கண்ணீருடன் ஒரு பறத்தல்
தும்பி அச்சு இதழை நிறைவுசெய்கிறோம்…
பத்து வருடங்களுக்கு முன்பு, பாரம்பரிய நெல் விதைகளைப் பெண்களிடம் ஒப்படைக்கும் நெல் திருவிழா திருவண்ணாமலையில் நிகழ்ந்தது. ஆயிரத்துக்கும் அதிகமான கிராமப் பெண்கள் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர். நல்லதிர்வுகள் நிறைந்த நாள் அது. அந்நாளில், நம் நிலத்தின் பலநூறுவகை பாரம்பரிய நெல்வகைகளை மீட்டெடுக்கத் தன் வாழ்வை ஒப்படைத்த ‘நெல்தந்தை’ வெங்கடாசலம் அய்யாவுக்கும், சிறார் இலக்கியத்தின் முன்னோடி ஆளுமை வாண்டுமாமா அவர்களுக்கும் முகம் விருதளித்து கெளரவிக்க எண்ணியிருந்தோம். உடல்நோய்மை காரணமாக வாண்டுமாமா அவர்களால் நிகழ்வுக்கு வர இயலவில்லை.
நெல்திருவிழா முடிந்து சிலநாட்களுக்குப் பிறகு, விருதையும் பரிசளிப்புப் பட்டையத்தையும் எடுத்துக்கொண்டு வாண்டுமாமாவைச் சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றோம். தமிழ் சிறார் இலக்கியத்தின் மூத்தமனிதரிடம் நெடுநேரம் மனம்விட்டு உரையாடினோம். ‘குழந்தைகளுக்கான முழுவண்ண மாத இதழ் உலகக் கதைகளோடு தமிழில் வரவேணும்’ என அவ்வுரையாடலில் சொல்லிக்கொண்டே இருந்தார். தீராத நோய்மையிலும் அவர் தன்னுடைய இறுதிவிருப்பமாக அதைத் தன் மனதில் ஏந்தியிருந்தார். அவரைச் சந்தித்துத் திரும்பிய நாள்முதல் எங்களுக்குள் அந்த இறுதிவிருப்பம் ஒரு கனவுச்செயலாக விதைகொண்டது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடுமையான நோய்மையைச் சுமந்திருந்த காலகட்டத்தில்கூட சிறார்களின் அகவுலகு சார்ந்து அத்தனைக் கனவுகளையும் ஆசைகளையும் கொண்டிருந்த வாண்டுமாமாவின் அகம் எங்களை நிலைகுலையச் செய்தது. எப்பாடுபட்டாவது குழந்தைகளுலகில் துளிர்ப்பை நிகழ்த்தும் ஏதாவதொரு செயலசைவைத் துவங்கி இயன்றவரை கொண்டுசெல்ல வேண்டும் என தீராத தவிப்புற்றிருந்தோம்.
காலப்போக்கின் நீட்சியில் அவ்விருப்பம் கனவிலிருந்து செயலாக சாத்தியம் அடைந்தது. 2016 ம் ஆண்டு ஜூன் மாதம் தும்பியின் முதல் இதழ் அச்சாகி வெளிவந்தது. ஐசக் பெஷவிஸ் சிங்கர் எழுதிய ஒரு யூதக்கதை ‘சலேத்தா’ எனும் பெயரோடு தமிழில் மொழிபெயர்ப்பு அடைந்து, ஓவியர் பிரகாஷ் வரைந்த உயிர்ப்புமிகு கோட்டோவியங்களுடன் அக்கதை பிரசுரமானது. குழந்தைகளுக்கான முழுவண்ண ஓவியக்கதையிதழாக ஒவ்வொரு மாதமும் தும்பி தொடர்ந்து வெளிவந்தது.
