கருணையின் முன் நீட்டப்படும் கை

கருணையின் முன் நீட்டப்படும் கை

தும்பி சிறுவர் இதழை ஈழத்தமிழர்கள் ஏன் வாங்க வேண்டும்? இப்பொழுது அவ்விதழ் நிறுத்தப்படும் அறிவிப்பு வெளியாகியிருக்கும் வேளையில் ஈழத்தமிழர்கள் எவ்விதம் அவர்களின் செயல்களுக்குக் கைகொடுக்கலாம்? அவர்களது இவ்விடர் நேரத்தில் நாம் ஏன் உடனிருக்க வேண்டும்? ஒரு தமிழர் எதற்காகத் தும்பி இதழை வாங்க வேண்டும்?

‘ஆகப் பெரிய கனவு’ கட்டுரையைத் தொடர்ந்து இத்தகைய கேள்விகளை என்னிடம் பல நண்பர்கள் கேட்டிருந்தனர். அதனை ஒரு நல்விளைவெனவே கொள்கிறேன். பலருடைய ஆர்வமும் என்னையும் இன்னும் ஏதாவது செய்ய ஊக்கப்படுத்தியது.

முதலில் தும்பியின் வரலாற்று முக்கியத்துத்தை நாம் விளங்கிக் கொண்டே அவர்களுக்கு நாம் ஏன் உதவ வேண்டும் என்பதை எண்ணிக்கொள்ள வேண்டும். சிறு வயதில் ரஷ்யக் கதைகளை வண்ண அச்சுத்தாள்களில் வாசித்திருக்கிறேன். சிறுவனான எனது கண்களுக்கு தாளின் தடிப்பு, அதிலிருந்து எழும் வாசனை, கதைகளுக்கென வரையப்பட்டிருக்கும் அற்புதமான ஓவியங்கள், அந்தக் கதைகளின் கற்பனை போன்றவை இன்றளவும் பொக்கிஷங்களென நினைவில் நிற்பவை. ஒரு சிறுவனுக்கோ சிறுமிக்கோ இளவயதில் அளிக்கப்படும் புத்தகங்களின் மூலம் அவர்கள் அடையும் மனப்பதிவு, காட்சிப்பதிவு, அகத்தூண்டல், நினைவு போன்றவை ஒரு முழுவாழ்நாளுக்கும் செல்வாக்குச் செலுத்தக் கூடியவை என்பதை நம்மில் பலரும் எமது சொந்த அனுபவத்தில் உணர்ந்திருப்போம். நிரம்பியிருக்கும் குளத்தின் அணையில் விழுந்த ஓட்டையைக் கைகளால் பொத்தியபடி இரவெல்லாம் யாரேனும் வருவார்கள் என்று காத்திருக்கும் சிறுவனின் கதையை இன்றும் என்னுள் உள்ள சிறுவன் இடைவிடாது பேணியபடியே இருக்கிறான்.

பத்துவயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கப்படும் கதைப்புத்தகங்களில் குழந்தைகள் சொற்களை விடக் காட்சிகளுக்கே அதிக முக்கியத்தும் அளிக்கின்றனர். இரண்டாவதே கதை. பத்துத் தொடக்கம் பதினெட்டு வயதுப் பருவத்தினருக்கு இரண்டுமே சம அளவில் ஈர்க்கக் கூடியவை. ரஷ்யக் கதைநூல்கள் அப்போதைய வடிவமைப்பு அச்சு நேர்த்தியுடன் மீளக் கிடைப்பது தற்போது அரிது. நமது சூழலில் வெளிவரும் குழந்தைகள், சிறுவர்களுக்கான பெரும்பாலான கதை இதழ்கள், நூல்கள் அவற்றின் அச்சு, ஓவிய, வடிவமைப்பு, கதைத்தேர்வு ஆகியவற்றில் கூட்டாகச் செலுத்த வேண்டிய அக்கறையைச் செலுத்த இயலாத காலச்சூழல் தமிழின் மொத்தப் பரப்பிலும் இருக்கின்றது. ஈழத்தைப் பொறுத்தவரைக்கும் கூட இதே நிலமை தான். வடிவமைப்பு நன்றாக இருந்தால் கதை தேறுவதில்லை. இரண்டும் நன்றாக இருந்தால் கூட அச்சில் அவற்றை நேர்த்தியாகக் கொண்டு வர இயல்வதில்லை. இதுவே எனது மதிப்பீட்டில் இன்றைய சிறுவர் அல்லது குழந்தைகளுக்கான இதழ்களின் நிலை.

