ஆட்டுக்குட்டி சுவேதா : குறிப்பு
பொங்கல் பரிசாக, கிரிசாந்தின் கதையைப்படித்தேன். அன்பும் காருண்யமும் உணர்ச்சிகளின் மோதுகையும் இணைகையுமே வாழ்க்கை என்பதை உணர்த்தும் கதை. மனிதர்கள் ஒருபோதும் மனிதர்களோடு மட்டும் வாழ்வதில்லை. அப்படி வாழவும் முடியாது. அவர்கள் சூழலோடு இணைந்தே வாழ்கிறார்கள். அந்தச் சூழல் அவரவர் வாழும் சூழலுக்கு ஏற்ப மாறுபடலாமே தவிர, சூழலை நீங்கி வாழ முடியாது. இங்கே சுவேதா என்ற ஆட்டுக்குட்டியின் உலகமே கதையாகியுள்ளது. அந்தக் குட்டி வாழ்கின்ற சூழலில் உள்ள மனிதர்கள், நாய்கள், அதனோடிணைந்த ஏனையவை எப்படி அர்த்தம் பெறுகின்றன என்பதே கதையின் விரிவு. அதனுடைய உணர்வுகளே நம்முடை அகத்தில் பரிமாற்றமடைகின்றன.
கதையைப் படிக்கும்போது எங்களுடைய வீட்டில் நின்ற பரிமளம் என்ற ஆடே நினைவுக்கு வந்தது. அது இறந்தபோது நான் துக்கம் தாழாமல் அழுதிருக்கிறேன். அப்பொழுது எனக்கு வயது ஒன்பதோ பத்தாகவோ இருக்கலாம். அன்று நான் பள்ளிக்கூடத்துக்குக் கூடப் போகவில்லை. அந்தளவுக்கு பரிமளத்தின் மரணம் என்னைப் பாதித்தது. அப்போது மட்டுமல்ல, பிறகு கூட வெவ்வேறு சூழலில் பரிமளத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன். ஏன் இன்று இந்தக் கதையைப் படிக்கும்போது கூட அவளுடைய நினைவுகள் மேலெழுகின்றன என்றால், குழந்தைகளாகிய நமக்கு விலங்குகள் பறவைகளோடு எவ்வளவு நெருக்கம்! குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் விலங்குகளின் மீது பெரும் பிரியமுண்டு. அதனால்தான் அவற்றுக்குப் பெயரிட்டே அழைக்கிறோம். அவற்றோடு பேசுகிறோம். இந்த உறவு சாதாரணமானதல்ல. மனித குலம் தோன்றிய காலத்திலிருந்து வந்திருக்கக் கூடிய உறவு… இதைப்பற்றியெல்லாம் எழுத வேண்டும்.
கருணாகரன்