2017ம் ஆண்டில் ஆனந்தவிகடன் சிறந்த சிறார் இலக்கியத்திற்கான விருது தும்பிக்கு வழங்கப்பட்டது. கடந்த எட்டு வருடங்களாகப் பல்வேறு நெருக்கடிச் சூழ்நிலைகள் சூழ்ந்தபோதும் நண்பர்கள் மற்றும் சந்தா பதிந்த தோழமைகளின் உதவிக்கரங்களால் தும்பி மாத இதழ் மீண்டிருக்கிறது. இதுவரையில் 81 தும்பி இதழ்கள் வெளியாகியுள்ளது. ஆறரை வருடங்களுக்கும் மேலாகத் தும்பி இதழ் அச்சில் சாத்தியப்பட்டது. உலகின் பல்வேறு நிலப்பரப்புகளையும் அதன் வாழ்வியலையும் மையமாகக் கொண்ட உலகக்கதைகள் தும்பியில் மொழிபெயர்ப்பு அடைந்து தமிழில் வெளியானது. ஜவ்வாதுமலை அடிவாரம் புளியானூர் கிராமம் துவங்கி இப்பூமியின் பல்வேறு பகுதிகளில் தும்பி இதழ் குழந்தைகளால் வாசிப்படைந்தது.
தும்பி துவங்கிய காலகட்டத்தில் வாண்டுமாமா அவர்கள் ‘பூந்தளிர் புத்தகம் படிச்சு நாம வளந்தமாதிரி தும்பி புத்தகம் படிச்சும் வருங்கால குழந்தைகள் வளருவாங்க’ என்று சொன்ன வார்த்தைகள் தும்பிக்கான வாழ்நாள் ஆசி. இன்று எத்தனையோ குழந்தைகளின் விருப்பநூலாகத் தும்பி இதழ் அமைந்திருப்பதும், அவர்களுக்குள் நிறைய கனவுகளை தும்பி விதைத்திருப்பதும் நாங்கள் இன்று கண்முன் காண்கிறோம். நிறைய மனிதர்கள் தும்பி இதழைத் தூக்கிச் சுமந்து பரப்பியிருக்கிறார்கள்.
கண்பார்வையற்ற குழந்தைகளும் தும்பியின் கதைகளை தடவித்தடவி வாசித்துணரும் பிரெய்லி வடிவத்திலும் தும்பியின் சில கதைகள் அச்சடைந்தது. பின்பக்க அட்டையில் வெளியான பாடல்கள் நிறைய பள்ளிக்கூடங்களில் கூட்டாகப் பாடப்படுகின்றன. நிறைய கதைகள் நாடகங்களாக நிகழ்த்தப்படுகின்றன. நிறைய குழந்தைகள் தங்கள் வீட்டுச் செல்லப்பிராணிகளுக்கு தும்பியில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள்.
தும்பி இதழின் கதைகளும், அக்கதைகள் குழந்தைகளுக்குள் உருவாக்கிய கனவுகளும் நம்பிக்கைகளும் இன்னும் நெடுங்காலம் அவர்களோடு நிச்சயம் நிலைத்திருக்கும். தும்பி இதழ் உருவாக்கிய அத்தனை நல்லதிர்வுகளும் வாண்டுமாமா, அரவிந்த் குப்தா போன்ற மூத்த ஆசிரியர்களின் நிறையிருப்போடு கலந்துகிடக்கும். தமிழில் சமகாலத்தில் குழந்தைகளோடும் ஆசிரியர்களோடும் பெற்றோர்களோடும் ஒரு கதையிதழ் வழியாக உரையாடும் பெருவாய்ப்பு தும்பியால் எங்களுக்கமைந்தது.
ஆனால், ஒவ்வொரு மாதமும் தும்பி இதழை அச்சில் வெளியிடுவதென்பது மிகப்பெரிய சவலாகவே இன்றளவும் அமைந்திருக்கிறது. தரமான காகிதத்தில் வண்ண அச்சு, விநியோகம், வடிவமைப்பு, அலுவலக நிர்வாகம், ஊழியர் ஊதியம், கட்டிட வாடகை என ஒவ்வொன்றாய் அதிகரித்துக்கூடி இன்று எங்களால் சுமக்கவியலாத பெரும் சுமையாக மாறிவிட்டிருக்கிறது. ஏதேதோ கரங்களின் துணையிருப்பாலும் ஆசிரியர்களின் வழிநடத்துதாலும் இதுவரையில் நாங்கள் கடந்துவந்தோம். ஆனால், இனிமேலும் இப்பாரத்தை எங்களால் தாங்கிக்கடக்க இயலாது என்கிற உண்மையை உணர்ந்து செய்வதறியாது நிற்கிறோம்.