இந்தப் பின்னணியிலேயே நாம் தும்பியின் பறத்தலை மதிப்பிட வேண்டும். தும்பியைத் தனித்து ஒரு இதழ் மட்டுமே என்ற வகையில் மதிப்பிடக் கூடாது. குக்கூ என்ற காட்டுப்பள்ளியையும் ஊர்க்கிணறுகளைப் புனரமைக்கும் இயக்கத்தையும் நூலகங்களை ஆக்கும் கரங்களையும் தன்னறம் வெளியீடுகள் மூலம் நவீன தமிழ் இலக்கியத்திற்கும் பண்பாட்டுக்கும் ஆற்றப்படும் பங்களிப்புடனும் சேர்த்தே அவர்களின் காந்தியவழி செயல்விரிவை அணுக வேண்டும்.

தமிழ் வரலாற்றில் குழந்தைகள் மேல் தீராத பற்றும் கரிசனமும் கொண்ட உள்ளங்களால் ஆற்றப்படும் மகத்தான செயலே தும்பி என்பது எனது அவதானிப்பு.
இத்தகைய பெருங்கனவும் குழந்தையுள்ளமும் கொண்டவர்கள் எங்கு தோற்கிறார்கள் தெரியுமா… தங்கள் சொந்த உழைப்பை சொந்தத் துயர்களை அவர்கள் மதிப்பதேயில்லை. அவர்கள் தங்களை ஒளி ஊடுருவும் கருவியென ஆக்கிக் கொள்கிறார்கள். செயல்கள் அளிக்கும் நிறைவினால் அகங்கனிந்து பொருளாதரச் சுமைகளை கடைசி இழை அறும் வரை பல்லைக் கடித்து நா வறண்டு வியர்வை சிந்தச் சிந்த இழுத்து வருவார்கள். பணத்தைப் பொருட்டென எண்ணாத உள்ளங்கள் தான் செயலில் பெருஞ்செயல்களைச் செய்யக்கூடியவை. ஆகவே தான் அத்தகையவர்களைக் காக்க வேண்டியது நமது பொறுப்பு. தொடர்ந்து பறக்கும் ஆற்றலை அளிக்க வேண்டியது நமது பங்களிப்பு.

தும்பியின் கதைத்தேர்வு, ஓவியங்கள், ஒளிப்படங்கள், வடிவமைப்பு, அச்சு என்று அனைத்துமே உலகின் எந்தப் பணக்காரக் குழந்தைக்கும் எது கிடைப்பதில் உயர்ந்த நூலோ அதேயளவு தரத்துடன் வெளிவருகின்றது. ஒரு ஏழைக்குழந்தைக்கு அளிக்கப்படும் விலை உயர்ந்த புத்தகப் பரிசென்பது ஒரு தும்பி இதழை அளிப்பது என்பதே இன்றைக்குத் தமிழில் இருக்கும் ஒரே தெரிவு. அது தான் தும்பியை ஆக்கிய கரங்கள் நமது பண்பாட்டுச் செய்திருக்கும் முதன்மையான பங்களிப்பு. ஒரு கனவின் மூலம் இரண்டு எல்லைகளையும் சமநிலைப்படுத்தியிருக்கிறார்கள். நமது குழந்தைகளுக்கு மதிப்பு மிக்க கனவுகள் தும்பியால் அளிக்கப்படுகின்றது.

ஈழத்தமிழர்கள் இந்த இதழ்களை வாங்குவதால் மூன்று வகையான பலன்கள் இருக்கின்றன. முதன்மையானது, நமது ஏழைக் குழந்தைகளுக்கு நாம் வழங்கும் உயர்ந்த கனவுகள் உள்ள இதழ்கள் அவை. தும்பி இதழ், குழந்தைகளிடம் தாழ்வுணர்ச்சியை நீக்கி வாழ்வை முன்னேற்றும் பிரகாசத்தைத் தனக்குள் கொண்டவை. அதை நான் நடைமுறையில் பல தடவை அவதானித்திருக்கிறேன். ஈழத்தில் தும்பியை நான் வாசிக்கக் கொடுத்த இடங்களில் பிள்ளைகள் ஒரு அதிசயத்தை கையழாவுவது போல் தும்பியில் கண்கள் மொய்த்துக்கிடப்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு குழந்தை மிச்சமில்லாமல் அனைவருக்கும் பிடித்த இதழ் தும்பியாகவே இருந்திருக்கின்றது. நாம் நமது குழந்தைகளுக்கோ அல்லது அயலில் உள்ள பாடசாலை நூலகத்திற்கோ அல்லது ஊர் நூலகத்திற்கோ அல்லது குழந்தைகள், முதியோர் காப்பகங்களுக்கோ தும்பியை வாங்கலாம்.

