ந்தாக வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலம் கழிந்த பின்னால் எது சாதிக்கப்பட்டதோ அதுவே எஞ்சும். எது பேசப்பட்டது என்பதல்ல…”

*

ஆகவே செயல் புரிக. சமூகத்தை அசைத்து முன்னேற்றுக. எச்சிறு புல்லும் பூவும் அதனளவில் முழுமையானது என்பது சண்முகம் சிவலிங்கத்தின் வரி.

உனக்கு சந்தோஷம் தருவது எதுவோ அதுவே உனக்குச் சூரியன் என்பது தேவதேவனின் வரி.

*

கேப்பாபுலவு நில மீட்புக்கான மக்கள் போராட்டத்தின் கதை :

https://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81:_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88

TAGS
Share This