ஆகவே, தும்பி அச்சு இதழை 81வது மாதப்பிரதியுடன் நிறுத்திக்கொள்வது என நண்பர்கள் பேசி முடிவு செய்திருக்கிறோம். எவருக்குமே விருப்பமில்லாத ஒரு முடிவை எங்கள் இயலாமையால் எட்டியிருக்கிறோம். எல்லாவகையிலும் முயன்றுபார்த்து தோல்வியுற்றபிறகே, தும்பி இதழை நிறுத்தும் இந்த முடிவை பொதுவெளியில் அறிவிக்கிறோம். தும்பி இதழை இடைக்காலத்தில் நிறுத்துவதற்காக வாசகத் தோழமைகளிடத்தும் குழந்தைகளிடத்தும் பெற்றோர்களிடத்தும் கண்கலங்கி மன்னிப்பு கோருகிறோம்.
சந்தா பதிந்துள்ள தோழமைகளுக்கான நிலுவைத்தொகையை மூன்றுமாத காலத்திற்குள் திருப்பியளிக்கிறோம். நண்பர்கள் விருப்பமிருப்பின் இதுவரை வெளிவந்த தும்பி இதழ்களாகவோ அல்லது தன்னறம் நூல்வெளியின் புத்தகங்களாகவோ பெற்று தங்கள் தொகையை கழித்துக்கொள்ளலாம். புத்தகங்களோ இதழ்களோ பெறவிரும்பாத நண்பர்களுக்கு உரிய கலத்திற்குள் நிலுவைத்தொகையை திருப்பி அளிக்கிறோம். ஒவ்வொரு சந்தாதாரரையும் தனித்தனியாக தொடர்புகொண்டு இந்த பதிலீட்டை நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளோம். ஆகவே, உரியவர்களின் தொலைபேசி எண்ணிற்கு கூடியவரைவில் தும்பி இதழிலிருந்து அழைப்புவரும். நீங்கள் தெரிவிக்கும் முடிவை நாங்கள் செயல்படுத்துகிறோம்.
சிறுகச்சிறுக உதவிகள் பெற்று இனியும் தும்பி இதழைத் தொடர்வது என்பது இயலாததாக உள்ளது. ஆகவே, இந்த இக்கட்டானச் சூழ்நிலையில் எவ்வகையிலாவது உதவ விரும்பும் நண்பர்கள் தன்னறம் பதிப்பகத்தின் புத்தகங்களையோ, தும்பி இதழின் முந்தைய இதழ் தொகுப்பையே நீங்கள் வாங்கினால் பெரும் உதவியாக இருக்கும். யாருடைய மனமும் நோகாமல் இந்த முடிவை செயல்படுத்த முடியமா எனத் தெரியவில்லை. ஆனால், இயன்றவரை நம்பிக்கை ஆதரவளித்துத் துணைநின்ற ஒவ்வொரு மனிதர்களின் கோரிக்கையையும் நிறைவேற்ற முயல்கிறோம்.
‘எங்கோ இருக்கும் ஒரு குழந்தையின் பிரார்த்தனைதான் தும்பி இதழை கொண்டுவருகிறது’ என்பதுதான் என்றும் நாங்கள் நம்பும் நிஜம். அந்தப் பிரார்த்தனைக் குரலுக்கு என்ன பதிலளிக்கப்போகிறோம் என்பதுதான் தெரியவில்லை. மனதில் எழும் நடுக்கங்களைப் போராடிக் கடந்தபிறகே இக்கடிதத்தை எழுதுகிற சிறுநிதானத்தை அடைந்தோம். வேறு என்ன செயல்செய்து இந்தப் பதட்டத்தைப் போக்குவதென எண்ணித் தவிக்கிறோம்.