அவர்கள் இதழ்களை நிறுத்துவதாக அறிவித்திருக்கும் நிலையில் இது இன்னும் அவசியமானதாகின்றது. நாம் ஒரு முன்னேறிய பண்பாடாக இத்தனை பெரிய கனவையும் செயலையும் ஆற்றியவர்களைக் கைவிடக் கூடாது.

இரண்டாவது பலன், மிச்சமிருக்கும் அவ்விதழ்கள் ஏதேனும் ஒரு வகையில் சில காலங்களில் முடிவடைந்து விடும் , அதன் பின்னர் அச்சில் இப்படி ஒரு இதழை வாங்க வாய்ப்பேயிருக்காது. இது ஒரு பெருங்கனவின் எஞ்சிய இதழ்கள். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் வாங்கிக் கொடுக்கக் கூடிய ஆக மதிப்புக் கூடிய பரிசு. உங்களது குழந்தைகள் வளர்ந்த பின் நீங்கள் குழந்தைக் காலத்தில் அவர்களுக்குத் தும்பி வாங்கிக் கொடுத்த ஞாபகத்தை எத்தனை அபூர்வமானதை எனக்கு அளித்தீர்கள் என்ற நன்றியுணர்வோடு நினைவு கூரச் செய்யும். நம் காலத்தின் பெற்றோர்களில் முன்னேறிய நுண்ணுணர்வுள்ள பிரிவினராவது தமது குழந்தைகளுக்கு இக் கனவைப் பரிசளிக்க வேண்டும்.

மூன்றாவது பலன், நமது காலத்தின் குழந்தைகள் தொலைபேசிகளுக்குள்ளும் தொலைக்காட்சிகளுக்குள்ளும் மூழ்கி அழிவதைப் பார்த்தபடியிருக்க நாம் சபிக்கப்பட்டிருக்கிறோம். இது குழந்தைகளின் உளவமைப்பை கற்பனை செய்யும் ஆற்றலை மழுங்கடித்து, உள்ளத்தின் நல்லியல்புகளின் மேல் பெய்யப்பட வேண்டிய மழையை இழக்க வைக்கிறது. தும்பி அவர்களை முழுவதும் அனைத்திலிருந்தும் விடுவிக்காது, அப்படிச் செய்வது யாராலும் சாத்தியமுமில்லை. ஆனால் நம் குழந்தைகள் எதிர்காலத்தில் நுண்ணுணர்வும் ஆளும் திறனும் கற்பனையும் நல்லியல்புகளும் கூடிய மனிதர்களாக ஆவதற்கான அருட்டுணர்வுகள் தும்பிக்குள் நிறைந்திருக்கின்றன.

வாசிப்பின் மூலம் நமது குழந்தைகளின் அகம் கூருணர்வு கொள்கிறது. அக்கூருணர்வே அவர்களின் உள்ளுணர்வென எதிர்காலத்தில் வளர்ந்து வரப்போவது. தும்பிக்குச் செய்யும் உதவியென்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் உபகாரம். இதில் உதவி எனச் சுட்டுவது கூடத் தவறு தான். அவர்கள் இச்சமூகத்தின் குழந்தைகளுக்கென மகத்தான கனவுகளுடன் வந்தவர்கள். அவர்களைக் காப்பது நம் கடனல்லவா. அவர்களுடன் உடனிப்பது என்பது நம் பொறுப்பல்லவா.

நான் தும்பியின் ஐம்பது இதழ்களை வாங்கப் போகிறேன். இலங்கையில் இருப்பவர்கள் புத்தகக் கடைகளிடம் ஓடர்களைச் செய்வதன் மூலமோ அல்லது தும்பி அலுவலகத்தை தொடர்பு கொண்டோ துரித தபாலின் மூலமோ இதழ்களைப் பெற முடியும். அதற்கான இணைப்புகளைக் கீழே வழங்கியிருக்கிறேன்.

