கடுதாசி நட்சத்திரம் – தர்மினி

கடுதாசி நட்சத்திரம் – தர்மினி

கவிஞர் தர்மினியின் புதிய கவிதை நூலான கடுதாசி நட்சத்திரம் இம்முறை நிகழ்ந்து கொண்டிருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் வேரல் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழின் முக்கியமான கவிஞர்களில் ஒருவர். மிகச் சமகால அழகியல் கொண்டவை அவரது கவிதைகள்.

தமிழ்க் கவிதையில் நீரில் அலையடிக்கும் சிறு மலர்களெனச் சில கவிதைகள் தோன்றுவதுண்டு. நித்தியமான பேரழகு கொண்ட அனைத்திலும் தோன்றுவது அது. கவிதையைப் பற்றிய கூற்று ஒன்றை தேவதேவன் தனது கட்டுரையொன்றில் மேற்கோள் காட்டியிருந்தார். “கவிதையென்பது உன்னதமானது அல்ல. உன்னதமானவையைத் தான் கவிதை என்கிறோம்” என்று. தர்மினியின் புதிய கவிதைகளை அவரது மொத்த வரிகளுடன் இணைத்து வாசிப்பது மேலும் அவரது உலகம் நுண்மையாக விரிந்து வந்திருப்பதை அறிய உதவும். அதில் பண்பாட்டின் மென்மையான ஈரமொன்று சுரந்திருப்பதை உணர முடியும்.

*

நிமித்தம்

நீயும் நானும் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளாமல் அந்த நகரில் நடமாடினோம்.

நாம் பயணித்த பாதைகளில்
பலமுறைகள் விலகிச் சென்றிருந்தோம்.

ஒரே வானின் கீழ்
ஒரே நிலவொளியில்
சூரியனின் வெப்பத்தில்
வாழ்ந்துகொண்டிருந்தோம்.

நாம் கதைகளில் பறந்தும்
பாடல்களில் மிதந்தும்
காதல்களோடும் காயங்களோடும் திரிந்துகொண்டிருந்தோம்.

நம் வேலையில்லாத காலத்தை விரட்டிக் கொண்டிருந்தோம்.
வீடுகளில் அந்தரத்தில் நின்றிருந்தோம்.

ஆடைகளை ஒரே இரசனையில் உடுத்திப் பழகியிருந்தோம்.

தலையையும் முக வடிவையும் கூட
நம்மைத் தெரிந்து கொண்டதைப்போல
ஒருவருக்கொருவர் அழகுபடுத்தினோம்.

பிறகு…
ஆண்டுகளாய் மினுங்கும் நட்சத்திரங்களின் நிமித்தங்களில்,
அளக்க முடியாத ஆகாயவெளியின் துணையில்,
கடக்க முடிந்த காலக் கடலின் பாதையில்
நின்று கொண்டிருந்தேன்.
எதிரே நீ வந்து கொண்டிருந்தாய்.
அங்கே விலகிச் செல்ல வழியேயில்லை.

தர்மினி

தர்மினியின் கவிதைகள் குறித்து :

மூப்பதின் இனிமை

அந்தந்த நாள்களின் நற்குணங்களால்

மியாவ்

TAGS
Share This