குழந்தைகளுலகு சார்ந்தும் கல்விசார்ந்தும் தொடர்ந்து தும்பி இயங்கும். அதற்கான திட்டமிடுதல்கள் துவங்கியுள்ளன. கைவசமுள்ள தும்பி இதழ்கள் அனைத்தையும் மின்னிதழ்களாக மாற்றி பொதுவெளிக்கு அளிக்கும் பணிகளையும் தொடங்கியுள்ளோம். ஒரு சிறுகனவாகத் துவங்கியவொன்று இத்தனை மனிதர்களை எங்களுக்குப் பெற்றுத்தந்திருக்கிறது. தும்பி இதழ் இவ்வழியில் நிறைவடைவது ஒரு கனவின் சிறுசுழல்வட்டம் தன்னை நிறைவுசெய்து இன்னொன்றாகப் பரிணமிக்கும் எனக் குழந்தையைப் போல நம்புகிறோம்.
இந்தியாவின் கட்டிடக்கலை பிதாமகன்களில் ஒருவராகிய பேராசிரியர் நீல்கந்த் சாயா அவர்கள், கடும் நோய்மையுற்று அவசரச்சிகிச்சை முடிந்து வீடுதிரும்பியிருந்த சூழ்நிலையில், தன்னுடைய குழந்தைக்குத் தும்பி இதழை வாசித்துக் காட்டும் காட்சியை நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள். அதேபோல் மூதன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்கள் தும்பி இதழின் கதைகளாக வாசித்துவிட்டு ஒவ்வொரு காட்சியாக விவரிக்கிற அனுபவங்களையும் பெற்றடைந்தோம். இவ்வாறு சிறியவர், முதியவர், பெரியவர் என எல்லா வயதினருக்கும் மகிழ்வூட்டி ஏதேதோ நிலப்பரப்புகளில் தும்பி இதழ் நல்லதிர்வு ஈட்டியிருக்கிறது.
எதைச்சொல்லி இந்த அறிவிப்பை முடிப்பதென தெரியவில்லை. இவ்வளவு ஆண்டுகளாக தும்பி இதழுக்கு உயிரளித்த உங்கள் எல்லோருக்கும் சிரம்பணிந்த நன்றிகள். தமிழில் இவ்விதழை இத்தனைக்காலம் நிலைநிறுத்திய எல்லா நம்பிக்கைகளையும் இறுகப்பற்றி வணங்குகிறோம். இறையாற்றல் இதை நேர்மறையாகக் கடந்துசெல்லும் அகத்துணிவளிக்கும் என நம்புகிறோம். எண்ணிலா நண்பர்களுக்கு நாங்கள் நன்றிக்கடன்பட்டுள்ளதை அறிவோம். எல்லா கடன்களையும் அடைக்கும் சூழ்நிலையை காலமளிக்கும். தும்பி அச்சு இதழ் தனது பயணத்தை இதனுடன் நிறைவுசெய்கிறது. நண்பர்களின் துணையிருப்பால் இச்சூழலையும் கடந்து செயலாற்ற உறுதியேற்கிறோம்.
தமிழ் பதிப்புச்சூழலில் தங்களை முற்றளித்து வாழ்ந்து கரைந்த முன்னோடி மனிதர்களான சக்தி வை.கோவிந்தம், அக்கு பரந்தாமன் ஆகிய மூத்த ஆசிரியர்களின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் இக்கணம் நெஞ்சார தொழுகிறோம். கைவிடும் முயற்சிகள் அனைத்தும் இன்னொரு வடிவில் எங்காவது முளைத்தெழும்; ஏதாவதொரு உள்ளம் அதை நிறுத்தாது இழுத்துச்செல்லும் என நம்புகிறோம்.
அருட்பெருஞ்சோதி!
தனிப்பெருங்கருணை!
இதுவரையிலான தும்பி இதழ்கள் பெற:https://thumbigal.com/store/
தன்னறம் பதிப்பக நூல்கள் பெற:https://thannaram.in/buy/
தொடர்புக்கு: 9843870059
thumbigal@gmail.com