நான் கப்பல் மூலம் அவற்றை எனது நண்பர்கள் ஊடாகப் பெற்றுக் கொள்கிறேன். அவற்றை இலங்கைக்குக் கொண்டு வரத் தேவையான செலவைக் கணித்திருக்கிறேன். யாரேனும் நண்பர்களுக்குத் தேவையென்றால் எனது பார்சலுடன் சேர்த்து வாங்கித் தருகிறேன். ஆனால் கப்பல் மூலம் என்பதால் கையில் கிடைக்க குறைந்தது 45 நாட்கள் எடுக்கும். செலவு இருப்பதிலேயே மிகக் குறைவானது கப்பல் வழி தான். உங்களுக்கு அறிந்த நண்பர்கள் தமிழ்நாட்டில் இருந்தால் அவர்களிடம் இணைப்பை அனுப்பி வாங்கச் சொல்லுங்கள். புலம்பெயர் தமிழர்களும் நேரடியாகவே தும்பியைத் தொடர்பு கொண்டு கொள்வனவு செய்து தங்களுக்கோ அல்லது ஊர், பாடசாலை நூலகங்களுக்கோ வழங்கி வைக்கலாம். உங்கள் பிள்ளைகளின் பிறந்தநாள் பரிசாகவோ அன்புகொண்டவர்களின் நினைவாகவோ கூடச் செய்யலாம். குழந்தைகளுக்குக் கதைகள் மூலம் கல்வியளிப்பது என்பது பெருந்தொண்டு. யாழ்ப்பாண நூலகத்திற்கு இந்தத் தொகுதியை வாங்கிக் கொடுப்பதென்பது நமது பொக்கிஷத்திற்குள் சில வைரங்களைச் சேகரிப்பது போன்றது, யாரேனும் முன்வந்து செய்யக்கூடியவர்கள் அதனைச் செய்யலாம். வெண்பா, பாத்திமா புக்ஸ், குமரன் போன்ற இணையத்தளங்களின் மூலம் ஓடர் செய்யக் கூடிய கடைகளில் நீங்கள் இதழ்களை ஓடர் செய்யலாம்.

50 இதழ்கள் – 6 kg – 20,800 ரூபாய்கள்
30 இதழ்கள் – 3.6 kg – 12,000 ரூபாய்கள்
15 இதழ்கள் – 1.8 kg – 6000 ரூபாய்கள்
(இலங்கைப் பெறுமதியில் கணிப்பிடப்பட்டுள்ளது)

இவை பருமட்டாக ஆகும் செலவு. இந்த எல்லையை விடக் கூடாது என்று நினைக்கிறேன். ஆனால் இது கப்பலில் எடுப்பதற்கு மட்டும். துரித தபால் அல்லது கடைகளின் விலைவிபரம் தெரியவில்லை. நேரடியாகத் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் அவர்களிடம் மின்னஞ்சலிலோ தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம்.

இதுவரையிலான தும்பி இதழ்கள் பெற:https://thumbigal.com/store/

தன்னறம் பதிப்பக நூல்கள் பெற: https://thannaram.in/buy/

தொடர்புக்கு: 9843870059
thumbigal@gmail.com

நான் வாங்கும் பொழுது என்னுடன் சேர்ந்து வாங்க விரும்பும் நண்பர்கள் எனக்கு மின்னஞ்சல் (kirishanth300@gmail.com) மூலம் உங்களது பொதிக்கான தேர்வையும் தொடர்பிலக்கத்தையும் அனுப்பி வையுங்கள். தொடர்பு கொள்கிறேன்.

இந்தச் சிறிய தும்பி செட்டைகள் மிதந்து பறக்க சிறுதுளி காற்றையாவது எனது சொற்கள் அளிக்குமென்றால் அதுவே என்னளவில் இயலக்கூடியது. பொருள் கொண்டது.

ஜெயமோகன் சொல்லிய சம்பவம் என்று நினைக்கிறேன், நினைவிலிருப்பதுபடி சொல்கிறேன், ஒரு தடவை குழந்தையொன்று கையை நீட்டிப் பிச்சை கேட்கிறது. அதையிட்டு அவர் வருந்துகிறார். சமூகத்தின் அவல நிலையிட்டுக் கோபங் கொள்கிறார். அதற்கு அவரது ஆசிரியர் சொல்கிறார், உலகின் கருணையின் முன் நீட்டப்படும் கை இது. அந்தக் குழந்தை உலகின் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறது. நான் பசித்திருக்கும் போது உலகம் உணவிடும் என்ற எண்ணம் எவ்வளவு பெரிய மானுட நம்பிக்கை!

தும்பியின் மூலப்பதிவு : https://kirishanth.com/archives/1219/

ஆகப் பெரிய கனவு: https://kirishanth.com/archives/1226/

TAGS
Share This